Friday, July 26, 2013

சாதி இல்லை - நெஞ்சை நெகிழச் செய்த வாசகர் கடிதம்

பத்திரிகை துறையில் நான் காலடி எடுத்து வைத்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனந்த விகடன், தினமணி, மாலை மலர் என பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறேன். பல செய்திகளை எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏற்படாத மன நெகிழ்ச்சி, இப்போது ஏற்பட்டிருக்கிறது. தற்போது நான் புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி வார இதழ்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த நெகிழ்ச்சி ஏற்பட, புதிய தலைமுறை வார இதழ் காரணமாயிருந்திருக்கிறது. இதற்கு எங்கள் ஆசிரியரான உயர்திரு. மாலன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

புதிய தலைமுறை வார இதழ்  ஜூலை 11- தேதியிட்ட இதழில் 'பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை' என்ற செய்திக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதுகுறித்த தகவலை இதற்கு முந்தைய பதிவில் -

பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள் என்று தலைப்பிட்டு கொடுத்திருக்கிறேன்.


அவ்வார இதழில், போதிய தபால் தலை ஒட்டப்பட்டு, சுயமுகவரியிட்ட அஞ்சல் கவரை அனுப்பி வைத்தால், சாதியை குறிப்பிட வேண்டாம் என்ற அரசின் ஆணை, தொடக்கக் கல்வி இயக்குனரின் கடிதநகல் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இன்று வரை, அந்த ஆணைகளைக் கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கடிதங்களை எழுதி, பெற்றுக் கொண்டுவிட்டனர். 

இதில் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தகவலை எங்களுக்கு சொன்னது. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு வாசகர் தனது மகனை பள்ளியில் சேர்க்க சாதியை குறிப்பிட விரும்பவில்லை. ஆதலால், ஆணையை அனுப்பி வையுங்கள் என்றார். புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு வாசகரோ, எனது சகோதரி மகனை பள்ளியில் சேர்க்க உதவும் என்றார். இதுபோல நிறைய வாசகர்கள் மட்டுமின்றி, கிருஷ்ணகிரியில் உள்ள மாநில நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம், சென்னை, அடையாறில் உள்ள 'அகில பாரதீய ஆதிவாசி விகாஸ் பரிஷத் அமைப்புகளிடம் இருந்தும் ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களிடம் இருந்தும் கடிதங்கள் வந்திருந்தன.

இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சேலத்தில் ஆதரவற்றோருக்காக இயங்கிவரும்  'நேசங்கரங்கள்' அமைப்பு எழுதிய கடிதம் எனை மிகவும் நெகிழச் செய்து விட்டது. எனது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம், மரியாதை, அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அக்கடிதத்தின் சுருக்கம் இங்கே... 

'நேசங்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் வளர்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்பும்போது, என்ன சாதி என்று கேட்கிறார்கள். அங்கே நாங்கள் எதைச் சொல்வது? இனி நாங்கள் தைரியாமக சொல்வோம். சாதி இல்லை என்று... அதற்கு உங்களது கட்டுரை வழிகாட்டியிருக்கிறது. எங்களுக்கு அரசின் ஆணைகளை அனுப்பி வையுங்கள்'

என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முழுக் கடிதமும் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பின் நீங்களே அதை உயிர்ப்பித்து படித்துக் கொள்ளுங்கள்.




இத்தகைய உயரிய சேவையைச் செய்து வரும் 'நேசக்கரங்கள்' அமைப்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியை இங்கே உங்கள் முன் உரித்தாக்குகிறேன். அவர்கள் பணி வாழ்க. நல்ல உள்ளங்கள் வாழ்க... வாழ்க..!

இந்த கடிதத்தைப் படித்ததும் மனது பெருமிதப்பட்டது. எனது எழுத்து, ஆதரவற்ற குழந்தைகளை பள்ளிகளில், சாதியைக் குறிப்பிடாமலேயே சேரப்போகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி கொண்டது. இத்தனை ஆண்டுகளில் பல கட்டுரைகள், செய்திகள், தலையங்கங்கள், துணுக்குகள், ஜோக்ஸ்கள், கதைகள், தொடர்கதை, கவிதைகள், சினிமா பாடல்கள், வரலாற்று நூல் என இன்னும் என்னென்னவோ எழுதியிருக்கிறேன். இவைகளில் கிடைக்காத மகிழ்ச்சி, இந்த ஒரு கட்டுரையால் எனக்கு கிடைத்தது. 

சமூக மாற்றத்திற்கான சிறு துரும்பாக இது இருக்கும். 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பதால், இது நாளை பெரிய சமூக மாற்றம் வரும் என நம்புகிறேன். தோழர் மு. கார்க்கியின் ஆலோசனைப்படி, சாதியைக் குறிப்பிடத் தேவை இல்லை என்ற அரசின் ஆணைகளை ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் 'பிளெக்ஸ் போர்டு'  மூலம் வைக்க வேண்டும். அப்போது பெருத்த மாற்றம் ஏற்படும் என்றார்.

இதனால் ஏற்படும் சமூக மாற்றமே... நாளைய சமத்துவ இந்தியாவை கட்டியெழுப்பும்.

(நன்றி: புதிய தலைமுறை வார இதழ் மற்றும் அதன் இணையதளம்)

Wednesday, July 17, 2013

பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள்

நீங்கள் ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாதவர். உங்கள் குழந்தை ஒரு ஜாதிக்காரனாக வளர்வதைவிட சரியான மனிதனாக வளர்ந்தால் போதும் என்று நினைப்பவர். ஆனால், பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்கும்போதும் மாற்றுச் சான்றிதழ் பெறும்போதும் ஜாதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் அந்தக் கேள்விக்கான பதிலாக ஜாதி இல்லை என்று பதிலளிக்கவோ, அந்த இடத்தை பதிலேதும் எழுதாமல் காலியாக விடவோ கூடாது என்று பள்ளி நிர்வாகிகள் சொல்வது உண்டு. அதைக் கேட்கும் போது எரிச்சலாக இருக்கும். சில பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க மறுத்த சம்பவங்களும் உண்டு.

இனி அந்த தொல்லை உங்களுக்கு இல்லை. இனி ஜாதிப் பெயரை நீங்கள் குறிப்பிட விரும்பவில்லையெனில், அதைப் பள்ளிகளில் தைரியமாகச் சொல்லலாம். இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விவரங்கள் இங்கே:

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது, பெற்றோர் ஜாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆம்ஜூலை 2, 1973இல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நிலை எண்: 1210 இந்த விவகாரத்தைத்தான் தெளிவாகக் கூறியிருக்கிறது. இப்படி ஓர் அரசாணை வெளியிட்ட பின்னும் பள்ளிகளில் 'ஜாதியைக் கேட்பது' நின்றபாடில்லை

எனவே  இது குறித்து கடந்த 31.07.2000இல் தமிழக அரசு மீண்டும் ஓர் அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணை (நிலை) 205-இல், 'பார்வையில் காணும் (அரசாணை 1210, நாள். 02.07.1973) அரசாணையின்படி  இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரேனும் விரும்பினால், அவ்வாறே செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது

ஆனால், இம்முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று அறியப்படுவதால், அரசாணையில் தெரிவித்துள்ளதை இனிவரும் காலங்களிலும் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும் தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி, சமயக் குறிப்பு தேவையில்லை எனவும் ஆணையிடப்படுகிறது' என்று தெரிவித்தது.

ஆனாலும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டவை இன்றுவரை 
கடைபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேர்க்கையின்போது என்ன ஜாதி என்று கேட்கத்தான் செய்கிறார்கள் என்பதால், கோவையிலுள்ள மு.கார்க்கி என்ற வழக்கறிஞர், அண்மையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, 'இந்த அரசாணையைக் கருத்தில் கொண்டு செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய வழியாக அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..எண்13023/ஜே2/2012 நாள் 06.06.13). அந்த உத்தரவில், 'பார்வையில் கண்ட அரசாணையின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம் என அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

இந்த அரசாணையைக் கருத்தில் கொண்டு செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய வழியாக அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றும் இருக்கிறது. ஜாதியைக் குறிப்பிடாதவர்களின் குழந்தைகள், பொதுப்பிரிவில் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்காது என்பதே அது.

இதுகுறித்து  'புதிய தலைமுறை' வார இதழில் நானெழுதிய கட்டுரை...



(நன்றி: ‘புதிய தலைமுறை’ வார இதழ் மற்றும் தோழர் மு. கார்க்கி, வழக்கறிஞர்.)

இதுகுறித்த அரசாணை மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் கடிதங்கள் இங்கே தருகிறேன். விருப்பமுடையோர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

(31.07.2000 -அன்று வெளியிடப்பட்ட அரசாணை)

(15.06.2013 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவு)