எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Saturday, September 29, 2007
பெருந்தலைவர் காமராசர்
யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!
அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!
அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!
இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!
குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!
Tuesday, September 11, 2007
மகாகவி பாரதிக்கு கவிதாஞ்சலி
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோம்..!
பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!
பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கு ஏழுதினான்
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய்..!
கோட்டுச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தான்
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெற்றனர்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!
பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டிக் கொண்டு சமூக
முரண்பாடுகளை வேரறுக்க நினைத்தவன்..!
எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி
எட்டயபுரத்தில் பிறந்து ஏட்டு திக்கும்
தமிழால் முழங்கி சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!
தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன்
நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் புகழ் நீங்காது
நின் கவி மறையாது... கருத்துக்கள் குன்றாது..!
Saturday, September 08, 2007
ஆதித்தனுக்கு ஆத்திச்சூடி
அன்பின் மிகுதியில்
ஆதித்தா நீ மலர்ந்தாய்..!
இன்றோடு நீ பிறந்து
ஈராண்டு முடிந்தாலும்
உந்தன் வளர்ச்சிக்கு
ஊட்டமாய் உன் அன்னை..!
எதிலும் நீ வெற்றி காண
ஏணியாய் உன் தந்தை..!
ஐயங்கள் அகற்று..!
ஒற்றுமையைக் கற்றுக் கொள்..!
ஓய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
ஃதே உனக்கு ஆயுதம்..!
Sunday, September 02, 2007
Saturday, September 01, 2007
கோட்டுக் கிறுக்கல்கள்
குடிநீர் கிடைத்த மகிழ்ச்சி...
அழகிய வாத்து
(இந்த வாத்து படத்தை உற்று நோக்கினால் ஒரு செய்தி படிக்கக் கிடைக்கும்)
தமிழ்ப் பெண்
முப்பரிமாண கோட்டுச் சித்திரம் (இந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தால் ஒன்பது விதமாக இந்த சிறுவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்... கண்டுபிடிக்க முடிகிறதா..?)
வைரவிழா சுதந்திர தினக் கவிதை
வீறு கொண்டெழுவோம் வாரீர்..!
வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
ஆசுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!
நிதமுமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாதமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேதமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!
விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!
நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!
பீரங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!
வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!
மனமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!
பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஓன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!
ஊறு விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபதாவது சுதந்திர தினத்திலாவது வீறு கொண்டெழுவோம் வாரீர்!
-மோ. கணேசன். ஆகஸ்டு 15, 2007
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)