Monday, April 28, 2014

கன்னிப்பேச்சு! - ஆனந்த விகடனில் வெளியான எனது குட்டிக்கதை


மைச்சர் பொன்னுரங்கம் இன்று சட்டசபையில் பேசியது எல்லோரையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

சட்டசபைக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் என்றுமே வாய்திறக்காத அவர், இன்றுதான் வாய் திறந்திருக்கிறார். மற்றவர்களை வாய் பிளக்கவும் வைத்து விட்டார்!

"இன்று நாட்டில் எங்கே பார்த்தாலும் சாதிப்பிரச்னைகள், சாதிச் சண்டைகள்தான். பள்ளியில் சேரப்போனாலும் சரி, வேலைக்கு விண்ணப்பித்தாலும் சரி... சாதிதான் பூதம் போல் குறுக்கே நின்று பயமுறுத்துகிறது. இதை மாற்ற வேண்டும். அனைத்துச் சாதிகளையும் ஒழித்து விட்டு, இந்தியன் என்கிற பொதுவான ஓர் இனத்தை நாம் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் என்ன சாதி என்று கேட்பதைச் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்..!'' இதுதான் சட்டசபையில் அவர் ஆவேசமாய் பேசியது.

சட்டசபையை விட்டு வெளியே வந்தபோது, முதல்வரே அழைத்துப் பாராட்டியது அமைச்சர் பொன்னுரங்கத்தைக் குஷிப்படுத்தியது.

''இலவச வீடுகள் வழங்குறதுல அந்தச் சாதிக்காரனுக்கு, இந்தச் சாதிக்காரனுக்குன்னு ஆயிரம் சிக்கல் இருக்கு. அதை இனிமே நீங்கதான் கவனிக்க போறீங்க...'' என்று முதல்வர் சொல்லவும், அவரது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னுரங்கம். 

தனது அலுவலகத்தில் பி.ஏ.வுக்கு சரமாரியாக உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பொன்னுரங்கம். 

''எலேய்... இலவச வூடு தர்றமுல்ல... முதல்ல நம்ம சாதிக்காரனுக்கு முன்னுரிமை குடுத்துடு. அப்புறமா மத்த சாதிக்காரனுக்குப் பார்த்துக்கலாம்!''

''என்ன தலைவா... சட்டசபையில சாதிக்கு எதிரா அவ்வளவு காட்டமா பேசினீங்களே..?''

''அட, யார்ரா இவன் புரியாதவன். அப்படி பேசினதாலதானே வீட்டு மனைகள் ஒதுக்குற அதிகாரமே என்கிட்ட வந்துச்சு. இதுக்குப் பேருதாண்டா அரசியல்! சரி சரி... வேலையைப் பாரு!''

பி.ஏ.வுக்கு தலை சுற்றியது.

****************************

(ஆனந்த விகடன் குழுமத்தில் மாணவ பத்திரிகையாளராக இருந்த போது, நானெழுதிய ஒரு பக்க கதை, 30.09.2001 தேதியிட்ட ஆனந்த விகடனில், 105-ஆம் பக்கத்தில் வெளியானது. இந்த கதை எழுதி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலை இப்போதுள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்துகிறது என்பதால், இங்கே பதிவிலிடுகிறேன்.

நன்றி: ஆனந்த விகடன்)

Sunday, April 06, 2014

எனது பிறந்தநாளுக்கு கூகுள் சொன்ன வாழ்த்து!

கூகுள் தனது பயனாளர்களின் பிறந்தநாளிற்கு அது வாழ்த்து தெரிவிக்கிறது... இன்று எனக்கு அது வாழ்த்து தெரிவித்திருக்கிறது... கூகுளுக்கு எனது நன்றி...

நமது ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்துவிட்டு, கூகுள்.காம் கொடுத்துப் பார்த்தால், பர்த்டே கேக் வடிவில் கூகுள் இருக்கும். அன்றைய தினம் உங்கள் பிறந்தநாள் எனில் (ஜிமெயிலில் உங்கள் சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும்), அன்று உங்களுக்கும் இந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கும்... இதுபோன்ற விஷயங்களால்தான் கூகுள் என்றும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது... 

கூகுள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனேன்... நீங்களும் பாருங்களேன்...


Friday, April 04, 2014

கவுண்டமணியுடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு



ஏவிஎம் ஸ்டுடியோவின் நான்காவது ப்ளோரில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு கவுண்டமணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ’49ஓ’ படப்பிடிப்பு பரபரத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு இடைவேளையில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறார் கவுண்டமணி.



அவரைத்தேடி கருத்த உருவம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அடங்கொக்கமக்கா… கருங்கரடி ஒண்ணு நம்மள தேடித்தான் வருது… ‘’அடியேய் சிகப்பி… எடுறி அந்த துப்பாக்கிய… இன்னிக்கி இந்த கரடியவாச்சும் சுட்டு நான் யாருன்னு ஊருக்கு காட்டுறேன்…’’ என்று பழைய படப்பிடிப்பு ஞாபகத்தில் தன்னையறியாமல் சவுண்ட் விடுகிறார்.

அந்த கருப்பு உருவம் கவுண்டமணியை நெருங்கும்போது கூட அவருக்கு வந்தது யாரென்று பிடிபடவில்லை.

வந்தவர் ஆதிவாசி போல் பார்வைக்கு தென்படவே, ‘யார் இந்த ஆதிவாசி? எதுக்கு என்னை தேடிகிட்டு வரான்? ஒன்னும் புரியலையே என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடி, தன்னை நோக்கி வரும் ஆதிவாசியையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. 



அருகில் ஆதிவாசி வந்ததும், திடீரென்று சுதாரித்துக் கொண்ட கவுண்டமணி ‘ஓஹோய்… ஒருவேளை இவன் (சூரியன் பட) குஞ்சாணி குரூப்பை சேர்ந்தவனா இருப்பானோ… ரெண்டு மூணு செக்ஸி கேர்ள்ஸ் சைடுல வச்சிகிட்டு… ‘சாமி… பூ மிதிக்க வாங்க சாமி’ன்னு கூப்பிட வந்துருப்பானோ…? இவனுங்ககிட்ட ஒருதரம் சிக்கி சீரழிஞ்சதே போதும்டா சாமி…’’ என யோசித்துக் கொண்டே, ஆதிவாசியைப் பார்க்கிறார். 

ஆதிவாசியின் கையில செல்போன் இருப்பதைப் பார்த்ததும்… டோய்… பாக்க ஆப்ரிக்கன் மாதிரி இருக்கான். அவங்கிட்ட செல்லுடோய்… ஒருவேலை செல்லுலயே கான்டாக்ட் வச்சிருப்பானோ.. நாமதான் போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆன டெலிபோன்ல இல்ல பேசுவோம்… இவன் எப்படி நம்மள கண்டுபிடிச்சான். ஒரு வேள செட்டியார் மதர் சொல்லியிருப்பாங்களோ… என் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. 

அப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
அந்த உருவம் ‘அண்ணே…’ என்ற குரல் கொடுக்கிறது.



குரலைக் கேட்டதும் ‘இந்த குரலை நான் எங்கேயே கேட்டிருக்கேனே… என கவுண்டமணி யோசித்துக்கொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த உருவம் ‘’அண்ணே… அண்ணே…’’ என்று குரல் கொடுக்கிறது.

“ஐயோ… அம்மா… கருங்கரடி பேசுது… என்னை வேற அண்ணேண்ணு கூப்பிடுதடா சாமி…” என்று கதறியபடி தலைதெறிக்க ஓடப்போனவரை, ஆதிவாசியின் குரல் சட்டென்று தடுத்துநிறுத்தியது.

அண்ணே… நான்தான்னே ஒண்டிப்புலி செந்திலு…

அடேய்… டிபன்பாக்ஸ் தலையா… நாயே நீயாடா… ஏன்டா இப்படி ஆதிவாசி மாதிரி வந்து என்னை பயமுறுத்துற… என்ன சொன்ன? நீ ஒண்டிப்புலி செந்திலா…. இல்லடா… எங்கிட்ட ஒதைவாங்குன செந்திலு… 

அண்ணே… எப்பவுமே நான் உங்ககிட்ட ஒதை வாங்குன செந்திலுதான்…
என்னடா நாயே இது கோலம்… குஞ்சாணி குரூப்புதான் மறுபடியும் வந்துடிச்சோன்னு பயந்துட்டேன்டா…

இல்லண்ணே ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு எங்கிட்ட வந்து ‘ஆதிவாசியும் அதிசய செல்பேசியும்’ படம் எடுக்கறோம். நீங்கதான் ஹீரோன்னானுங்க… அதுக்காக போட்டோ எல்லாம் எடுத்தானுங்க… அதுக்கப்புறம் என்ன ஆச்சின்னே தெரியலண்ணே… ஆளுங்களையே காணோம். நானும் அப்போ இருந்து இதே காஸ்ட்யூம்லதான் ஸ்டுடியோ ஸ்டுடியோவா அவங்களை தேடி சுத்தறேன். 

நீ நரியாச்சேடா… உன்னை வச்சி படம் எடுக்கறன்னு சொன்னவன், முதல் நாளே துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடிட்டானே… உன் முகராசி அப்படி..?

அண்ணே… எனக்கு வாய்ப்பு யாருமே தரமாட்டேங்கறாங்க…

பின்னே… உன் வாய வச்சிகிட்டு சும்மா இருந்தாதான… உனக்கெதுக்கு நாயே அரசியல்… அரசியல்வாதிங்கதான் அஞ்சிக்கும் பத்துக்கும் மேடையேறி கத்துறானுங்கன்னா… உனக்கேண்டா நாயே இந்த வேலை… சினிமாக்காரன் அரசியலுக்கு வந்து சாதிக்கறதெல்லாம் ஹீரோக்களுக்கு சரியாகும்… உனக்கெல்லாம் சரியா வருமா..? 

அண்ணே… தெரியாம பேசிபுட்டேண்ணே…

நீ தெரிஞ்சி பேசினியோ… தெரியாம பேசினியோ… இப்ப என்னையே இண்டஸ்ட்ரியில மதிக்க மாட்டேங்கறானுங்க… ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்தேன். இப்ப ஒரு படத்துக்கே சிங்கியடிக்கிறேன்…

அண்ணே… அண்ணே… இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கண்ணே… என்று செந்தில் கவுண்டமணியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அரச உடையில் ஒருவர் வந்து நிற்கிறார்.

யாருங்க நீங்க..? என்று செந்தில் அவரைப் பார்த்து கேட்க, ‘’என்னைத் தெரியல… என்னைத் தெரியல…’’

நீ என்ன அமெரிக்க அதிபராடா… பார்த்த உடனே தெரிஞ்சுகறதுக்கு… நீ யார்னு தெரியலன்னுதான கேக்கறான்… சொல்றா நாயே என்று கவுண்டமணி எகிற… வந்தவர் ‘’நான்தான் தெனாலி’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், இடைமறிக்கினார் கவுண்டமணி.


சொரி புடிச்ச பெருச்சாளி மாதிரி இருக்க… நீ தெனாலியா?… கமலுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியமாடா… 

ஐயோ… நான் தெனாலி ராமன்னு சொல்ல வந்தேங்க… என்றவரிடம்
"அப்படி யாரையும் எங்கண்ணன் கேள்விப்பட்டதில்லையே?" என்று பக்கத்திலிருக்கும் செந்தில் கேள்வியை வீசுகிறார்.

‘’ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’’ என்கிறார் வந்தவர்.

அடங்கோ… என்கிட்டயே டக்கால்டி வேலை காட்டுறியா… நீ யார்ரான்னா..? ராமன், சோமன்னுகிட்டு… அப்ப நாங்கள்ளலாம் ராவணனாடா… என்று கோபம் பீறிட்டு வந்தவரை உதைப்பதற்கு காலைத் தூக்குகிறார் கவுண்டமணி.

அண்ணே… அண்ணே… உணர்ச்சி வசப்படாதீங்க… நாந்தான்னே… நாந்தான்னே… என வந்தவர் அலறுகிறார்.

இந்தக் குரலையும் எங்கேயோ கேட்டிருக்கேனே… என்று மண்டையைக் கீறியபடியே யோசித்தபடியே... நான்தான்னா.. யார்ரா நீ.. என்கிறார் கவுண்டமணி.

அண்ணே… நான்தான்னே உங்க வடிவேலு… வடிவேலு…

அடேய் வடிவேலு நீயாடா… நீ எதுக்குடா இங்க வந்த…

நான் வந்த கதைய சொல்லவா..? நொந்த கதையை சொல்லவா….ஆஆஆஆஆ… என்று ஒப்பாரி வைக்கிறார் வடிவேலு.

அடேய் ஆப்ரிக்கா குரங்கே… ஏண்டா இப்ப ஒப்பாரி வைக்கிற…
என்னத்தடா சொல்ல வந்த… சொல்லு..?

அந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால சொல்லுவேன்…
அப்ப சொல்லாத…

இந்த நாயி உங்கள விட்டா… வேற யாருக்கிட்டண்ண போயி சொல்லும்..
அப்ப சொல்லு…

அந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வாயிலேயே அடிக்கிறார் கவுண்டமணி.
மவனே… இதுக்கு மேல ஏதாச்சும் பேசின… இந்தா நிக்கறான் பாரு ஆதிவாசி… இவனுக்கு உன்ன மனுசக்கறியாக்கிடுவேன்.
விஷயத்த சொல்றா…

அண்ணே… உங்களுக்கு அப்புறம் ஆஹா ஒஹோன்னு வளர்ந்தண்ணே… ஒரு வீணாப்போனவனால வீதிக்கு வந்துட்டண்ணே… வீதிக்கு வந்துட்டண்ணே…

சொல்றா நாயே….

கேப்டனை எதுத்துதான் அரசியலுக்கு போனேன். மேடை மேடையா பேசினேன்… ஊரு ஊரா போயி பேசி, சின்னப்பட்டு, சீக்குப்பட்டு, அடிபட்டு, ஆவேசப்பட்டு, அசிங்கப்பட்டு…... என்று இழுத்துக் கொண்டே போக...

இடையில் குறுக்கிடும் கவுண்டமணி 'பிஞ்ச செருப்பாலயே அடிப்பேன்… சொல்ல வந்தத சொல்றா…'

'எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணே… என் சோலிய முடிச்சுப்புட்டாங்கண்ணே…''

நான் அப்பவே சொல்லல… அரசியல்ல இதெல்லாம் சாதரணம்னு… சரி விடு… இப்ப என்ன வேணும் உனக்கு…

அண்ணே… அரசியலே வேணாம்னு… அவனுக்கு ஓட்டுப் போடு… இவனுக்கு ஓட்டுப் போடுன்னு பேசிப் பேசியே என்னை வீணாக்கிக்கிட்டேன்.

பின்னே… அம்மா பாவம் சும்மா உடுமா..?

நீங்கதான் 49 ஓ படத்துல நடிக்கறீங்களே… யாருக்கும் ஓட்டு போடாதீங்கன்னு சொல்றதாமே இந்த ’49 ஓ’. அதான் இந்த கருத்தை சொல்றமாதிரி, இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தீங்கன்னா… இந்த வடிவேலு உங்க காலுக்கு செருப்பா இருப்பண்ணே…

நம்மள காலி பண்றதுக்கு இந்த ரெண்டு தடிப்பசங்களும் வந்திருக்கானுங்களே… என்று மனதில் நினைத்துக் கொண்ட கவுண்டமணி, ‘டேய் நானே இப்பவோ அப்பவோன்னு நடிச்சுகிட்டிருக்கேன். இந்த வயசுக்கப்புறமும் என்னை ஹீரோவா வச்சு படம் எடுக்குறாங்க. என்னை ஆள விடுங்கடா சாமி… அவன் அவன் வேலைய பாத்துகிட்டு போயிடுங்க… மீண்டும் என்கிட்ட வந்தீங்க அடிச்சே கொன்னுடுவேன்… இந்த டைரக்டர் வேற நம்மள கூப்பிட மாட்டேங்கறானே… என்ற கவுண்டமணி நினைத்துக் கொண்டிருக்கையில்…

சார்… ஷாட் ரெடி.. வாங்க என்று டைரக்டரிடமிருந்து குரல் வர, ‘ஐ யாம் எஸ்கேப்’ என்றபடி தலைதெறிக்க ஸ்டுடியோவிற்குள் ஓடி மறைகிறார் கவுண்டமணி.

(இது எனது கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல...)