கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!
அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...
கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்
ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?
அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?
உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?
பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?
அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்
அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?
உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?
பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...
உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?
'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…
அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...
சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...
-மோ. கணேசன்.
(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து மூன்றாமாண்டு நினைவு நாள் (16.07.2007) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...
No comments:
Post a Comment