Thursday, July 31, 2008

உழைப்பாளிகளின் உறக்கங்கள்...

கதிரவன் எழுந்தது முதல், அந்தி சாயும் வரை உழைப்பாளிகளின் உடல் மட்டுமல்ல, அவனது நிழல் முதற்கொண்டு உழைக்கும். உடல் உழைப்பாளிகளுக்கு நேரம் எது..? காலம் எது..? ஓய்வு கிடைக்கும் போது, கிடைத்த இடத்தில் உறங்குகிறார்கள். அசதியின் மிகுதியில் அது பகலானாலும் அந்த உழைப்பாளிகளுக்கு உறக்கம் வந்து விடுகிறது.

சென்னையில், நான் கண்ட உழைப்பாளிகளின் உறக்கங்கள்... அப்படியே நிழற்படங்களாய்...


சென்னையின் பரபரப்பான அண்ணாசாலையோரம்... பயணிகளை ஏற்றி ரிக்ஷா வண்டி மிதித்த களைப்பில் உறங்கும் உழைப்பாளி. தன் வாகனமே தனக்கு பட்டு மெத்தையாக... மனித உழைப்பு ஓய்வெடுக்கிறது.. அவருக்கு பின்புறம் உள்ள ஆட்டோ ரிக்ஷா (இயந்திர வண்டி) ஓய்வின்றி அடுத்த பயணிக்காக காத்திருக்கிறது...


சென்னை, மெரீனா கடற்கரையில் ஓய்வெடுக்கும் மீன் வியாபாரத் தொழிலாளி... தன் மிதிவண்டியே தலையணையாய்...சென்னை, மடிப்பாக்கம் ஏரியை தூர்வாரிய களைப்பில் ஓய்வெடுக்கும் பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனர்... அவ்வாகனத்தின் சக்கரமே அவருக்கு பஞ்சுமெத்தையாக... அதன் மேல் உறங்கும் உழைப்பாளி...

குழந்தையின் உறவுகள்

அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!

இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!

(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)

இயற்கை

இவ்வுலகத்தை
படைத்து...
அதைக் காக்கவும்
அழிக்கவும்
பற்பல காரணிகளையும்
கானல் உயிர்களையும்
கண்டு உயிர்ப்பித்த
பிரம்மா..!

(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)

பணம் ஒரு வேசி..!

விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!

வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?

எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!

பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!

பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!

(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)

Wednesday, July 30, 2008

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..?

குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...

மேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா..? குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா..? கர்நாடகத்தில் வெளியிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....

உங்களுக்கு
தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன..? ஓடாவிட்டால் என்ன..? தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன..? கிடைக்காவிட்டால் என்ன..? அந்தக்கவலை உங்களுக்கு எதற்கு..?

இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா..? என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

எப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா..? ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா? ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க..." என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..?

ஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...

அங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...

படத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு...? அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..!

-----@-----@-----

ரஜினியின்
உண்ணாவிரதப் பேச்சு


தமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

இதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா?

நான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்''
என்றார் ரஜினிகாந்த்.

----------@------------@--------

அப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.

இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.
முற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்'
என்று எழுதியிருக்கிறார்.

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.

பாவம் ஏமாளித் தமிழர்கள்....

வள்ளிக்கிழவி (சிறுகதை)

காலை வேளையில் அன்னவயல் கிராமம் வயல் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கதிரவனின் வசம் பார்த்து கருமமே கண்ணாக வேலை செய்ய கிளம்பியவர்களில் வள்ளிக் கிழவியும் ஒருத்தி...

வள்ளிக் கிழவி என்றால் அக்கிராமத்தில் தெரியாதவர்கள் இருக்காது. சிறு குழந்தைகளுக்கும் கூட அவளைத் தெரியும். அவளது குடும்ப பாரம்பரியம் அப்படி. காலம் செய்த கோலம்.. கணவனை இழந்து தம் இரு மகன்களுக்காக வாழ்கிறாள்...

ஐம்பதைத் தாண்டிய வயது. தனது இரு மகன்களுக்காக உழைத்து...உழைத்து சளைக்காத முகம். அவள் கைரேகையைப்போல் அவள் முகத்திலும் சுருக்க ரேகைகள் ஓடியிருந்தது. அவள் கால் வெடிப்புகள் அவள் பட்ட துன்பங்களை கதை கதையாக சொல்லும். அவளுக்கு சொந்தமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெற்பயிர்களில் இன்று களை பறித்தாக வேண்டும்.

அவளுக்கு சொந்தமான வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் மனம் அங்கு ஒரு நிலையில் இல்லை... 'காஷ்மீர் பகுதியெங்கும் பதற்றம்' என எட்டு மணி செய்தி கேட்டதிலிருந்து மனது அடித்துக் கொண்டது. மூத்த மகன் மோகனனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன பண்ணிட்டிருக்கானோ... எப்படி இருக்கானோ... அவனிடமிருந்து ஒரு தகவலும் வரலயே... ம்ஹூம்... ' என்ற பெருமூச்சுடன் களத்துமேட்டிலிருந்து வயலுக்குள் இறங்கினாள்.

மோகனன், இந்திய ராணுவத்தின் இளஞ்சிங்கங்களில் ஒருவன். தாய்ப்பற்றை மனதிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தாய்நாட்டின் மீது பற்று வைத்து இராணுவத்திற்கு சென்றவன். தாய்நாட்டிற்கு உழைத்தாலும் பெற்ற தாயை மறந்து விடுவானா என்ன... மாதா மாதம் அவனிடமிருந்து பணமும், கடிதமும் வரும். அக்கடிதம்தான் அவளுக்கிருக்கும் பெரும் ஆறுதல்...

இளையவன் செல்வம். கல்லூரியில் இளங்கலை படிப்பில் இறுதியாண்டு மாணவனாக பயின்று கொண்டிருக்கிறான். இன்று ஏதோ ''என்.சி.சி ஷ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா...'' என்றுவிட்டு சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டான்.

நானெல்லாம் படிச்சிருந்தாதானே இதெல்லாம் தெரியும். நம்ம அப்பந்தான் நம்மளை வீட்டை விட்டே வெளியவே அனுப்பலியே..என சிந்தித்துக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தவளை தபால்காரர் பரமசிவம் குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

''வள்ளியம்மா... உன் பெரிய மகன்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு...''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில் இருந்த சுருக்கங்கள், சட்டென்று மறைந்து மகிழ்ச்சிக்கு வழிவிட்டது. அவள் முகம் பரவசத்தில் பிரகாசித்தது. 'ராணுவத்துக்கு போயி 5 வருசமாச்சு... மாசத்துக்கு ஒரு கடுதாசி போடுவான்... எப்பவாச்சும் கோன் பண்ணுவான்... என்ன இந்த மாசம் ரெண்டாவது கடுதாசி அனுப்பியிருக்கான்...ஊருக்கு வரேன்னு சொல்லியிருக்கானோ....' என நினைத்தபடியே களத்துமேடேறினாள்.

''தபால்காரரே அதை கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...'' என்றாள்.

அவரும் கடிதத்தை பிரித்தார். உள்ளே மோகனனின் கையெழுத்து ஆற்றுப் பிரவாகமாக நேர்த்தியாக ஓடியிருந்தது... உடன் படிக்கலானார்...

''அன்புள்ள அம்மாவிற்கு...

தாய்நாட்டைக் காக்கும் இராணுவ வீரன் மோகனன் எழுதிக் கொள்வது... இதுவரை உன் மகன் என்றுதான் எழுதி வந்திருக்கிறேன். இன்று இப்படி எழுதுவதற்கும் அர்த்தமிருக்கிறதம்மா... என்னை, இத்தேசத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டேன். அதான் அப்படி எழுதியிருக்கிறேன்...

உன் முகம் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டது. உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அது முடியாது.
எப்படி அம்மா இருக்கிற... தம்பி எப்படி இருக்கான்... அம்மா நாங்களிருவரும் உன் முகம் மட்டுமே அறிந்தோம். அப்பா நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே இறந்து விட்டதால்... நீ எங்களை வளர்க்க, நீ பட்ட துன்பங்களை நானறிவேன்...

இதோ நாங்கள் வளர்ந்து விட்டோம். அம்மா... நீ எனக்கு நிலாச் சோறு ஊட்டிய தருணங்கள்... சிறு வயதில் நானும் தம்பியும் நமது கிராமத்தில் போட்ட ஆட்டங்கள், ஏரியில் மீன் பிடித்தது என என் நினைவுகள் என்னுள் வந்து, வந்து செல்கிறது. தீபாவளியன்று பொம்மை துப்பாக்கிக்காக நானும் தம்பியும் போட்ட சண்டையை இன்னமும் நினைத்து மகிழ்கிறேன்.

பொம்மை துப்பாக்கியை கையில் பிடித்தவன் இன்று உண்மையான துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது சரித்திரம் ஆரம்பித்து விட்டதம்மா... நான் பிறந்த பிறப்பின் பயனை இனிதான் அடையப் போகிறேன். நீ கொடுத்த தாய்ப்பாலுக்கு வேலை வந்து விட்டது. நம் தேசத்தின் நலன் காக்கும் வேளை வந்துவிட்டது.

கார்கில் போர் எனக்கு கடுகளவாக தெரிகிறது இன்று. ஏனெனில் அதைவிடப் பெரிய போருக்கு உன் மகன்... இல்லை... இந்த பாரதத்தாயின் மகன் கிளம்பப் போகிறான்.

இந்திய மண்ணையும், காற்றையும் சுவாசித்த எனக்கு, எதிரி நாட்டின் சுவாசத்தை அழிக்க ஆணை வந்துவிட்டது. இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி இந்த புலி பாய்ந்து செல்லப் போகிறது.

நான் பெற்ற பயிற்சியின் முழு பலமும் இங்கே பரிசோதிக்கப்படும். இதுவரை அப்பகுதிக்கு சென்ற 10 கமாண்டோ படையினரில் இருவர் மட்டுமே மீண்டிருக்கின்றனர். இதே எனது படை... இதற்கு நான்தான் தலைவன்...

தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதம்... தாக்க வேண்டிய இடம்... உள்பட அனைத்தும் வந்துவிட்டது. நம் நாட்டின் எதிரிகள் காலனை சந்திக்கும் நாள் மட்டும் இன்னும் குறிக்கப்படவில்லை. விரைவில் அதுவும் குறிக்கப்பட்டு விடும். தகவல் கிடைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் அம்பெனப் புறப்பட்டுவிடுவோம்...

கடைசியாக உன்னிடம் நான் போனில் பேசியபோது, ''எப்பய்யா... ஊருக்கு வருவ.. அம்மாவை பாக்க வரமாட்டியா... அம்மா ஞாபகம் இல்லியா..?'' என்று நீ உன் அடிவயிற்றிலிருந்து உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் மனதை கீறிக் கொண்டிருக்கிறதம்மா...

எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அதற்கு அடையாளமாக நட்சத்திரங்களை கொடுப்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால்... வீரமரணம் அடைந்தாலும் நட்சத்திரங்காளாய் ஒளிவீசுவோம் என்பதைக் காட்டத்தான் அம்மா. என்னை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது சுயநலமாகி விடும்.

நான் சென்று, வெற்றியுடன் திரும்புவேன். அப்படி ஒரு வேளை திரும்பவில்லையெனில் கவலைப்படாதே... என் மனதில் நீக்கமற நிறைந்திருப்பது நீயும், எனது தேசமும்தான்...

அன்னவயலிற்கு நான் அனுப்பும் கடைசி கடிதம் இதுவாகக் கூட இருக்கலாம். கடைசி காலத்தில் பெற்ற தாய்க்கு வேண்டிய பணிகளை செய்யவேண்டியவனாயிற்றே... என கலங்காதே. அப்பணியை நம் பாரத தாய்க்கு செய்து கொண்டிருக்கிறேன்.

எதிரிகளை அழிப்பதில் எமனாக செல்கிறேன். ஒருவேளை நான் இறந்தால் என்னைப் போல் பலர் இத்தேசத்திற்காக பிறப்பார்கள்.. கவலை வேண்டாம் அம்மா..

கடைசியாக உன்னிடம் வேண்டுவது, ''தம் தேசத்திற்கு துடிப்பான இளைஞர்கள் தேவை. இக்கடிதம் கண்டவுடன் தம்பி செல்வத்தையும் இராணுவத்திற்கு அனுப்பு.. ஏனென்றால் எங்களைப் போன்ற பிள்ளைகளால்தான் நம் பாரதத்தாய் நிம்மதியாக வாழமுடியும். கண்கலங்காமல் இதை நிறைவேற்றம்மா...

சென்று, வென்று வருகிறேன். வாழ்க பாரதம்..!

இப்படிக்கு
உன் மகன்
மோகனன்''

கடிதத்தை படித்து முடித்தவுடன், பரமசிவத்தின் கண் கலங்கியிருந்தது. வள்ளிக்கிழவியின் முகத்தைப் பார்த்தார். அவள் கண்ணில் இருந்து ஆறாய் ஓடிய கண்ணீர் சட்டென்று நின்றது. அக்கண்ணில் தீர்க்க சிந்தனையின் சாயல் 'இளையவன் செல்வம் வந்ததும், அவனையும் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்'.

(09.07.2002 அன்று, எனது சொந்த ஊரான ஆத்தூரில் இருந்தபோது எழுதிய சிறுகதை)

Tuesday, July 29, 2008

தமிழுக்கும் பதினாறு பேறு..!

உலகில் 'கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி... நம் தமிழ்க்குடி' என்றார்கள் நம் தமிழாய்ந்த ஆன்றோர்கள். உலகின் பழமையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அச்சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உலகறிந்த உண்மை. அது என்றுமே செம்மொழிதான் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி'. ஆயினும் நமது நடுவண் அரசு. அதிகாரபூர்வமாக 12-10-2004-இல் தான் தமிழ் மொழி செம்மொழி என அறிவித்தது. அதன் சிறப்புகள் அரசியல் பின்புலம் காரணமாகவே வெளியே வந்தது போல் ஒரு மாயையும் ஏற்பட்டிருக்கிறது..(அதாங்க... எங்களுக்கு ஆதரவு தந்தா... உங்களுக்கு வேண்டியதை செய்வோம்னு ஆளும் மத்திய அரசு சொல்லிச்சே...)

'ஞாயிறைக் கையால் மறைப்பார் இல்' என்பது நம் முன்னோர் வாக்கு. அதுபோல தமிழ்த்தாயின் சிறப்பை இவர்கள் மறைத்தாலும். காலந்தாழ்த்தி அனுமதி வழங்கினாலும், அவளுக்குரிய சிறப்பை அவள் இழக்கமாட்டாள்.

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் (மட்டும்தான்) மொழிகிறார்கள். ஆனால் தமிழ் மரபில் பிறந்தவன் மொழிய மறுக்கிறான்...? (அவனுக்கு அது தெரிந்தால்நானே என்று கேள்வி கேட்பது புரிகிறது). ஆனால் பிற நாட்டினர் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியக்கிறார்கள், போற்றுகிறார்கள்.

தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம். இவற்றைக் களைய 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு


(முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபட வேண்டாம். அவளை சிதைக்காமல், நவீன முறையில் வாழவிட்டால் போதும். நன்றி)

Monday, July 28, 2008

'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' சரி..! அந்த பதினாறு..?

திருமணத்திற்கு செல்கிறோம். திருமணம் முடிகிறது. புதுமணத் தம்பதிகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுகிறார்கள். அப்போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என பெரியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது திருமண வீடே சிரிப்பினால் அதிரும்.

இதற்கு "பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இதற்கு அது சரியான பொருள் இல்லை. பெரியவர்கள் கூறும் பதினாறு பேறுகளில் ஒரு பேறு குழந்தை ஆகும். மற்றவை எவை..? எங்கிருந்து வந்தது இந்த வாக்கியம்..? யார் சொன்னது..?

நமது தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர்தான் இதன் ஆசிரியர். அவர்தான், அவருக்கு பிடித்த அபிராமியிடம், மக்களுக்கு பதினாறு பேறுகளை வழங்கு என வேண்டினார்...

அச்செய்யுள்...

''சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில்
நோயின்மை கல்வி தனதானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!''


--அபிராமி பட்டர்

பதினாறு
பேறுகள் (பதினாறு செல்வங்கள்)

(1) நோயற்ற வாழ்வு
(2) கல்வியறிவு
(3) உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள்
(4) தனம் (பொன், பொருள், பிற செல்வங்கள்)
(5) அழகான வதனம், உடல்
(6) நீங்காப் புகழ்
(7) ஆணவமில்லாத நற்பெருமை
(8) நீடித்த இளமை (மனதிற்கும், உடலிற்கும்)
(9) நற்செயல்கள்
(10) நன்மக்களைப் பெறுதல் (இதுதான் குழந்தைப் பேறு)
(11) உடல் மற்றும் உள்ளத்து வலிமை
(12) துணிவு
(13) நீண்ட ஆயுள்
(14) எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி
(15) நல்லெண்ணம் (நல்வினை)
(16) (மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் ஒரு சேர அனுபவிக்கும்) நுகர்ச்சி.

(இது குறித்து மேலும் அறிந்த தமிழ் கூறும் நல்லுலகவாதிகள், இதில் பிழையிருப்பின் தகுந்த சான்றுகளுடன் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.)

தொடர் குண்டு வெடிப்புகள்- மத்திய அரசின் கையாலாகத்தனம்..!

பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு... அஹமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு... 45க்கும் மேற்பட்டோர் பலி... 100 மேற்பட்டோர் படுகாயம்... நாம் என்ன இந்தியாவில் இருக்கிறோமா.. ஈராக்கில் இருக்கிறோமா... எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் தேசம்.

''........தண்ணீர் விட்ட வளர்த்தோம்..........
எங்கள் கண்ணீரல் காத்தோம்...'' என்று அன்றே முழங்கினான் முண்டாசு கவிஞன் பாரதி. இன்று அத்தேசத்தை வெடிகுண்டுகளுக்கும், அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்குமல்லவா இடம் கொடுத்து விட்டோம்...

அமைதிப் பூங்காவில் வெடிகுண்டு... அப்பாவி மக்கள் உயிரிழப்பு... இதற்கு மானங்கெட்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு அடங்கி விட்டது. அட அயோக்கிய அரசே... உங்கள் கண்டனம் யாருக்கடா வேண்டும்... எந்தன் சகோதரர்கள் அங்கே வெடிகுண்டிற்கு பலியாகி விட்டனரே... யார் அவர்களை திருப்பித் தருவார்கள்... உனது கண்டனம் அவர்களைத் திருப்பித் தருமா..? இல்லை உந்தன் கண்டனம்தான் அந்த தீவிரவாதிகளை திருந்தச் செய்து விடுமா..?

நல்லாட்சி செய்வீர்கள் என்றுதானே 100 கோடி மக்களில் 60 கோடி மக்கள் உங்களை ஆட்சியில் ஏற வைத்தனர்... மக்களைக் காக்க வேண்டிய நீங்கள்... மனிதர்களை இரையாக்கி விட்டீர்கள்..? நாங்கள் என்னடா பாவம் செய்தோம்...

இதற்கு 'மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது' என்று எதிர்கட்சியினர் அறிக்கை விட்டுள்ளனர். அவ்வளவே... அவர்களுக்கு தேவை அந்த அரியணை...

ஐயா.. உளவுத்துறை செயலிழக்கவில்லை ... அவர்களுக்கு (ஆளும் மத்திய அரசிற்கு) சாதகமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தொண்ணனுடன், ஆளும் கட்சி அணுசக்தி கூட்டு, பொறியல், அவியல் என்ற விவகாரத்தில் பங்கு போட்டது. இதில் சம்பந்தி கிடைக்கவில்லையோ அல்லது சம்பங்கு கிடைக்கவில்லையோ (அவர்களுக்கே வெளிச்சம்) இடதுசரிகள் பின்வாங்கிவிட்டனர்.. ஆதரவு மறுத்தோம் உமக்கு... ஆட்சியை விட்டு இறக்கு... என வாய்ப்பந்தலிட்டனர்.

ஆளும்கட்சி விட்டார்களா... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் என்றார்கள்... அங்கே செயலாற்றியது உளவுத்துறை.. எந்த அமைச்சர் என்ன செய்கிறார்.. அவர் யாருக்கு சாதகமாக இருக்கிறார்... ஒருவேளை அரசுக்கு எதிராக இருந்தால்... அவரது (சுய) தேவைகள்..(?!) என்ன..? எப்படி அவர்களை ஆளுங்கட்சி தரப்பில் திருப்பலாம் என்று அத்துறையினரை முடுக்கி விட்டு வேலை வாங்கினர்.

விளைவு... ஆளுங்கட்சி பல கோடிகளை கொட்டியது... வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.. அவர்களை நம்பி வாக்களித்த ஏமாளி மக்களுக்கு குண்டுவெடுப்புகள் மூலம் வாய்க்கரிசி போட்டது.

ஆளுங்கட்சியின் கைப்பாவைகள்தானே அரசியந்திரங்கள்.. அப்புறம் எங்கே... அந்நியர் சதி, ஊடுருவல்... குண்டு வெடிப்பு... தீவிரவாதச் சதி... இவற்றையெல்லாம் கண்காணிக்கப் போகிறார்கள்... அவர்களை கையும் களவுமாக பிடிக்கப் போகிறார்கள்...

'ஊசி இடம் கொடுத்தால்தான்... நூல் நுழைய முடியும்' என்பது நமது மூத்தோர்களின் (பட்டறிவால் கிடைத்த) சொலவடை. அதுபோல அந்நிய சக்திகளுக்கு இந்திய மண்ணில் இடமளித்தது முதல் தவறு... அவர்களை சுதந்திரமாக உள்ளே நடமாட விட்டது அதைவிட மாபெரும் தவறு...

விளைவு தொடர் குண்டு வெடிப்புகள்... கோவை, மும்பை, இந்திய பாராளுமன்றம், காஷ்மீர், பெங்களூர், அஹமதாபாத் என குண்டுவெடிப்பு சம்பவங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

பெங்களூரில் கட்டவிழ்து விடப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் அடுத்த நிமிடமாவது சுதாரித்திருக்க வேண்டாமா... இவைகளை ஏன் செய்யவில்லை... என்னாயிற்று உளவுத்துறைக்கு... காவல் துறைக்கு..? அவர்களை சரியான முறையில் வேலைவாங்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்னாயிற்று..?

'அட போங்க தம்பி.. அவனுங்க அரசாங்கத்தை காப்பத்தறதுக்கே... அவனுங்களால முடியல... ஆதரவு இல்லை..அதான் தொல்லை...ன்னு அமைச்சர்களை சந்தோஷப்படுத்தறானுங்க.. மக்களை காப்பத்தறதாவது... போப்பா...' என்று எனது பக்கத்து வீட்டு பெரியவர் இரு தினங்களுக்கு முன்பு சொன்னது இன்னும் என் மனதில் அசிரிரியாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு... அடுத்த தாக்குதல் அஹமதாபாத்தில்... அப்பாவி மக்கள் கைசிதறி, கால் சிதறி... எதனால் இறக்கிறோம் என்றுணரும் முன்னே மரணவாசலுக்குள் இழுத்துக் கொள்ள(ல்ல)ப்படும் அவலம்...எல்லாம் அரசின் மெத்தனத்தால் வந்ததுதானே...

மக்களைக் காப்பாற்றவே மக்களாட்சி... அழிப்பதற்கு அல்ல... உளவுத்துறையை ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திருப்பி விடுங்கள்... அந்நியர்களை இந்திய மண்ணில் கால் அல்ல அந்த கேடு கெட்ட நாய்களின் நிழல் கூட நம்மண்ணில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மீறினால் பார்ததும் அவர்களைக் கொல்லுங்கள்...

என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டது... 'அட மடையா... நாடாளுமன்றத்தையே குண்டு வீசித்தாக்கிய கொலைபாதகன் அப்சல் குருவுக்கு ஆயுதம் தாங்கிய காவல் வைத்து, ஊட்டமுடன் இருக்க கறி சோறு இட்டு காத்து வருகின்றனர்...

இம்மாதிரியான ஈனப்பன்றிகளை இன்னும் வைத்திருக்கிறது இந்த அரசு... இவன் இங்கு செய்தது போல் சவுதியிலேயோ, குவைத்திலேயோ குண்டுவெடிப்பை நிகழ்த்தி, மாட்டிக் கொண்டால்... இன்னேரம் அவனை விட்டு வைத்திருப்பார்களா.... அவனை உப்புக்கண்டம் போட்டு கைமா (அ) மவுத்தாக்கியிருப்பார்கள்... இந்தியாவாயிற்றே... போடா....

அவர்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவார்களே தவிர... தீவிரவாதிகளை அல்ல... பாவம் நமது தேசம் தாங்கிகள் (எமது இராணுவத்தினர்)... கடுங்குளிரென்றும் பாராமல், சூறாவளியென்றும் பாராமல்... கார்கில், காஷ்மீர் என அனைத்து பகுதிகளையும் தமது இன்னுயிரையும் ஈந்து காத்து வருகின்றனர்...

இங்குள்ள ஆட்சியாளர்களோ.. அவர்களை காவு கொடுப்பது மட்டுமின்றி அப்பாவி மக்களையும் காவு கொடுக்கின்றனர்... அவனவன் மடி நிறைந்தால் போதும்.. அடுத்தவன் நிலை எப்படி ஆனால் என்ன என்ற நிலைதான் இன்றைய ஆட்சியாளர்களிடம்...' என்று குமுறுகிறது.

நாம் இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்து வந்த (அக்னி) ஏவுகணைகளின் வேகத்தை மிஞ்சியது... விலைவாசி... பெருந்தனக்காரனின் வயிறு போல் பணவீக்கம்... சோம்பித் திரியும் ஓநாய்கள் போல் அரசியல் வாதிகள்... அதில் அண்ட நினைக்கும் அரசு இயந்திரங்கள்...

ஏழை, பணக்காரன். உயர்ந்தவன், தாழ்ந்தவன். வேலை உள்ளவன், வேலை இல்லாதவன்... என ஏற்றத்தாழ்வு நிலை இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது... அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. 8 மணி நேரம் குளுகுளு அறையில் இருந்தபடி அந்நிய நாட்டிற்கு பணிசெய்கிறவருக்கு 5 முதல் 6 லகரத்தில் சம்பளம். வாரம் இருநாள் விடுமுறை.. உல்லாச வாழ்க்கை...

24 மணி நேரமும் மக்களைக் காக்கும் (?) காவல்துறை நண்பர்களுக்கு 4 லகரத்தில் சம்பளம்... விடுமுறையா... மூச்..... (அதிலு பலர் மாமூல் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது தனிக்கதை...)

இப்படி இருந்தால் காவல் துறை ஏன் கள்ளத்துறையாக மாறாது... கயவர்களை விட்டுவிட்டு கண்ணியமானவர்களை அடிக்காது... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள்... அவர்களுடைய சேவை மேம்படும்.

அந்நிய நாட்டு சக்திகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம். எவ்வளவு அந்நிய செலவாணி கொட்டுகிறது என்றாலும் யாரையும் அனுமதியாதே... தீவிரவாதிகளை அழிக்க ஆயுதம் தூக்கு... விரைவான விசாரணை.. உடனடி தீர்ப்பு... நிறைவேறட்டும் தண்டனை.

ஒரு அப்சல்குருவை விட்டு வைத்ததன் விளைவு.. இன்று பல அப்சல் குருக்கள் இந்தியத்தாயின் மடியில் வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்... இவர்களை எப்படி ஒழிப்பது.. அழிப்பது...

இவ்விஷக்கிருமிகள் செய்யும் வேலையால், இவர்களது சமுதாயமே தலைகுனிகிறது... எங்கே நிமிரும் இந்தியா... எப்போது வல்லரசாகும்... என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை உங்கள் வசதிக்கேற்ப நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்...

வாழ்க பாரத அரசியல்... வளர்க அதன் புகழ்... வாழ்க மக்கள் (நெற்றியில் பட்டை) நாமம்

Friday, July 25, 2008

காதலின் நியதி

இருட்டும் வெளிச்சமும்
பிரபஞ்சத்தின் நியதி..!
பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நியதி..!
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் நியதி..!
வெற்றியும் தோல்வியும்
வீரத்தின் நியதி..!
உலக நியதிகளெல்லாம்
இப்படியிருக்க
நீ யுவதியாகி என்னை
அவதிப்பட வைப்பது மட்டும்
எவ்வகை நியதி..?
ஓ... இது காதலின் நியதி..!

என் தேகத்தில் சந்தேகம்

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)

Thursday, July 24, 2008

'காதி'யின் புலம்பல்

கா(ந்)தியில் உள்ளதால்தானோ
என்னவோ
காந்தி மறைந்ததும்
அவரை மறந்த கையோடு
என்னையும் மறந்து விட்டார்கள்...

பெரும்புள்ளி

எங்கள் தலைவர்
அரசியலில் பெரும்புள்ளி
காக்காய் பிடித்து காரியம்
சாதிப்பதில் வல்லவர்
அதால்தானோ என்னவோ...
அவர் இறந்தவுடன் அவருக்கு
வைத்த சிலையில்
காகங்கள் வைத்தன எச்சப்புள்ளி...

கற்றுக்கொள்

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

நீர்க்குமிழிகள்

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

ஒரு பேதையின் சபதம்

உன்னைப் போல் நானும்
பிறருடன் சிரித்துப் பேசத்தான் ஆசை..!
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
பறக்கத்தான் ஆசை..!
குயிலை விட அழகாக
பாடத்தான் ஆசை..!
பி.டி.உஷாவைப்போல்
ஒலிம்பிக்கில் ஓடத்தான் ஆசை..!
இத்தனையும் என்னுள்
விதைத்துக் கொண்டிருக்கிறேன்..!
'கேவலம் நீ ஒரு பெண்தானே'
என்று நீ சொன்ன அந்த
ஒ(தி)ரு வார்த்தையால்
இவ்வளவு மாற்றமும்..!

வற்றாதது

பசியால் வயிறு வற்றினாலும்
கண்ணீர் மட்டும் வற்றவேயில்லை
இந்த ஏழை மக்களுக்கு...

தாஜ்மஹால்

இரு பறவைகளின் இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட
மறு பறவை கட்டிய வெள்ளைக் கூடு...

Wednesday, July 23, 2008

பெண் குழந்தையின் கேள்வி


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்... அந்த பத்து எது?

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் யார் இதை சொன்னாங்க... இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்... எல்லோரும் சொல்றாங்க அதான் சொன்னேன் என்பார்கள்... இதனை கூறியது யார்..? எங்கே..? எப்போது..? ஏன்..? என்ற கேள்விக்கு தினமணியில் வெளிவந்த தமிழ்மணி சிறுகோடிட்டு காட்ட.., அதை நான் ஆய்ந்து அகழ்ந்தெடுத்ததில் (இப்படியெல்லாம் சொல்லனுமா...?) கண்டுபிடித்'தேன்'. படித்'தேன்'. உண்மையில் அது 'தேன்' தான்..!

இந்த வார்த்தையை நமக்களித்தவர், நம் தமிழ்க் குலத் தோன்றல், தமிழாய்ந்த மூதாட்டி ஔவைதான். அவர் மானுடருக்கென்று 'நல்வழி' என்னும் தலைப்பில் 40 செய்யுளை நமக்கு (சு)வாசிக்கத் தந்திருக்கிறார்.
அதில் 26 வதாக வரும் செய்யுள்.. இதோ...

'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்'

- நல்வழி, 26வது செய்யுள்

இதன்
பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.

ஒரு செய்யுளில் உலகிற்கே உணர்த்தும் கருத்து இதுவெனில், இப்பெருமை நம் ஔவைக்கு மட்டுமன்று, நம் தமிழ்க் குலத்திற்கும்தான். வாழ்க எந்தமிழ்.

முக்கனிகள் எவை..?

நம்மிடம் முக்கனிகள் எவையென்று கேட்டால் மா, பலா, வாழை என்போம். ஆனால் சங்க காலத்தில் இதற்கு சரியான பதில் கடுக்காய், நெல்ல்லிக்காய், தான்றிக்காய் (அதாவது இதன் கனிகள்) ஆகும். எப்படி என்று வினவுபவர்கள்...மேலும் படியுங்களேன்..

"விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே''

-(சீவகசிந்தாமணி, 75வது செய்யுள்)

இச்செய்யுளுக்கான விளக்கம்:

இந்நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அன்னச் சத்திரங்கள் உள்ளன. வெம்மையில்லாத சுனையில் காலையில் எடுத்த தண்ணீரில் பூவும் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தல்கள் உள்ளன. வேல்போன்ற விழிபெற்ற மாதர் கூத்தாடும் இடங்கள் உள்ளன. மேலும் அங்கே ஐம்பொறிகளால் (ஐம்புலன்கள்) நுகரும் பொருள்கள் அனைத்தும் நிறைந்து ததும்பும் என்கிறார் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர் .

இச்செய்யுளில் வந்துள்ள 'முப்பழம்' (முக்கனிகள்) என்பதற்குச் சாதாரண உரையாசிரியர்கள் உரையெழுதினால், முப்பழம் - மா, பலா, வாழைக் கனிகள் ஏன்றெழுதிவிடுவர். 'காய்மாண்ட தெங்கின் பழம் வீழ......'(சீவகசிந்தாமணி - 31வது செய்யுள்) எனத் தொடங்கும் நாட்டு வளப் பாடலில் இம்முக்கனிகளைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் (உரையாசிரியர்), முன்பு முக்கனிகள் கூறப்பட்டதை நினைவில் கொண்டு இங்கே (சீவகசிந்தாமணி-75வது செய்யுள்) முப்பழம் - கடு(க்காய்), நெல்(ல்லிக்காய்)-, தான்றி(க்காய்) என்பனவற்றின் பழங்கள் என்று சரியாக எழுதினார்.

பண்டைத் தமிழர், நாவிற்கு நலம் தரும் மா, பலா, வாழைக் கனிகள் தரும் மரங்களை மட்டும் வளர்க்கவில்லை. உடலுக்கு நலந்தரும், பிணிகளைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட மரங்களையும் வளர்த்தனர் ஏன்பதை உளங்கொண்டு கடு, நெல், தான்றி என்று முப்பழத்துக்கு விளக்கம் தந்தார்.

சரிதானே..!

Saturday, July 19, 2008

இல்லை... இல்லவே இல்லை..!

ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை..!
ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை..!
ஈக்களுக்கு பற்கள் இல்லை..!
ஈசலுக்கு வயிறு இல்லை..!
சவுதியில் நதிகள் இல்லை..!
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை..!
சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை..!
மண்ணுளி பாம்பிற்கு கண்கள் இல்லை..!
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை..!
மலைப்பாம்பிற்கு விஷமில்லை..!
பாம்பு, மீன் போன்றவற்றிற்கு கண்ணிமைகள் இல்லை..!
யமுனை ந்தி கடலில் கலப்பது இல்லை..!
வடதுருவத்தில் நிலப்பரப்புகள் இல்லை..!
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை..!
முதலைக்கு நாக்கில்லை..!
பாம்பிற்கு காதில்லை..!
வௌவாலிற்கு பார்வை இல்லை..!
தவளைக்கு கழுத்து இல்லை..!
நண்டிற்கு தலை இல்லை..!
காண்டாமிருகம் தன் கொம்பினால் யாரையும் தாக்குவது இல்லை..!(கடைசியில் உள்ளது மிகவும் முக்கியமுங்கோவ்...)
அல்பேனியாவில் மதங்களே இல்லை..!

மோகனனின் கலாட்டா

(மோகனன் அவனது நண்பரை வழியில் சந்திக்கிறான்… அப்போது நண்பர் மோகனனைப் பார்த்து …)

"வாடா… எப்ப வந்த"
"நான் வந்து 28 வருடமாச்சு…"
"நான் அதை கேக்கலடா"
"அப்ப வந்தவனை ஊரிலிருந்து எப்ப வந்தன்னு கேக்கமாட்ட..?"
"வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா...?"
"போகும்போது ஆரம்பிக்க முடியாதே…"
"சரி அத விடுடா…"
"நான் எதையும் பிடிச்சிகிட்டு இருக்கலையே… நீ எதை விடச் சொல்ற…"
"டே அப்பா… உங்கிட்ட…"
"நான் எப்படா உனக்கு அப்பாவானேன்…"
"உன்னைச் சொல்லலடா…"
"என்னைச் சொல்லன்னா…....... டேய்… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம்டா… உன் அப்பாவை ‘டே’ அப்பாங்கற…"
"ஐயோ………?"
"ஏண்டா எங்கயாவது அடி பட்டுடிச்சா…"
"(கோபமாக…) இ... இல்லடா…"
"அப்ப எதுக்குடா ‘ஐயோ’ன்ன..?"
"உங்கிட்ட பேசறதுக்கு பதிலா… சுவர்கிட்ட பேசலாம்டா…"
"சுவர்கிட்ட பைத்தியம்தாண்டா பேசும்…"
"ஆமா நான் பைத்தியம்… ஆமா நான் பைத்தியம்…" (என்று அலறியபடியே என் நண்பன் தலைதெறிக்க ஓடியதைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை…" )

(மோகனன் கலாட்டா தொடரும்)

Thursday, July 17, 2008

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - கவிதாஞ்சலி

கும்பகோணத் துயரம்
கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இறுமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து நான்காமாண்டு நினைவு நாள் (16.07.2008) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர்க் கவிதாஞ்சலி...


Friday, July 11, 2008

பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)

பணம் என்ன மரத்திலயா காய்க்குது என்ற சொலவடை நம்மில் உண்டு. இங்கு பெண் மரத்தில் காய்க்கிறாள். நம்புங்கள். இயற்கையின் படைப்பில் இப்படியும் ஒரு விந்தை..!


எனது அலுவலக நண்பர் ஒருவர், அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாய்லாந்திலுள்ள 'நரீபோல்' (Nareepol) என்ற மரத்தின் காய்கள் அத்தனையும் பெண்களைப் போல் இருக்கின்றன. என்னால் நம்பமுடியாமலும் இருக்க முடியவில்லை.


கூகிள் தேடுபொறியில் இம்மரம் பற்றி கேட்டதில்.. 'உண்மைதான் நண்பா... நம்பு...' என்று சொல்லாத குறையாக 1000 ஆதாரங்களை நிழற்படத்துடன் என் கணினியில் துப்பியது. பார்த்தேன். அம்மரத்தில் காய்த்திருக்கும் காய்கள் அனைத்தும் அடிபிறழாமல் அப்படியே பெண்ணாக இருக்கின்றன.


தாய்லாந்து மொழியில் நரீ(Naree) என்றால் பெண் என அர்த்தமாம். போல் (Pol) என்றால் மரம் என அர்த்தமாம். பெண் வடிவ காய்கள் காய்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம்.

பெண் வடிவத்திலுள்ள காய்கள்... ஏதோ மாங்காய் தொங்குவது போல தொங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மரத்தை நேரில் பார்க்க வேண்டுமெனில் பேங்காக்கிலிருந்து 500 கி.மீட்டர் தொலைவிலுள்ள பெட்சாபூன் மாகாணத்திற்கு (Petchaboon province) செல்ல வேண்டுமாம்...

இணையத்தில் இதுகுறித்து கண்ணில் விளக்கெண்ணெய் விடாமல் தேடியதில் தாய்(லாந்து) மொழியிலுள்ள விக்கிபீடியாவில் தகவல் இருக்கிறது. இம்மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பை சொடுக்கினால் அப்பக்கத்தை பார்க்கலாம்.

கீழே உள்ள ஓவியங்கள் இரண்டும், தாய்லாந்தின் பழமையான ஓவியங்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இந்த மரம் இடம்பிடித்துள்ளது...


(இயற்கையின் குறும்பா... இல்லை, செயற்கையாக யாராவது குறும்பு வேலை செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை... சந்தேகம் இன்னும் அகலவில்லை... தாய்லாந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்... இது குறித்து அதிகம் தகவல் தெரிந்தவர்கள், எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்..)

அக்மார்க் முத்திரை


அக்மார்க் முத்திரை, அக்மார்க் பொருட்கள் என்று கேள்விப் பட்டிருப்போமல்லவா.... அதன் பணி என்ன, எதற்கெல்லாம் தரச்சான்றிதழ் வழங்குகிறது என்பதை அறிந்துகொள்ள அக்மார்க் இணையதளத்திற்கு செல்லுங்கள்

Monday, July 07, 2008

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த...

தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister. இது ஒரு ஆன்லைன் கருவி.

இதன் பயன்கள்.

யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.

தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.

பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும்.

இதன்
பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.

குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் அவர்கள் இக்கருவியை மேம்படுத்த உதவும்.

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த NHM Lister -ஐ பயன்படுத்துவதற்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி: சிந்தாநதி

பயர்பாக்ஸில் தமிழை சிதையாமல் படிக்க...

இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வந்த பயர்பாக்ஸ் உலவி தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில் மட்டும் சில பிரச்சினைகளை சந்தித்தது. ஒழுங்கு படுத்தப்பட்ட (Align) பத்திகளை கொண்ட வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் இழைபிரிந்து, தமிழ் குதறப்பட்டு காட்சியளித்தது.

இந்தப் பிரச்சினை அடுத்த பதிப்பிலாவது நீங்காதா என்ற நப்பாசையில் அடுத்தடுத்த பதிப்புகளுக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது அதற்கு தக்க நிவாரணம் கிடத்திருக்கிறது.

பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 என்ற மேம்படுத்தப்பட்ட உலவி மூலம் அது சாத்தியமாயிருக்கிறது! தற்போது தமிழ் சிதையாமல் பயர்பாக்சில் வேலை செய்கிறது!! தமிழ்த்தளங்களில் ஒழுங்காக வேலை செய்கிறது!!!

விண்டோஸ் பயனர்களுக்கான ஆங்கில இடைமுகப்பு பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மேக், லினக்ஸ், மற்றும் பல மொழிகளுக்கான பயர்பாக்ஸை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இடைமுகப்பு இந்திய மொழிகளில் இந்தியோ, தமிழோ இல்லை. மாறாக குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

நன்றி: சிந்தாநதி

Wednesday, July 02, 2008

பிரபலங்களின் முழுப் பெயர்கள்

நாம் அறிந்த தலைவர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் ஆகியோர்களின் முழு அல்லது இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்களாலேயே பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதன் சிறு முயற்சிதான் இது... இதில் பிழையிருப்பின் தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைய பிரபலங்களின் பெயரை சேர்க்கப்படவில்லயென்பது உண்மையே. ஏனெனில் எனது சிற்றறிவிற்கு எட்டியவரை கொடுத்துள்ளேன். அப்பிரபலங்களும் இதில் இடம்பெறச் செய்யவேண்டுமென்று நீங்கள் கருதினால், அவர்களது பெயரை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள்... நன்றி.

(சாதிப் பெயர்களில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் எடுத்துக்கொண்ட தலைப்பு அப்படி என்பதால், என்னை சமாதானப்படுத்திக் கொண்டு பதிவுசெய்கிறேன்)


நேதாஜி சுபாஷ் சந்திரா - 'மாவீரன்' நேதாஜி
கோபால்சாமி துரைசாமி நாயுடு - ஜி. டி. நாயுடு
வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் - வ.வே.சு.ஐயர்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - 'மகாத்மா' காந்தி
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - டாக்டர் அம்பேத்கர்
குமாரசாமி காமராஜ் - 'பெருந்தலைவர்' காமராசர்
மொரார்ஜி ரஞ் சோட்ஜி தேசாய் - மொரார்ஜி தேசாய்
மேரி தெரசா போஜாக்சியூ - அன்னை தெரசா
ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி - தந்தை பெரியார்
நெல்சன் ரோலிக்லாஹ்லா மண்டேலா - நெல்சன் மண்டேலா
காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை - பேரறிஞர் அண்ணா
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் - ம.பொ.சி

மருதூர் கோபலன் ராமச்சந்திர மேனன் - 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்
வைக்கம் நாராயணி ஜானகி - வி.என்.ஜானகி (எம்.ஜி.ஆரின் 3 - வது மனைவி)
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - கே.பி. சுந்தராம்பாள்
மதராஸ் ராஜகோபால் நாயுடு ராதாகிருஷ்ணன் - எம்.ஆர்.ராதா
பலுவாயி பானுமதி ராமகிருஷ்ணா - நடிகை பானுமதி
பொள்ளாச்சி சின்னப்பா வீரப்பா - பி.எஸ்.வீரப்பா
புரூஸ் ஜுன் ஃபேன் லீ - புரூஸ் லீ
கோச்சேரில் ராமன் நாராயணன் - கே.ஆர். நாராயணன்
பாமுலபார்தி வெங்கட நரசிம்மராவ் - பி.வி. நரசிம்மராவ்
இந்தர் குமார் குஜ்ரால் - ஐ.கே. குஜ்ரால்

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - ஜே.ஆர்.டி. டாடா
புதுக்கோட்டை உலக நாதப்பிள்ளை சின்னப்பா - பி.யூ.சின்னப்பா
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியகராஜ பாகவதர் - எம்.கே. தியகராஜ பாகவதர்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - எம்.எஸ். சுப்புலட்சுமி
அவுல்
பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
சான் கோங் சாங் - ஜாக்கி சான்
கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் - கே.ஜே.யேசுதாஸ்
அல்லா ரகா ரஹ்மான் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்