Wednesday, December 30, 2015

நிகழ்வுகள் 2015




ஜனவரி

@ 1950-ல் உருவாக்கப்பட்ட திட்டக்கமிஷன், ‘நிதி ஆயோக்’ (NITI- National Institution for Transforming India) என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. நிதி ஆயோக் அமைப்பின் முதல் தலைவர்: பிரதமர் நரேந்திர மோடி. முதல் துணைத்தலைவர்: அரவிந்த் பனகாரியா.
@ ஆந்திரபிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறையின் விளம்பரத் தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்.
@ பிரசவ கால விடுப்பு, 135 நாட்கள் இருந்ததை 180 நாட்களாக மாற்றி பீகார் அரசு உத்தரவு
@ தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்திஜி இந்தியா திரும்பி, 100 ஆண்டுகள் நிறைவடைந்ததால் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
@ நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக சிந்துஸ்ரீ குல்லார் நியமனம்.
@ கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம்,  நாட்டிலேயே முதன்முதலாக முழுமையாக இணையதள இணைப்புடன் இணைக்கப்பட்ட மாவட்டமானது.
@ பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமண் காலமானார்.
@ இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி.
@ இலங்கை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஸ்ரீபவன் நியமனம். சுப்பையா சர்வானந்திற்குபிறகு இப்பதவியை வகிக்கும் இரண்டாவது தமிழர் இவர்.
@ மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் சிறையில் சிறைக்கைதிகளுக்காக சிறைக் கைதிகளே நடத்தும் வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ‘சுதர்வாணி’ என்ற பெயரில் ஒலிபரப்பாகிறது.
@ புதிய வெளியுறவுச் செயலராக ஐஎப்எஸ் அதிகாரி ஜெய்சங்கர் நியமனம்.
@ உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
@ பெண்குழந்தைகளைக் காப்பாற்றவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் ‘மகளைக் காப்போம், மகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் பிரசார தூதராக நடிகை மாதுரி தீட்சித் நியமனம்.
@ ஜனவரி 25-ல் தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான வாசகம் ‘சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’.
@ தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி. ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு
@ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குமார் சங்ககரா 12 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.
@ இந்திய நீச்சல் வீராங்கனை பக்டி சர்மா அண்டார்ட்டிக் பெருங்கடலில் 1 டிகிரி குளிர் நிலையில் 1.4 மைல் தூரத்தை, 52 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தார்.
@ அமெரிக்காவின் மியாமி தீவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் கொலம்பியாவைச் சேர்ந்த பவுலினா வேகா முதலிடம்.
@ இந்தியாவின் 66-வது குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பல்கேற்றார். இந்தியக் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.
@ தமிழ்நாட்டில், மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி. மீனா குமாரி நியமனம்.
@ இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா பொறுப்பேற்பு
@ இஸ்ரோவின் புதிய தலைவராக ஏ.எஸ். கிரண் குமார் நியமனம்
@ 2014-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை மூன்றாவது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
@ வங்கதேச நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேந்திர குமார் சின்கா நியமனம். இந்நாட்டில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இப்பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை.
@ குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபராக கொலிந்தா கிராபா கிராதொவிச் தேர்வு
@ இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஹரிஹந்த் பரிசோதனை முறையில் இயக்கப்பட்டது.
@ நாட்டில் முதல்முறையாக கேரளாவிலுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் டிஜிட்டல் புத்தகங்கள் – கேரள அரசு அறிவிப்பு
@ மதன்மோகன் மாளவியா மற்றும் வாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா பட்டம் அறிவிப்பு
@ சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் பரிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.
@ நாட்டிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் காட்சியகம் அமைக்க மாமல்லபுரம் தேர்வு.
@ உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – 2015: தூதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் நியமனம்.
@ இந்திய உளவுத்துறை தலைவராக தினேஷ் சர்மா நியமனம்.

பிப்ரவரி

@ ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த திரைப்படம் – பேர்ட்மேன் (அமெரிக்கா)
@ பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், பிரிட்டனின் ‘ஜான் மேனார்டு கேன்ஸ்’ விருது பெற தேர்வு செய்யப்பட்டார்.
@ மராத்திய நாவலாசிரியரான பாலச்சந்திர நெமதேவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிப்பு.
@ 67-வது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
@ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரித்வி – 2 ஏவுகணை சோதனை வெற்றி
@ உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்த வீரர் கிறிஸ் கெயில். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இச்சாதனையை இவர் நிகழ்த்தினார்.
@ 33 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை செரீனா வில்லியம்ஸ் பெற்றார்.
@ இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான ஐ. மாயாண்டி பாரதி காலமானர்.

மார்ச்
@ தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா, சாய்லஷ்மி பலிஜெபள்ளி, பி. கௌசல்யா ஆகியோர் மகளிர் தினத்தன்று சக்தி புரஸ்கர் விருது பெற்றனர்.
@ 2015-க்கான ஸ்டாக்ஹோம் நீர் விருது பெற, இந்திய தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தேர்வு.
@ செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்கும் தொல்காப்பியர் விருதுக்கு தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தேர்வு.
@ மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற எழுத்தாளர் சா. தேவதாஸ் தேர்வு. ஆங்கிலத்தில் பபானி பட்டாச்சார்யா எழுதிய ‘ஷேடோ @ ஓவர் லடாக்’ என்ற நூலை ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ என்ற தலைப்பில், தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
@ 2014-ஆம் ஆண்டுக்கான சர்வதேச காந்தி விருது பெற, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தேர்வு.
@ பழம்பெரும் இந்தி நடிகர் சசி கபூர், தாதா சாகேப் பால்கே விருது பெற தேர்வு
@ தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது குற்றம் கடிதல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. தேசிய அளவிலான சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருது காக்கா முட்டை படத்திற்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது பாபி சிம்ஹாவிற்கும் வழங்கப்பட்டது.
@ விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் நரேந்திர மோடி நியமனம்
@ தமிழக தேர்தல் ஆணையராக பெ.சீத்தாரமன் நியமனம்.
@ 1999-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா- கியூபா இடையிலான நேரடி தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது
@ பிரிட்டனில் உள்ள ராயல் சொசைட்டி தலைவராக நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வு.
@ அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதராக அருண் குமார் சிங் நியமனம்.
@ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றார். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சென்ற முதலாவது இந்தியப் பிரதமர் இவர்.
@ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு
@ தில்லியைச் சேர்ந்த அதிதி ஆர்யா, 2015-ஆம் ஆண்டுக்கான இந்திய அழகியாகத் தேர்வு
@ போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் பணக்காரர்களின் வரிசையில் பில்கேட்ஸ் முதல் இடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் முதல் இடம் முகேஷ் அம்பானி.
@ ஆந்திராவின் புதிய தலைநகராமாக அமராவதி தேர்வு.
@ 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.
@ சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ காலமானார்.
@ உலகக்கோப்பை கிரிக்கெட் 2015-ல் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நியுசிலாந்து அணியை வீழ்த்தி 5-ஆவது முறையாக இக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
@ வில்வித்தையில் 3 வயது சிறுமி ஷிவானி தேசிய சாதனை.

ஏப்ரல்
@ ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியை அடுத்துள்ள வனப்பகுதிய்ல் செம்மரம் கடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் காவல்துறையினரால் ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
@ இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி நியமனம். இவருக்கு முன்னதாக தேர்தல் ஆணையராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா ஓய்வு பெற்றதை அடுத்து, நசீம் சைய்தி தேர்வு.
@ நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி தேர்வு. இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் இவர். 
@ நாட்டில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாவட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா அறிவிப்பு
@ நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்.
@ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோவும் பனாமாவில் நடந்த அமெரிக்காக்களின் உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். கியூபா புரட்சிக்குப் பின்னர் இரு நாட்டுத்தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.
@ உள்நாட்டுக் கலவரத்தால் ஏமனில் சிக்கியிருந்த 4640 இந்தியர்களையும் 960 வெளிநாட்டவர்களையும் இந்தியா அங்கிருந்து வெளியேற்றியது.
@ நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை.
@ பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
@ அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா மற்றும் இரண்டு பள்ளி சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய 10 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
@ இஸ்லாமியப் பக்திப் பாடகரான நாகூர் ஹனீபா காலமானார்.
@ ஆசியாவிலேயே முதல்முறையாக மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம் கர்நாடகாவில் அறிமுகம்.
@ குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் முதல் ஸ்மார்ட் சிட்டி  அமைக்கப்பட உள்ளது.
@ உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 3 ஏவுகணை சோதனை வெற்றி
@ விண்வெளியில் உள்ள சிறிய கிரகம் ஒன்றிற்கு, இந்திய செஸ் விளையாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்தின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அந்த கிரகத்திற்கு ‘விஷ்யானந்த்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
@ பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடம் பிடித்து சாதனை
@ உலகில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரிகளின் வரிசையில் முதலிடம் பிடித்தவர், மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ பொறுப்பில் இருக்கும் சத்ய நாதெல்லா. இவரது ஆண்டு வருமானம் 522 கோடி ரூபாய்.
@ பிரபல ஓவியரான கோபுலு காலமானார்.

மே
@ உலகில் முதல்முறையாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமனம்.
@ பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில்,  டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.
@ சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
@ சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக  மீண்டும் பொறுப்பேற்றார்.
@ ஈழத்தமிழ் எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்த தீபன் என்ற பிரெஞ்சுத் திரைப்படம்  கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்படத்துக்கான தங்கப் பனை விருதை வென்றது.
@ ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இரண்டாம் இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது.
@ விவசாயிகளுக்கு ‘கிஷான் சேனல்’ என்ற தனி தொலைக்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஜூன்

@ நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பதை அடுத்து, இந்த நூடுல்ஸ் விற்பனைக்கு உத்தர பிரதேச அரசு தடை விதித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.
@  பார்வையற்ற பெண் பெனோ செபைன், இந்தியாவின் முதல் ஐஎப்எஸ் அதிகாரியாக நியமனம்.
@ மொரீஸியஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியானார் அமீனா குரிப் பாகிம்
@  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூரியா, அந்நாட்டின் துணை அமைச்சராக பதவியேற்பு
@  21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் தெண்டுல்கர் தேர்வு
@ இந்தியாவின் இரண்டாவது முஸ்லிம் பெண் ஐபிஎஸ் அதிகாரியானார் லக்னோவைச் சேர்ந்த அன்ஜும் அரா.
@  உலகின் முதல் எலெக்ட்ரானிக் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்தது சீனா.
@  சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை ஜுன் 29-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஜூலை

@  தமிழ்நாட்டில் கட்டாய ஹெல்மெட் சட்டம் ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
@ பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஜூலை 17 அன்று காலமானார்.
@ முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

@  பாதுகாப்பான மற்றும் தூய்மையான உணவை உறுதி செய்வதற்கான  திட்டமான ‘சுரக்சி காத்யா அபியான்’ அறிமுகம்.
@  நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தும் நோக்கில் ‘All India Council of Sports’ என்ற புதிய அமைப்பு உருவாக்கம்.
@  இண்டர்நேஷனல் மானிட்டரி பண்ட் அமைப்பிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாத முதல் ஐரோப்பிய நாடு கிரீஸ்.
@  பிரேசில், ரஷ்யா. இந்தியா, சீனா, தென்னாபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், தனக்கென புதிய வங்கியை சீனாவின் ஷாங்காயில் தலைமை இடமாகக் கொண்டு செயல்படத்துவங்கியது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவின் கே.வி. காமத் நியமனம்.
@  டிராய் அமைப்பின் தலைவராக ராம் சேவக் சர்மா நியமனம்.
@  ராமன் மகசேசே விருது இந்தியர்களான சஞ்சீவ் சதுர்வேதி, அன்ஷு குப்தா உள்பட ஐந்து பேருக்கு அறிவிப்பு
@  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூலை 27- அன்று காலமானார்.
@  விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சானியா மிர்சா
@  ஐபிஎல் முறைகேடுகளை விசாரித்த ஆர்.எம். லோத்தா தலைமையினான விசாரணைக் குழு அறிக்கையின்படி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பு.

ஆகஸ்ட்

@  தமிழக அரசின் முதல் அப்துல்கலாம் விருது, பெண் விஞ்ஞானி வளர்மதிக்கு வழங்கப்பட்டது.
@  நாட்டிலேயே தூய்மையான 10 நகரங்களில் மைசூருக்கு முதலிடமும் திருச்சிக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
@  2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதார் அட்டை வழங்கும் அமைப்பு, நிதி ஆயோக்குடன் இணைப்பு
@  குஜராத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை
@  பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் 7 அம்ச திட்டத்திற்கு ‘மிஷன் இந்திர தனுஷ்’ என பெயரிடப்பட்டது.
@ மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தால் ஆன்லைன் மூலம் புதிய சிலிண்டர் இணைப்பு பெறும் வசதியைத் தரும் சாஹச் திட்டம் தொடக்கம்.
@ சூரிய சக்தி மூலம் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் எனும் சிறப்பை கொச்சி விமான நிலையம் பெற்றது.
@ இலங்கைக்கு வராகா எனும் ரோந்துக் கப்பலை வழங்கியது இந்தியா.
@ இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நான்காவது முறையாக நியமனம்.
@ பிரபல கன்னட எழுத்தாளர் மல்லேசப்பா மடிவாளப்பா காலமானார்.
@ கிரேக்க நாட்டின் முதல் பெண் பிரதமராக வாஸ்ஸில்கி தாணு பதவியேற்பு
@ சவுதி அரேபியாவில் முதல்முறையாக நகராட்சித் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் பெண்களுக்கு அனுமதி.
@ தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜுனா விருதும். சானியா மிர்சாவிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
@ 2014-ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற, வீரப்ப மொய்லி தேர்வு.
@ கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமனம்.
@ ஒலிம்பிக் அமைப்பில் 206-வது நாடாக தெற்கு சூடான் இணைந்தது.
@ இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வென்று ஆஷஸ் தொடரை வென்றது.
@ இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் வென்றன.

செப்டம்பர்

@ சிரியா உள்நாட்டுப்போர்: 120,000 அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
@ நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அந்நாடு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
@ சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழப்பு; 863 பேர் காயம்.
@ ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு.
@ பிரபல எழுத்தாளரான கௌதம நீலாம்பரன் காலமானார்.
@ சர்வதேச கிரிக்கெட் சங்க முன்னாள்  தலைவரான ஜக்மோகன் டால்மியா  காலமானார்.
@  அத்வைத வேதாந்த ஆசிரியரான தயானந்த சரசுவதி சுவாமிகள் காலமானார்.

அக்டோபர்

@ ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு 2016-17 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளாக எகிப்து, செனகல், உருகுவே, ஜப்பான், உக்ரைன் ஆகிய நாடுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
@ ஆந்திரப்பிரதேச புதிய தலைநகராக அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார்.
@ பிரபல தென்னிந்திய நடிகையான மனோரமா காலமானார்.
@ எழுத்தாளரும் பிரபல விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் காலமானார்.

நவம்பர்

@ வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவானது, 2014- ஆம் ஆண்டில் அதீத அளவை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
@ மியான்மர் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தனது தோல்வியடைந்தது. ஆங் சான் சூகியின் சனநாயகத்துக்கான தேசிய முன்னணி 348 இடங்களைக் கைப்பற்றி, அறுதிபெரும்பான்மை பெற்றது.
@ பிரான்சின் தலைநகர் பாரீசில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டினால் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் தீவரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
@ தமிழ் திரைப்பட இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் காலமானார்
@ பக்திப் பாடகரான பித்துக்குளி முருகதாஸ் காலமானார்.

டிசம்பர்

@ டிசம்பர் 1-ஆம் தேதி சென்னையில் 49 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலர் உயிரிழப்பு.
@ இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
@ ரஷ்யா, அமெரிக்க, மற்றும் பிரிட்டன் விண்வெளி வீரர்கள் மூவரை ஏற்றிக் கொண்டு சோயுஸ் டிஎம்ஏ-19எம் பைக்கானூரில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
@ பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில், அதிகரித்து வரும் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸிற்கு கீழ் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
@ கென்யாவில் உலக வர்த்தக மைய மாநாடு நடைபெற்றது.
@ தமிழக அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கில், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு
@ தில்லியில் மாசு அதிகரிப்பைத் தடுக்க புதிதாக டீசல் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.
@ அன்னை தெராசாவிற்கு அடுத்த ஆண்டு புனிதர் பட்டம் வழங்க ரோமன் கத்தோலிக்க திருச்சபை முடிவு.
@ பிரபல எழுத்தாளரான விக்கிரமன் காலமானார்.
@ ஜப்பான் உதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் விடுவதற்கான ஒப்பந்தம், 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கையெழுத்தானது.
@ எழுத்தாளர் ஆ. மாதவன் எழுதிய ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற நூல், 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது.
@ சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்- இதன்படி 16 வயதுக்கு மேற்பட்டோர் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும்.

நோபல் பரிசு - 2015

இலக்கியம்

பெலாரஸ் நாட்டு பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸ்விச்சிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. இரண்டாம் உலகப்போர், ஆப்கானிஸ்தான் போர் உள்ளிட்ட போர்கள் குறித்தும், செர்னோபில் அணு உலை விபத்து பற்றியும் ஸ்வெட்லானா எழுதியுள்ளார். 67 வயதான ஸ்வெட்லானா, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் 14வது பெண்.

இயற்பியல்

இயற்பியல் துறையில் ஜப்பான் விஞ்ஞானி டகாகி கஜிடா மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்ட் ஆகியோருக்கு  நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக  நோபல் பரிசு கிடைத்துள்ளது. 

வேதியியல்

மரபணுக்களில் கோளாறு ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு  தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுகிறது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர். 

மருத்துவம்

வில்லியம் சி.கேம்பெல், சடோஷி ஓமுரா மற்றும் யுயு டு ஆகிய மூன்று பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு  கிடைத்துள்ளது. யானைக்கால் நோய் மற்றும் மலேரியா நோய் சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடித்தமைக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. 

அமைதி

அமைதிக்கான நோபல் பரிசு  துனிஷியா நாட்டின் தேசிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்கு கிடைத்துள்ளது. துனிஷியாவில் நடந்த புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக இந்த விருது தரப்பட்டுள்ளது. 

பொருளாதாரம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணியாற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆங்கஸ் டீட்டனுக்கு வழங்கப்படுகிறது. நுகர்வு, வறுமை, சமூக நலம் ஆகியவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.