Tuesday, September 30, 2008

பேருந்து சீட்டில் எங்கே தமிழ்..?

தமிழக அரசில் அனைத்தும் தமிழ் மொழியால் கையாளப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. அதற்கு உதாரணமாக, நீதிமன்றங்களில் வாதாடுதல், ஆவணங்கள், தீர்ப்புகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அரசாணையும் வெளியிட்டது.

அதனால் தமிழர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் முன்னர் அச்சடிக்கப்பட்ட பேருந்து சீட்டு தூய தமிழில் வழங்கப்பட்டது.

அண்மையில் பேருந்து சீட்டை வழங்குவதற்கு கையடக்க இயந்திரங்களில் பேருந்து சீட்டு அச்சடித்து வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. ''தமிழ்... செந்தமிழ்... செம்மொழித் தமிழ்...'' என்று கூவிய தமிழக அரசு, நவீன பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...

இக்குறை தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்து பேருந்துகளிலும், அவர்கள் வழங்குகின்ற பேருந்து சீட்டுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.


சேலம் - சென்னை மார்க்கம் வழியாக செல்லும் அரசு விரைவுப் பேருந்தில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டுகாரணம் கேட்டல்..?, பெங்களூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட்டது... (எவ்வளவு பணம் சுருட்டப்பட்டதோ..?) அதனால்தான் ஆங்கிலத்தில் உள்ளது என பதில் வருகிறது.

இதே பெங்களூர் இருக்கும் கர்நாடகாவில் ஓடும் பேருந்துகளில் வழங்கப்படும் கையடக்க இயந்திரத்தால் வழங்கப்படும் பயணச்சீட்டில் அவர்களது தாய்மொழியான கன்னடம் இருக்கிறது...

இதைப்பார்க்கும்போது யாருக்கு இருக்கிறது மொழிப்பற்று... தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முதற்கொண்டு, தமிழகம் முழுதும் பயணிக்கும் அதிவிரைவு பேருந்துகள் வரை ஆங்கிலத்தில், பேருந்து சீட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பிற நகரங்களில், தனியாரால் நடத்தப்படும் பேருந்துகளில் இதே நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வழங்கும் பயணச்சீட்டில் தாய்த்தமிழில் அச்சிடப்பட்டு தரப்படுகிறது...


கடலூர் - பண்ருட்டி மார்க்கம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் தமிழில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு


இவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்று அவர்களடம் வினவினால்..? கோயமுத்தூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. குறைந்த செலவில் இதற்கான மென்பொருளை தமிழில் வழங்குகிறார்கள் என்றனர்.

தமிழகத்தில் பயணம் செய்தால் தமிழில் பயணச்சீட்டில்லை... தலைகுனிவு. தமிழ் பட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 70% பேர்... ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை... தமிழுக்கு மரியாதை செய்ய வேண்டாம், உரிய மதிப்பை கொடுத்தால் போதும்... அதன் கீழ் ஆங்கிலம் வரட்டும்...

நீதிமன்றத்தில் தமிழ்... மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் பயணச்சீட்டு... ஆகா... தமிழக அரசின் தமிழ்ப்பற்றை நினைத்தால் குமரியில் குன்றென நிற்கும் திருவள்ளுவருக்கே தலைசுற்றும்... அட போங்கய்யா... நீங்களும் ... உங்கள் தமிழ்ப்பற்றும்..?

Friday, September 19, 2008

காதல் பிரிவு

ன்னாளிது பொன்னாளிது என்னவனைக் கண்டநாளிது
 கண்ணாளனைக் கண்டு களிப்புற்று, கலந்திட்ட நாளிது
சீறி வரும் காளை போல என்னவனின் நடை கண்டு
 சிலிர்த்துப் போனேன்... அவன் கண்ணில் காந்தமுண்டு
ம் என்றதும் அவனருகில் சென்றேன்... அவன் தோளில்
 சாய்ந்தேன்... அவனிதழில் என்னிதழ் தேன்.. தேன்.. தேன்..!

மோகனப் புன்னகையாளைக் கண்டேனடா... கசிந்'தேனடா'
 ஆகயத் தாமரை முகம்... சந்தன முல்லையவள் முகம்
ன்னியவள் கரம் பிடித்து காளை நான் நடக்கையிலே
 காதல் பிறக்க, காமம் வெடிக்க... - அழைத்தாள் அவளன்னை..!
யன விழியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள... பாவையவள்
 பயந்நு நடுங்கும் மானானாள்... அவள் கொவ்வையிதழில்
ன்றும் நினைக்கும்படி முத்தமிட்டு, அவள் நெற்றியிலே
 பொட்டிட்டு அனுப்பி வைத்தேன்... போனாளென் தே'வதை..!'

(முதற்ப் பாடல் காதலி, தனது காதலனை சந்தித்தது பற்றி கூறுகிறாள், இரண்டாவது பாடலில் காதலன், தன் காதலியை சந்தித்தது பற்றி கூறுகிறான்...)

Friday, August 29, 2008

ஓரின செக்ஸிற்கு சட்ட அனுமதி..! - அன்புமணி கோரிக்கை: அமைச்சகம் நிராகரிப்பு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கையை சட்ட அமைச்சகம் மறுத்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மாறாக எந்த வகையில் உறவு கொண்டாலும் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன்படி அதிகபட்சம் ஆயுள்தண்டனை வழங்கலாம்.

இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த 'நாஸ் அறக்கட்டளை' உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தனது மனுவில் கூறியிருந்தது. இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. செப்டம்பர் 18ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் எய்ட்ஸ் நோய் பரவுவதில் ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸ் தொழிலாளிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இதில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தண்டனைக்கு பயந்து தங்களைப் பற்றிய உண்மையை வெளியில் சொல்ல தயங்குவதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

தண்டனை இல்லாத பட்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பது சுலபம் என இந்த அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கையாளர்களை தண்டிக்கும் சட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சட்ட அமைச்கத்திடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒரினச் சேர்க்கை மட்டும் அல்லாது சிறுவர்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துபவர்களையும் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் தண்டிக்கலாம். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. மத்திய அமைச்சரவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் போது சட்ட அமைச்சர் பரத்வாஜ் இந்த கருத்துக்களை வலியுறுத்துவார்'' என்றார்.
- இது செய்தி

இனி என்னோட கேள்வி..? ஆதங்கம்..!

நாட்டில்
ஆயிரம் சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கு... இங்குள்ள கொசுக்கள் இந்தியாவையே உறிஞ்சி குடிக்குது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடும், லஞ்சம் பெருத்துப் போயுள்ள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... தனியார் மருத்துவமனைகளின் அடாவடித் தனங்கள்... என உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவைகள் மலை போல் இருக்க... மானங்கெட்ட, கீழ்த்தரமான உறவிற்கு அரசிடம் அனுமதி கேட்பது என்ன நியாயம்.

தமிழ்..! தமிழன் பெருமை..! என்று விட்டு ஆங்கில வழக்கத்தை இங்கும் புகுத்த முயற்சிப்பது எவ்வகையில் நியாயம் அமைச்சரே... அவன்/அவள் செய்த தப்பிற்கு அவன் அனுபவிக்கட்டும். தவறு செய்பவர்களை மன்னிக்கலாம்... மனிதாபிமான உதவிகளை செய்யலாம். தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு...? இது தகாது... தகாத உறவு அமைச்சரே... நல்ல விடயங்களில் தலையிட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள் அமைச்சரே...

அசிங்கத்திற்கு துணை போய்... உங்களை அசிங்கப் படுத்திக் கொள்ள வேண்டாம்...

Tuesday, August 26, 2008

காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும்

சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.

நாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும் பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...

சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!

கத்தரிக்காய்

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய்

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய்

இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் 'சி' , 'பி' உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

புடலங்காய்

இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்

இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.

இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்

வாழைத்தண்டு

இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.

இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்

இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.

தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய்

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய்என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.

(நன்றி: நஸீம் மோகா)

Wednesday, August 20, 2008

இந்தியாவிற்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம்


பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் சுஷில் குமார்

இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற 66 கிலோ ஃபிரீஸ்டைல் மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கஜகஸ்தான் வீரர் லியோனிட் ஸ்பிரிட்னோவை 2-1, 0-1, 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு இந்தியாவே பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறது. அதனோடு என்னுடையதும், உங்களுடையதும் சேரட்டும்...

(புகைப்பட உதவி: zeenews.com)

Tuesday, August 19, 2008

என்றன் தாய் - மரபுக் கவிதை முயற்சி


எனைப் படைத்த பிரம்மாக்கள்

வெண்பா

அன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..!
துன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..!
உன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளும்நீயே..!
பொன்னுல கிலுன்போலா ருமில்லையே..!

செய்யுள்

கருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்
அரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்
பெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'
உருக்கொடுத்த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

வெளியுலகை நான் காணபுவி வருகையில்
வளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'
உளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'
தளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'
நித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'
கத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்
உத்தமத் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்
அழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'
குழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'
வாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'
துள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'
கள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'
வள்ளியென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

கல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று
கல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'
தொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'
அல்லிமலர்த் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்
கற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..!
பொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..!
ஊற்றான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

காதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்
சேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'
அதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்
இதமான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு
திட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது
எட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு
கிட்டாத 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி
உன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..!
என்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை
ஈன்றயென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!


{இது எனது நூறாவது பதிவு ஆகும். ஆகவே.. எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபுக் கவிதை(யாக எழுத முயற்சித்துள்ளேன்... தமிழாய்ந்த அறிஞர்கள்.. இதில் பிழையிருப்பின், தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்...) முயற்சி சமர்ப்பணம்.}

Thursday, August 14, 2008

தமிழில் மின் நூல் தயாரிக்கலாம் வாருங்கள்..!

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.

காரணம்: மின் நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது. பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான பி.டி.எப் உருவாக்கி ( PDF Creator ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.

வழிமுறைகள்:

1) முதலில் MS Word ல் தட்டச்சு செய்யவேண்டியதை செய்து விடுங்கள்.

2) பிறகு MS Word-ன் File Menu சென்று Print என்பதைச் சொடுக்கவும்.

3) இப்போது ஒரு குறுந்திரை உருவாகியிருக்கும். அதில் Name என்பதில் Primo PDF என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அதில் எத்தனை நகல் வேண்டும் என்பதையும் கொடுக்கலாம். (இவ்வாறு தயாரிக்கப்படும் மின்நூல் எங்கு சென்று சேமிக்கப் பட வேண்டும் என்பதனை தனியாக பிரிமோ பிடிஎஃப் செயலியை திறந்து மாற்றிக் கொள்ளலாம்.)

பொதுவாக மின்நூல் என்பது தானியங்கி கோப்பாக (PDF: Portable Document Format ) மாற்றப் பட்டு பயன்படுத்த்ப் படுகிறது. இவ்வாறு மாற்றப் பட்ட மின்நூலைப் படிக்க பயனர்களின் கணிணியில் (PDF Reader ) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு அடோப் மின்னூல் ( Adobe Reader) படிப்பான் உதவுகிறது.

பதிவிறக்கங்கள்:

பிரிமோ பிடிஎஃப் ( மின்நூல் உருவாக்கி) அடோப் ரீடர் ( மின்நூல் படிப்பான்)மேலும் இது தவிர அடோப் நிறுவனமே தனியாக அக்ரோபாட் என்ற செயலியை மின்நூல் தயாரிக்க வெளியிடுகிறது. ஆனால் இதை பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
(நன்றி: http://tamileditor.org/blog/)

ஆங்கிலம் வழியாக தமிழில் எழுதுங்கள்...

வணக்கம் நண்பர்களே... தமிழில் எழுத ஆவலிருந்தும் தமிழ் தட்டச்சு தெரியவில்லையா? தமிழில் வலைப்பதிவு இட வேண்டுமா? தமிழிலில் மின்னஞ்சல் இடவேண்டுமா? கவலையை விடுங்கள். தமிழ் எழுதி இருக்கிறது.

இனி நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பதிவிடப் போகிறீர்கள்... அதற்கான புதிய மென்பொருள் இதோ... அதன் பெயர் தமிழ் எழுதி

இதற்கு தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். மேலும் அதற்கான உதவியை தமிழ் எழுதியின் இறுதிப் பக்கத்தில் எளிதாகப் பெறலாம். ஜாவா கணினிமொழி மூலமாக இந்த தமிழ் எழுதி தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். (இம்முறைக்கு 'பொனடிக்' முறை என்று பெயர்)

உதாரணமாக
ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அன்பு' என்று மாற்றித்தரும். பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் தெரிந்தவர்கள் 'தமிழ்-ஆங்கிலம்' முறையையும் 'தமிழ் தட்டச்சு' முறையையும் தெரிவு செய்து பயன்படுத்தவும்.

சில உதாரணங்கள்:

இடையில் ஆங்கில எழுத்துக்களை வரவழைக்க F12 -ஐ அழுத்தவும். மீண்டும் F12 - ஐ அழுத்தும் போது பழைய முறையப் பெறலாம்.

அன்பு - anbu, அப்பா - appaa, தமிழ் - thamiz, அழகு - azaku

இனியென்ன ஆங்கிலம் வழியாக தமிழில் எழுத வேண்டியதுதானே...

(நன்றி: நண்பர் விவேக், மற்றும் தமிழ் எழுதி வலைத்தளம் )

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
சுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
முமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் - தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே...
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஒன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

று விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபத்தியிரண்டாவது சுதந்திர தினத்திலேனும் வீறு கொண்டெழுவோம் வாரீர்!


-மோகனன். ஆகஸ்டு 15, 2008
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

Wednesday, August 13, 2008

தங்கம் வென்ற சிங்கத்திற்கு வாழ்த்துக் கவிதை..!இந்தியாவின் இதயத்தை
இன்பக்கடலில் ஆழ்த்திய
இனிய தங்கமே..!

நூற்றிப்பத்து கோடி மக்களின்
தங்கம் வெல்லும் ஆவலை
தனியாளாய் நின்று
வென்று வந்த சிங்கமே..!

ஒலிம்பிக் என்ற உலக மேடையில்
இந்தியாவின் பெருமையை
இருத்தி வைத்த தங்கமே..!

உத்திரகண்ட் பெற்றெடுத்த உதயமே
உழைப்பின் சிகரமே
சீனத்தில் முத்திரை பதித்த சிங்கமே..!

உந்தன் சாதனையால்
இந்தியத்தாய் பெருமிதம் கொள்கிறாள்
உன் திறமைக்கு வாழ்த்து சொல்கிறாள்..!

நீன் புகழ் வாழி... நீ நீடுழி வாழி...
என வாயார வாழ்த்துகிறாள்...
அதனோடு எங்கள் வாழ்த்தும்...

உந்தன் உழைப்பால் நாங்களனைவரும்
பெருமையடைகிறோம்...
வாழ்க நீ எம்மான்..!

--@--@--@--@--@--@--

ஒலிம்பிக் குறித்த எனது முந்தைய பதிவுகள்...

*தெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......

*இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..!

*பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா

Tuesday, August 12, 2008

கல்லூரியில் படிக்கும் போதே ரூ. 4000-த்தில் கோ ஆப்டெக்ஸில் பகுதி நேர வேலை..!

தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ‘பகுதி நேர வேலை’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே மாதம் ரூ. 4ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தனி அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் நிர்மலா கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 137 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 200 விற்பனையகங்கள் உள்ளன. புதுப்புது டிசைன்களை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது கோ- ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் கல்லூரி மாணவர்களுக்கு ‘பகுதி நேர வேலை’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் படித்துக்கொண்டே பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி நல்ல அனுபவமும் பெறமுடியும்.

‘பகுதி நேர வேலை’க்கு எவ்வளவு மாணவர்கள் வேண்டுமானாலும் வரலாம். மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இவர்களுக்கு பணி நேரம். இதன் மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் வரை இவர்கள் சம்பாதிக்க முடியும். பணி செய்ய மாணவர்கள் விரும்பினால் அந்தந்த பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மேலாளரை (Manager) அணுகலாம்.

கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சிகள் (Exhibition), விற்கனையகத்தின் உள் அலங்காரம் (Showroom decoration), விற்கனை பிரிவு ஆகியவற்றுக்கு மாணவர்களை பயன்படுத்தி கொள்வோம்.

ஆயத்த ஆடைகள் (Ready mates) மற்றும் துணி வகைகளில் கண்கவரும் வகையில் புதிய வடிவமைப்புகளை (Disign)ன் செய்யும் மாணவர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறோம்.

மாணவ, மாணவியர் வடிவமைத்த சுடிதார் மற்றும் துணி வகைகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வடிவமைக்கிற்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்கப்படும்.

மாணவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார் நிர்மலா.

எவ்வளவு அருமையான வாய்ப்பு... படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே.. உங்களுக்கேற்ற வாய்ப்பு இது... பயன்படுத்திக் கொள்ளுங்கள்... இதே போல ஒவ்வொரு அரசு, அரசு சார்ந்த , தனியார் நிறுவனங்களும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுத்தால்... நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்... திறமையானவர்களை படிக்கும் காலத்திலேயே கண்டறியலாம்... அவர்களாலும் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும்... கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும், இந்த அருமையான வாய்ப்பு பற்றி சிந்தித்து செயலாற்றிய, செயலாற்றப்ப போகிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள்..!

(நன்றி: தமிழ் முரசு)

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.

1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.

அச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...


நம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.எம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்


1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.


1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.

(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)

சுமை

குழந்தை பருவத்தில்
என் தாய்க்குச் சுமை..!
படிக்கும் வயதில்
புத்தகச் சுமை..!
பருவ வயதில்
பாழும் காதல் சுமை..!
நடுத்தர வயதில்
குடும்பச்சுமை..!
நரைத்த வயதில்
கூன் விழுந்த முதுகு சுமை..!
முதிய வயதில் என்
பிள்ளைகளுக்கு நானே சுமை..!
இதுதான் உலக உருண்டை தத்துவமோ..?

Monday, August 11, 2008

அன்று அயோத்தி... இன்று அமர்நாத்...

அன்று...
அண்ணன் தம்பிகளாய்
வாழ்ந்த நம்மை
அந்நியர்களாக்கியது
அந்த அயோத்தி....
ஐயோ... தீ..!

இன்றோ...
அமர்நாத்..
அங்கு அமருவதற்கு கூட
அடுத்தவனிடம்
அனுமதி கோரும்
அவல நிலை..!

உயிரற்ற பொருள்களுக்காக
விலை மதிப்பற்ற பல
மனித உயிர்கள்
இனியும் பலியாக வேண்டுமா..?

மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல..!

மதங்களை மறந்து
மனிதங்களை வளர்த்துப்பார்..!
அப்பொழுது புரியும்
மனிதத்தின் மகத்துவம்..!

அமைதிப் பூங்காவாய்
இருந்த நம் தேசத்தை
அய்யோத்தியின் பெயரால்
அமர்நாத்தின் பெயரால்
மதநெருப்பைக் கொண்டு
மீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..!

கன்னடர்களுக்கு ஒரு தமிழனின் கடிதம்

வணக்கம் கன்னடத் தோழர்களே...

நலம், நலமே விழைய ஆவல்... என்றுதான் என்றுமே தமிழன் நலம் விசாரிப்பான். தம்மை நாடி வந்தோரை ஏற்றம் பெற வைப்பான். இதன் வழியாகவே ''வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்'' என்று சிறப்புப் பெயரும் எந்தன் தமிழகத்திற்கு கிடைத்தது.

ஏன்யா... உங்களுக்கு வேற வேலையே இல்லையா... எப்ப பாரு தமிழனை நோண்டறதையே ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க... உங்க மொழி செம்மொழியாவதை நாங்க எங்கய்யா தடுத்தோம். அது உம்ம மொழி.. உன் விருப்பம்... என்னவேணா செஞ்சிக்கோ... யாரு கேட்டா..?

மத்திய அரசுக்கு ஆதரவு கொடு... நிர்பந்தி... என்ன எழவோ செய்... எதுக்குய்யா தமிழனை இழுக்குறீங்க... ஏமாந்தவன் தமிழன்கறதாலயா..?

ஏன்யா... எதுக்கெடுத்தாலும், உங்கபகுதியில இருக்குற தமிழர்களை அடிக்கறீங்க... வாகனங்களை கொளுத்தறீங்க... ஏன் உங்க மக்களை அடிக்க வேண்டியதுதானே... நீங்க எல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள்தானே.. மாக்களில்லையே..?

வீரப்பன் விவகாரத்துல ஒண்ணு சேருவீங்க.. தண்ணின்னு வந்துட்டா வெட்டு குத்துங்கிறீங்க... அந்த எழவையும்தான் எங்க மானமிகு..? அரசியல்வாதிகள் கிடப்பில போட்டுட்டாங்க... அப்புறம் என்னதான்யா உங்களுக்கு வேணும்.

சென்னைங்கிறது, இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று. உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்.. அது அவரது விருப்பம்... இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க தம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது... அப்படி, இங்குள்ள உச்சநீதி மன்றத்தில் உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்... சட்டப்படி அதை சந்திக்க திரணியற்ற, முதுகெலும்பில்லாத பிரணிகளாகவா ஆகி விட்டீர்கள்..? ஏன் இந்த பயம்..! அப்ப 'செம்மொழி... செம்மொழி'ன்னு சொல்றது மக்களுக்கு வித்தை காட்டவா..?

ஏன்யா... வாங்கு வங்கியையும், மக்களையையும் குறி வைத்து நீங்கள் பண்ணும் அலம்பல்களுக்கு... தமிழன்தான் பலிகிடாவா...

எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்தியுங்கள்.. உங்கள் சார்பில் சரியான ஆதாரங்களைக் காட்டினால் நீதிமன்றம் சரியான நீதி வழங்கப்போகிறது... அதைவிடுத்து தமிழனை தாக்குவது, தமிழர்களின் வாகனங்களை உடைப்பது என்று வன்முறையில் இறங்காதீர்கள்...

அப்படிச் செய்தால் தீவிரவாதிகளுக்கும், கொடூரவாதிகளுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்... நீங்கள் செய்யும் அதே அயோக்கிய தனத்தை தமிழகத்திலுள்ள கன்னடர்களிடம் காட்டுவதற்கு கண நேரம் ஆகாது... ஆனால் நாங்கள் கண்ணியவாதிகள்... காத்துத்தான் பழக்கமே தவிர... அழித்தல்ல...

இனியேனும் உங்களது பேடித்தனமான வீரத்தை அங்குள்ள தமிழர்களிடம் காட்டாதீர்கள்... சாது மிரண்டால் காடு கொள்ளாது...

இப்படிக்கு

உங்களிடம் நட்பை எதிர்பார்க்கும் ஒரு தமிழன்.

(செம்மொழி
... செம்மொழி என்று கூவுகிறார்களே..? அதன் வரையறை, வரைமுறை என்னென்று தெரியுமா..? இதனை அறிய இதன் கீழ் உள்ள கட்டுரையை .. . அல்லது செம்மொழி மீது சொடுக்குங்கள்..!)

Saturday, August 09, 2008

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழ் மொழியின் செவ்வியல் (செம்மொழி) தகுதியை மத்திய அரசு அங்கீகரித்து 12-10-2004-இல் ஆணை பிறப்பித்த நாள் முதல் செவ்வியல் மொழியின் தகுதிகள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக அதன் பழமை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அண்மையில் தமிழகத்தின் சட்டமன்றத்தில்கூட இப்பிரச்னை இடம்பெற்றது. எனவே, இத்தலைப்புத் தொடர்பாகச் சில அடிப்படைக் கருத்துகளை முன் வைப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உருவாக்கிய முப்பது அம்சத் திட்டத்தில், தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையின் அங்கீகாரமும் ஒன்று, அதில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரச்னை பற்றி ஆய்ந்து அறிக்கை தர மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. சாகித்ய அகாதெமியின் தலைவரின் தலைமையில் அக்குழு 2-9-2004 அன்று கூடியது.

மத்திய அரசின் வல்லுநர் குழு முதலில் சந்தித்த கேள்வி, செவ்வியல் மொழிக்கான தகுதிகள் யாவை என்பதுதான். அக்குழு தனது விவாதத்தில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.

1. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவும் இல்லை.

2. செவ்வியல் மொழிக்கான தகுதிகள் எவை என்பதும் எங்கும் வரையறுக்கப்படவில்லை.

எனவே முதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்தச் சமயத்தில் தமிழகத்தில் பலர் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இருப்பதாகவும், அதில் 2000 ஆண்டு பழமை தேவை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உச்ச நிலை அங்கமான ஆட்சிக் குழுவின், தற்போதைய செயலராக இருப்பவரும் மோரிஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமனுக்கு, விளக்கம் வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் பின்வருமாறு.

1. UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவுமில்லை.

2. UNESCO நிறுவனம் செவ்வியல் மொழிக்கான தகுதிகள் என எதையும் நிர்ணயம் செய்யவில்லை.

3. அவர் அறிந்த அளவில் இந்தப் பிரச்னை UNESCO நிறுவனத்தின் அதிகாரத்திற்கும், கடமை வரம்புகளுக்கும் புறம்பானது. எனவே இந்தப் பிரச்னை தொடர்பாக UNESCO நிறுவனத்தை மேற்கோள் காட்டுவது முழுவதும் தவறான செயலாகும். திசைதிருப்பும் செயலுமாகும். மீண்டும் வல்லுநர் குழுவுக்கு வருவோம்.

வல்லுநர் குழுவினர் செவ்வியல் மொழியின் தகுதிகள் எவை என்பது இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்படாததால், கிரேக்கம், லத்தீன், வடமொழி போன்ற மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என அங்கீகரிப்பதில், உலக அளவில் அறிஞர் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு, கீழே காணப்படும் தகுதிகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம் என்று கூறி பின்வரும் தகுதிகளை அக்குழு பதிவு செய்திருக்கிறது.

1. மிகப் பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையான நூல்கள் / பதிவு பெற்ற வரலாறு.

2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கியம் / நூல்கள்.

3. அம்மொழிக்கே உரியதாகவும், மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான, இலக்கியப் பாரம்பரியம்.

4. செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஆதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.

இந்த நான்கு விதிகளும் செவ்வியல் மொழி எனும் தகுதிக்கான பொது விதிகள். எந்த மொழிக்காகவும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த விதிகளைத் தமிழ் நிறைவு செய்கிறதா என்பதைப் பொருத்துத்தான், தமிழின் தகுதி பற்றிய பரிந்துரை அமைய முடியும். தமிழ் இவற்றை நிறைவு செய்கிறது என முடிவு செய்த குழு கீழ்க்காணும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.

“மத்திய அரசு செவ்வியல் மொழிகள் பற்றி ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையில் ஒரு மொழி செவ்வியல் தகுதி பெற, இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக இந்திய மொழிகளில் இந்தத் தகுதிகளை நிறைவு செய்யும் மொழிகளான வடமொழியும், தமிழும் செவ்வியல் மொழிகள் என அறிவிக்கப்பட வேண்டும்.” எனவே, குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பொதுவாகச் செவ்வியல் மொழிகளுக்கான தகுதிகளேயன்றிக் குறிப்பிட்டு எந்த ஒரு மொழிக்காகவும் கூறப்பட்ட தகுதிகள் அல்ல.

செவ்வியல் மொழி என்பதற்கு அடிப்படை அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் தாம். அந்த இலக்கியங்கள் பழமையும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஒத்த லட்சியம், கண்ணியம், பொதுமை, பகுத்தறிவு, ஒழுங்கு போன்ற பண்புகளும் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் பழமை என்று வரும்பொழுது அதற்கான ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே பழமையான இலக்கியம் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

பழமையான மொழி என்பதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உலகின் பழமையான மொழிகள் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of World’s Ancient Languages) என்ற நூல் பழமையான மொழி என்பதற்கான அடிப்படைகள் பற்றி அறிஞர் கருத்துகளை ஆய்ந்து, கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகளைப் பழமையான மொழிகளாகக் கருதலாம் என்று வரையறுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் 45 மொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை வடமொழி, தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு மொழியின் பழமை மட்டும் போதாது. செவ்வியல் இலக்கியம் என்று கூறும் தகுதியுள்ள, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய இலக்கியமும் வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது பழமையான இந்திய மொழிகள் நான்கில் வடமொழியும், தமிழும் மட்டும் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன.

மேலே கூறிய விளக்கத்திலிருந்து 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமை என்பது பொதுவாகச் செவ்வியல் தன்மை எனும் தகுதிக்கு வகுக்கப்பட்ட தகுதியே தவிர, தமிழின் பழமை பற்றிய பிரச்னை அங்கு எழுவதில்லை.

செவ்வியல் தன்மைக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதியை விட, மிக அதிகமான பழமை உடையது தமிழ் என்பது தான் நிலை. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், 90 மதிப்பெண்கள் பெற்றுத் தேறும் மாணவன் போன்ற நிலையில் வடமொழியும் தமிழும் இருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

தமிழின் பழமையைக் குறைத்துவிட்டதாக எழுதுவதும், பேசுவதும், பிரச்னையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததும், தவறான கருத்துகளைப் பரப்புவோரின் எழுத்தையும், பேச்சையும் நம்புவதும் அல்லது தமிழுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுப் பெருமை மிக்க தகுதியைக் குறைத்து மதிப்பிட வேண்டுமென்ற குறுகிய மன நிலையும்தான் காரணமாக இருக்க முடியும்.

வல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசின் அமைச்சர்கள் கூட்டத்தின் (Cabinet Meeting்) ஒப்புதலுக்கு வைத்த பண்பாட்டு அமைச்சகம், 1500 - 2000 என்றிருந்த பரிந்துரையை 1000-க்கு மேலான பழமை என நாணயக் குறைவான முறையில், சில காரணங்களைக் கூறி மாற்றி இருந்தது. இந்த மாற்றத்தின் உள் நோக்கத்தை ஆழமாக ஆராயாது முதலில் மத்திய அரசின் அமைச்சர் குழு (Cabinet ) ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந்தக் காலநிர்ணயத்தைத் தமிழக முதல்வரும், மொழிகளின் செவ்வியல் தன்மையை நிர்ணயிப்பதற்காக மத்திய அரசு அமைத்திருந்த வல்லுநர் குழுவும் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக என்பது திருத்தப்பட்டு, மீண்டும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 1500 முதல் 2000 என மாற்றப்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, செவ்வியல் மொழிகளுக்கு, உலக அளவில் பொது விதிகளாக உருவாக்கியதில் இலக்கியங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்சப் பழமை, எந்த மொழியின் பழமையையும் குறைப்பதில்லை. பழமைக்கு கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகள் என வரையறுத்திருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் உள்ள 45 மொழிகளில் பல கி.மு. 2500-க்கு முற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

(நன்றி: வா.செ. குழந்தைசாமி, தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்)

Friday, August 08, 2008

தெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......

ஒலிம்பிக் சின்னம்...


ஒலிம்பிக் சின்னம்


ஒலிம்பிக் போட்டியைக் குறிக்கும் சின்னமாக ஒன்றுடன் ஒன்று இணைந்த 'ஐந்து வண்ண வளையங்கள்' உள்ளன. நீலம், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்துவகையான வண்ணங்களில் அமைந்துள்ளன. இந்த வளையங்கள் ஒவ்வொன்றும் உலகிலுள்ள ஒவ்வொரு கண்டத்தைக் குறிக்கும். ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றைக் குறிக்கின்றன. அண்டார்டிகாவில் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதால் அதை சேர்க்கவில்லை. இரு அமெரிக்க கண்டங்களை ஒன்றாக்கி விட்டனர். இந்த ஐம்பெருங் கண்டங்களையும், அவற்றை சேர்ந்த வீரர், வீரங்கனைகள் ஒன்று கூடுவதையும் குறிக்கின்றன.

ஒலிம்பிக் கொடி


ஒலிம்பிக் கொடி

வெள்ளை நிறக் கொடியில் ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளையும் (கொடியின் வெள்ளை நிறம்) சேர்த்து இக்கொடியில் ஆறு வண்ணங்கள் உள்ளன. உலகிலுள்ள நாடுகளின் கொடிகளில் இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒரு வண்ணம் இடம் பெற்றிருக்கும். ஒரே உலகம் என்ற கோட்பாட்டை இக்கொடி மறைமுகமாக வலியுறுத்தும். இக்கொடியினை 1914-ல் நவீன கால ஒலிம்பிக் போட்டியினை தோற்றுவித்த பியரி டி கூபர்டின் வடிவமைத்தார்.

ஒலிம்பிக்கின் பெருமை

ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான விடயம் 'வெற்றி பெறுவது முக்கியமல்ல... சிறப்பாக போராடினோம்' என்பதுதான். வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஒலிம்பிக்கின் தாரக மந்திரம்

லத்தீன் மொழியில் 'சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ்' என்ற சொற்களே ஒலிம்பிக் போட்டியின் தாரக மந்திரமாக அமைந்தன. இதற்கு 'வேகமாய், உயர்வாய், வலுவாய்' என்று பொருளாகும். இதனை மையமாக வைத்தே ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் கீதம் (THE OLYMPIC ANTHEM)

ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய கீதம் இருப்பது போல், ஒலிம்பிக்கிற்கு என்று தனி கீதம் இருக்கிறது. இதனை ஸ்போரிஸ் சமரா என்பவர் இயற்றினார். 1896-ல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. பிறகு 1954-ல் சர்வதேச ஒலிம்பிக் குழு இப்பாடலை தற்காலத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்க முன் வந்து, சர்வதேச அளவில் இதற்கு போட்டி வைத்தது. இதில் மைக்கேல் ஸ்பைசக் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் இவரது பாடலும் நிலைக்கவில்லை. 1958-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஸ்போரிஸ் சமரா இயற்றிய பாடல் இசைக்கப்பட்டது. இது மக்களிடையே ஆதரவைப் பெறவும், இதுவே இன்று வரை ஒலிம்பிக் கீதமாக இருந்து வருகிறது.


''Immortal spirit of antiquity,
Father of the true, beautiful and good,
Descend, appear, shed over us thy light
Upon this ground and under this sky
Which has first witnessed thy unperishable fame
Give life and animation to those noble games!
Throw wreaths of fadeless flowers to the victors
In the race and in the strife!
Create in our breasts, hearts of steel!
In thy light, plains, mountains and seas
Shine in a roseate hue and form a vast temple
To which all nations throng to adore thee,
Oh immortal spirit of antiquity!''

(எனக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லை. அதனால் உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறேன். ஆங்கிலமறிந்தவர்கள் கேட்டு இதனை சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்து தர முயற்சிக்கிறேன்)

ஒலிம்பிக்கின் உறுதிமொழி

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் பொதுவான ஒலிம்பிக் உறுதிமொழி இருக்கிறது. ''ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதிமுறைகளுக்கு கட்டுப்படுட்டு, விளையாட்டின் உண்மையான நெறிமுறையுடன், விளையாட்டின் புகழுக்காகவும், அணிகளின் கௌரவத்திற்காகவும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன் என எல்லா போட்டியாளர்களின் சார்பாகவும் நான் உறுதி அளிக்கிறேன்''.

ஒலிம்பிக் ஜோதி
பெய்ஜிங் ஒலிம்பிக் ஜோதி

புராதன
ஒலிம்பிக் போட்டியின்போது, ஒலிம்பியா நகரில் சூரியக் கதிர்களை லென்ஸ் வழியாக குவித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைப்பார்கள். நவீன ஒலிம்பிக்கில் 1936-ம் ஆண்டு அறிமுகமான இந்த நடைமுறை இன்றுவரை ஒலிம்பிக் பாரம்பரியமாகத் தொடர்கிறது. துவக்க விழாவின் போது ஏற்றி வைக்கப்படும் இந்த ஒலிம்பிக் ஜோதியிலிருந்து ஒலிம்பிக் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தீபத்தில் ஏற்றப்படும். போட்டிகள் முடியும் வரை இத்தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் போது இந்த ஒலிம்பிக் ஜோதி, அடுத்து எந்த நாட்டில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதோ, அந்நகர மேயரிடம் இந்த ஒலிம்பிக் ஜோதியும், ஒலிம்பிக் கொடியும் ஒப்படைக்கப்படும்.

ஒலிம்பிக் சின்னம்: 'டான்சிங் பெய்ஜிங்'
டான்சிங் 'பெய்ஜிங்'

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் போட்டியை நடத்தும் நாடு அதற்கென பிரத்யோகமான ஒலிம்பிக் சின்னத்தை வடிவமைக்கும். 29-வது ஒலிம்பிக் போட்டிக்கு டான்சிங் பெய்ஜிங் என்ற சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற பின்னணியில், ஒரு மனிதன் மகிழ்ச்சியில் ஆடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 'பெய்ஜிங் -2008' என்று எழுதப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒலிம்பிக்கின் ஐந்துநிற வளையங்களும் இடம்பெற்றுள்ளன. (சிவப்பு நிற பின்னணிசீனாவின் கம்யூனிசத்தை குறிக்கிறதோ என்னவோ...?)

அதிர்ஷ்டம் தரும் பிரத்யோக சின்னங்கள்


ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், போட்டியை நடத்தும் நாட்டின் சார்பில் பிரத்யோகமான அதிர்ஷ்டம் தரும் சின்னங்கள் (Mascots) வடிவமைக்கப்படும்.'புவா'


இம்முறை பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சீன நாட்டின் பிரபல உயிரினங்களான (படத்தைப் பாருங்கள்) மீன் (பெய் பெய்), பாண்டா கரடி (ஜிங் ஜிங்), திபெத்திய மான் (யிங் யிங்), ரெட்டை வால் குருவி (நினி), மற்றும் ஒலிம்பிக் ஜோதி (ஹீவான் ஹூவான்-நடுவில் உள்ளது) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து சின்னங்களையும் 'புவா' என பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒலிம்பியாட் ஆண்டு

ஒரு ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் ஆரம்பித்து, அடுத்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் முடியும் தொடர்ச்சியான 4 ஆண்டு காலத்தை 'ஒலிம்பியாட்' என அழைக்கின்றனர். ஏதென்ஸ் நகரில் 1896-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தொடர்ச்சியாக ஒலிம்பியாட் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதன்படி பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பியாட் துவங்குகிறது.

பதக்கங்கள்பதக்கங்களின் முன்புறம்

இப்போட்டியில் வழங்கப்பட உள்ள பதக்கத்தின் ஒரு புறம் 'டான்சிங் பெய்ஜிங்' சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சீனாவின் பாராம்பரியத்தை நினைவுகூறும் வகையில், ஒலிம்பிக் மைதானத்தில் டிராகன் இருப்பது போலவும், அதன் முன்னே வீரர் ஒருவர் நிற்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதக்கத்தின் விட்டம் 70. மி.மீ ஆகும். அதன் தடிமன் 6. மி.மீ ஆகும்பதக்கங்களின் பின்புறம்

தடகளப் பிரிவிற்கு மட்டும் அதிகபட்சமாக 47 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. குறைந்த பட்சமாக பேஸ்பால் பிரிவிற்கு 1 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் வழங்கப்படும் மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 302.

நன்றி: சீன தமிழ் வானொலி நிலையம்,
பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு,
சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..!

புராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டாவது ஒலிம்பிக் போட்டி 1900-ல், பிரான்ஸில் நடைபெற்றது. அது முதல் இன்று வரை இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. இந்தியா கலந்து கொண்ட முதலாவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தடகளப்பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

இதன் பிறகு 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது. இதே போட்டியில் 1960 -ல் வெள்ளியும், 1968,1972 -களில் வெண்கலத்தையும் வென்றது.

1952-ல் மல்யுத்தப் பிரிவில் ஒரு வெண்கலம், 1996-ல் டென்னிஸ் பிரிவில் ஒரு வெண்கலம், 2000-ல் பளுதூக்குதலில் ஒரு வெண்கலம், 2004-ல் துப்பாக்கி சுடுதலில் ஒரு வெள்ளியையும் இந்தியா வென்றுள்ளது.

 28 முறை நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 27 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 8 தங்கம், 4 வெள்ளி, 5 மல்யுத்தம் என மொத்தம் 17 பதக்கங்கள்.

1900 துவக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி (ஆதாரம்: மகாகவி பாரதியின் கவிதை வரி ''முப்பது கோடி முகமுடையாள்...'') அப்போது இந்தியா 2 பதக்கங்களை வென்றது. இன்றோ நமது மக்கள் தொகையின் எண்ணிக்கை 113 கோடிக்கும் மேல்... (இதை நீங்கள் படிக்கும் இந்த வினாடியில் புதிதாக 15 குழந்தைகள் பிறந்திருக்கும்). பதக்கம் வெல்கிறார்களோ இல்லையோ... பிள்ளைகளை பெறுவதில் வெல்கிறார்கள்...

30 கோடிக்கே 2 பதக்கம் என்றால் 110 கோடிக்கு 7 பதக்கமாவது வெல்ல வேண்டாமா..? ம்ஹூம்... என்னதாம்பா பண்றீங்க..?

இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து 98 பேர் குழு செல்கிறது. அதில் 56 பேர் வீரர், வீராங்கனைகள். பயிற்சியாளர் உள்ளிட்ட மற்றையவர்கள் 42 பேர். அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில்மட்டும் 16 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

கடந்த முறை ஏதென்ஸில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியது.

மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் விவரம் (அடைப்புக்குறியில் அவர்கள் பங்கேற்கும் போட்டி)

வில்வித்தை: மங்கல் சிங் சாம்பியா (தனிநபர்). தோலா பானர்ஜி (தனிநபர்), பாம்பயாலா தேவி (தனிநபர்), பிரனிதா வார்தினேனி (தனிநபர்).

தடகளம்: விகாஸ் கௌட (வட்டு எறிதல்), ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறை தாண்டுதல்), அஞ்சு ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்), ஜெ.ஜெ. சோபா (ஹெப்டத்லான்), சுஸ்மிதா சிங்கா ராய் (ஹெப்டத்லான்), பிரமிளா அய்யப்பா (ஹெப்டத்லான்), பிரீஜா ஸ்ரீதரன் (10,000 மீட்டர் அட்டம்), சுரேந்திரா சிங் (10,000 மீட்டர் அட்டம்), ஹர்வந்த் கௌர் (வட்டு எறிதல்), கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல்), மஞ்சித் கவுர் (400 மீட்டர் அட்டம்), மந்தீப் கௌர் (400 மீட்டர் அட்டம்), சித்ரா கே.சோமன், ராஜா எம். பூவம்மா, மந்தீப் கௌர், சினி ஜோஸ், எஸ். கீதா (400 மீட்டர் தொடர் அட்டம்).

இறகுப்பந்து: அனுப் ஸ்ரீதர் (ஒற்றையர்), சாய்னா நெஹ்வால் (ஒற்றையர்).

துப்பாக்கி சுடுதல்: அபிநவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), ககன் நராங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சமரேஷ் ஜங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), 50 மீட்டர் பிஸ்டல்), மான்ஷெர் சிங் (டிராப்), மானவ்ஜித் சிங் சாந்து (டிராப்), ராஜ்யவர்தன் சிங் ரதோட் (டபுள் டிராப்), அஞ்சலி பாகவத் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), அவ்னீத் கௌர் சித்து (50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்).

குத்துச்சண்டை: ஜிதேந்தர் குமார் (பிளை வெயிட் பிரிவு), அகில் குமார் (பாந்தம் வெயிட்), அந்த்ரேஷ் லலித் லாக்ர (அபெதர் வெயிட்), விஜேந்தர் விஜேந்தர் (மிடில் வெயிட்), தினேஷ் குமார் (லைட் ஹெவி வெயிட்).

நீச்சல்: விர்தவால் காடே (50 மீட்டர் பிரீ ஸ்டைல், 100 மீட்டர் பிரீ ஸ்டைல், 200 மீட்டர் பிரீ ஸ்டைல்), சந்தீப் சேஜ்வால் (100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக், 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக்), அன்குர் பொசேரியா (100 மீட்டர் பட்டர்பிளை), ரேஹன் போன்சா (200 மீட்டர் பட்டர்பிளை).

துடுப்புப்படகு: பஜ்ரங்லால் தஹார் (ஒற்றையர் ஸ்கல் பிரிவு), தேவேந்தர் குமார் (லைட் வெயிட்), மஞ்ஜீத் சிங் (டபுள் ஸ்கல்ஸ்).

பாய்மரப்படகு: நாச்சாதர் சிங் ஜோஹல் (ஃபின்).

டென்னிஸ்: மகேஷ் பூபதி, -யாண்டர் பயஸ் (இரட்டையர் பிரிவு), சானியா மிர்சா (ஒற்றையர் பிரிவு), சுனிதா ராவ், சானியா மிர்சா (இரட்டையர் பிரிவு).

டேபிள் டென்னிஸ்: அச்சந்தா சரத் கமல் (ஒற்றையர் பிரிவு), நேஹா அகர்வால் (ஒற்றையர் பிரிவு).

மல்யுத்தம்: யோகேஷ்வர் தத் (60 கிலோ பிரீஸ்டைல்), குமார் சுஷில் (66 கிலோ பிரீஸ்டைல்), தோமர் ராஜீவ் (120 கிலோ பிரீ ஸ்டைல்).

ஜூடோ: தோம்பி தேவி (48 கிலோ பிரிவு), திவியா (78 கிலோ பிரிவு).

'வெற்றி நமதே..! வென்று வாருங்கள் தங்கங்களே..!'

நன்றி: தினமணி

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா

புராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.

28-வது ஒலிம்பிக் போட்டி, முதல் ஒலிம்பிக் கோட்டி நடத்தப்பட்ட அதே ஏதென்ஸில் நடைபெற்றது. இதில் 201 நாடுகளைச் சேர்ந்த 10,625 வீரர்கள் கலந்து கொண்டனர். 301 போட்டிகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சீன அதிபர் ஹு ஜிந்தாவோ சீன நேரப்படி 8.08 (இந்திய நேரப்படி மாலை 5.30) மணிக்கு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 24-ம்தேதி வரை நடைபெறும் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 302 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

‘ஒரு உலகம்...ஒரு கனவு’ என்ற முழக்கத்துடன் ஒலிம்பிக் களத்தில் இறங்கியுள்ள சீனா, தனது பொருளாதார வளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மைதானங்கள், வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு, பெய்ஜிங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சீனர்களின் ராசியான எண் 8 என்பதால் நாள், மாதம், ஆண்டு மட்டுமல்லாது இரவு 8 மணி 8 நிமிடம் 8 விநாடியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஒலிம்பியாவில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம், பல்வேறு நாடுகளின் வழியாக 127 நாட்களில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து செவ்வாய் இரவு பெய்ஜிங் வந்து சேர்ந்தது. கடந்த 2 நாட்களாக சீனாவின் முக்கிய இடங்களின் வழியாக தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்ட ஜோதி, இன்று இரவு தொடக்கவிழாவின் போது சரியாக 8 மணிக்கு ‘பறவைக் கூடு’ தேசிய மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டு முறைப்படி ஏற்றப்படுகிறது. இதையடுத்து அரங்கில் நடைபெறும் வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற உள்ளது.

வெடிமருந்தைக் கண்டுபிடித்த சீனாவில், வண்ணமிகு, கண்கவர் வாணவேடிக்கைகளையும், டிராகன் நடனம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். தொடக்கம் மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கைகளுக்காக மட்டுமே சுமார் ரூ. 400 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர், சீன அதிபர் ஆகியோரின் வரவேற்புரையை தொடர்ந்து ஒலிம்பிக் கீதம் ஒலிக்க, கொடிகள் ஏற்றப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான புறாக்களை பறக்கவிடுகின்றனர். பின்னர், மைதானத்தில் தொடர் ஓட்டமாக எடுத்துவரப்படும் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 56 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி களமிறங்குகிறது. மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

1996-ல், அட்லாண்டாவில் நடைபெற்ற 26-வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (16 தங்கங்களுடன்) சீனா 4 வது இடத்தை பிடித்தது. 2000-ல், சிட்னியில் நடைபெற்ற 27வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (28 தங்கங்களுடன்) 3 வது இடத்தையும், 2004-ல், ஏதென்ஸில் நடைபெற்ற 28- வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (32 தங்கங்களுடன்) 2 வது இடத்தையும் பிடித்த சீனா, போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நான்கு ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்காவே பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. 2004 ஒலிம்பிக் போட்டியில் மூன்றாமிடம் பிடித்திருந்த ரஷ்யா, மீதம் இரண்டு போட்டிகளில் இரண்டாமிடத்தை பிடித்திருந்தது.

ஒளிரட்டும் ஒலிம்பிக் 2008... வெல்லட்டும் திறமை மிக்க வீரர்கள்... ஓங்கட்டும் உலக ஒற்றுமை..!

Thursday, August 07, 2008

ஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய ரயிலுங்கோவ்...

சென்னை எழும்பூரில் இருந்து விருதாசலம், ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் புதிய ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆத்தூர்காரங்க எல்லாம் காலரை தூக்கி விட்டுக்கலாம்.

எங்க ஊரின் 30 வருடக் கனவு நிறைவேறப் போகிறது. எங்க ஊர் சேலம் மாவட்டத்திலிருக்கிற ஆத்தூர். சேலத்திலிருந்து 54 கி.மீ. தூரத்தில் கிழக்கு திசையில் உள்ளது எங்கள் ஆத்தூர். இது ஒரு நகராட்சி. அடியவன் இங்குதான் பிறந்தது, தவழ்ந்தது, நடந்தது, படித்தது என அனைத்தும். இன்று, நான் படித்த படிப்பின் காரணமாக சென்னையின் வந்தேறியாகி விட்டேன். பஞ்சம் பிழைக்க வந்துவிட்டேன்.

எங்கள் ஊருக்கு போக வேண்டுமெனில் பேருந்து வழியாகத்தான் செல்ல முடியும். சென்னையிலிருந்து புறப்படும் பேருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக சேலம் சென்றடையும். நடத்துனர்கள் சேலம் செல்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் பெரும்பாலும் எங்கள் ஊர் செல்வதற்கு பேருந்தில் பயணிப்பதானால், நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும். பயணம் செய்வதற்கு 7 மணி நேரம் ஆகும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் அல்லல்கள் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல...

ரயிலில் செல்லாமென்றால் அதற்கு வழியிருக்காது. சேலம் - விருதாச்சலம் வரைதான் ரயில் வந்து செல்லும். அப்படி அவசரமெனில் விருதாசலத்தில் இறங்கி 3 மணி நேரம் காத்திருப்பிற்குப் பின்னர், திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களில் தொற்றிக் கொள்ள வேண்டும். ஒரே ரயிலில் செல்வதென்றால் ஆத்தூரிலிருந்து சேலம் சென்றுவிட்டு, அங்கிருந்து தர்மபுரி, வாணியம்பாடி, அரக்கோணம் வழியாக சென்னைக்கு வரவேண்டும்.

இனிமேல் அதற்கு வேலையிருக்காது. எங்கள் ஊர் மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகிறது. நாளை முதல் எங்கள் ஊர் வழியாக சென்னை செல்லும் புதிய ரயில் விடப்படுகிறது. சிறப்பு என்னவென்றால். இது செல்லும் வழியனைத்தும் அகலரயில்பாதையாக மாற்றியமைக்கப்பட்டதாகும். இதனால் பயண நேரம் குறையும், ரயிலும் விரைவாகச் செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கும் (ரயில் வண்டி எண்: 2297), சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் (ரயில் வண்டி எண்: 2298) புதிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த புதிய ரயில் நாளை (8.8.08) மட்டும் மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் (2297) ரயில், அன்று நள்ளிரவு 11.15 மணிக்கு சேலம் சென்றடையும். 9ம் தேதி முதல் இரவு 11.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும். மறுமார்க்கமாக சேலத்தில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழும்பூர் வரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டினம், சேலம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.

இனிமேல் பொங்கல், தீபாவளி என அனைத்து நாட்களிலும் இனிமையான பயணத்தை தொடங்குவோம். அட இடைத்தரகர்களே... இந்த ரயிலையும் உங்க வசதிக்காக வளைச்சுடாதீங்க... ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்படுத்திக்கட்டும்...

இவ்வழியாக ரயிலை விடுவதற்கு முயற்சிகள் எடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் சார்பாகவும் எங்கள் பகுதி மக்கள் சார்பாகவும், இதனால் பயனுறுகிற அனைத்து பயணிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்..!

Wednesday, August 06, 2008

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகள்: ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலம் ஒன்றில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள்தான் நேபாளம் வழியாக இந்தியாவில் நுழைந்து கள்ளநோட்டுக்களை அதிகளவில் புழக்கத்தில் விடுவதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நேபாள எல்லை அருகே உள்ள உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலங்களில் உள்ள பணத்தை சோதனை செய்யும்படி ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் துமாரியாகஞ்ச் கிளையில் உள்ள பெட்டகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருதினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். அதில் மொத்தம் ரூ.100 கோடி பணம் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து ரூபாய் நோட்டு கட்டுக்கள் முழுவதையும் சோதனை செய்ததில் ரூ.20 லட்சம் அளவுக்கு கள்ளநோட்டுக்கள் இருந்தது தெரிந்தது.

இவை எல்லாம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள். மேலும் ரூ.70 லட்சம் பணம் குறைவாக இருந்தது. இந்தப் பணமும் கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சோதனைக்கு முன்பே, இவை அகற்றப்பட்டிருக்கலாம் என பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வங்கி ஊழியர்களின் கவனக் குறைவால் கள்ளநோட்டுகள் வந்ததா அல்லது வங்கி அதிகாரிகளே இதற்கு உடந்தையா என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.

அடங்கப்பா... வங்கியுலுள்ளவனுங்க அனுமதி இல்லாம இது நடக்காதுடா. 20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் கவனக் குறைவா வைக்க முடியாது. நாம 500 ரூபாயை குடுத்தாலா பத்து தடவை திருப்பி திருப்பி பாப்பானுங்க.. இவனுங்களாவது...? ஏமாறுவதாவது... வங்கியிலுள்ள சொங்கிப்பயலுகளை பிடிங்கப்பா... இது புதுவித ஹவாலாவால்ல இருக்கு... நம இனிமே சாக்கிரதையா இருக்கணும் ஏ.டி.எம்.ல கள்ளநோட்டை விட்டுட்டு நம்மள களி தின்ன வச்சிடுவானுங்க....

உத்தரபிரதேச போலிசு மாமா... அவனுவளை சரியா புடிச்சி களி தின்ன வைப்பிங்களா.. இல்ல காசு வாங்கிகிட்டு கமுக்கமா நீங்களும் ரெண்டு கட்டு எடுத்துகிட்டு, அத்தோட அதை அமுக்கிடுவீங்களா..?

வைகைப்புயலு வடிவேலு சொல்ற மாதிரி... இப்படி ஆட்டைய போடுறதுக்கு ரூம் போட்டு யோசிப்பாணுவலோ...?

பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதமா..? நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்..!

என்னடா இது புதுசா இருக்குன்னு பாக்கறீங்களா... விடயம் இருக்கு தலைவா (அல்லது) தலைவி...

பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப தாமதமானதால் கோவையைச் சேர்ந்தவருக்கு துபாய் வேலை பறிபோனது. அவருக்கு இழப்பீடாக ரூ.80 ஆயிரத்தை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதை படித்த பிறகு, உங்களிடம் சொல்வதற்கு வந்து விட்டேன்.

கோவையைச் சேர்ந்த தாமஸ் வில்சன் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் துபாயில் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தார். 2006 நவம்பர் 6ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் குடியுரிமை ஆவணங்கள் சரிபார்ப்பு (இமிகிரேஷன்) பிரிவு ஆய்வாளர் ஒருவர், இவரது ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அதனை சரிபார்க்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

9 மாதங்கள் கழித்து,(அவரது பாஸ்போர்டில் குறைபாடில்லை என்று கூறி) 2007 ஆகஸ்ட் 9ம் தேதி தான் அவருக்கு மீண்டும் பாஸ்போர்ட் கிடைத்தது. அதற்குள், அவரை வேலையில் இருந்து துபாய் நிறுவனம் நீக்கியது.

வேலை பறிபோனதற்கு இழப்பீடு வழங்க கோரி பாஸ்போர்ட் அலுவலகம் மீது தாமஸ் வில்சன், கோவை நுகர்வோர் குறை தீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ''மண்டல பாஸ்போர்ட் அலுவலக தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே தவறு நடந்திருப்பதை உறுதி செய்து, தாமஸ் வில்சனுக்கு இழப்பீடாக ரூ.80ஆயிரம் வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

மக்களுக்கு பணியாற்றவே அரசியந்திரங்கள்... அவைகளே, மக்களை தற்போது அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மட்டுமே அரசிடமிருந்தும் சரி, தனியாரிடமிருந்தும் சரி... பொதுசனத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருகிறது.

அரசு அலுவலகங்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுகின்றன என்பதும், அதிலும் குறிப்பாக மிக முக்கிய துறையான பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளன என்பதை கோடிட்டுக்காட்ட மேற்சொன்ன சம்பவம் ஒரு சிறு உதாரணம்.
நீதிமன்றம்தான் இவைகளுக்கு எதிராக நீதி எனும் சாட்டையை சுழற்றுகின்றன. ஆனாலும் அவ்வலுவலகங்கள் திருந்துவதாக இல்லை.

நான் கடந்த மார்ச் 17-ம் தேதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்... இன்னும் கிடைத்தபாடில்லை. கேட்டால் இன்னும் காவல் துறை அறிக்கை வரவில்லை என்கிறார்கள்...

நானும் நுகர்வோர் நீதிமன்றம் ஏறவேண்டும் போலிருக்கிறது... வாழ்க அந்த அலுவலகம்... வளரட்டும் அதன் புகழ்...

Tuesday, August 05, 2008

கவியமுதம்

அன்பானவளே
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா..?

நமக்கு குழந்தை - அதிலும்
நான் விரும்பிய பெண் குழந்தை
பிறந்து விட்டதென்றாய்..!

அப்பெண்ணிற்கு அமுதமென்று
பெயரிட்டதாகவும் நுண்ணலைபேசி மூலம்
உச்சி முகர்ந்'தாய்..!'

அமுதம் வந்தது கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியில்
என் மனம் துள்ளிக் குதிக்கிறது..!

அத்தூயவளைக்
காண
எந்தன் உள்ளம்
ஏக்கத்தில் துடிக்கிறது..!

பாழும் பணியின்
காரணமாக
நான் சென்னையில்..!

பாசத்தின்
காரணமாய்
நீயும் என் சேயும்
என் பெற்றோரிடத்தில்..!

விரைந்து வருவேன்...
விண்மீனைப் பார்ப்பேன்
என் மீனை கடிப்பேன்..!

கட்டிக்
கரும்புகளே... கமல மலர்களே...
காத்திருங்கள்
காற்றினும் கடிந்து வருகிறேன்
..!

என் மகள் பிறந்தாளென்ற
செய்தி கேட்டதும் - என்
எழுதுகோல் காகிதத்தை முத்தமிட...

நாம் பெற்ற
அமுதத்திற்கு

இதோ கவியமுதம்..!

உன்னில் நான்
என்னில் நீ
நம்முள் அமுதம்..!

விண்ணில் நீ
உன் கண்ணில் நான்
தாய் மண்ணில் அமுதம்..!

நினைவில் நான்
கனவில் நாம்
உருவில் அமுதம்..!

என் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்
உன் உறவுகள் நம் தேடலில்
அமுதம் நம் கூடலில்..!

நீ பொறுமை
நான் கருமை
அமுதம் நம் பெருமை..!

நீ எந்தன் பிரியம்
நானுந்தன் பிரியம்
அமுதம் நம் பிரியம்..!

நான் உந்தன் மோகம்
நீ எந்தன் தாகம்
அமுதம் நம் ராகம்..!

நீ பொன்மான்
நான் பொல்லாத மான்
அமுதம் நம் புள்ளிமான்..!

பயன்பாட்டிற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்..!ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை போல பத்து ரூபாய் நாணயங்களை தாராளமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பொதுவாக ரூபாய் நோட்டுகள் அச்சிட ஆகும் செலவை விட அதே திப்பு கொண்ட நாணயங்களை அச்சிட அதிக செலவாகும். என்றாலும், நோட்டுகளை விட நாணயங்கள் கூடுதல் காலத்துக்கு உழைக்கும் என்பதால் எல்லா நாடுகளும் நாணயங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை ரூபாய் நாணயங்கள் என்றும் 50 காசு வரையிலான நாணயங்களை சிறிய நாணயங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்திய நாணயச் சட்டம் 1906ன் படி ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை நாணயங்கள் வெளியிடலாம். அதன்படி, ரிசர்வ் வங்கி ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய், நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், இருபது ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் அவைகளனைத்தும் சிறப்பு நாணயங்களாக (சிறப்பு தபால் தலை போன்று) வெளியிட்டு வருகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்கு இது தெரிந்த விடயம்தான்.இப்போது மக்களிடையே நாணய பநன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்களை அதிக அளிவில் வெளியிட இந்திய அரசு முடிவு செய்து அதன் பொருட்டு நொய்டாவில் உள்ள இந்திய அரசின் நாணயம் அச்சிடும் மையத்துக்கு கடந்த ஆண்டு ஆர்டர் கொடுக்கப்பட்டது.

கடந்த 7 மாதங்களாக சுமார் 70 லட்சம் பத்து ரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு விட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அச்சிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம் இரண்டு ரூபாய் நாணயத்தை விட சற்று பெரியதாக இருக்கும். இதன் எடை 8 கிராம். குறுக்களவு 28 மில்லி மீட்டர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு மையம் இந்த நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவில் அலிபூர், ஐதராபாத்தில் சைபாபாத் மற்றும் செர்லபள்ளி, உ.பி.யில் நொய்டா ஆகிய இடங்களில் நாணயம் அச்சிடும் இடங்கள் உள்ளன.என்ன நாணயம் வந்தால் என்ன..ஏழைகள் வயிறு நிரம்பி விடப்போகிறதா என்ன..?!

மலேசியா ஏர்லைன்ஸில் தமிழில் கால்சென்டர்
மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் குறித்த தகவல்களை தமிழ் மக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக தமிழ் கால்சென்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிக்காக மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் கால்சென்டர் சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தற்போது, தமிழ் மக்களுக்காக தமிழிலும் கால்சென்டர் வசதிகளை வழங்கி வருகிறது. கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் இது செயல்பட்டு வருகிறது.

தினமும் இந்திய நேரப்படி காலை 5.30 முதல் இரவு 6.30 வரையிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 முதல் மாலை 3.30 வரையிலும் 603 7843 3000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மலேசியா ஏர்லைன்ஸ் பற்றிய தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ளலாம்.

சர்வதேச அளவில் தமிழுக்கென்று தகவல் சேவை... வாழ்த்துக்கள் மாலேசியன் ஏர்லைன்ஸ்...

Monday, August 04, 2008

பெண் சிசுவின் கேள்வி

அம்மா... நீ உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாதே..?
அப்படி அடிமையானதால்
கருவாகி உருவாகி விட்டேன்
உன் கருவறையில்
பெண் சிசுவாய்...

என்னால் அப்பனை
அறியமுடியாது - ஆனால்
உன்னை நானறிவேன்
கருவறையில் மட்டும்...

பிறந்தது பெண் சிசு
என்பதால்
கல்லெறிவது போல்
என்னையும் முள்வேலியில்
எறிந்து விட்டாயே...
ஏனம்மா..?

பெண்ணாகப் பிறந்து விட்டால்
பொன், பொருளுடன்
ஆடவனிடம் தரவேண்டும்
என்ற சமூக கட்டிற்கு
பயந்துவிட்டாயா..?

இல்லை... தவறான முறைதனில்
தப்புத் தப்பாய் நீ செய்த
திரைமறைவு காரியங்கள்
உன்னை வெளிச்சத்தில்
கொண்டு வந்துவிட்டதே
என்ற வேதனையா..?

நான் செய்த பாவமென்ன...
நீ சிற்றின்பம் அடைய
நானன்றோ பெருந்துன்பத்திற்கு
ஆளாகியிருக்கிறேன்...

அரசுதான்
உன்போன்றோர்க்கு
ஆயிரம் முறை சொல்கிறதே
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள்
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள் என்று

அப்படி நீ செய்யாததால்
என்னையல்லவா
இன்று பாதுகாக்காமல்
கொல்லுகின்றாய்..?

இனியேனும் நீ இதுபோன்ற
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
அப்படி நீ அடிமையானதால்
இன்று என் உயிர்
மெல்ல மெல்ல ஊமையாகிக்
கொண்டிருக்கிறது
முள்வேலிகளின் பிடியில்...

இனியேனும் நீ
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
என் போன்றோர்
இந்த பாவ பூமியை
பார்க்காத பாக்கியமாவது
கிட்டும்...
(நீயன்றோ உத்தமத் தாய்)

Friday, August 01, 2008

ஓர் ஏழைத் தாயின் தாலாட்டு

பணம் காசு அவளிடம் இல்லை... மாட மாளிகையும் அவர்களுக்கு இல்லை... இருப்பது குடிசையானாலும்... அதுவே அவர்களுக்கு மாளிகையாய்... இதே ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு...

''ஆராரோ...ஆரிராரோ...
ஆரிராரோ... ஆராரோ..!
சாமி பவனி வரும் நேரத்தில
என் சாமி நீ பிறந்த..!
என் சாமி நீ பொறந்த நேரம்
சாமி கொணம் உனக்கு...!
இங்கே தேருல சாமி வரும்
தெருவெல்லாம் ஊர்கோலம்..!
என் சாமி நீ சுத்திவர
தேக்குத் தேரு உனக்கில்ல..!
மண்ணுல நீ நடந்தா
மனசெல்லாம் வலிக்குதடா..!
மாளிகையில் நீ நடக்க
மனம் போல செல்வம் இல்லை..!
தங்கமே நீ குடிக்க
தங்கப் பாலாடை உனக்கில்லை..!
மாமன் வாங்கி வந்தான்
சங்குப் பாலாடை..!
சர்க்கரையாய் இனிக்குமடா
நான் ஊட்டும் பால் உனக்கு..!
சந்திரனே நீ குடித்து விட்டு
சமத்தாய் நீ உறங்கு..!

பட்டுக்குஞ்சரமே நீ தூங்க
பஞ்சுமெத்தை இங்கில்ல..!
மெத்தையாட்டம் நீ உறங்க
பெத்தவ மடி இருக்கு..!
பணம் காசு இல்லன்னாலும்
பொன்மணியே... பொன்நிலவே...
குறையாத பாசம் மட்டும் நமக்கிருக்கு...!
ஆராரோ..ஆரிராரோ..!''

- ரஜினா. அகரம் கிராமம்.

(ஏழ்மையில் இருந்தாலும், அத்தாயின் மனம் என்றுமே பாசத்தால் உயர்ந்த நிலையில் இருக்கிறது... காசு பணம் இல்லன்னாலும்... பாசம் இருக்குதடா என்கிறாள்... தன்மகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று, ஏக்கப்பட்டாலும்... உள்ளதை வைத்து திருப்தியுடன் வாழும் வாழ்க்கை இவர்களிடம் மட்டுமே காணக் கிடைக்கும்... இதற்கு நிகரான பாடல் உண்டா...)

தாயின் தாலாட்டு

பெண் குழந்தை என்றால் கிராமங்களில் வெறுத்து விடுவார்கள். அப்பிள்ளைகளை படிக்க அனுப்பாமல்... வீட்டுற்குள் அடக்கி விடுவார்கள்... மதுரைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் விட்டு கொலை செய்யும் பாதகம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றுகு மாறாக தனது பெண்குழந்தையை ஒரு கிராமத்திலிருக்கும் தாய் தாலாட்டும் அழகை கேளுங்கள்...

''அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ...
ஆராரோ... ஆரிராரோ..!
நீ பாவாடை சரசரக்க
பள்ளிக்கூடம் போயிவாயேன்..!
நீ பள்ளிக்கூடம் போயிவந்தா
அம்மா பலகாரம் செய்து வைப்பேன்..!
நீ படிச்சாக்கா எம்மா குலப்பெருமை
நம்ம சனம் அங்கே கையெடுக்கும்..!
எம்மா... பணம் காசு நமக்கிருந்தா
பலபேரு கையெடுப்பான்...
குடிப்பெருமை நமக்கிருக்கு
நம்ம குலப்பெருமை தலையெடுக்க
நீ படிச்சி ஆகவேணும்..!
களத்து மேடு நெல்லுகுத்தி
கண்மணியே உன்னை படிக்க வைப்பேன்..!
குடும்பத்துக்கே நெல்லுகுத்தி
குலவிளக்கே உன்னை படிக்க வைப்பேன்..!
பட்டணத்துக்கே நெல்லுகுத்தி
பாலகியே உன்னை படிக்க வைப்பேன்..!
பாலூறும் மனசினிலே எம்மா
பக்குவாமாய் படிக்க வேணும்..!
ஆராரோ... ஆரிராரோ...

அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ..!''

- பூங்கொடி, பென்னகர் கிராமம்.

(கல்வியின் அவசியத்தை, கிராமத்திலிருக்கும் ஒருதாய், தன் குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்... சமூகத்தால் ஓதுக்கப்பட்ட பிரிவில் அவர்கள் இருக்கிறார்கள். அதை அழித்தெடுக்க கல்விதான் ஆயுதம் என்கிறாள்... இதற்கு இணையான ஒரு படைப்பை நகரத்தில் கிடைத்துவிடுமா..?)

கிராமத்து தாயின் தாலாட்டு...

ஒவ்வொரு பெண்ணுமே படைப்பாளிகள்தான்... அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் சிறந்த படைப்பாளிகள் எனலாம்... படைப்பாளியாவதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை... பகட்டான நகரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை...படிக்காமல் இருந்தாலும் கிராமத்து பெண்கள் பலவிதங்களில், நகரத்து பெண்களைவிட சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள்...

ஒரு குடும்பத்தை உருவாக்குவதும், ஒரு குழந்தையை உருவாக்குவதும் பெண்ணே... ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் என்றால் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகும்போதுதான் என்கிறார்கள்... (இதற்கு மட்டும்தான் பெண்களா..? என்று பெண்ணியவாதிகள் கொடி தூக்க வேண்டாம்...)

ஒவ்வொரு தாயும் படைப்பாளிகளே... பாடகிகளே... அதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.. தன் வாழ்வில் பட்ட அனுபவமே போதும். படிக்காமலிருந்தாலும் அவளும் கவிதாயினிதான், படைப்பாளிதான்... பாடகிதான்...

கிராமத்தில் வாழும் ஒரு பாமர, ஏழைத்தாய் தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறாள்... அவள் படிப்பின் வாசமறியாதவள்... அவள் துன்பத்தை மட்டுமே அறிந்தவள்... சமூகத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டவள்... இதே அவளது குரல்... தென்றலாக.. தேனினும் இனிய தாலாட்டாக...

''ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...
உன்னை யானையில போடும்போது
எண்ணமிட்டு போட்டேனோ..?
உன்னை தூளியில போடும்போது
துயரமிட்டு போட்டேனோ..?
தூங்கமா நீ அழற
துக்கம் என்ன சொல்லு கண்ணே..!
தொட்டில் கட்டி தூங்க வைக்க
மச்சு வீடு கட்டவில்ல...
மங்கா என் மாணிக்கமே
கண் மலராம ஏன் அழற...
கட்டில் மெத்தை போட்டு வச்சு
கன்னலுனை தூங்க வைக்க
பொட்டுக்காசு நமக்கில்ல
பொழுது மறைஞ்சபின்னும்
பூவே நீ ஏன் அழற...
அம்மா மடி இருக்கு...
அரும்பே நீ ஏன் அழற
அப்பாவோட தோளிருக்கு...
அழகே நீ ஏன் அழற...
நாங்க செஞ்ச ஓவியமே
ஓயாம நீ அழற
உன் ஒளிவு மறைவு சொல்லு கண்ணே...!
உனக்கு நெய் போட்டு சோறூட்ட
நல்ல காலம் நமக்கு இல்ல..!
உனக்கு பசும்பாலில் சோறூட்ட
பணம் காசு நமக்கு இல்ல..!
பாக்கியம் வரும் வரைக்கும்
பால் நிலவைப் பார்த்துக்கடா..!
ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...''


- ஜெயந்தி. கலவை கிராமம்.

இவர்களுக்கு இயற்கைதான் செல்வம். ஏழ்மைதான் உடன்பிறப்பு... ஆனாலும் அத்தாயின் நம்பிக்கை தளரவில்லை... தன் குழந்தைக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்... இதற்கு நிகரான படைப்பு உண்டா...
(இதை நகரத்தில் உள்ள, படித்த பெண்கள் செய்வார்களா..?செய்திருக்கிறார்களா..?)

Thursday, July 31, 2008

உழைப்பாளிகளின் உறக்கங்கள்...

கதிரவன் எழுந்தது முதல், அந்தி சாயும் வரை உழைப்பாளிகளின் உடல் மட்டுமல்ல, அவனது நிழல் முதற்கொண்டு உழைக்கும். உடல் உழைப்பாளிகளுக்கு நேரம் எது..? காலம் எது..? ஓய்வு கிடைக்கும் போது, கிடைத்த இடத்தில் உறங்குகிறார்கள். அசதியின் மிகுதியில் அது பகலானாலும் அந்த உழைப்பாளிகளுக்கு உறக்கம் வந்து விடுகிறது.

சென்னையில், நான் கண்ட உழைப்பாளிகளின் உறக்கங்கள்... அப்படியே நிழற்படங்களாய்...


சென்னையின் பரபரப்பான அண்ணாசாலையோரம்... பயணிகளை ஏற்றி ரிக்ஷா வண்டி மிதித்த களைப்பில் உறங்கும் உழைப்பாளி. தன் வாகனமே தனக்கு பட்டு மெத்தையாக... மனித உழைப்பு ஓய்வெடுக்கிறது.. அவருக்கு பின்புறம் உள்ள ஆட்டோ ரிக்ஷா (இயந்திர வண்டி) ஓய்வின்றி அடுத்த பயணிக்காக காத்திருக்கிறது...


சென்னை, மெரீனா கடற்கரையில் ஓய்வெடுக்கும் மீன் வியாபாரத் தொழிலாளி... தன் மிதிவண்டியே தலையணையாய்...சென்னை, மடிப்பாக்கம் ஏரியை தூர்வாரிய களைப்பில் ஓய்வெடுக்கும் பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனர்... அவ்வாகனத்தின் சக்கரமே அவருக்கு பஞ்சுமெத்தையாக... அதன் மேல் உறங்கும் உழைப்பாளி...

குழந்தையின் உறவுகள்

அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!

இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!

(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)

இயற்கை

இவ்வுலகத்தை
படைத்து...
அதைக் காக்கவும்
அழிக்கவும்
பற்பல காரணிகளையும்
கானல் உயிர்களையும்
கண்டு உயிர்ப்பித்த
பிரம்மா..!

(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)

பணம் ஒரு வேசி..!

விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!

வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?

எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!

பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!

பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!

(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)

Wednesday, July 30, 2008

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..?

குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...

மேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா..? குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா..? கர்நாடகத்தில் வெளியிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....

உங்களுக்கு
தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன..? ஓடாவிட்டால் என்ன..? தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன..? கிடைக்காவிட்டால் என்ன..? அந்தக்கவலை உங்களுக்கு எதற்கு..?

இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா..? என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

எப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா..? ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா? ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க..." என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..?

ஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...

அங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...

படத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு...? அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..!

-----@-----@-----

ரஜினியின்
உண்ணாவிரதப் பேச்சு


தமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

இதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா?

நான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்''
என்றார் ரஜினிகாந்த்.

----------@------------@--------

அப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.

இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.
முற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்'
என்று எழுதியிருக்கிறார்.

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.

பாவம் ஏமாளித் தமிழர்கள்....