Monday, December 24, 2012

எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம்! - சில அபூர்வ தகவல்கள்..!




1970 களில் சினிமா உலகையும், தமிழக அரசியல் உலகையும் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் கட்டி ஆண்டது என்றால் அது மிகையாகா. திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் ஆவார்.

1972-ல் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து
1977-ல்ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கட்டில் ஏறிய பிறகு அசைக்கமுடியா சக்தியாக விளங்கினார். 11 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த போது காலன் அவரை கவர்ந்து கொண்டான். இதே தேதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயற்கையோடு கலந்து போனார். இன்று அவரது 25-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நான் சேகரித்த எம்.ஜி.ஆர் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் இங்கே...

* இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தார். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

* மக்களின் மனங்களை படித்த எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை மூன்றாம் வகுப்போடு நின்று போனது

* எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு வந்தது 1932-ல். இங்கு வந்து வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும்.

* நாடக உலகில் அறிமுகமாகி திரு. கந்தசாமி முதலியாரால் சினிமா உலகிற்கு அறிமானார் எம்.ஜி.ஆர்.

* எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி. கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி. இருப்பினும் மலைக்கள்ளன் படத்திற்கு பிறகே எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார்.

* எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த காலத்திலேயே அவரது அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தால் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் வி.என் .ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

* ஏழு என்ற எண் எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவருடனேயே இணைந்து வந்திருக்கிறது. அவர் பிறந்த தேதியும் வருடமும் ஒன்றே ஆகும். (17.01.1917).

*  எம்.ஜி.ஆர். தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.

* எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும்.

*  எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும்.

* அதுமட்டுமின்றி ஏழு என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எண்ணாகும். அவரது வெள்ளை அம்பாசிடர் காரின் எண் 4777 ஆகும். இதன் கூட்டுத் தொகை 7 ஆகும்.

* எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 137.

* இதில் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

* எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன படங்களும் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ: பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம்.

* 1951-ல் எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள் ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

* 1963-ல் எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் அவர்கள் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

* 1967-ல் எம்.ஜி.ஆருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘இதயக்கனி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

* 1972-ல் எம்.ஜி.ஆருக்கு ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டத்தை வழங்கினார். (கலைஞர் கருணாநிதி திரு எம்.ஜி‌.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தார். அந்த பட்டம் அ.தி.மு,க ஆரம்பிக்கும் வரை எம்.ஜி‌.ஆரின் பெயருக்கு முன்னால் போட்டு வந்தார்கள். புதுக் கட்சி ஆரம்பித்தவுடன், கே. ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் அதை புரட்சித் தலைவர் என்று மாற்றினார்)*

* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா படம் என்ற பெருமையை ‘மலைக்கள்ளன்’ பெற்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

*  ‘அடிமைப்பெண்’ பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.

* சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் 24.12.1987 –ல் மறைந்தார்.