Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - திரை விமர்சனம்



திருச்சி பக்கமிருக்கும் பொன்மலை என்ற ஊரில்  விமல், சிவகார்த்திகேயன், சூரி உள்பட நான்கு நண்பர்கள்  வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் இவர்கள் திருந்தி, வாழ்க்கையில் செட்டில் ஆனார்களா என்பதுதான் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கேடி பில்லா, கில்லாடி ரங்கா' படத்தின் கதை.

படம் பார்ப்பவர்களை சிரிக்காமல் வீட்டுக்கு அனுப்பக்கூடாது என்று முடிவோடு படம் எடுத்திருப்பார்கள் போல. படத்தின் முதல் இரண்டு மணி நேரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பதற்கும், கடைசி 15 நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகளுக்காகவும்,கர்சீப் இல்லாமல் யாரும் இந்தப் படத்திற்கு செல்ல வேண்டாம். சண்டைக்காட்சி முதற்கொண்டு அனைத்தும் சிரிப்பு வெடிதான்.

'தேனீ' கேசவனாக விமல், 'பட்டை' முருகனாக சிவகார்த்திகேயன். விமலும், சிவகார்த்திகேயனும் அநாயசமாக நகைச்சுவையில் பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவியும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினாவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு ஹீரோ அவர்களுக்கு இரண்டு நண்பர்கள். இரண்டு ஹீரோக்களின் அப்பா அம்மாக்கள், அவர்களின் வீட்டில் இரண்டு நாய்கள். அப்புறம், இரண்டு ஹீரோயின்கள், அவர்களின் அப்பா, அம்மாக்கள் என்று அனைத்து கேரக்டர்களையும் வைத்துக் கொண்டு நகைச்சுவைப் பட்டாசு வெடித்திருக்கிறார்கள்.

விமல், வீட்டில் தனக்கு சாப்பாடு கொடுக்கும்போது 'விஷம்' கலந்திருக்கிறதா என்று நாய்க்கு முதலில் சாப்பாடு கொடுத்து செக் செய்வது, அப்பாவுக்கு 'பீட்டர்' என்று பேர் வைப்பது என்று ஒரு பக்கம் கலக்கினால், மறுபக்கத்தில் சிவகார்த்திகேயன் காதலுடன் ரெஜினா பின்னாடியே சுற்றுவதும், நடிச்சு பேசுறாளா இல்லை புடிச்சு பேசுறாளா என்று புலம்புவதும், ரெஜினா அனுப்பிய ஆட்கள் சிவகார்த்திகேயனை "நையப்(?)" புடைப்பதும் குபீர் சிரிப்பு அளிக்கும் காட்சிகள். 

மாமாஸ் கிஃப்ட் என்று பைக்கில் ஸ்டிக்கரோடு சூரி ஊர் சுற்றிக் கொண்டிருப்பதும், சிவகார்த்திகேயனிடம் "லிஃப்ட் கேட்கும் போது ஸ்விப்ட் கார்தான் வேணும்னு அடம்பிடிக்கக் கூடாது, ஓட்டை சைக்கிளா இருந்தாலும் போகனும்" என்று அட்வைஸ் பண்ணுவதும், பச்சப் புள்ள காசுல குடிக்கிறோமுன்னு தோணுதா என்று கேட்பது, அதேபோல் எலக்சன் ரிசல்ட் வந்தவுடன் சிவகார்த்திகேயனிடம், எல்லாம் ஓகே, ஆனால் பெட்டியைத் தூக்கிட்டுப் போயிடுவாங்கன்னு நைட் ஃபுல்லா முழிக்க வச்சதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதும்,சூரியும் காமெடியில் தன்னுடைய பங்கை நன்றாக அளித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பிந்து மாதவி விமலிடமும், ரெஜினா சிவகார்த்திகேயனிடமும் உடனே காதலில் விழுவதை சற்று அழுத்தமாக காட்டியிருக்கலாம்.

படத்தின் காமெடிக்குப், படத்தின் வசனகர்த்தாவும் மிகப் பெரிய காரணம்("நான் பசியா இருக்கேன்; அப்புறம் கூப்பிடு", "போன பஸ்ஸுக்கு ஏன் கையக் காட்டுற"). படம் ஆரம்பத்தில், இடைவேளையில் மற்றும் அடிக்கடி காட்டப்படும் 'ரெயிலை'ப் படத்தின் க்ளைமாக்ஸில் பயன்படுத்தியிருப்பதில் இயக்குனர் தெரிகிறார்.பொதுவாகக் காமெடிப் படங்களில் சென்டிமென்ட் எடுபடாது. ஆனால் இந்தப் படத்தில் கடைசி 15 நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகள் இயக்குனரின் திறமையைக் காட்டுகின்றன.

காமெடியைத் தூக்கலாகக் காட்டியிருந்தாலும் இக்கால இளைஞர்களுக்கேற்ற முறையில் பெற்றவர்களைப் போற்ற வேண்டும் என்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த மெஸேஜை வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி போல் இல்லாமல் அழுத்தம் திருத்தமாய் சொல்லியிருக்கும் இடத்தில் பாண்டிராஜ் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.

படம் முடிந்தவுடன், இந்த 'மாதிரி' ஒரு படம் பார்த்து 'எவ்வளவு' நாளாச்சு என்று நம் மனதில் தோன்ற வைத்ததுதான், இந்தப் படத்தின் வெற்றி. கண்டீப்பாக இப்படம் 'ஹிட்டடிக்கும்' என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்களும் போய் சிரிச்சுட்டு வாங்க பாஸு..!