Thursday, December 30, 2010

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் மூன்றாவது உலக மகாயுத்தமே..!



முதல் நடந்த இரு மகாயுத்தங்களும் இரு நாடுகளிடையே ஆரம்பமாகி பல நாடுகளிடையே பரவிய பலமுனைப் போர்களாகும். ஆனால், தமிழருக்கு எதிரான போரோ தொடக்கத்தில் முன்னைய போர்களைப்போல், இரு தேசங்களுக்கான போராக ஆரம்பித்தாலும் தமிழர் தேசத்துக்கு எதிராக சிங்கள தேசத்துடன் பல சக்திவய்ந்த நாடுகளின் பங்களிப்புடனேதான் இப்போர் முடிவு பெற்றது.

சிறீலங்கா நாட்டின் தலைவர் மகிந்தா இராஜபக்சேவின் போருக்கு உதவிசெய்த இருபது நாடுகளுக்கான நன்றி உரை மற்றைய நாடுகளின் எண்ணிக்கையை தெளிவாக்கியதுடன் அவர்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாவது உலகமகாயுத்தம் பெரும்பாலும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டே நடைபெற்ற  போர். இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, கங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் எதிராக நின்று போரிட்டன. இங்கு இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள்நச்சு வளியம்வான்வழிப் போர்முனை, நீர்மூழ்கிக் கப்பல்கள் என்பன போரின் தாக்கத்தை மேலும் அதிகரித்தன.

இருபது நாடுகள் முக்கிய பங்கை வகுத்த இரண்டவது உலகமகாயுத்தம் உலகம் தழுவிய அளவில பல முனைகளில், பல கோணங்களில் நடைபெற்ற யுத்தமாகும். சீனாவின் மீது ஜப்பானின் படையெடுப்பு, ரஷ்யாமீது ஜப்பானின் தாக்குதல், அமெரிக்கா மீது ஜப்பானின் வான்தாக்குதல், ஜெர்மனி மீதான நேசநாடுகளின் போர், ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுக்குண்டு வீச்சு போன்றவை இப்போரை உக்கிரமாக்கியது, உலகமயமாக்கியது.

ஆனால் தமிழருக்கு எதிரான போரோ எந்த யுத்தத்தையும் விட நாசகாரமானதும், கோரமானதும், கொடியதுமாகும். இன அழிப்பை மையமாகக் கொண்ட இப்போர் கடந்த இரண்டு உலகமகா யுத்தங்களையும்விட பல மடங்கு போர்க்குற்றங்கள் நிறைந்த, மனித உரிமைகள் மீறப்பட்ட யுத்தமாகும். இந்த யுத்தம் மனித உரிமையை மதித்து நடக்கும் நாடுகளுக்கும் அதை வேண்டிநிற்கும் அமைப்புகளுக்கும் கிடைத்த சவுக்கடியாகும்.

விஞ்ஞான வளர்ச்சியின் உதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட இரண்டாவது மகாயுத்ததில் பயன்படுத்திய ஆயுதங்களும், சக்திவாய்ந்த நாடுகளின் இன்றைய நூற்றாண்டிற்கான புதியரக ஆயுதங்களும், மாற்றுப்படையின் நடவடிக்கைகளை, நடமாட்டங்களை அவதானிக்கவல்ல நவீன கருவிகளும் தமிழருக்கு எதிரான இப்போரை இரு உலக மகாயுத்தங்களையும்விட உக்கிரமானதாக ஆக்கவில்லையா?

அது மாத்திரமல்லஎந்தப்போரும் இதுவரை முகம் கொடுக்காத அளவிற்கு தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சரமாரியாகப் பொழிந்ததும், உலகம் கண்டிராத அளவில்  நச்சு வாயுக்களையும், இரசாயனத்தையும் கட்டுப்பாடின்றி அப்பாவித் தமிழர் மீது பாவித்த இப்போர், முன்னைய போர்களைவிட கோரமானதாகச் சித்தரிக்கவில்லையா?

இரண்டாவது மகாயுத்ததில் ஜெர்மனி மீது போர் தொடுத்த நேசநாடுகள், மனித உரிமைக்கு மதிப்பே கொடுக்காத  ஜெர்மனியில் மனித உரிமைகளை மதித்துப் போர்புரிந்தார்கள்ஜெர்மன் நாட்டு மக்களையோ, அவர்கள் உடமைகளையோ, அல்லது கலாச்சாரத்தையோ அழிக்கவேண்டும் என்று அவர்கள் போர்தொடுக்கவில்லைஜெர்மன் ஆட்சியில் நடந்த நாசகாரச் செயல்களை நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும்தானே போர்புரிநதார்கள்.

ஆனால், எமக்கெதிரான போரில் தமிழ் இனத்தையும் அவர்கள் வளங்களையும் அழிப்பதே சிங்கள அரசின் அப்பட்டமான எண்ணம், மாற்றுக் கருத்தில்லாத குறிக்கோள். குண்டுவீச்சைத் தாங்கமுடியாமல் கிடங்குகளில் தங்கி இருந்த அப்பாவித் தமிழர்களை உயிரோடு மண்மூடிப் புதைத்ததும்பிடிபட்டவர்களை எரிபொருள் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்ததும் இப்போரை நாசகாரமானதாகக் காட்டவில்லையா?

சுமாலியாவில் கற்பழிப்பில் பட்டம் பெற்ற சிங்கள இராணுவத்தின் கற்பழிப்புகள் இப்போரின் கோரத் தன்மையை எடுத்துக் கூறவில்லையா? தமிழருக்கு எதிரான இப்போரின்போது நடந்த கற்பழிப்புகள்  இதுவரை நடந்த எல்லாப் போர்களிலும் இடம்பெற்ற கற்பழிப்புகளை விடப் பல மடங்கு என்பதை நன்கு அறிந்த உலகிற்க்கு இப்போர் கொடியதாகத் தெரியவில்லையா?

இப்போரில் பங்கு கொண்ட முக்கிய நாடுகள் சிறு பிரிவுகளாகப் போரிடும்போது அதற்குப் பெயர் உலகமகாயுத்தம் என்றால், ஏறக்குறைய அத்தனை நாடுகளும் ஒன்றாக இணைந்து ஒரு தேசத்தின்மீது தொடுத்த போருக்குப் பெயர் யுத்தமாபோரில் பங்குகொண்டவர்களும், அந்தப் போருக்கு பெயரை வைப்பவர்களும் சக்திவாய்ந்த நாடுகள்தான் என்றால் அவர்கள் என்ன பெயர் வைத்தாலும் சரியா? அதை நாமும் மற்றய நாடுகளும் ஏற்கவேண்டுமா?

சக்தி வாய்ந்த நாடுகளின் புதிய ரக ஆயுதங்களின் பரீட்சைக் களமான தமிழர் தேசத்தில் நடந்த இப்போரரில் அந்த வீர வேங்கைகளை வெல்லமுடியாமல் இருபத்தொரு நாடுகளும் ஓர் அணியாக நின்று, வேங்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதும், இறுதி வேளையிலும் 6,000 இராணுவத்தினரைக் கொண்று 100,000 எதிரிகளைத் திணறவைத்த இந்த யுத்தம் இரு மகாயுத்தங்களையும்விட எந்த விதத்தில் குறைந்தது?

இது ஓர் ஈழப் போராயிருந்திருந்தால் வீரத்துக்கு வித்திட்ட எம் இனிய உறவுகள் இந்தக் கோழையர்களைப் பந்தாடியிருப்பார்களே..! இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனையென்றால் தமிழர் தேசத்துக்குள் வர சிங்கள அரசு அனுமதி கோரியிருக்குமா? இப்போர் இரண்டு தேசங்களுக்கான போர். போரில் தம்மால் வெல்லமுடியாததால் மாற்று நாடுகளைத் தன் மாயவலையில் சிக்கவைத்து தீவிரவாதம் என்ற பெயரில் சிங்களத் தேசம் நடாத்திய நயவஞ்சகப் போரல்லவா?

இரண்டு மகாயுத்தங்களை விட பலமடங்கு ஆயுதபலத்தையும், நவீன போர்க் கருவிகளையும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சு வாயுக்களையும், இரசாயனத்தையும், கற்பழிப்புகளையும், அப்பாவி மனிதரை மண்மூடி உயிரோடு புதைத்தது போன்ற மனித அவலங்களையும், ஹிட்லரே செய்யாத சித்திரவதைகளையும் கொண்ட இருபத்தொரு நாடுகள் இணைந்து நடாத்திய ஈழத் தமிழருக்கு எதிரான போர், எப்படிப் பார்த்தாலும் மூன்றாவது உலகமகா யுத்தமே. இதை யாராலும் மறைக்கவோ அல்லது காரணம் காட்டி மறுக்கவோ முடியாது.

இன அழிப்பை நிறுத்த இரண்டாவது உலகமகாயுத்தமென்றால், ஒரு இனத்தை அழிப்பதற்கு மூன்றாவது உலகமகா யுத்தமா? அதுவும் மனிதாபிமானம் நிறைந்த இன்றைய உலகிலா? மனித உரிமைக்கு முதலிடம் கொடுக்கும் இந்த நூற்றாண்டிலா?

அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை உணராத உலகின் தவறான முடிவுதானே இந்தச் சக்திவாய்ந்த நாடுகளின் சிங்களத் தேசத்துடனான சங்கமம். உரிமை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின் நியாயமான போர் உலகமகா யுத்தமாக உருவெடுத்ததற்கும்மனித உரிமைக்கும் மனிதாபிமானத்திற்கும், ஒரு  சவாலாக மாறியதற்கும் காரணம்தான் என்ன?

அநீதி செய்தால் மட்டும் பாவமல்ல, அநீதி செய்வதைப் பார்த்துக்கொண்டிருப்பதுமே பாவம் என எண்ணும் இந்த நூற்றாண்டில் இப்படியான ஓர் இன அழிப்பாஉலகம் கண்டிராத ஓர் மனிதப் பேரவலமா? அதுவும் சக்திவாய்ந்த நாடுகளின் பங்களிப்புடனா இந்தத் தவறு நடந்தது? இதற்கான பரிகாரம்தான் என்ன?

உலகத் தலைவர்களே! நீதி வேண்டி நிற்கும் தொண்டு நிறுவனங்களே, அமைப்புக்களே!

நீதிக்காகப் போராடினோம், நியாயத்தின் வழி நின்றோம். ஏறக்குறைய 32 ஆண்டுகள் மீண்டும் எம்மை நாமே ஆண்டோம். ஆக்கிரமிக்க வந்த இராணுவத்தை மட்டும்தான் அழித்தோமேயல்லாமல் சிங்கள மக்களையலல. நாம் சிங்களவர்களைப்போல் மாற்றாரின் வேதைனை கண்டு மகிழ்பவர்களுமல்ல, மாறறு இனத்தின் அழிவுகண்டு ஆனந்தப்படும் அரக்கர்களுமல்ல.

வீரம் வேறு தீவிரவாதம் வேறு என்பது உங்களுக்கு விளங்காத விடயமா? தீவிரமே செய்யாத எம்மைத் தீவிரவாதிகள் எனக்கூறி உலக அரங்கிலே எமக்குக் கரி பூசினீர்களே, இது நீதியாபாராமுகம் காட்டிய நாடுகள் ஒருபுறமாகவும், எமது திறமையும், வளர்ச்சியும் கண்டு வெதும்பிய நாடுகள் மறுபுறமாகவும் நின்று எம் வீரத்துக்கு விலை பேசினீர்களே, எமது நீதிக்கான போரை ஊனப்படுத்தினீர்களே... இது நியாயமா?

உங்கள் செயலால், வெற்றியின் விளிம்பிலே நின்ற ஒரு கண்ணியமான இனம், நீதிக்காக நியாய வழியில் போராடிய ஒரு தேசம் இன்று நிலைகெட்டு நிற்கிறதே. இவர்களின் இன்றைய நிலைக்கு நீங்களும்தானே காரணம். ஈழத்தமிழர்கள் மீண்டும் உரிமையுடன் வாழ, அவர்கள் வாழ்வை வளமாக்க உதவ வேண்டியது உங்கள் கடமையல்லவா? இதில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

போரின்போது பாராமுகம் காட்டிய அரசுகளின் தலைவர்களும், தெரிந்தோ தெரியாமலோ இப்போரில் பங்குகொண்ட நாடுகளும், அநீதி கண்டும் ஒன்றுமே செய்யமுடியாமல் தவித்த மனித உரிமைக்கான அமைப்புகளும், போர்க்குற்றத்துக்கான நிறுவனவங்களும், ஜக்கிய நாடுகள் சபையும் தமிழர்களுக்கு உதவக் கடமைப் பட்டவர்களே.

அர்த்தமுள்ள அரசியல் போரை நடாத்தும் 'நாடு கடந்த தமிழீழ அரசு'டன் இணையுங்கள். நடந்ததை மறப்போம், நடக்க வேண்டியதைச் செய்வோம். போர் குற்றம் புரிந்தவர்களை, மனித உரிமைகளை மீறியவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.

உங்கள் இராஜதந்திர நகர்வும், எங்கள் கண்ணியமான செயற்பாடும் ஈழத்தமிழரின் அபிலாசைகளை நிறைவு செய்யட்டும். நன்றி.

கலாநிதி ராம் சிவலிஙம்
பிரதிப் பிரதமர், கல்வி, கலாச்சாரம், உடல்நல மந்திரி - நாடுகடந்த தமிழீழ அரசு