Monday, July 18, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 7 (உண்மைச் சம்பவம்)

வநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான்.

அவன் மனதை அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்... என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல... ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்களா?. ஆளுதான் வளர்ந்திருக்கானுங்களே தவிர அறிவு வளரலயே...’ என குழப்பமாய் யோசித்துக் கொண்டே வந்தான்.

அதற்குள் கடை வந்து விடவே, நூறு ரூபாயை நீட்டி “ஒரு பெப்ஸி, நாலு முறுக்கு கொடுங்க...” என்றான்.

“சில்லறை இல்ல தம்பி... வேணும்னா ஒரு பாக்கெட் முறுக்கும் பெப்ஸியும் வாங்கிக்கோங்க… சில்லறை தரேன்” என்றார் கடைக்காரர்.

“சரி... அப்படித்தான் கொடுங்க...” என்றவன், கடைக்காரரைப் பார்த்து “ஏங்க... இந்த பஷீர் பாய் எப்படிப்பட்ட ஆளுங்க... பேய் ஓட்டுவாரா..? இல்ல எல்லாம் சும்மா ஏமாத்து வேலையா..?”

“எனக்கு தெரியாது தம்பி, என்னோட அண்ணனோட கடை இது. அவர்தான் தினமும் இந்த கடையில இருப்பார். நான் இன்னிக்குத்தான் இந்த கடைப்பக்கமே வரேன்…” என்றார்.

கேட்ட தகவல் கிடக்காமல் போனதில் மனதிற்குள் சற்று வருத்தப்பட்டாலும், கடைக்காரர் கொடுத்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும், மீதி சில்லறையும் வாங்கிக் கொண்டு, அந்த இருண்ட சந்தினுள் நவநீதன் திரும்பி வந்தான்.

நவநீதன் வரும் வரை அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆவி, நவநீதன் கையில் தான் கேட்ட பொருள்கள் இருப்பதை பார்த்து, முகத்தைப் பிரகாசப் படுத்திக் கொண்டது.

அதே சமயத்தில் “டேய்... கடைக்கு போனவன்... முழுசா திரும்பிட்டான்டா” என்று அருகிலிருந்த நண்பனின் காதில் கிசுகிசுத்தான் வெள்ளியங்கிரி. அந்த கிசுகிசுப்பு ஆவியின் காதில் விழவே... சடாரென தன் தலையைத் திருப்பி வெள்ளியங்கிரியை முறைக்கவே... வெலவெலத்துப்போனான் வெள்ளியங்கிரி. குப்பென வியர்த்து வழியத்தொடங்கியது அவன் முகம்.

நவநீதன் தன்னிடமிருந்த பெப்ஸியையும், முறுக்கு பாக்கெட்டையும் பாயிடம் கொடுத்து விட்டு, எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ, அந்த இடத்தில் போய் நின்று கொண்டான்.

நவநீதன் கொடுத்த பொருட்களை வாங்கிய பஷீர் பாய், ஆவியிடம் கொடுக்காமல் தன் கையில் வைத்துக் கொண்டார்.

தன்னிடம் உடனே கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ஆவி, பாயின் இந்த செய்கையால் ஏமாற்றமடைந்ததால், பஷீரை ஏக்கத்துடன் பார்த்தது.

“என்ன பாக்கற... இதெல்லாம் உனக்கு தரலன்னா..?”

‘உம்’ என்பது போல் தலையை ஆட்டியது ஆவி.

“தரேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு... இதெல்லாம் வாங்கி சாப்பிட்டதும், இந்த பையனை விட்டு விட்டு போயிடறேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும். இந்த பையன் உடம்பை விட்டு போயிடணும்... இதெல்லாம் செய்யறேன்னு சொல்லு தரேன்...” என்றார்.

“ம்ம்... நீங்க சொன்ன படி சத்தியம் செய்யறேன்...” என்றது ஆவி.

“உன்னை நம்பறேன்... ஏமாத்து வேலை ஏதாச்சும் பண்ணினா, உன்னை எங்கயும் போக முடியாதபடி பண்ணிடுவேன்... ஜாக்கிரதை...” என்ற படியே பஷீர் முறுக்கு பாக்கெட்டையும், பெப்ஸியையும் ஆவியிடம் கொடுத்தார்.

“ம்ம்... இந்தா தின்னுட்டு.... சத்தியம் பண்ணிட்டு ஓடிப்போ...” என்றார் பஷீர்.

முறுக்கு பாக்கெட்டை ஆவலாக வாங்கிய ஆவி, அடுத்த சில நிமிடத்திற்குள் அனைத்தையும் காலி செய்தது. முறுக்கு சாப்பிடும் போது எழுந்த  “நறுக்... முறுக்...” சப்தம், அங்கிருந்தவர்களின் காதுகளில் மிகத் துல்லியமாக விழுந்தது. அடுத்ததாக பெப்ஸியை எடுத்த ஆவி, ஒரே மூச்சில் கடக்... முடக் என குடித்து விட்டு வெறும் பாட்டிலை கீழே வைத்தது.

இத்தனையும் 5 நிமிடத்தில் ஆவி சாப்பிட்டதைப் பார்த்த நவநீதனுக்கு, ஏதோ ஐந்து நாள் பட்டினி கிடந்தவன் அரக்க பரக்க சாப்பிட்டதைப் போல் தெரிந்தது.

‘ம்... சாப்பிட்டு விட்டேன். இப்போ நான் என்ன செய்யணும் சொல்லு’ என்று கேட்பது போல் பஷீரின் முகத்தை ஆவி பார்த்தது.

“என்ன பாக்கற.. நான் சொல்ற மாதிரி, சொல்லி சத்தியம் பண்ணிட்டு ஓடிப் போயிடணும்... செய்வியா..?” என்றார்.

“நான் என்னான்னு சொல்லணும்... சொல்லுங்க..?”என்றது ஆவி.

“பஷீர் பாய் மீது சத்தியமா, நாகூர் ஆண்டவர் மீது சத்தியமா, இன்ஷா அல்லா மீது சத்தியமா இந்த பையன விட்டு ஒடிப் போயிடறேன். இனி இந்தப் பையன மட்டுமில்ல, யாரையுமே பிடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்” என்றார் பஷீர்.

நம்மை போகச் சொல்றாங்களே என்பது போல் ஒரு பரிதாபமான பார்வையை ஆவி பார்த்தது.

“டேய்... நீ கேட்டத வாங்கிக் கொடுத்தாச்சு... தின்னதும் பையனை விட்டுட்டு போயிடறேன்னு சொல்லியிருக்க.. இப்ப நீ சத்தியம் பண்ணறியா... இல்ல என் வேலையை காட்டட்டுமா?” என்றபடி, கட்டில் மேல் வைத்திருந்த எருக்கங்குச்சியை கையிலெடுத்தார் பஷீர்.

எருக்கங் குச்சியைப் பார்த்த ஆவி... “இல்ல வேணாம். நான் சத்தியம் பண்ணிடறேன்” என்றபடி, பஷீர் சொன்னது போல் சொல்லி, தரையில் மூன்று தரம் கையால் அடித்து சத்தியம் செய்தது.

அடுத்த சில வினாடிகளில் சங்கரின் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் அப்படியே விலக ஆரம்பித்தது. திடீரென்று சங்கர் பேச ஆரம்பித்தான் “தோ போவுது... அங்கே போவுது...” என்றான்.

பஷீர் பாய் சங்கரிடம் கேட்டார் “யாருப்பா போறது.. சொல்லு”

“வெள்ளையா ஒரு உருவங்க.. அது என்ன பாத்துகிட்டே போகுது. ரோட்டோரமா இருகிற புளியமரத்தை நோக்கி போகுது…” என்றான் சங்கர்.

சங்கர் தெளிவாகப் பேசியதைக் கேட்ட உடனே வேதாசலத்தின் முகத்திலும், கமலம்மாளின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை பூத்தது.

அதற்குள் பஷீர் பாய் சொம்பிலிருந்த நீரை எடுத்தார். தன் வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, அந்த தண்ணீரை சங்கரின் மீது தெளித்தார்.

தண்ணீர் உடல் மேல் பட்டதும்.. “ம்ம்.. ப்ச்...” என்றபடியே ஒரு விதமாக உடலை சிலிர்த்துக் கொண்டான் சங்கர்.

அதுவரை அமைதியாக இருந்த வேதாசலம் மெல்ல சங்கரை அழைத்தார். “சங்கரு... யப்பா சங்கரு...”

சங்கரிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

இதைக் கண்ட பஷீர் பாய், மறுபடியும் தண்ணீரை எடுத்து மந்திரமொன்றை முணுமுணுத்தபடியே சங்கரின் முகத்தில் தெளித்தார்.

“ம்ம்...ப்ச்சே...” என்றான் சங்கர்.

“தம்பி… தம்பி... ஏன் பேச மாட்டேங்கற…” என்று சங்கரைப் பார்த்து பஷீர் பாய் கேட்டார்.


“அந்த வெள்ளை உருவம், புளிய மரத்து மேல உக்காந்துகிட்டு என்னையே பார்த்து சிரிக்குது…” என்றான் சங்கர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நவநீதன், சங்கர் காட்டிய திசையில் தன் பார்வையை தீர்க்கமாக ஓடவிட்டான். அவன் சொன்னது போல் எந்த ஒரு உருவத்தையும் காணோம். தூரத்தில் புளியமரம் தேமே என்று நிற்பதும், அதன் ஊடே கருமை நிறம் இருப்பதும்தான் அவனுக்குத் தெரிந்த்து. ‘எதைப் பார்த்து விட்டு, இவன் உருவங்கறான்..’ என்று யோசித்தான்.

அவனது யோசனையை பஷீரின் குரல் கலைத்தது.

“அத விடு தம்பி... நான் பாத்துக்கறேன்...” என்றவர், அருகிலிருந்த வேதாசலத்தைக் காண்பித்து “யாரு இவரு..?” என்று பாய் கேட்டார்

அதுவரை பஷீரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சங்கர் , முதல் முறையாக வேதாசலத்தை திரும்பிப் பார்த்து “எங்கப்பா” என்றான்.

அருகிலிருந்த கமலம்மாளை காண்பிக்கவும் “எங்கம்மா” என்றான்.

வேதாசலம் முகத்தில் சந்தோஷம் இன்னும் அதிகமாக வந்து ஒட்டிக்கொண்டது. பஷீர் பாயை நோக்கி “நீங்கதான் பாய்… எம் பையன காப்பாத்திய தெய்வம்…” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்

அதற்கு பஷீர் பாயிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அப்போது நவநீதன், “டேய் சங்கர்…” என்றான்

நவநீதன் பக்கம் திரும்பிய சங்கர் “என்னடா நவநீ” என்று பதிலளிக்கவும், நவநீதன் மனதில் ஆயிரம் டன் ஆச்சர்யம் கிளம்பியது. ‘அட பரவால்லயே தெளிவா பேசறான்’ என நவநீதன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சங்கரின் சித்தி இடைமறித்து கேட்டாள் “சங்கரு.. எப்படிப்பா இருக்க..?”

அவள் பக்கம் திரும்பிய சங்கர் “நல்லா இருக்கேன் சித்தி…” என்றான்.

நவநீதன் சங்கரை உற்றுப் பார்த்தான். சங்கருடைய முகம் இப்போது மிகவும் தெளிவாக இருந்தது. பஷீர் பாய் அதற்குள் பெட்டியில் வைத்திருந்த, தாயத்து ஒன்றை கையிலெடுத்து, கண்ணை மூடியபடி சில மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் சங்கரை நோக்கி தம்பி உன் சோத்தாங்கைய நீட்டு என்றார்.

அதுவரை அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சங்கரின் முகம் அஷ்ட கோணலாகியது. கையை நீட்டாமல் தலையை ஒரு பக்கமாக சாய்த்தபடி பஷீரைப் பார்த்தான்.



"அடி செருப்பால.. சைத்தான் கி பச்சா... யாருகிட்ட விளையாடுற... பஷீர்கிட்டயே விளையாடுறியா... இந்த பையன விட்டுட்டு போறேன்னு சொல்லி சத்தியம் செஞ்சிட்டு, மறுபடியும் இவன் மேலேயே வந்து உக்காந்துகிட்டியா..? விடமாட்டேன் உன்னை..." என்று கோபாவேசமாக கத்தினார் பஷீர் பாய்.

அதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியின் உறைந்து நின்றார்கள்.