Monday, May 30, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3 (உண்மைச் சம்பவம்)

ந்த இடத்துல...” என்று சொல்லத் துவங்கிய வேதாசலத்தின் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தன.

வேதாசலத்தின் மாமன் மகன் கண்ணன். அவனுக்கு முப்பதைத் தாண்டிய வயது. திடகாத்திரமான ஆள். வேதாசலத்தின் வலது கரம் என்று சொல்லாம்.

அன்று ஒருநாள், அவனது நண்பனின் பிள்ளைகளுக்கு காதணி விழா மங்களபுரத்தில் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அவனது மற்றொரு நண்பனுடன் அந்த ஊருக்கு சென்றான்.

நண்பன் வீட்டு விழா என்பதால், அங்கு வந்த அவனது நண்பர்களுடன் கண்ணனுக்கு தண்ணியடிக்க வசதியாகப் போய்விட்டது. நண்பனின் தயவால் குடித்தவன், போதை சற்று தலைக்கு ஏறவும் நிறுத்திக் கொண்டான்.

“ஏன்டா மாப்ள அதுக்குள்ள நிறுத்திட்ட..?” என்று கூட வந்த நண்பன் அக்கறையோடு கேட்க, “போதும்டா... இதுக்கு மேல தண்ணி அடிச்சா வூடு போய் சேழமாட்டேன்... சீக்கிரமா போகழன்னா... எம் பொண்டாட்டி திழ்ட்டுவா... நான் கிழம்பறேண்டா...” என்று உளறிக்கொண்டே எழுந்தான். விட்டால் அவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தை அளந்து விடுவது போல் தள்ளாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

அப்போதே, மணி இரவு பதினொன்றை தாண்டிவிட்டிருந்தது. கண்ணனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் போதையில் மயங்கி படுத்து விட்டனர். கண்ணனுடன் வந்த நண்பனும் மட்டையாகி விட்டிருந்தான்.

தள்ளாடியபடியே நடந்தவன், தட்டுத் தடுமாறியபடியே “போய்ழ்ட்டு வரேண்டா...” என திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு அவனுடைய யமஹா வண்டியை நெருங்கினான்.

வண்டியை நெருங்கியதும் சாவியை சட்டை பாக்கெட்டிலிருந்து துழாவி எடுத்து யமாஹாவிற்குள் பொருத்தினான். கிக்கரை மூன்று முறை காலால் தடவித் தடவிப் பார்த்தான். ஒரு வழியாக கிக்கரைக் கண்டுபிடித்தவன் ஓங்கி ஒரு உதை விட்டான்.

வாங்கிய உதையை தாளாத யமஹா ‘இதோ கிளம்பிட்டேன் எசமான்’ என்பது போல உறுமியது. வண்டியில் உட்கார்ந்தவன், அந்த போதையிலும் வண்டியை தெளிவாக சாலையில் விரட்டினான். அந்த கிராமத்து சாலையில் இருட்டை கிழித்தபடி அவனது யமஹா சென்றது.

மங்களபுரத்திலிருந்து குன்றத்தூருக்கு வர பதினைந்து கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். நேரம் இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த கிராமத்து சாலையில் வாகனங்கள் ஏதுமில்லை.

அந்த சாலையிலிருந்து பிரிந்து சேலம் டூ கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டி திரும்பியது. சாலையின் ஓரத்தில் இருந்த வழிகாட்டிப் பலகை குன்றத்தூருக்கு இன்னும் 14 கிலோ மீட்டர் என காட்டியது.

அந்த தேசிய நெடுஞ்சாலையிலும் அவ்வளவாக வாகனங்கள் வரவில்லை. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க்கொண்டிருந்தன.
கண்ணன் சற்றே போதையில் இருந்ததால் யமஹாவை தடுமாறியபடியே ஓட்டிக் கொண்டிருந்தான்.

அந்த போதையிலும் அவன் மனைவி காலையில் சொன்னது நினைவிற்கு வந்தது ‘காது குத்துக்கு நானும் வரமாட்டேன், எம்புள்ளைங்களையும் அனுப்ப மாட்டேன். என் தம்பி வீட்டு விஷேசத்துக்கு நீங்க வரமாட்டீங்க... ஆனா உங்க பிரெண்டு வீட்டு விஷேசத்துக்கு மட்டும் நாங்க வரணுமாக்கும். உங்களுக்கு வேணும்னா நீங்க மட்டும் போங்க... ஆனா ராத்திரி ஒழுங்கா வீடு வந்து சேரல..? அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!’

திடீரென்று வீசிய காற்றில், தன் தலையை சிலுப்பியபடி நினைவிலிருந்து மீண்டவன், ‘சீக்கிரம் வீட்டிற்கு போகணுமே’ என்று நினைத்தவாறு அந்த போதையிலும் யமாஹாவை வேகமாக விரட்டினான்.

‘சிங்கபுரம் ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று ஊர் எல்லையில் உள்ள மஞ்சள் வரவேற்பு பலகை அவனை வரவேற்றது. சிங்கபுரத்தை தாண்டியதும் பெரிய பாலம் கண்ணுக்கு தென்பட்டது.

பாலத்தை நெருங்கிய பின்னும் வேகத்தை குறைக்காமல் பாலத்தின் இடது வளைவில் சென்றான். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணனின் கண்ணை சில நொடிகள் ப்யூஸ் ஆக்கியது.

போதையோடு சேர்ந்து, லாரியின் வெளிச்சமும் கண்ணனை தடுமாற வைத்தது. அந்த தடுமாற்றத்தில் யமஹாவை இடது புறம் வளைத்து ரோட்டை விட்டு கீழே இறக்கினான்.

லாரி டிரைவரும் எதிர்பாராத திடீர் நிகழ்வால் லாரியை இடது பக்கம் திருப்ப, லாரியும் ரோட்டை விட்டு இடது புறமாக யமாஹாவை நோக்கி இறங்கியது.

எல்லாம் கண நேரத்தில் நிகழ்ந்து விட, டேங்கர் லாரியின் டயரில் தவளை சிக்கிக் கொண்டது போல யமஹா சிக்கிக் கொண்டது. அடியில் சிக்கிய யமஹாவை தேய்த்த படியே இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் அந்த டேங்கர் லாரி இறங்கியது.லாரிக்கு அடியில் மாட்டிய கண்ணனின் உயிர், கண்மூடித் திறப்பதற்குள் காற்றில் கலந்து போனது. அவனது ப்ளூ கலர் யமஹா, அவனது ரத்தச் சிதறலால் சிவப்பு மயமாய் மாறிப்போனது.

எல்லாம் முடிந்து போகவே லாரியிலிருந்த கிளீனர் கீழே குதித்துப் பார்த்தான். பார்த்தவன் “அண்ணே... ஆள் பூட்டான்ணே... வண்டியை எடுங்கன்ணே கிளம்பிடலாம்” என்று அவன் சொன்னதுதான் தாமதம், உடனே டேங்கர் லாரியை ரிவர்ஸ் எடுத்து, ரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் லாரி டிரைவர்.

அதற்குள் லாரிக்குள் குரங்கைப் போல் தாவி ஏறிய கிளீனர் “ அண்ணே விடுன்னே போலாம்…” என பரபரத்தான். அடுத்த சில வினாடிகளில் அந்த டேங்கர் லாரி அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்து போனது.

கண்ணன் மட்டும் அந்த இடத்தில் உயிரற்றுக் கிடந்தான். ஆல்கஹால் கலந்த ரத்தம் அவன் மேலுள்ள விசுவாசத்தால் அவனை சுற்றி பாதுகாப்பது போல் குளமாகி நின்றது.

“மாமா.. மாமா...” என வேதாசலத்தை ராமு பிடித்து உலுக்கவும், அவர் சுயநினைவிற்கு வந்தார்.

“மாப்ள... அந்த இடத்துலதான், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் மச்சான் கண்ணன் ஆக்ஸிடெண்டாகி செத்துப் போயிட்டான். அவனுடைய ஆவிதான்....”

வேதாசலம் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த ராமு “அட ஏன் மாமா.. நாம ரெண்டாயிரத்தி ஒண்ணுல இருக்கோம். இன்னும் ஆவி, பேயி, பிசாசுன்னு பேசிகிட்டு... இவன் வேற எதையோ நினைச்சி பார்த்து பயந்திருக்கான். அந்த பயத்துலதான் இவனுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும் மாமா..” என்று ராமு பேசிக்கொண்டிருக்கும் போதே...

“அய்யோ… உங்க பேச்சை அப்புறமா வச்சிக்கங்க… என் புள்ளைய என்னால பாக்க முடியல... என்னங்க நம்ம ராமநாதனை வரச்சொல்லுங்க…” என்று அழுதபடியே கத்தினார் கமலம்மாள்.

அதுதான் சரியென்று நினைத்த வேதாசலம், ராமுவிடம் “மாப்ள... நம்ம சிகாமணி டாக்டரோட ஆஸ்பத்திரி தெரியும்ல…”

“தெரியும் மாமா...”

“அவர்கிட்ட கம்பௌண்டரா வேலை பார்த்திகிட்டிருக்க ராமநாதன், நம்ம பையன்தான். அவன் இப்போ சின்னதா ஒரு ஆஸ்பத்திரி வச்சிருக்கான். அவனை போய் கூட்டி வா...”

“சரி மாமா...” என்ற ராமு அடுத்த நிமிடம் டிவிஎஸ்ஸோடு கிளம்பிப் போனான்.

பெட்டில் படுத்துக் கிடந்த சங்கரைப் பார்த்தார் வேதாசலம். அவனது இடது கடவாயின் ஓரம் எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. அவனது கன்னத்தை தட்டி தட்டி கூப்பிட்டார்.

“சங்கர்... யப்பா சங்கர்... அப்பாவை பாருடா... என்னடா ஆச்சி உனக்கு...” என்றார்

அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

“அடியேய்... போய் தண்ணி கொண்டுட்டு வா...” என வேதாசலம் சொல்ல, கமலம்மாள் சமயலறைக்குள் ஓடிச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து வந்தார்.

அதற்குள் தனது மடியில் சங்கரை எடுத்து கிடத்திக் கொண்ட வேதாசலம், கமலம்மாளிடம் இருந்து டம்ளரை வாங்கினார்.

வாங்கிய தண்ணீரை சங்கரின் வாயில் புகட்ட, தண்ணீரை அவனது வாய் ஏற்றுக் கொள்ளாமல் அப்படியே வெளியில் துப்பியது. சில்லிட்டுக் கிடந்த உடல் இப்போது நெருப்பாய் கொதிக்க ஆரம்பித்தது.

அவனது முகத்தில் தண்ணீரை தெளித்துப் பார்த்தார். தண்ணீர் அவன் முகத்தில் பட்டதுதான் தாமதம்... அதை ஏற்றுக் கொள்ளாதவன் போல “ம்ஹீம்... ம்ஹீம்... ம்ஹீம்...” என அரற்றினான்.

அதைப் பார்த்த கமலம்மாள் மறுபடியும் அழ ஆரம்பித்தார் “ஐயோ எம்புள்ளைக்கு என்னாச்சின்னே தெரியலயே... மாரியாத்தா... காளியாத்தா...” என பெருங்குரலெடுத்து அழவும், அந்த அழுகுரல் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேதாசலத்தின் இரண்டாவது மகன் சந்திரனும், கடைசி மகளான செல்வியும் திடுக்கிட்டு எழுந்தனர்.

எழுந்தவர்கள் கமலம்மாளிடம் வந்து... கண்ணைக் கசக்கியபடியே “ஏம்மா அழுவுற...” என்று ஒரு சேரக் கேட்டார்கள்.

கேட்டபடியே தலையை திருப்பிய சந்திரன் வேதாசலத்தின் மடியில் இருந்த சங்கரைப் பார்த்தும் பயந்து போனான்.

“அப்பா... அண்ணனுக்கு என்னப்பா ஆச்சி... ஏன்பா அண்ணன் இப்படி இருக்கான்…” என சந்திரன் கேட்பதற்கும், கம்பௌண்டர் ராமநாதன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவன் பின்னாடியே ராமுவும் வந்தான்

“ராமனாதா என் பையனுக்கு...” என வேதாசலம் உடைந்து போன நிலையில் குரல் கொடுக்க...

“அட என்னண்ணே… குடும்பத்துக்கே பெரியாளு நீங்க... நீங்களே இப்படி மனசு தளரலாமா..? ராமு எல்லாத்தையும் வண்டியில வரும்போது சொல்லிட்டாப்ள... அதான் நான் வந்துட்டேன்ல. இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க தைரியமா இருங்க...” என்று பதில் சொன்னபடியே சங்கரை நெருங்கினான் ராமநாதன்.
 
சங்கரின் கண்ணை டார்ச் லைட் அடித்து பரிசோதித்தான். நாடி பிடித்துப் பார்த்தான். மேலும் சில வழக்கமான பரிசோதனைகளை செய்தவன் “ஒண்ணுமில்ல இது ஏதோ புதுக்காய்ச்சல் போல இருக்கு... இப்போதைக்கு ஊசி போடறேன். மருந்து எழுதி தரேன். ஒரு மாத்திரைய மட்டும் சாப்பாட்டுக்கு முந்தி கொடுங்க. நாளைக்கு நைட்டு வந்து பாக்கறேன்... பயப்படாதீங்க காய்ச்சல்தான்” என்ற ராமநாதன், தான் கொண்டு வந்திருந்த மருந்துகளில் காய்ச்சல் குறைவதற்கு ஒரு ஊசியும், தூங்குவதற்கு ஒரு ஊசியையும் போட்டுவிட்டு மருந்தை எழுதிக் கொடுத்தான்.

“சரி மாமா… நான் போய் இவரை விட்டுட்டு வாரேன் என்று ராமு…” கிளம்ப ஆயத்தமானான்.

“சரிப்பா…” என்ற வேதாசலம் நூறு ரூபாய் நோட்டை ராமநாதனிடம் கொடுக்க, அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ராமுவுடன் கிளம்பிப் போனான் ராமநாதன்.அவன் கிளம்பிப் போன அடுத்த சில நிமிடங்களில் தெருவில் படுத்துக் கிடந்த ஒரு நாய் “ஊ......ஊ.....ஊ...” என பெரிதாக ஊளையிட ஆரம்பித்தது.

அந்த சத்தத்தைக் கேட்ட மறு வினாடியே..!

Monday, May 23, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2 (உண்மைச் சம்பவம்)

குன்றத்தூரின் கடைசிப் பகுதியில் இருந்தது கணேஷ் நகர். இதன் கடைசித் தெருவில், கடைசி வீடாக இருக்கும் மாடி வீடுதான் வேதாசலத்தில் வீடு.

அந்த அர்த்த ராத்திரியிலும் உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க, பேச்சுக் குரல் கேட்டது.

"ஏங்க... உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். நேரங்கெட்ட நேரத்தில பையனை வசூலுக்கு அனுப்பாதீங்கன்னு... இப்ப பார்த்தீங்களா மணி 12.40 ஆகுது. என் பையன இன்னும் காணோம்" என்ற கமலம்மாளுக்கு வயது 42 இருக்கும். கனத்த உடம்பு. பார்ப்பதற்கு நடிகை காந்திமதியை போல இருப்பார். ஆனால் உயரம் குறைவு.

"ஏண்டி சும்மா கெடந்து புலம்பற... அவன் என்ன சின்ன பையனா... வழி தெரியாம போறதுக்கு... கூட நம்ப மாப்பிள்ளையும் போயிருக்காருல்ல... வந்துருவான்..." என்று கமலம்மாளை அதட்டிய வேதாசலத்திற்கு வயது 48 இருக்கும். காதருகே நரைத்த முடிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தன. கடா மீசை வைத்து, இறுகிய முகமாகத் தெரிந்தார்.

"உங்களுக்கென்ன வாயில வந்ததை சொல்லிட்டீங்க... பெத்தவளுக்குதானே தெரியும். இன்னிக்கு நிறைஞ்ச அமாவாசை வேற..."

"சரி... சரி... கிடந்து புலம்பாத, நான் ரோடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்..." என்றபடி வீட்டை விட்டு கிளம்பினார் வேதாசலம்.

அந்த ஏரியாவே தூங்கிக் வழிந்து கொண்டிருக்க, வாயில் ஒரு சுருட்டைப் பற்ற வைத்தபடி அந்த நள்ளிரவில் ரோட்டை நோக்கி நடந்தார்.

அவர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டிருந்தது. 'சாயந்திரமே அவனுங்களை வசூலுக்கு அனுப்பிட்டேன். அப்படியே நேரமானாக் கூட பத்து மணிக்கெல்லாம் வந்திருக்கலாமே. ஏன் இன்னும் வரல..? ஏதாவது ஏடாகூடமா நடந்திருக்குமோ?' என்ற எண்ணம் வந்து வந்து மறைந்தது.

யோசித்துக் கொண்டே ரோட்டிற்கு வந்த வேதாசலம் எதிரே வந்த சைக்கிளுக்கு வழிவிட்டு விட்டு, சைக்கிள் வந்த திசையில் தன் பார்வையை ஓட விட்டார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சற்று நேரம் அந்த திசையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வேதாசலத்தின் புருவங்கள் திடீரென்று உயர்ந்தன. தூரத்தில் தெரிந்த ஒரு வெளிச்சப்புள்ளி மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த வெளிச்சப்புள்ளி ஒரு டிவிஎஸ்ஸில் இருந்து வந்து கொண்டிருந்தது.

'அப்பாடா... வர்றது நம்ம பசங்க மாதிரிதான் இருக்கு...' என்று தன் மனதுக்குள் நினைத்தவாறு, வாகனத்தை எதிர் நோக்கியிருந்தார். வேகமாக வந்த டிவிஎஸ் அவரைக் கடந்து போனது.

ஏமாற்றத்துடன் வாகனம் வந்த திசையைப் பார்த்தார் வேதாசலம். ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை. பதினைந்து நிமிடத்திற்கும் மேல் காத்திருந்துவிட்டு, பொறுமை இழந்தவராய் வீடு திரும்பினார்.

* * * * * * * *

தே நேரத்தில் டிவிஎஸ் குன்றத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. ராமுவின் தோள் மேல் இருந்த சங்கரின் கைகள், அந்த உருவம் அவன் மேல் இறங்க ஆரம்பித்த பயத்தில் தானாக ராமுவின் இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டது.

"என்னடா திடீர்னு இடுப்பைப் பிடிக்கிற..?" என ராமு கேட்க சங்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சங்கரின் உடம்பில் அளவுக்கு அதிகமாக வியர்வை பெருகியதால், அது அவனது சட்டையை நனைத்தது மட்டுமின்றி, ராமுவின் முதுகுப் பக்கத்தையும் நனைத்தது.

"டேய் சங்கர்... உச்சா போறியா என்ன? முதுகு இப்படி நனையுது" என கிண்டலாகக் கேட்டான் ராமு. அதற்கும் சங்கரிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக அவனது கை ராமுவின் இடுப்பை மேலும் இறுக்க ஆரம்பித்தது.

"டேய்.... டேய்... முதுகை நனைக்கற, வயித்த இறுக்கற... என்னடா ஆச்சி உனக்கு..?" என சற்று கோபமாகவே கேட்டான் ராமு. அப்போதும் சங்கரிடமிருந்து பதிலில்லை.

இதனிடையே வண்டி குன்றத்தூருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாய் சாலையின் இரு ஓரங்களிலும் நின்று கொண்டிருந்த சோடியம் விளக்குகள் முட்டைக் கண்ணை விழித்துக் காட்டுவதைப் போல் விழித்துக் கொண்டிருந்தன.

"என்னடா... நான் கேட்டுகிட்டே வர்றேன்... பதிலே பேசமாட்டேங்கற... தூங்கி தொலைச்சிட்டியா..?" என்றபடியே வண்டியை சாலையின் ஓரமாக கொண்டு போய் நிறுத்தினான்.

வண்டியை நிறுத்தி விட்டு, உட்கார்ந்திருந்த படியே மெல்ல சங்கரின் கையைத் தொட்டான். அவனது கை சில்லிட்டிருந்தது.

'கை சில்லுன்னு இருக்கே...' என்று யோசித்தபடி கையை மெதுவாக விலக்கி விட்டு, தன் தலையை திருப்பி அவனது முகத்தைப் பார்த்தான்.

சங்கரின் தலை தொங்கிப் போயிருந்தது. “டேய்... தூங்காதடா... இன்னும் அரை கிலோ மீட்டர் தாண்டினா வீடு வந்துடும்” என்றவாறே அவனது கன்னத்தை தட்டினான்.

அவன் கை ஈரமாகவே, சங்கரின் முகத்தை தன் கையால் நிமிர்த்திப் பார்த்தான். சோடியம் விளக்கு வெளிச்சத்திலும் அவனது முகம் இருண்டு போயிருந்தது. அதுமட்டுமின்றி அவனது கடவாயின் ஓரம் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.
அதுவரை இயல்பாகப் பேசிய ராமு, அவனுடைய இருண்ட முகத்தைப் பார்த்த பிறகு சற்றே படபடப்பிற்குள்ளானான்.

"டேய் சங்கர்... சங்கர்..." என்று அவனது கன்னத்தை தட்டி கூப்பிட்டான். பதிலில்லை.

சங்கரின் தாடையை சற்று நிமிர்த்தினான். அவன் வாயில் ஒழுகிய எச்சிலைத் துடைக்கப் போனான். அப்போது சங்கரிடமிருந்து, “நற.. நற..” வென்று அவனது பல்லை கடிக்கும் ஓசை மட்டும் கேட்டது.

சத்தத்தைக் கேட்ட ராமு ஆடிப்போய் விட்டான். "ஐயோ என்ன ஆச்சின்னே தெரியலயே..? மாமாவுக்கும் அக்காவுக்கும் நான் என்னான்னு பதில் சொல்லுவேன்..?" என்று பிதற்றியபடி, சங்கரை தன் தோள் மீது பழையபடி கிடத்திக் கொண்டு, டிவிஎஸ்ஸை அதிவேகமாக உதைத்துக் கிளப்பினான்.

ராமுவின் உதை தாங்கமுடியாமல்... இதோ கிளம்பிட்டேன் என்பது போல் உறுமிக்கொண்டு ஓட ஆரம்பித்தது அந்த டிவிஎஸ்.

டிவிஎஸ்ஸின் சத்தத்தை விட சங்கர் பல்லைக் கடிக்கும் சத்தம் சங்கருக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

சங்கர் முன்பு இருந்த எடையை விட, இப்போது அதிக எடை கூடியது போல் ராமுவுக்கு தோன்றியது.

அரைகிலோ மீட்டர் தூரத்தை அவஸ்தையுடன் கடந்து விட்டு, நேரே வேதாசலம் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

வண்டி வந்த சத்தம் கேட்டதும், வராண்டாவில் கட்டிப்போட்டிருந்த பொமரேனியன் நாய் "வள்... வள்..." என்று குறைக்க ஆரம்பித்தது.

"டேய் ஜிம்மி..." என்று ராமு குரல் கொடுக்க... பழக்கப்பட்ட குரலைக் கண்டதும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.

ஜிம்மியின் குரலையடுத்து, ராமுவின் குரல் கேட்கவே இவர்களுக்காக காத்திருந்த வேதாசலமும், கமலம்மாளும் கதவைத் திறந்தபடி வந்தனர்.

"ஏம்பா இவ்வளவு நேரம்..? மணி 12.30 மேலாயிடுச்சி..? இவ்ளோ நேரமாவா வசூல் பண்ணுணீங்க..?" என்றவாறே வெளி கேட்டை திறந்து விட்டார் வேதாசலம்.

"என்னப்பா சங்கர் வண்டியிலயே தூங்கிட்டானா..?" என்று வாசலில் நின்றிருந்த கமலம்மாள் கேட்டார்.

ஒன்றும் பேசாமல் இருந்த ராமு, வண்டியை விட்டு கீழிறங்கி சங்கரை கைத்தாங்கலாக, இறக்கி கூட்டிக்கொண்டு வரவும்... "எம்பையனுக்கு என்னாச்சி..?" என்று கத்தியபடியே கமலம்மாள் ஓடி வந்தார்.

"என்னாச்சின்னே தெரியல அத்தை... வர்ற வழியில ஒரு பாலம் இருக்குல்ல அங்க வந்திட்டிருக்கும் போது வண்டி திடீர்னு நின்னுடிச்சி..." என்று
சொல்லியபடியே சங்கரை அழத்துக் கொண்டு கேட்டை தாண்டி வராந்தாவிற்குள் வந்தான் ராமு.

ராமுவின் குரலைக் கேட்டு வாலாட்டிக கொண்டிருந்த ஜிம்மி, சங்கரைப் பார்த்ததும் "லொள்... லொள்.." என்று பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது.

"ஏய் ஜிம்மி... என்னாச்சி உனக்கு..? சும்மாயிருக்க மாட்ட..." வேதாசலம் ஜிம்மியை அதட்ட, அதட்டலை சட்டை செய்யாத ஜிம்மி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.

"அடச்சே... சும்மா கிட... உன்னை வளர்த்தவனையே அடையாளம் தெரியலயா..?" என்றபடி ஜிம்மியை அதட்டினார் கமலம்மாள்.

அதற்குள் சங்கரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான் ராமு. அதன்பிறகே ஜிம்மியின் குரல் அடங்கியது.

படுக்கை அறையில் சங்கரைப் படுக்க வைத்துவிட்டு, சற்று ஆசுவசுப்படுத்திக் கொண்டான் ராமு. சங்கரைப் பார்த்தான். அவன் முகம் களையிழந்து, இருண்டு போயிருந்தது. வாயின் ஓரம் எச்சில் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அதைப்பார்த்த கமலம்மாள் "ஐயோ... எம்புள்ளைக்கு என்ன ஆச்சின்னே தெரியலயே..?" என அழ ஆரம்பிக்க... "செத்த நேரம் சும்மாயிருடி... என்ன ஏதுன்னு தெரியாம அழுது புலம்பாத..." என்று அதட்டிய வேதாசலம் ராமுவின் பக்கம் திரும்பி "என்ன மாப்பிள ஆச்சி..? எந்த பாலத்துகிட்ட வண்டி நின்னுச்சின்னீங்க..?"

"சிங்கபுரம் தாண்டினதுமே ஒரு பாலம் வருதுல்ல அந்த பாலத்துக்கிட்டதான் மாமா. வண்டியை எவ்ளோ நேரமா ஸ்டார்ட் பண்ணி பார்த்தேன் வேலைக்காவுல... அப்ப சங்கர் பாலத்துக்கு இடது பக்கமா பாத்துகிட்டிருந்தான்.
திடீர்னு என்னைக் கூப்பிட்டவன், மாமா அந்த இடத்துல வெள்ளையா ஒண்ணு தெரியுது மாமா'' என்பதில் ஆரம்பித்து, வீடு வந்தவரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

"அந்த பெரிய பாலத்துகிட்டயா..?" என்று கேட்ட வேதாசலத்தின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

"ஆமாம் மாமா..." என்றான் ராமு

"அந்த இடத்துல... அந்த இடத்துல..." இந்த ரெண்டு வார்த்தை சொல்வதற்குள் வேதாசலம் முகம் குப்பென்று வியர்த்துப் போனது.

"அந்த இடத்துல... அந்த இடத்துல என்ன மாமா..?" குழப்பத்தோடு ராமு கேட்டான் .

வேதசலம் பயம் கலந்த குரலில் “அந்த இடத்துல...”

(அடுத்த வாரம் தொடரும்) 
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

Tuesday, May 17, 2011

போர்க் குற்றவாளி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க நீங்களும் எழுதுங்கள்!!


May 17, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் தீர்மானத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த கோரிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின ஐக்கிய அமெரிக்கப் பிரதி நிதிகள் இருவர் முன்வைத்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோமாபுரி நியதிச்சட்டத்தை ஏற்று உறுதிப்படுத்தல்

முன்வைப்பவர்கள்: 1)சான் சுந்தரம் (Shan Sundaram, New Jersey – USA)
2)ஜெயபிரகாஷ் ஜெயலிஙகம் (Jeyaprakash Jeyalingam, New York - USA)

நீதி வழங்கும் வல்லமையோ நாட்டமோ தேசிய அதிகாரிகளுக்கு இல்லை என்பதால், சர்வதேசக் குற்றங்களுக்கு இரையாவோருக்கு சர்வதேச அரங்குகளில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு,

அத்தகைய குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்கும் நிலைமைக்கு முடிவுகட்டி, அத்தகைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கம் உண்டு என்பதையும்,

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தமது குற்றவியல் நியாயாதிக்கத்துக்கு உட்படுத்துவது ஒவ்வோர் அரசினதும் கடமை என்பதையும்,

இலங்கையின் வட, கீழ் மாகாணங்கள் ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதையும், அங்கு தற்பொழுது சிங்களப் படை நிலைகொண்டுள்ளது என்பதையும்,

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் விருப்பை சுதந்திரமாக எடுத்துரைக்க முடியாது என்பதையும்,

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தேர்தல் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்தமை, மக்களாட்சி நெறிப்படி தமது சுதந்திர விருப்பை வெளிப்படுத்தியதற்கு நிகர் என்பதையும்,

சிங்கள ஆதிக்கத்துக்கு உட்பட்ட இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழருக்கு நீதி வழங்கும் வல்லமையோ எண்ணமோ அற்றது என்பதையும்,

ஈழத் தமிழருக்கு நீதியை ஈட்டிக்கொடுப்பதற்குக் கிடைக்கும் அனைத்து வழிவகைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்தும் என்பதையும்,

இலங்கை ஆட்சியாளர், அதிகாரிகள், முகவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விபரம் அனுப்ப முயலும் என்பதையும்,

இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஐ.நா. அறிக்கைக்கு அமைய சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்குரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநருக்கு அனுப்பிவைக்க அது மேலதிக ஆதாரமாக அமையும்.

இச்சட்டமூலத்தை ஏற்று உறுதிப்படுத்தினால், சர்வதேச சமூகம் தமிழீழ அரசாண்மை பற்றிக் கலந்துரையாட அது வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது. இது தொடர்பான (http://www.icc-cpi.int) சகல விபரங்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகட்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் விவாதிக்கப்படுகின்றது.

இம் மசோதா பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தமது நாட்டின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகட்கு அல்லது comments@tgte.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தலாம். இம் மசோதாவானது ஜூன் மாதம் 5ம் தேதி,  வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாக்களித்து முடிவிற்கு வருமுன்னதாக பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் கருத்துக்களை உங்கள் பிரதிநிதிகட்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வாறு தெரியப்படுத்துகையில் உங்கள் பெயர், நீங்கள் வாழும் நாடு, உங்கள் பூரண முகவரி போன்றவற்றையும் உங்கள் பிரதிநிதிக்கு வழங்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பின் இவ் விபரங்களை மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்

இப்படிக்கு
பொன். பாலராஜன்
அவைத்தலைவர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Monday, May 16, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை (உண்மைச் சம்பவம்)

(படிக்க செல்வதற்கு முன்... - 2000 மாவது ஆண்டு, நான் பகுத்தறிவாளனாக மாறிய ஆண்டு. சாமி, பேய், பூதம் என எல்லாம் கட்டுக் கதை என்பதை உணர்ந்த ஆண்டு. ஆனால் 2001- ஆண்டில், எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் ஏற்பட்டது. அது இன்றுவரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த ஆண்டில் நான் சந்தித்த உண்மைச் சம்பவத்தை உங்களிடம் தொடர்கதையாக்குகிறேன். 2003-ல் நான் நடத்திய 'இளஞ்சிறகு' என்ற மாத இதழில் இந்த தொடர்கதையை எழுதியிருந்தேன். அதன்பிறகு இன்று இணையத்தில் வெளியிடுகிறேன்.  உங்களின் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். 


-என்றென்றும் அன்புடன்
உங்கள் மோகனன்)

ங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன.

டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை.

டிவிஎஸ்ஸின் வெளிச்சம் தார்ச்சாலையில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. ‘குறுகிய பாலம் மெதுவாக செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையின் மேல் பட்ட வெளிச்சம், இடது வளைவின் காரணமாக மின்னி மறைந்தது.

பாலம் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கிக் கொண்டிருக்க, டிவிஎஸ் வண்டியின் சத்தத்தினூடே தூரத்தில் நாய் ஒன்று குரைக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது.

“டேய் சங்கரு... ஊர் போய் சேர்றதுக்கு... இன்னும் எவ்வளவு நேரம்டா..?” என்று வண்டியை ஓட்டியபடியே கேட்ட ராமுவுக்கு வயது முப்பதிருக்கும். சங்கருக்கு ஒன்று விட்ட உறவு முறையில் மாமன்.

“ஆச்சி மாமா. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர்தான்..” என்று சொன்ன சங்கருக்கு வயது 20 இருக்கும். திடகாத்திரமான உடம்பு. பார்வைக்கு இந்திப்பட வில்லன் போல இருந்தான்.

குன்றத்தூரில் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வருபவர் சங்கரின் அப்பா வேதாசலம். பணவசூலுக்காகத்தான் இருவரையும் சிங்கபுரம் வரை அனுப்பி வைத்திருந்தார்.

பணம் வசூலாவதற்கு நேரமானதால்தான், இந்த நள்ளிரவில் இருவரும் குன்றத்தூருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

பாலத்தின் மீது விர்ரென்று சென்று கொண்டிருந்த டிவிஎஸ், பாலத்தைக் கடந்ததும் திடீரென ஊமையாகி, மெதுவாய் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“என்னடா இது வண்டி திடீர்னு நின்னுடிச்சி... பெட்ரோல் இருக்குல்ல..?” என்று ராமு கேட்டான்

“வரும் போதுதான் ரெண்டு லிட்டர் பெட்ரோல் போட்டேன். அதுக்குள்ள தீர்ந்து போயிடுமா என்ன. அதெல்லாம் இருக்கு மாமா... வண்டியை என்கிட்ட கொடு மாமா... நான் பார்க்கிறேன்” என்றபடி டிவிஎஸ்ஸை ராமுவிடமிருந்து கைப்பற்றினான் சங்கர். கிளட்ச்சை பிடித்த படி வண்டியை உதைத்தான்.

வண்டியை பல முறை உதைத்தும் உசுப்பேத்தியும் பார்த்தான். ம்ஹீம்... வண்டிக்கு உயிர் வருவதாக இல்லை... ஏதோ டிபி நோயாளி குறட்டை விடுவதைப் போல “டொர்..டொர்..டொர்..” என முனகியபடி முடங்கிப் போனது.

“தள்ளுடா நான் பார்க்கிறேன்...” என்ற ராமு டிவிஎஸ்ஸின் என்ஜின் பகுதிக்குள் கையை விட்டு சோக்கைத் தேடினான்.

டிவிஎஸ்ஸின் வெளிச்சம்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அதன் இயக்கமும் நின்று போகவே எங்கும் இருள் மயமாயிருந்தது.

நல்லவேளையாக இருவரும் வெள்ளை சட்டை போட்டிருந்த்தால் இருவரின் உருவங்களும் தோராயமாக தென்பட்டது.

மின்மினி பூச்சிகள் ஆங்காங்கே வட்டமடித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் இரண்டு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்த சத்தம் இருவரின் காதுகளிலும் தெளிவாக விழுந்தது.

“டேய் ரொம்ப இருட்டா இருக்குது... ஏதாவது இருந்தா எடுடா..?”

“இந்தா மாமா... பென் டார்ச்...”

 “ம்ஹீம்... என்ன ஆச்சிடா இந்த சனியன் புடிச்ச வண்டிக்கு... ச்சே…“ ராமு சலித்துக் கொண்டே டிவிஎஸ்ஸிற்கு உயிர் கொடுக்கப் பார்த்தான்.

ம்ஹீம்... ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பது போல “ட்ர்ர்.. ட்ர்ர்… ட்ர்ர்…” என குறட்டை சத்தம் மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே தூங்கிப் போனது.

ராமுவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கர், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவன், பாலத்திற்கு இடது புறம் உள்ள இறக்கத்தில் பார்வையில் சற்று நிதானித்தான்.

அந்த கும்மிருட்டிலும் அங்கே வெள்ளை வெளேரென ஒரு நிழலுருவம் படுத்துக் கிடப்பது போல் சங்கருக்குத் தோன்றியது. “அடச்சே... பிரம்மைடா…” என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டபடி, பார்வையை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தான். ஆனால் திருப்ப முடியவில்லை.

படுத்துக் கிடந்த நிழலுருவம் மெல்ல மெல்ல எழுந்து உட்கார ஆரம்பித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கருக்கு பயம் கவ்விக் கொள்ளவே, “மாமா... மாமா... மாமா...” என ராமுவைக் கூப்பிட்டானே தவிர அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வரவில்லை.

அந்த உருவம் அவனை பார்த்தபடியே எழுந்து நின்றது.

ராமு அருகிலிருக்கிறான் என்ற தைரியத்தில் வாய் திறந்து “மாமா.. மாமா... அங்க பாரு... ஏதோ ஒன்னு வெள்ளையா தெரியுது…” என்று கத்தினான். அவன் கத்தியது அவனுக்கு மட்டுமே கேட்டது. அவனுடைய வார்த்தைகளை பயம் விழுங்கிக் கொண்டது. அவனுடைய உள்நாக்கு, வெளிநாக்கு என எல்லா நாக்கும் உலர்ந்து போய்விட்டிருந்தது.

அந்த பயத்திலும் அந்த வெள்ளை உருவத்தை உற்றுப் பார்த்தான் சங்கர். அந்த உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல தோன்றியது. அதன் முகம் பஸ்ஸில் அரைபட்டதைப் போல மிகவும் நசுங்கிப் போயிருந்தது.

எழுந்து நின்ற உருவம் ஒரு கையை அவனை நோக்கி நீட்டியது. அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த கம்பத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று, அங்கிருந்த அமைதியை கிழிப்பது போல், "கூகூகூகூகூகூ...” என வேகமாய் அலறியபடி பறந்தோடியது.

ஆந்தையின் அலறலைக் கேட்டு திடுக்கிட்ட ராமு, சங்கரைப் பார்த்தபடி “டேய் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... வண்டியைத் தள்ளு ஸ்டார்ட் ஆகுதான்னு பார்ப்போம்…” என்றான்.

சில்லென்று வீசிக்கொண்டிருந்த இரவு நேரக் காற்று மட்டும் ராமு சொன்னதை காதில் வாங்கிக் கொண்டது போல, அவன் முகத்தை வருடி விட்டு போனது. தான் சொன்னதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சிலை போல சங்கர் நின்றிருப்பதை பார்த்த ராமுவுக்கு கோபம் ஏற்பட்டது.

“டேய்... நட்டநடு ராத்திரியில, வெட்டவெளியில மாட்டிகிட்டிருக்கோம்... வண்டியத் தள்ளுடாங்கறேன்...” அப்போதும் சங்கர் திரும்பவில்லை.

“டேய் சங்கர் உங்கிட்டதாண்டா சொல்றேன்.. அங்க என்னடா பார்வை...” என்றபடியே சங்கர் பார்த்த இடத்தை ராமுவும் பார்த்தான்.

அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கோபம் தலைக்கேறவே... “டேய்…” என்றபடி சங்கரின் முதுகில் அடித்தான்.

அப்போதும் அவன் அசையாமலிருக்கவே... “டேய்.. சங்கர்... உன்னைத்தாண்டா...” என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.
“மாமா... மாமா... மாமா...” என்றான்

"என்னடா..?" என்றபடி சங்கரின் முகத்தைப் பார்த்த ராமு அதிர்ந்து போனான். சில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்கையில் சங்கரின் முகம் குப்பென்று வியர்த்துப் போயிருந்தது. அவனது கண்கள் பீதியில் இருந்ததை அந்த இரவிலும் தெளிவாகத் தெரிந்தது.

“என்னடா மாப்ள... என்னடா..?” என்றான் ராமு

“மாமா.. அங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம் தெரியுது மாமா..?” என்று சொன்னானே தவிர, அந்த திசையிலிருந்து அவன் பார்வையைத் திருப்பவே இல்லை.

அவன் சொன்ன இடத்தில் பென் டார்ச் அடித்துப் பார்த்த ராமுவிற்கு ஒன்றும் தெரியவில்லை. “டேய்… அங்க ஒண்ணுமே இல்ல... ஏண்டா உளர்ற... இதுக்குத்தான் பேய் படம் எல்லாம் பாக்காதங்கறது. நீ முதல்ல வண்டியைத் தள்ளு…” என்றபடி வண்டியில் உட்கார்ந்து கொண்டான் ராமு.

பயத்துடன் திரும்பிய சங்கர், சற்றே ஆறுதலடைந்து டிவிஎஸ்ஸை தள்ளினான். வண்டி ரோட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.

ஒரு பத்தடி தூரம் தாண்டிய பின்பு அதுவரை தூங்கிக் கொண்டிருந்த வண்டி, திடீரென விழித்துக் கொண்டதைப் போல “விர்ர்ர்ரும்...” என்றபடி ஸ்டார்ட் ஆனது.

“அப்பாடா... ஸ்டார்ட் ஆயிடுச்சி, வந்து உட்காருடா…” என்று சொன்ன ராமு பின்னால் திரும்பிப் பார்த்தான்.

மறுபடியும் சங்கர் அதே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, ராமு கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

“டேய்... இப்பவே மணி 11.55 ஆகுது. எப்படா வீடு போய் சேருவோம்னு நானே தவிச்சிகிட்டு இருக்கிறேன். சும்மா அந்த இடத்தையே பார்த்துகிட்டு நிக்கற... வந்து வண்டியில ஏறு...” என்று அதட்டினான் ராமு.

அதட்டலை உள்வாங்கிய சங்கர் “மாமா... அங்க வெள்ளையா ஒண்ணு இருக்குது மாமா... அது என்னையே பாக்குது...” என்றான்.

“டேய்... வீணா எங்கிட்ட மிதிவாங்காத... அங்க ஒண்ணுமே இல்ல... முதல்ல வண்டியில ஏறு... ஏண்டா இவ்வளவு நேரம்னு உங்கப்பாவும், அம்மாவும் என்னை திட்டப் போறாங்க...” என்றபடியே வண்டியை அரைவட்டம் போட்டு, அவனருகே நிறுத்திய ராமு “ஏறுடா வண்டியில...” என்றான். ராமுவின் வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.

வண்டியில் ஏறி உட்கார்ந்தான் சங்கர். ராமு டிவிஎஸ்ஸை வேகமாகக் கிளப்பினான்.

மறுபடியும் அந்தப் பக்கம் பார்த்த சங்கர், அங்கே அந்த உருவம் இல்லாதது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஆனால், அவன் நிம்மதி கணநேரம் கூட நிலைக்கவில்லை. அந்த உருவம் மெல்ல மெல்ல இவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சங்கரை பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. தலையை ராமுவின் முதுகுப் பக்கம் திருப்பிக் கொண்டான். வண்டி சாலையில் சீறியபடியே போய்க்கொண்டிருந்தது.

சற்று தூரம் போனதும் தலையை திருப்பியவன், மூச்சு விட மறந்தான். மிக பக்கத்தில் வந்து விட்டிருந்த அந்த உருவம் பார்வைக்கு சற்றே புலப்பட்டது. அந்த முகம் முழுதும் நசுங்கிப் போயிருந்தது. அதன் வயிற்றின் இடது புறம் நீண்ட வெட்டுக்காயம். நெஞ்சுப் பகுதியில் ஏதோ குத்தியது போன்ற ஓட்டை தெரிந்தது.

சங்கரின் இதயம் உச்ச வேகத்தில் துடிக்கத் தொடங்க, உடலெங்கும் குப்பென வியர்க்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயற்சித்தும் அந்த உருவத்திடமிருந்து சங்கரால் பார்வையைத் திருப்ப முடியவில்லை.

அந்த உருவத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்தான். அது மெல்ல சிரித்தபடியே அவன் மேல் இறங்க ஆரம்பித்தது.
(அடுத்த வாரம் தொடரும்..!)
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,