Wednesday, September 30, 2009

நியூசிலாந்து அருகே சுனாமி தாக்குதல்... 100 பேர் பலி.... பலர் மாயம்


சமோயா தீவுக்கரையினை சிதறடித்த சுனாமி

பசுபிக் பெருங்கடல் தீவான சமோயாவை சுனாமி அலை  தாக்கியது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சமோயா தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாயா சென்றடைந்துள்ளன.

21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாவது சுனாமி தாக்குதல் இதுவாகும்... 


நன்றி: http://www.guardian.co.uk/