Friday, January 31, 2014

கல்லூத்துப்பட்டி ஆலமரம்!



ச்சிவெயில் மண்டையைப் பிளக்க, வானம் மேகங்களின்றி நிர்வாணமாயிருந்தது. அந்நேரத்தில் ஒருவன் ஆவேசமாய் கல்லூத்துப்பட்டியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். வழியெங்கும் பொட்டல் காடாய் கிடக்க, அவன் ஓடி வருகையில் களிமண் புழுதி, அவன் கழுத்து வரை பறந்தது. 

கல்லூத்துப்பட்டி என்றாலே பசுமை போர்த்திய வயல்வெளிகளும், வானை முட்டும் வாகை, கமுகு, தேக்கு, அரசு, ஆலம், தைல மரங்களும்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு மரத்திற்கும் நூறு வயது இருக்கும். மும்மாரி மழை பொழிவது போல் வருசம் தவறாமல் அப்பகுதிகளில் மழை பெய்து விடும். இதனால் அந்த கிராமம் எப்போதும் பசுமையாகவே இருக்கும். 200 தலைக்கட்டுக்கள் கொண்ட கிராமம் அது. தண்ணீருக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. கல்லில் கூட நீர் ஊற்றெடுக்கும் என்பதால்தான் அந்த கிராமத்திற்கு கல்லூத்துப்பட்டி என்றே அக்காலத்தில் பெயரிட்டிருந்தார்கள். அச்சிறப்பு வாய்ந்த கிராமமே மழையில்லா காரணத்தால் வறண்டு போய்க் கிடக்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருந்தது. அந்த ஊருக்குள்தான் அவன் காற்றைப் போல் நுழைந்து கொண்டிருந்தான்.


ஊருக்குள் நுழைந்ததுமே… “ஐய்யய்யோ…. எல்லோரும் வாங்கடா... நம்ம வீராசாமி ஐயாவை கோனேரிப்பட்டிக்காரனுவ வெட்டிப்புட்டானுகடா… எலேய்… நம்ம ஐயாவை வெட்டிப் புட்டானுகடா… வாங்கடா…” பெருங்குரலெடுத்து கத்தியபடி மேலத்தெருவுக்குள் ஓடினான். 

வீராசாமி ஐயாவின் பேரைச் சொன்ன அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் ஐம்பது பேர் கொண்ட கூட்டம் கத்தியும், கம்புமாக அவனைச் சூழ்ந்து கொண்டது.

அப்படி கூட்டம் உடனே கூடியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கிட்டத்தட்ட இருநூறு குடும்பங்கள் கொண்ட கல்லூத்துப்பட்டிக்கு வீராசாமி ஐயாதான் ஊர்ப் பெரியவர். அக்காலத்துப் படிப்பில் அஞ்சாங் கிளாஸ்தான் என்றாலும் அவரது சொல்லிலும், செயலிலும் ஐ.ஏ.எஸ் கூட தோற்றுப் போவார். அவ்வளவு அனுபவசாலி. இளம் வயதிலேயே அவரது மனைவி இறந்து போனாலும் கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல் ஊருக்காகவே வாழ்ந்து வருபவர். சுருங்கச் சொல்லணுமென்றால் கல்லூத்துப்பட்டியின் ஆலமரம் அவர்.

ஊருக்குள் யாருக்கேனும் பணப்பிரச்சினை என்றாலும், கல்யாணம் காட்சி என்றாலும், பஞ்சம் பிழைக்க வந்தாலும் எல்லோரும் பணம், பொருள், தானியமணி என்று அனைத்தையும் கொடுப்பவர். அதனால் அவருக்கு ஊருக்குள் எப்போதுமே தனி மரியாதை. 

அவருக்கு ஏரியை ஒட்டி இவருக்கு ஐந்து ஏக்கர் நிலமும், வற்றாத இரண்டு கிணறுகளும் இருக்கின்றன. எப்பஞ்சத்திலும் கல்லூத்துப்பட்டியிலுள்ள கிணறுகள் வற்றிப் போனதில்லை. ஆனால் இந்த வருசம் மழை பொய்த்ததால் எல்லா கிணறுகளும் வற்றி விட்டன. ஆனால் வீராசாமியின் இரண்டு கிணறுகள் மட்டும் வற்றாத அமுதசுரபியாய் இருந்தன. கல்லூத்துப்பட்டி கிராமத்தின் தாகத்தை தீர்ப்பதற்கு, தனது கிணற்றுத் தண்ணீரை தாராளமாக தந்து கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

ஊரில் நல்லது, கெட்டது எதுவானாலும் வீராசாமி ஐயாவின் காதுக்கு வராமல் இருக்காது. கோவில் திருவிழா... ஊர்க்கூட்டம் என எதுவானாலும் அவரிடம் கேட்டுவிட்டுத்தான் அங்கு எல்லா காரியமும் நடக்கும். ஊர்ப்பிரச்சினை என்றாலும் கூட அவரிடம்தான் வருவார்கள்.

ரண்டு நாட்களுக்கு முன்பு கூட அப்படித்தான் ஊரே திரண்டு, அவரது ஓட்டு வீட்டிற்கு முன்பு வந்து நின்றிருந்தது. ஊர் மக்களின் சத்தம் கேட்டு, வீராசாமி தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

அறுபதைத் தாண்டிய வயது என்றாலும், வைரம் பாய்ந்த கட்டையாக இருந்தார். மீசை முதற்கொண்டு நரைத்துப் போயிருந்தாலும், மீசையை வானம் பார்க்கும்படி வளர்த்து விட்டிருந்தார். கறுத்த உடம்பு. அக்காலத்திலேயே கல்லும், சுண்ணாம்புக் கலவையுமாய்க் கிடந்த ஐந்து காணி நிலத்தை, ஒத்தை ஆளாக இருந்து சீர்படுத்தி, வெள்ளாமை செய்தவர். வேட்டியும், சட்டை இல்லாத உடம்பில் துண்டோடு திண்ணையில் அமர்ந்தார்.

“என்னப்பா விஷயம்… ஊரே ஒண்ணு கூடி வந்திருக்கீங்க?” என்றார் வீராசாமி.

“ஐயா… உங்களுக்கு தெரியாததில்ல… நம்மூரைப் பொருத்தவரைக்கும் எந்த வருசமும் மழை பொய்க்காது. இந்த வருசம் மழை பொய்ச்சிடுச்சி. ஊரே தண்ணியில்லாம காய்ஞ்சு கெடக்கு. ஊரு சனம் தண்ணிக்கு பறவா பறக்குது. இத்தனை வருசம் இல்லாம, இந்த வருசம் இப்படி ஆயிடிச்சுன்னா… ஏதோ… சாமி குத்தமோன்னு நினைக்கறோம். அதான், திருவிழா எடுக்கலாம்னு பாக்கறோம்’’ என்றார் மேலத்தெரு பொன்னுச்சாமி.

“ம்ம்ஹும்…” என்ற அசட்டு சிரிப்பு சிரித்தார் வீராசாமி.

“எதுக்கு ஐயா சிரிக்கிறீங்க?” என்றார் நாகமணி பூசாரி. 

“ஏன்யா… ஊரே பஞ்சத்துல கெடக்கு… தண்ணியில்லாம நிலமெல்லாம் வயிறு வெடிச்சி கிடக்கு… அதுக்கு ஏதேனும் வழி பண்ணுவிங்களா… காசில்லா நேரத்துல போய் சாமிக்குத்தம்… திருவிழான்னு சொல்லிகிட்டிருக்கீங்க…’’ என்று ஊர்மக்களைப் பார்த்து கேட்டுவிட்டு, பூசாரி பக்கம் தன் பார்வையைத் திருப்பி, “யாரு… நாகமணி செஞ்ச வேலையா இது..?” என்றார்.

நாகமணி தலையைக் குனிந்து கொண்டார்.

“எலேய்… கல்லூத்துப்பட்டின்னாலே கல்லுல கூட ஊத்தெடுக்கும்டா.. அப்படியாப்பட்ட ஊரு இப்போ காய்ஞ்சி போச்சு… அதுக்கு என்ன காரணம்னு முதல்ல தெரிஞ்சிக்கோங்கடா…

பக்கத்து கிராமமான கோனேரிப்பட்டியில போன வருசம் தொடங்குன மினரல் வாட்டர் கம்பெனி, நிலத்தடி நீரை எல்லாம் ஒண்ணுக்கு பத்து போர் போட்டு வருசம் முழுக்க உறிஞ்சிகிட்டிருக்கு… வருசம் முழுக்க உறிஞ்சி எடுத்தா பூமித்தாய் என்னதாண்டா பண்ணுவா? அவ ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி அந்த கம்பெனி, நிலத்தடி நீரை உறிஞ்சிகிட்டிருக்கு.

நம்ம கெணத்துகள்ல தண்ணி ஊறுதுன்னா… அது அவளா பாத்து கொடுக்கற கொடை. நாம எப்பவும் அவ ரத்ததை உறிஞ்சினதுல்ல. நம்ம ஏரியில எப்பவும் தண்ணி வறண்டு போனதும் இல்ல. நம்ம முப்பாட்டன் காலத்துல கட்டின ஏரி, நேத்து வரைக்கும் நம்ம கிராமத்துக்கு பசுமையை கொடுத்துச்சு, நிலத்தடி நீர் வறண்டு போகாமயும் பாத்துக்கிச்சு. இப்ப எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. 

வானம் பொய்த்தாலும் நம்ம பூமி பொய்க்காம இருந்துச்சுடா… அப்படிப்பட்ட பூமியே மலடாக்கிடுச்சி அந்த மினரல் வாட்டர் கம்பெனி. மொதல்ல அந்த கம்பெனியை நம்ம கிராமத்துல அமைக்கறதாத்தான் இருந்தானுவ. அதுக்கு அந்த ஊரு பஞ்சாயத்து பிரசிடெண்டு தூது வந்தான். ஆனா நாந்தான் இங்க அமைக்க வேணாம்னு சொன்னேன். 

அதுக்கு அவன், ‘இது நம்ம எம்.எல்.ஏ.வோட கம்பெனிதான். இந்த கம்பெனிய அமைச்சா நல்ல லாபம் கெடைக்கும். உங்க ஊரு பயலுவலுக்கும் வேலை கெடைக்கும். நீங்க சொன்னதான் இங்க இருக்க பயலுக கேப்பானுக’ன்னான்… 

நம்ம அம்மா கொடுக்கற பாலை, நமக்கே தெரியாம திருடி எடுத்து, பாட்டில்ல அடைச்சி, நம்மகிட்டயே வெலைக்கு விக்கிற வேலைய பாக்கறதுக்காக எங்கிட்ட கேட்டான். தண்ணிங்கறது நம்மோட உசுரோட கலந்த ஒண்ணு. அதை விட்டுக் கொடுத்துட்டா… நம்மையே வித்துட்ட மாதிரி… அதெல்லாம் சரிப்படாது… மீறி எங்க கிராமத்துல பண்ணணும்னு நெனச்சா… ஒருபயலக் கூட விட்டு வைக்க மாட்டோம். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்னு சொன்னேன்.

வீட்டுக்கு வர சீதேவிய வேணாம்னு சொல்றீங்க… நான் எங்க கிராமத்துலயே அந்த கம்பெனிய வச்சிக்க சொல்லிடறேன். இந்த ஊர்ல எப்பவும் தண்ணி வத்தாம இருக்குமேன்னுதான் கேட்டேன். எங்க ஊர்ல தண்ணி கெடைக்காதா என்ன? அப்டின்னுட்டு போயிட்டான்.’’ என்றார் வீராசாமி.

“அந்த கம்பெனிய இங்க அமைக்க விடாம பண்ணியது நீங்கதானா? அது இங்க அமைஞ்சிருந்தா… இப்ப இருக்க பஞ்சத்துக்கு வயல் வேலைதான் இல்ல. அந்த வேலை இருந்தாலாச்சும் பொழச்சிக்கிட்டிருக்கலாம்ல. வீணா கெடுத்துப்புட்டீங்களே பெரிசு?” என்று அந்த கிராமத்து இளவட்டப் பயல்களில் ஒருவனான கதிரேசன் கேட்டான்.

“கதிரேசா… அந்த கம்பெனிய இங்க அமைச்சிருந்தா.. அந்த கம்பெனி இங்க வந்த அடுத்த மாசமே, நம்ம ஊர் வறண்டு போயிருக்குமுடா… பக்கத்து கிராமங்கறதால ஒரு வருசம் தாக்குப் பிடிச்சிருக்கு… இதுமட்டுமில்லடா, உங்களுக்குன்னு தனியா பத்து லட்ச ரூபா வாங்கித் தரேன். வாங்கிக்கோங்க… எனக்கும் பத்து லட்ச ரூபா கெடைக்கும்… இந்த கிராமத்துலதான் தண்ணி எப்போதும் கெடைக்கும்ல.. என்ன சொல்றீங்கன்னு அப்பவே அவன் என்கிட்ட கேட்டான். நான் அதுக்கு அப்போ சம்மதிச்சிருக்கணும்ங்கறியா..?” என்றார்.

கதிரேசன் தலைகுனிந்து கொண்டான்.

மீண்டும் ஊர் மக்களைப் பார்த்து, “அந்த கம்பெனிக்காரனுங்க… போன வருஷத்துலருந்து தண்ணிய உறிஞ்சி எடுத்துகிட்டிருக்கானுங்க… நிலத்தடி நீரு கிடுகிடுன்னு இறங்கிடுஞ்சி. அதுல நம்மூரு தண்ணியும் காணாம போயிடிச்சு… நம்ம ஊரு தண்ணி பிரச்சினைக்கு அந்த கம்பெனியும் ஒரு முக்கிய காரணம்” என்றார்.

“அந்த கம்பெனியில நம்ம ஊர் ஆள்களும் வேலை செய்யறாங்க ஐயா. அவங்க இந்த மாதிரி ஏதும் சொல்லக் காணமே” என்றார் நடுத்தெரு முத்துசாமி.

“என்ன முத்து?, நம்மூர்க்கார பயலுக அங்க என்ன என்ஜினீயர் வேலைக்கா போறான். எடுபிடி வேலைக்குத்தானே போறான். இந்த வெவரமெல்லாம் அவனுக்கு எப்படி தெரியும். அதுமில்லாம, வேலை கொடுக்கறவனுக்கு விசுவாசமாதான் நம்மூர்க்கார பயலுக இருப்பானுக. அது நம்ம மண்ணோட குணம். தண்ணி பஞ்சத்துக்கு அந்த கம்பெனியும் ஒரு முக்கிய காரணம்னாலும், இதுக்கு இன்னும் வேற காரணங்களும் இருக்கு” என்றார். 

அது என்ன என்பது போல் முத்துசாமி மட்டுமின்றி ஒட்டு மொத்த கூட்டமே முகத்தில்  கேள்விக்குறியோடு வீராசாமியைப் பார்த்துது.
“பல நாடுகளோட சுயநல வேலைகளால வானிலை மாற்றமடைஞ்சிருச்சி. அதனாலதான் அடிக்கடி சூறாவளி, புயலு, பூகம்பம், பேய் மழை எல்லாம் பெய்யுது. சில ஊருங்க அழியுது… அதுல நம்மநாடும் விதிவிலக்கில்ல… அதுக்கு கொடுத்த விலைதான் குஜராத் பூகம்பமும், சுனாமி தாக்குதலும். இப்பகூட உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு பல ஆயிரம் பேரை பலிகொடுத்திட்டோம்… நாடுகதான் அப்படீன்னா… நம்ம அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கானுக.. அதுக்கு உதாரணம் நம்ம ஊர் எம்.எல்.ஏ.வே இருக்கான். அவன்தான் அப்படீன்னனா, நம்ம ஊர்க்காரப் பயலுகளும் அப்படித்தான் இருக்கீங்க…” என்று காட்டமாக பேசினார் வீராசாமி.
“என்ன ஐயா..? கடைசியில நம்மூர்க்காரப் பயலுகளையே கடைசீல குத்தம் சொல்றீங்க” என்றார் மருதாசலம்.

“நம்ம பயலுகளுக்கு முன்னெல்லாம், ஊரு நலம் முக்கியமா இருந்துச்சு மருது… இப்போ சுயநலம் பெருகிப் போச்சு. நம்ம ஊர்ல நிறைய மரத்த வச்சிருந்தோம். வெட்டக்கூடாதுன்னும் ஊர் கட்டுப்பாடு வச்சிருந்தோம். எவன் கேக்கறானுக, ஒருத்தன் ஏரியை தூத்து செங்க சூளை போட்டிருக்கான். இன்னும் நெறைய பேர், எங்க நெலத்துல இருக்குற மரத்தைத்தான் வெட்டப்போறோம். ஊர்ல இருக்கறவங்ககிட்ட நாங்க எதுக்கு அனுமதி வாங்கணும்னு வெட்டி சாச்சிட்டானுங்க… இதெல்லாம் அழிவுக்குத்தான்னு எவனுக்கும் தெரியல. இன்னும் சிலர் வயல்வெளியை கூறு போட்டு வீட்டு மனையாக்கிட்டானுங்க…’’ என்று கூறியவர், தன் தோளில் கிடந்த துண்டால் முகத்தில் வழிந்த வியர்வையத் துடைத்துக் கொண்டார்.

‘வளர்ச்சியைப் போய் அழிவுன்னு சொல்லுதே பெரிசு’ என கிசுகிசுத்த மருதாசலம், “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ல வரீங்க..?” என்றார்.
“நம்ம ஊரைச் சுத்தி, நூறு வயசுக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கு. அதுங்கதான் நம்ம ஊரைக் காப்பாத்தற சாமிங்க... அதை நாமதான் பத்திரமா பாதுகாக்கணும். மரங்களை இனி யாரும் வெட்டக் கூடாது. நம்ம முன்னோருங்க மரம் நட்டதுக்குப் பிறகு, நாம எந்த மரத்தையும் நடாம விட்டுட்டோம். இனி நம்ம கிராமத்தை சுத்தி எல்லோரும் ஆளுக்கு அஞ்சி மரம் நடணும். சிலதை மட்டும் வேரோட வெட்டி சாய்க்கணும்.” என்றார் தீர்க்கமாக.

“மரத்தை வெட்டக் கூடாதுன்னு சொன்ன நீங்களே இப்ப வெட்டணும்னு சொலறீங்க… ஏன்? இப்படி மாத்தி மாத்தி சொல்றீங்க” என்றான் கதிரேசன்.

“நம்ம ஊரைச் சுத்தி கருவேல மரம் எங்கெங்க இருக்கோ… அத்தனையும் தேடிப் பிடிச்சு, வேரோட வெட்டிச் சாய்க்கணும். அதுலயும் சீமைக் கருவேலமரம் இருக்கு பாரு, அதுகளை உருத்தெரியாம அழிச்சிரணும்.” என்றார் வீராசாமி.
“என்னங்க ஐயா… நம்ம ஊர்ல அதிகமா இருக்கிற மரமே கருவேல மரம்தான். அதைப் போய் வெட்டச் சொல்றீங்களே… ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு அடிக்கடி நீங்கதான் சொல்லுவீங்க… அதைப் போய் வெட்டச் சொல்றீங்களே..?” என்றார் கீழத்தெரு முருகேசன்.

“அது உண்மைதான் முருகேசா… ஆலும் வேலும் என்பது ஆலமரத்தையும் வேப்ப மரத்தையும் குறிக்கும். கருவேல மரத்தையும் சீமைக் கருவேல மரத்தையும் இல்ல. இந்த ரெண்டு மரமும் நம்ம நாட்டு மரமில்ல. வெள்ளைக்காரன் நம்மநாட்டுக்கு கொண்டு வந்த சனியன்கள்ல இதுகளும் உண்டு. இந்த ரெண்டு மரமும் தண்ணியே இல்லாத இடத்துல கூட வளரும். நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்துல இருந்தாலும் அவ்ளோ ஆழம் வரைக்கும் நீண்டுகிட்டுப் போய் தண்ணிய உறிஞ்சிக் குடிச்சிரும். அதனால, நெலத்தடி நீரும் சுத்தமா கொறைஞ்சிரும். 

வயலுக்கு நீர் பாச்சினம்னா, வக்கனையா வாரிச் சுருட்டிக் குடிச்சுரும். பயிருக காஞ்சிடும். வெறகுக்குன்னு அதை நம்மூர்க்கார பயலுகளே வளக்கறானுங்க. அதை மாத்தணும். இந்த மரங்க நெலத்தடி நீரையும் வெஷமாக்குதுப்பா… அந்த மரத்துக்கு கீழ வேற எந்த மரத்தையும் வளர விடாது. இந்த மரத்தால கெடுதல்தான் அதிகம் முருகேசா… இந்த வெவரமெல்லாம் எனக்கே கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது. 

போன வாரம், வேளாண்மை அலுவலகத்துக்கு போனப்ப, அங்க இருந்த தோட்டக்கலை அதிகாரி இந்த வெவரத்தை சொன்னாரு. இந்த மரங்களாலதான் ராமநாதபுரம் மாவட்டமே வறட்சியா போயிடிச்சுன்னு பொதுப்பணித்துறை அறிக்கையே அளிச்சிருக்குன்னும் சொன்னாரு. நம்ம சுத்துப்பட்டு கிராமங்கள்ல எல்லாம், அதிகமா கருவேலமும், சீமைக் கருவேலமும்தான் நிறைய இருக்கு. இங்க இருக்குற கருவேல மரங்க ஒவ்வொண்ணும், பக்கத்து ஊருல இருக்கிற மினரல் வாட்டர் கம்பெனிக்கு சமம். அதையெல்லாம் வேரோட வெட்டி சாச்சிட்டு, அதுக்கு பதிலாதான் ஆளாளுக்கு அஞ்சி மரம் நடணும்னு சொல்றேன்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில மத்த ஊருக்குப் போய் வேலை செய்யறத விட்டுட்டு, நம்ம ஊர்ல இருக்கிற இந்த ஆபத்தான மரங்கள முதல்ல வேரோட வெட்டி எறிவோம். நம்ம ஊர் ஏரியை தூர் வாருவோம். செங்க சூளைய காலி பண்ணுவோம்… ஊருக்குள்ள இருக்குற குளத்தை குப்பை மேடாக்காமா பாத்துக்குவோம். ஒவ்வொரு வீட்லயும் மழைநீர் சேகரிப்பு தொட்டிய கட்டுவோம். மழையால வீணா போற தண்ணிய, குளத்துக்கு திருப்புவோம்… மரங்களை அதிகம் நட்டுவைப்போம்…. இதை எல்லாம் செஞ்சோம்னாதான் அடுத்து வர்ற காலங்கள்ல, தண்ணி பஞ்சத்துல இருந்து நம்ம ஊரு தப்பிக்கும்.

நம்ம ஊரை சுத்தம் பண்ணுற வேலைகளை நீங்க பாருங்க… அந்த மினரல் வாட்டர் கம்பெனிய, நம்ம மாவட்டத்தை விட்டே காலி பண்ணுறதுக்கான வேலைய சட்டப்படி நான் பண்ணறேன். அப்பத்தான் நம்ம தண்ணி, நம்ம மண்ணுக்கும், நம்ம உசுருக்கும் கெடைக்கும்.  

இது நம்மூர்ல மட்டுமில்ல, நம்ம தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான். இந்த நிலைய மாத்தறதுக்கு, நாம முன்மாதிரியா இருப்போம். நம்மள பாத்து நம்ம நாடே மாறணும். இழந்த பசுமையை மீட்கணும்… எல்லோரும் என்ன சொல்றீங்க?” என்று ஊர் மக்களைப் பார்த்து சத்தமாய்க் கேட்டார்.

“அப்படியே செய்யறோம் அய்யா…” என்றனர் கோரஸாக…

அன்று எடுத்த முடிவின் காரணமாக, இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆபீஸிற்கு சென்ற வீராசாமி, ‘மினரல் வாட்டர் கம்பெனியை இழுத்து மூடணும்’ என்று ஊர் மக்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

இந்த விவகாரம் எம்.எல்.ஏ.வின் காதுகளுக்குப் போகவே, வீராசாமி கோனேரிப்பட்டிக்குள் வரும்போது, ஆட்களை விட்டு அவரை வெட்டி இருக்கிறான்.

ருக்குள் ஒடிவந்தவன் ஆவேசமாய் கூறியதைக் கேட்ட கல்லூத்துப்பட்டி மக்கள், எல்லோரும் ஒன்றாய்த் திரண்டு கோனேரிப்ப்பட்டியை துவம்சம் செய்ய கிளம்பினர். சிண்டு, நண்டு, சிறிசு, பெரிசு என எல்லோர் கைகளிலும் கட்டையோ, கழியோ, குத்தீட்டியோ ஆயுதமாகிக் கொண்டு அவர்களோடு பயணித்தது.


கல்லூத்துப்பட்டி ஊர் எல்லையை அவர்கள் தாண்டுவதற்குள், வீராசாமி இடுப்பில் பெரிய துண்டு ஒன்றைக் கட்டியபடி, ஊரை நோக்கி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரது வெள்ளைத் துண்டு, ரத்தக் கசிவால் சிவப்பாய் மாறிப்போயிருந்தது.

“ஐயா… சாமி… உங்களுக்கா இந்த நெலமை… கோனேரிப்பட்டிக்காரனுங்களை கொன்னு கூறுபோட்டுடறோம்யா…” என ஊர் மக்களே ஒன்று சேர்ந்து கோபாவேசப்பட்டனர்.

சைகையால் எல்லோரையும் தடுத்து நிறுத்திய வீராசாமி… “டேய்… பத்துபேரு வந்து நின்னாலும் ஒத்தை ஆளா சமாளிக்கறவண்டா இந்த வீராசாமி... வெட்ட வந்தவன் ஒவ்வொருத்தன் கொடலையும் சரிச்சுட்டுதான் வந்திருக்கேன். பேடிப்பய ஒருத்தன் பின்னால இருந்து வெட்டிட்டான். அவனையும் வுட்டு வைக்கல... இது என்னோட முடிஞ்சு போகட்டும்டா...

வெவரந்தெரியாம யாரும் நீங்க சண்டைக்கு போகாதீங்க… என்னை வெட்டினது கோனேரிப்பட்டிக்காரனுங்க இல்ல… எம்.எல்.ஏ.வோட ஆளுங்கதான்… அவனுங்கள நானே சாச்சிட்டேன்... எனக்கு பிள்ளை குட்டி ஏதுமில்ல... நீங்கதான் என் பிள்ளைங்க. உங்களுக்கு எல்லாமே இருக்கு... ஊரே பஞ்சத்துல கெடக்கும் போது வெட்டு, குத்துன்னு போயி உங்க குடும்பங்களை தவிக்க விட்டுடாதீங்கடா…” என்று பேசி நிறுத்தியவர், சற்று இழுத்து மூச்சுவிட்டிக் கொண்டார். இடுப்புப் பகுதியிலிருந்து ரத்தம் மேலும் கசியத் தொடங்கியது.

அதைப்பார்த்ததும் “வாங்க ஐயா ஆஸ்பத்திரிக்கு போவோம்…” என ஊர் மக்களே கதற…

“யேய்… எனக்கு ஒண்ணும் ஆகாது… எதுக்குடா அழுவுறீங்க… அழாதீங்கடா… ஆஸ்பத்திரிக்கு நான் போனேன்னாக்கா, அந்த நேரத்துல நீங்க கோனேரிப்பட்டிக்காரனுங்கள வெட்டி சாச்சிட்டு வந்துடுவீங்க… அது ஊரு பகையாப் போயிடும்… நம்ம ஊரு மேல பழி பாவம் வந்துடும்டா... அதனாலதான் முதல்ல உங்கள பாக்க வந்திருக்கேன்… காயம் பெரிசா இல்ல… அதனால எனக்கு ஒண்ணும் ஆகாது. நான், ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க எல்லோரும் எனக்கொரு சத்தியம் பண்ணி கொடுங்க…”

“ஐயா… சொல்லுங்கைய்யா, செஞ்சி கொடுக்கறோம்…” ஒவ்வொருவர் கண்களிலும் பூமியில் விழுந்த கண்ணீர் துளிகள் பூமியை நனைத்தன.

“எக்காரணம் கொண்டும் எனக்காக யாரும் கத்தி, கபடாவை தூக்கக்கூடாது. அந்த மினரல் வாட்டர் கம்பெனிக்காரனுங்களை விரட்டி அடிக்கணும்… அதை ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா கூடி சட்டப்படி போராடினா கண்டீப்பா அது நடக்கும்… நம்ம மண்ணுக்காக நாமதான் போராடணும்… உங்களை மடக்கறதுக்காக பணத்தை கத்தை கத்தையா நீட்டுவானுங்க.. பஞ்சத்துல இருக்கோமேன்னு கைநீட்டி வாங்கிடாதீங்கடா… காசுக்கு அடிமையானா… அடுத்து வரும், நம்ம தலைமுறையே தண்ணியில்லாம, தடந்தெரியாம அழிஞ்சு போயிரும்… அழிக்க வேண்டிய மரத்தை அழிச்சி… நல்ல மரங்களை நடுங்கடா… இதை செய்யறோம் எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க…” என்றார்.

“அப்படியே செய்யறோம் ஐயா…” என்று ஊரே அழுதபடி குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே…

அதுவரை ஆலமரமாய் நின்றிருந்த வீராசாமி, தனது மீசையை முறுக்கியபடியே கீழே சரிந்தார். அவரது உடலில் இருந்து வழிந்த ரத்தம் கல்லூத்துப்பட்டி எல்லையை தாண்டாமல், அவர் ஊர் மண்ணை ஈரமாக்கத் தொடங்கியது.