Friday, July 26, 2013

சாதி இல்லை - நெஞ்சை நெகிழச் செய்த வாசகர் கடிதம்

பத்திரிகை துறையில் நான் காலடி எடுத்து வைத்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனந்த விகடன், தினமணி, மாலை மலர் என பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறேன். பல செய்திகளை எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏற்படாத மன நெகிழ்ச்சி, இப்போது ஏற்பட்டிருக்கிறது. தற்போது நான் புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி வார இதழ்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த நெகிழ்ச்சி ஏற்பட, புதிய தலைமுறை வார இதழ் காரணமாயிருந்திருக்கிறது. இதற்கு எங்கள் ஆசிரியரான உயர்திரு. மாலன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

புதிய தலைமுறை வார இதழ்  ஜூலை 11- தேதியிட்ட இதழில் 'பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை' என்ற செய்திக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதுகுறித்த தகவலை இதற்கு முந்தைய பதிவில் -

பள்ளிகளில் இனி சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள் என்று தலைப்பிட்டு கொடுத்திருக்கிறேன்.


அவ்வார இதழில், போதிய தபால் தலை ஒட்டப்பட்டு, சுயமுகவரியிட்ட அஞ்சல் கவரை அனுப்பி வைத்தால், சாதியை குறிப்பிட வேண்டாம் என்ற அரசின் ஆணை, தொடக்கக் கல்வி இயக்குனரின் கடிதநகல் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இன்று வரை, அந்த ஆணைகளைக் கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கடிதங்களை எழுதி, பெற்றுக் கொண்டுவிட்டனர். 

இதில் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தகவலை எங்களுக்கு சொன்னது. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு வாசகர் தனது மகனை பள்ளியில் சேர்க்க சாதியை குறிப்பிட விரும்பவில்லை. ஆதலால், ஆணையை அனுப்பி வையுங்கள் என்றார். புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு வாசகரோ, எனது சகோதரி மகனை பள்ளியில் சேர்க்க உதவும் என்றார். இதுபோல நிறைய வாசகர்கள் மட்டுமின்றி, கிருஷ்ணகிரியில் உள்ள மாநில நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம், சென்னை, அடையாறில் உள்ள 'அகில பாரதீய ஆதிவாசி விகாஸ் பரிஷத் அமைப்புகளிடம் இருந்தும் ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களிடம் இருந்தும் கடிதங்கள் வந்திருந்தன.

இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சேலத்தில் ஆதரவற்றோருக்காக இயங்கிவரும்  'நேசங்கரங்கள்' அமைப்பு எழுதிய கடிதம் எனை மிகவும் நெகிழச் செய்து விட்டது. எனது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம், மரியாதை, அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அக்கடிதத்தின் சுருக்கம் இங்கே... 

'நேசங்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் வளர்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்பும்போது, என்ன சாதி என்று கேட்கிறார்கள். அங்கே நாங்கள் எதைச் சொல்வது? இனி நாங்கள் தைரியாமக சொல்வோம். சாதி இல்லை என்று... அதற்கு உங்களது கட்டுரை வழிகாட்டியிருக்கிறது. எங்களுக்கு அரசின் ஆணைகளை அனுப்பி வையுங்கள்'

என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முழுக் கடிதமும் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பின் நீங்களே அதை உயிர்ப்பித்து படித்துக் கொள்ளுங்கள்.




இத்தகைய உயரிய சேவையைச் செய்து வரும் 'நேசக்கரங்கள்' அமைப்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியை இங்கே உங்கள் முன் உரித்தாக்குகிறேன். அவர்கள் பணி வாழ்க. நல்ல உள்ளங்கள் வாழ்க... வாழ்க..!

இந்த கடிதத்தைப் படித்ததும் மனது பெருமிதப்பட்டது. எனது எழுத்து, ஆதரவற்ற குழந்தைகளை பள்ளிகளில், சாதியைக் குறிப்பிடாமலேயே சேரப்போகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி கொண்டது. இத்தனை ஆண்டுகளில் பல கட்டுரைகள், செய்திகள், தலையங்கங்கள், துணுக்குகள், ஜோக்ஸ்கள், கதைகள், தொடர்கதை, கவிதைகள், சினிமா பாடல்கள், வரலாற்று நூல் என இன்னும் என்னென்னவோ எழுதியிருக்கிறேன். இவைகளில் கிடைக்காத மகிழ்ச்சி, இந்த ஒரு கட்டுரையால் எனக்கு கிடைத்தது. 

சமூக மாற்றத்திற்கான சிறு துரும்பாக இது இருக்கும். 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பதால், இது நாளை பெரிய சமூக மாற்றம் வரும் என நம்புகிறேன். தோழர் மு. கார்க்கியின் ஆலோசனைப்படி, சாதியைக் குறிப்பிடத் தேவை இல்லை என்ற அரசின் ஆணைகளை ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் 'பிளெக்ஸ் போர்டு'  மூலம் வைக்க வேண்டும். அப்போது பெருத்த மாற்றம் ஏற்படும் என்றார்.

இதனால் ஏற்படும் சமூக மாற்றமே... நாளைய சமத்துவ இந்தியாவை கட்டியெழுப்பும்.

(நன்றி: புதிய தலைமுறை வார இதழ் மற்றும் அதன் இணையதளம்)

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவையில்லாத பல பிளெக்ஸ் போர்டுகள் இருக்கும் போது, பள்ளி உட்பட பல முக்கியமான இடங்களில் வைக்க வேண்டியது முக்கியம்... நன்றி...

ராஜி said...

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் சிறு முயற்சி பெரிதாகி சாதீ இல்லாத சமுகம் மலரட்டும்.

தி.தமிழ் இளங்கோ said...

// இன்று வரை, அந்த ஆணைகளைக் கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கடிதங்களை எழுதி, பெற்றுக் கொண்டுவிட்டனர். //

சத்தமில்லாமல் ஒரு சமூகப்பணி செய்து இருக்கிறீர்கள். தங்களிடமிருந்து அந்த அரசு ஆணைகளைக் கேட்டு வாங்கியவர்கள் உண்மையிலேயே நல்ல நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

// இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சேலத்தில் ஆதரவற்றோருக்காக இயங்கிவரும் 'நேசங்கரங்கள்' அமைப்பு எழுதிய கடிதம் எனை மிகவும் நெகிழச் செய்து விட்டது. எனது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம், மரியாதை, அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். //

உண்மைதான். அந்தக் குழந்தைகள் ஜாதியை ஒழிப்பதில் பின்னாளில் சமூகப் போராளிகளாக இருப்பார்கள்.
வாழ்த்துக்கள்!

R.Puratchimani said...

வாழ்த்துக்கள் :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// போதிய தபால் தலை ஒட்டப்பட்டு, சுயமுகவரியிட்ட அஞ்சல் கவரை அனுப்பி வைத்தால், சாதியை குறிப்பிட வேண்டாம் என்ற அரசின் ஆணை, தொடக்கக் கல்வி இயக்குனரின் கடிதநகல் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இன்று வரை, அந்த ஆணைகளைக் கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கடிதங்களை எழுதி, பெற்றுக் கொண்டுவிட்டனர். //


நன்று., மேலே ஒரு கடிதத்தை வெளியிட்டு இருப்பது போல அந்த ஆணைகளையும் வெளியிடலாமே., எதற்காக தபால்தலை ஒட்டிய கவர்? நீங்கள் நகல் எடுத்து கவரில் போட்டு ஒட்டி அஞ்சலில் சேர்த்து அதை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பி அதை ஒருவர் வாங்கி கவரைப் பிரித்து பெற்றுக் கொள்வதை விட அந்த பத்திரிக்கையிலேயே வெளியிட்டு இருக்கலாமே., இல்லையென்றால் இந்த தளத்திலேயே வெளியிட்டு இருக்கலாமே

மேலே ஒரு கடித்தத்தை வெளியிட்டு இருப்பது போல.,

டிபிஆர்.ஜோசப் said...

இத்தகைய உணர்வுபூர்வமான கட்டுரைக்கும் அகற்றக் கூடிய கருத்துக்களை எழுதுபவர்களை என்னவென்று சொல்வது?

சாதிகள் அடிப்படையில் மனிதர்களை பிரித்துப்பார்க்கும் படலம் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் சமயத்திலிருந்துதான் துவங்குகிறது. பிறப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் என்பதை தெரிந்துக்கொண்டு அவர்களுக்கு உரித்தான சலுகைகளை வழங்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட நியதிதான் இன்று பலரையும் சாதியின் அடிப்படையில் இனங்கண்டுக்கொள்ள பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது வேதனைதான்.

ஒரு ஆயுதம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

மோகனன் said...

நன்றி தனபாலரே...

மோகனன் said...

நம் போன்றோரின் எண்ணமும் அதுதான் ராஜி...

மோகனன் said...

சமூகப் போராளிகள் அல்ல இளங்கோ அவர்களே...

அக்குழந்தைகள் சமூகப் புரட்சியின் எதிர்கால விருட்சங்கள்... வித்துக்கள்...

மோகனன் said...

நன்றி புரட்சிமணி

மோகனன் said...

//நன்று., மேலே ஒரு கடிதத்தை வெளியிட்டு இருப்பது போல அந்த ஆணைகளையும் வெளியிடலாமே., எதற்காக தபால்தலை ஒட்டிய கவர்? நீங்கள் நகல் எடுத்து கவரில் போட்டு ஒட்டி அஞ்சலில் சேர்த்து அதை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பி அதை ஒருவர் வாங்கி கவரைப் பிரித்து பெற்றுக் கொள்வதை விட அந்த பத்திரிக்கையிலேயே வெளியிட்டு இருக்கலாமே., இல்லையென்றால் இந்த தளத்திலேயே வெளியிட்டு இருக்கலாமே

மேலே ஒரு கடித்தத்தை வெளியிட்டு இருப்பது போல.,//

எத்தனை பேர் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை கணக்கீடு செய்யவே இந்த ஏற்பாடு சுரேஷ் அவர்களே...

அதை இரண்டு பக்கம் பிரிண்ட் செய்வதில் எந்த ஆட்சேபணையுமில்லை...

எத்தனை பேர் அதனை வரவேற்கிறார்கள்... எத்தனை பேர் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்... எத்தனை பேருக்கு அது தேவைப்படுகிறது என்ற புள்ளிவிபரம் எங்களுக்கு தேவை... ஆதலால்தான் அப்படி கொடுத்திருக்கிறோம்...

இது தொடர்பான அரசாணைகள் இதற்கு முந்தைய பதிவில் கொடுத்திருக்கிறேன்... எத்தனை பேர் அதை டவுன்லோடு செய்திருப்பார்கள் என்ற கணக்கு எனக்கு தெரியாது...

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது சுரேஷ் அவர்களே...

தங்களின் கருத்துக்கு நன்றி...

மோகனன் said...

அன்பான டிபிஆர். ஜோசப்...

தங்களைப் போன்றோரின் எண்ணங்கள் வலுப்பெற்று... எதிர்கால சந்ததியினர் வளம் பெற வேண்டும் என்பதே எனது அவா...

கருத்துரைக்கு அன்பு கலந்த நன்றிகள்...

sangeetha said...

hey, great job. hats off to you.

மோகனன் said...

சங்கீதா... நீங்களா பதில் பண்ணியிருக்கீங்க... வாவ்... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

உங்களின் அன்புக்கு நன்றி..!