1. மகாத்மா காந்தியின் தந்தையார் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. (கபா காந்தி) இவர் போர்பந்தர் சமஸ்தானத்தின் திவானாக (தலைமை அமைச்சராக) பணியாற்றியவர்.
2. இவர் இரண்டு முறை திருமணம் செய்தபோதும், குழந்தை பிறப்பின்போது இரண்டு மனைவியையும் இழந்தார்.
3. மூன்றாவதாக திருமணம் செய்த மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், அவரின் அனுமதியோடு நான்காவது திருமணத்திற்கு தயாரானார்.
4. நான்காவதாக, 1859-ல் புத்லிபாயை திருமணம் செய்துகொண்டார்.
5. உத்தம்சந்த் காந்திக்கும், புத்லிபாய்க்கும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு.
6. 1860-ல், லட்சுமிதாஸ் காந்தி பிறந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மூத்த அண்ணன்.
7. 1862-ல் ராலியத் காந்தி பிறந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மூத்த சகோதரி.
8. 1866-ல், கர்சந்தாஸ் காந்தி பிறந்தார். இவர் மகாத்மா காந்திக்கு இளைய அண்ணன்.
9. 1869, அக்டோபர் 2-அன்று, இத்தம்பதியருக்கு கடைக்குட்டியாகப் பிறந்தார் காந்தி.
10. காந்தியின் பெற்றோரால் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.
11. காந்திக்கு, தனது சிறுவயதில், நாயின் காதை பிடித்து திருகி விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் அவரது சகோதரி ராலியத் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
12. அம்மாவின் செல்லப்பிள்ளையாக மட்டுமின்றி அம்மாவின் நல்ல பிள்ளையாகவும் வளர்ந்தவர் காந்தி.
13. அம்மா புத்லிபாய் வைஷ்ணவ குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், காந்திக்கு பகவத்கீதை, பாகவதம், புராணக்கதைகளை சொல்லிக் கொடுப்பார்.
14. முஸ்லிம்களின் புனித நூலானா குரான், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார் புத்லி பாய்.
15. தன் அன்னை மிகுந்த கடவுள் பக்தி உடையவர் என்பதால் அடிக்கடி விரதம் இருப்பார். தொடர்ந்து மூன்று வேளை சாப்பிடாமல் விரதமிருப்பார்.
16. தாயின் இந்த விரத முறைதான், காந்தியின் போராட்ட காலத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அடித்தளமாய் விளங்கியது.
17. அம்மாவிடம் கேட்ட கதைகளுள் காந்திக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதை எதுவெனில் அது அரிச்சந்திரன் கதைதான்.
18. உண்மை மட்டுமே பேசவேண்டும் என்ற வைராக்கியம் அரிச்சந்திரன் கதை மூலம் தான் பெற்றதாக காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
19. காந்தி தனது 9-வது வயதில் பள்ளியில் காலடி எடுத்துவைத்தார்.
20. தொடக்கத்தில் குஜராத்தி மொழி (இது அவருடைய தாய்மொழி), கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவற்றை படித்தார்.
21. பள்ளியில் காந்திஜி சுமாராகப் படிக்கும் மாணவர். வகுப்பறையில் மிகவும் அமைதியான மாணவர்.
22. விளையாட்டு என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று. வகுப்பறை புத்தகங்களே அவரது நண்பன்.
23. கையொப்பமிடும்போது எம்.கே.காந்தி என்றே கையொப்பமிடுவார்.
24. 1883 மே மாதத்தில் காந்திக்கு கஸ்தூர்பாவைத் திருமணம் செய்துவைத்தபோது அவருக்கு வயது 13.
25. கஸ்தூர்பாவின் முழுப்பெயர் கஸ்தூர்பாய் மகன்ஜி கபாடியா. காந்தியை விட வயதில் 6 மாதம் மூத்தவர் கஸ்தூர்பா.
26. 16-வயது இருக்கும்போது, காந்தி தனது தந்தையை இழந்தார்.
27. தனது 18-வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார் காந்தி.
திருமணத்தினால் ஓராண்டு பள்ளிப்படிப்பு இடையில் நின்றுபோனதும் இதில் அடங்கும்.
திருமணத்தினால் ஓராண்டு பள்ளிப்படிப்பு இடையில் நின்றுபோனதும் இதில் அடங்கும்.
28. 1888-ல், பவநகரில் உள்ள ஷாமல்தாஸ் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்கச் சேர்ந்தார்.
29. இதே ஆண்டில் காந்தி மற்றும் கஸ்தூர்பா தம்பதியருக்கு முதல் மகனான ஹரிலால் மோகன்தாஸ் காந்தி பிறக்கவே, படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு போர்பந்தருக்கு திரும்பிவிட்டார்.
30. இந்தியாவில் படிக்க விருப்பமின்றி குடும்ப நண்பரின் அறிவுரையால், பாரிஸ்டர் படிப்பிற்காக லண்டன் செல்ல தயாரானார் காந்தி.
31. அங்கு சென்றால், மேல்நாட்டு நாகரிகத்தால் தனது மகன் கெட்டுப்போய்விடுவான் என்று, அவரின் தாய் புத்லிபாயும், மனைவி கஸ்தூர்பாவும் பயந்தனர்.
32. லண்டன் செல்லும் முன் அம்மாவிடம், மது அருந்த மாட்டேன். இறைச்சி சாப்பிடமாட்டேன், அங்குள்ள பெண்களிடம் பழகமாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
33. காந்தியின் அண்ணன்களில் ஒருவரான லட்சுமிதாஸ் வழக்கறிஞர் என்பதால், காந்தியின் பாரிஸ்டர் படிப்புக்கு ஆதரவு தெரிவித்து மட்டுமின்றி படிப்பிற்கு உதவியும் செய்கிறேன் என்றார்.
34. பிறந்த குழந்தை, பெற்ற அன்னை, கட்டிய மனைவி ஆகியோரை விட்டுவிட்டு 1888, செப்டம்பர் 4 அன்று லண்டனுக்குப் பயணமானார் காந்தி.
35. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்றாண்டு பாரிஸ்டர் படிப்பில் சேர்ந்து படித்தார் காந்தி.
36. மூன்று ஆண்டுகள் பாரிஸ்டர் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு 1891, ஜூன் 10-ஆம் தேதி தாயகம் திரும்பினார்.
37. பம்பாயில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
38. 1892-ல், காந்தி தம்பதியருக்கு இரண்டாவது மகனான மணிலால் காந்தி பிறந்தார்.
39. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணி இருப்பதாக கேள்விப்பட்டு, அப்துல்லா அண்ட் கோ எனும் நிறுவனத்தாரால் 1893- ஏப்ரலில் அந்நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தங்கியிருந்த இடத்தின் பெயர் டால்ஸ்டாய் பண்ணை.
40. தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலில் இருந்தும் இந்தியர்களை வேலைக்காக தென்னாப்ரிக்காவிற்கு ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.
41. நிறவெறி காரணமாக ஆங்கிலேயர்களால் தென்னாப்ரிக்க மக்களும் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
42. அந்நாட்டில் ஆங்கிலேயாரால் நிறவெறிக்கு உட்படுத்தப்பட்டதால், சதாரண வழக்கறிஞராக இருந்த காந்தி, போராட்டக்காரராக மாறினார்.
43. டர்பன் நகரில் நீதிமன்றத்தில் வழக்காடச் சென்றபோது, காந்தியின் தலைப்பாகையை கழற்றச் சொன்னார் நீதிபதி. கழற்ற மறுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்தார் காந்தி.
44. 1893 ஜூன் 6 அன்று, பிரிட்டேரியா என்ற இடத்திற்கு செல்வதற்காக ரயிலின்முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
45. ஆங்கிலேயராக அவர் இல்லை என்பதற்காக, வெள்ளையர் ஒருவரால் பீட்டர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில்நிலையத்தில் பெட்டியை விட்டு பிளாட்பாரத்தில் தள்ளிவிடப்பட்டார்.
46. இந்த சம்பவமே காந்தியை உறுதி மிக்க போராட்டக்காரராக மாறுவதற்கு அடித்தளமாக அமைந்தது.
47. ஆங்கிலேயர்கள் அங்குள்ள கறுப்பின மக்களையும், இந்தியர்களையும் கீழ்த்தரமாக நடத்தினர். இதை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார் காந்தி.
48. அதற்குள் அவருடைய ஒப்பந்த காலமும் முடிந்து போகவே தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். அச்சமயத்தில், இந்தியர்களுக்கு வாக்குரிமை அங்கே பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து போராடுங்கள் என்றார் காந்தி.
49. போராடுவோம் ஆனால் எங்களுக்கு சட்ட நுணுக்கம் தெரியாது. தாங்களும் உடன் இருந்தால் போராடுவோம் என்றனர்.
50. அவர்களுக்காகவே தென்னாப்ரிக்காவில் தங்கி போராட முடிவெடுத்தார் காந்தி
51. 1894-ல், நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி, அங்குள்ள இந்தியர்களை ஒன்றுதிரட்டி போராட ஆரம்பித்தார்.
52. இந்த போராட்டத்தின் போதுதான் தமிழர்களின் அறிமுகமும் தமிழின் அறிமுகமும் காந்திக்கு கிடைத்தது.
53. 1894-ல் பாலசுந்தரம் என்ற கூலித்தொழிலாளி, ஆங்கிலேய முதலாளியால் கடுமையாக தாக்கப்பட்டு காந்தியின் முன்பு ரத்தம் சொட்டச்சொட்ட நின்றார்.
54. அவர் பேசும் தமிழ் மொழி காந்திக்கும், காந்தி பேசும் ஆங்கில மொழி பாலசுந்தரத்துக்கும் புரியவில்லை என்பதால் காந்தியின் உதவியாளர்களாக இருந்த வின்சென்ட் லாரன்ஸ், ஜோசப் லாரன்ஸ் இருவரும் மொழிபெயர்த்தனர்.
55. தன்னுடைய வாதத்திறமையால் பாலசுந்தரத்திற்கு நீதிகிடைக்கச் செய்து அவருடைய முதலாளியிடமிருந்து விடுதலையை வாங்கித் தந்தார் காந்தி. இதனால் அங்கிருந்த தமிழ் மக்களிடம் காந்தியின் புகழ் பரவியது.
56. தென்னாப்ரிக்காவில் இருந்த தமிழர்கள் போராட்டத்தின்போது தீரத்துடன் காந்தியுடன் இணைந்து போராடினார்கள்.
57. தமிழர்களின் அன்பும், வீரமும் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது. தமிழர்களின் தன்னலமற்ற தியாகமும் போராட்டமும், அன்பும் காந்தியை நெகிழ்ச்சியடைய வைத்தன.
58. இதனால் அத்தமிழ் மக்களுக்கு என்ன கைம்மாறு செய்வேன் என தவித்த காந்தி, அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களது மொழியிலாவது பேசவேண்டும் என்று முடிவெடுத்து தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் காந்தி.
59. என்னுடைய பூர்வ ஜென்ம உறவுதான் எனக்கு தமிழர்களோடு இப்போதிருக்கும் தொடர்பு என்றார் காந்தி.
60. புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயும், காந்தியும் நண்பர்கள். அடிக்கடி கடிதம் எழுதிக்கொள்வார்கள்.
61. உலகப்பொதுமறையான நமது திருக்குறளை டால்ஸ்டாய் மூலமாகத்தான் காந்தி அறிந்து கொண்டார்.
62. லியோ டால்ஸ்டாய் எழுதிய கட்டுரை ஒன்றில், திருக்குறளின் இன்னா செய்யாமை எனும் அதிகாரத்தில் உள்ள 6 குறள்களை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
63. திருக்குறள் குறித்து டால்ஸ்டாயிடம் கடிதம் மூலம் காந்தி கேட்டதற்கு, ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைத் தான் படித்தாகவும், அது உங்கள் நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து உருவானது என்றும் பதில் கடிதம் தந்திருக்கிறார்.
64. அதைப் படித்த காந்திக்கு, தமிழ் மீதிருந்த பற்று முன்னைக்காட்டிலும் அதிகமானது. திருக்குறளின் மீது ஆர்வம் ஏற்படவே, ஆங்கில மொழிபெயர்ப்பில் அதை படித்திருக்கிறார்.
65. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள் அகிம்சை வழியை போதிக்க, பிற்காலத்தில் அகிம்சை வழியை காந்தி தேர்வு செய்வதற்கு திருக்குறள்தான் முதன்மையாக விளங்கியது.
66. திருக்குறளை அதன் தாய்மொழியான தமிழில் படிக்க விரும்பினார் காந்தி.
67. தனது உதவியாளர்கள் இருவருக்கும் தமிழ் மொழி தெரியுமென்பதால், அவர்கள் மூலம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
68. தமிழில் சில வாசகங்களை எழுதி, எம்.கே.காந்தி என்று தமிழில் கையொப்பம் இடும் அளவிற்கு தமிழை அப்போது கற்றிருக்கிறார்.
69. விடுதலைப் போராட்டத்தை நோக்கி காந்தியை மடைமாற்றம் செய்தவர் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர்தான் நம் தில்லையாடி வள்ளியம்மை.
70. தென்னாப்ரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேயர்கள் தலை வரி என்றதொரு வரியை விதித்தார்கள். அதனை எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்றார் தில்லையாடி வள்ளியம்மை. அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே.
71. சிறையில் இருந்து அவர் விடுவிக்கபட்டபோதும், ’தலை வரியை அரசு ரத்துசெய்யாத வரை வெளியே வரமாட்டேன்’ என்று உறுதியாக உள்ளே இருந்தார் தில்லையாடி வள்ளியம்மை.
72. ஆங்கிலேய அரசு தலை வரியை நீக்கவே, வள்ளியம்மை சிறையிலிருந்து வெளியே வந்தார்.
73. பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் அறவழியில் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று பாராட்டி இருக்கிறார் காந்தி.
74. தென்னாப்ரிக்க போராட்டத்திற்கு ஆதரவாக 1903-ல் இந்தியன் ஒப்பீனியன் என்ற பத்திரிகை ஆரம்பித்தார் காந்தி.
75. இந்த பத்திரிகை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் அப்போது வெளியானது.
76. 1896 முதல் 1946 வரை தமிழ்நாட்டிற்கு 20 முறை வருகை தந்திருக்கிறார் காந்தி.
77. 1896-ல் முதல் முறையாக சென்னை வந்தபோது, தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது பயணச் செலவில் 12 ரூபாய்க்கு தமிழ் புத்தகங்களை வாங்கிச் சென்றார் காந்தி.
78. 1897-ல், காந்தி தம்பதியருக்கு மூன்றாவது மகனான பெயர் ராம்தாஸ் காந்தி பிறந்தார்.
79. 1990-ல், காந்தி தம்பதியருக்கு நான்காவது மகனான பெயர் தேவ்தாஸ் காந்தி பிறந்தார்.
80. 1905-ல், எழுதிய கடிதம் ஒன்றில், ’நான் சுறுசுறுப்பாக தமிழைக் கற்றுவருகிறேன். எல்லாம் சுமுகமாக நடைபெற்றால் தமிழ்க் கட்டுரைகளை இரண்டே மாதத்தில் என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று எழுதியிருக்கிறார்.
81. 1906-ல், ஜோஹன்னரஸ் பர்க் நகரில் முதன்முதலாக சத்யாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
82. தென்னாப்ரிக்காவில் பலமுறை சிறைக்கு சென்றார், வழக்காடி வெளியில் வந்தார்.
83. இப்படி படிப்படியாகப் போராடி, இந்தியர்கள் மற்றும் கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுக்கொடுத்தார்.
84. இவரின் புகழ் இந்தியாவிலிருக்கும் கோகலேவிற்கு எட்டவே, தாயகம் திரும்பி வருமாறு கோகலே காந்திக்கு அழைப்பு விடுத்தார்.
85. கோபால கிருஷ்ண கோகலேவின் வேண்டுகோளின்படி, 1915, ஜனவரி 9-ல் தனது குடும்பத்தாரோடு தாயகம் திரும்பினார் காந்தி.
86. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-ல் இந்தியா திரும்பிய போது காந்தியின் வயது 45.
87. மும்பை வந்து காந்தி இறங்கியபோது, கோபாலகிருஷ்ண கோகலே அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தார்.
88. காந்தி இந்தியாவிற்கு திரும்பிய ஜனவரி 9-ஆம் தேதியை ஓவ்வோராண்டும் நினைவுகூரும் விதமாக, 2003-ல் இருந்து, வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
89. 1919-ல் காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது, ராஜாஜியின் வீட்டில் தங்கியிருந்தார்.
90. ராஜாஜி வீட்டில் வைத்துதான் மகாகவி பாரதியார் காந்தியை சந்தித்தார். அன்று மாலை நடைபெறும் சுதேசியக் கூட்டத்திற்கு பாரதி அழைப்பு விடுத்தார். ஆனால் காந்தியால் அக்கூட்டத்திற்கு செல்லமுடியவில்லை.
91. வார்தாவிலுள்ள ஆசிரமத்தில் இருந்தபோது , இலங்கைத் தமிழரான வி.நாகலிங்கம் என்பவருக்கு ‘நீரில் எழுத்தாகும் யாக்கை’ என்று எழுதி மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார் காந்தி.
92. செப்டம்பர் 22, 1921 அன்று, காந்தி மதுரையில் பயணம் சென்றுகொண்டிருந்த போது, அரையாடையுடன் வேலை செய்துகொண்டிருந்த விவசாயியின் ஏழ்மை நிலையைக்கண்டார்.
93. என்று எம்மக்களின் வறுமை தீருகிறதோ, அன்றுதான் முழுமையாக ஆடை அணிவேன் என்று சபதம் எடுத்து, அன்றிலிருந்து அரையாடை உடுத்தத்தொடங்கினார் காந்தி. இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியை அரையாடை பக்கிரி என்றார்.
94. இதே அரையாடையுடன் லண்டன் மாநாட்டிற்கு சென்றுவிட்டு வந்தவரை ஆங்கிலேய பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு ஏன் இந்த அரைகுறை ஆடை என்று கேட்க, ‘எனக்கும் சேர்த்து உங்கள் மன்னர்தான் அணிந்து கொண்டிருக்கிறாரே’ என்றார் காந்தி.
95. ஆயுதபலம் மிக்க நம்மால் ஏன் காந்தியை ஏன் அடக்கமுடியவில்லை என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட, அதற்கு வின்ஸ்டன் சர்ச்சில் அளித்த பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. “அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியை தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கியை எடுத்து போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் அகிம்சை எனும் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். அகிம்சையை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்” என்றார்.
96. இந்திய விடுதலை வரலாற்றில் 1920 முதல் 1947 வரை காந்தியின் சகாப்தம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
97. விடுதலை வேண்டும் என்று காங்கிரஸ் இயக்கம் முக்கிய நகரங்களில் இருந்தபடியே குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.
98. படித்த, மேட்டுக்குடியினரின் கட்சியாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை பாமரருக்குமான இயக்கமாக மாற்றியவர் காந்தி.
99. இந்தியாவெங்கும் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றினார் காந்தி.
100. விடுதலை வேள்வி எல்லோர் மனதிலும் கொளுந்து விட்டு எரிவதற்கு காந்தியின் அறவழிப்போராட்டங்கள் கைகொடுத்தன.
101. ஒருபுறம் விடுதலைப் போராட்டம் நடைபெற்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனை கடுமையாக எதிர்த்தார் அம்பேத்கர்.
102. தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை அறிந்த காந்தி, 1933 நவம்பர் 7–ஹரிஜன் யாத்திரை மேற்கொண்டார் காந்தி.
103. வழிநெடுகிலும் ஆதிக்க சாதியினர் காந்தியை எதிர்த்தனர். அவரே கொலை செய்யும் முதல் முயற்சியும் இந்த யாத்திரையின் போதுதான் நிகழ்ந்தது.
104. தீண்டாமைக்கு முக்கிய காரணம் சாதி. அதனால் சாதியை முற்றிலும் இந்தியாவில் இருந்து ஓழிக்க வேண்டும் என்றார் காந்தி.
105. இந்த யாத்திரையின் தாக்கத்தால் மௌண்ட் பேட்டன் பிரபு, ‘ஒன் மேன் ஆர்மி’ என காந்தியை புகழ்ந்தார்.
106. உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் காந்தி.
107. காந்தியின் போராட்டங்களை தமிழ்நாட்டில் ராஜாஜி, பெரியார், காமராஜர் போன்றோர் முன்னெடுத்தனர்.
108. என்னதான் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக காந்தி போராட்டம் நடத்தினாலும், இந்தியாவில் நிலைமை அப்படியேதான் இருந்தது.
109. இதனால் காந்தியினை எல்லோரும் போற்றினாலும் அவரது கருத்துகளை கடுமையாக இரண்டு பேர் எதிர்த்தனர். ஒருவர் தில்லியில் இருந்த அண்ணல் அம்பேத்கர். மற்றொருவர் தந்தை பெரியார்.
110. 1921-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்தார் காந்தி.
111. லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கப்பல் மூலம் லண்டனுக்குச் சென்றார் காந்தி. அவர் விமானத்தில் பயணம் செய்தது கிடையாது. 1931, செப்டம்பர் 22 அன்று காந்தி இருக்கும் இடத்திற்கே சென்று சார்லி சாப்ளின் சந்தித்தார். மனித உழைப்பை முடக்கும் இயந்திரங்கள் காலனி ஆதிக்கத்தின் அடையாளம் என்றார் காந்தி. அதைத்தான் பின்னாட்களில் தான் தயாரித்த சிட்டி லைட்ஸ் படத்தில் ‘இயந்திர வாழ்க்கை’ குறித்து நகைச்சுவையாக பதிவு செய்திருப்பார் சார்லி சாப்லின்.
112. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது, காந்தி மிகவும் வருத்தமடைந்தார். தனது ஆதரவாளரான பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தன்னுடைய தோல்வி என்றார் காந்தி.
113. இதனால் வரிசையாக காந்தியின் ஆதரவாளர்கள் இயக்கத்தின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யவே, நேதாஜி இப்பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்திய ராணுவத்தை உருவாக்கச் சென்றுவிட்டார்.
114. 1910-ல், காந்தியை முதன் முதலில் ‘மகாத்மா’ என்று அழைத்தவர் மகாகவி பாரதியார்.
115. காந்தியை தேசத்தந்தை என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
116. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கணவன் மனைவியாக சிறைக்குச் சென்றனர் காந்தியும் கஸ்தூர்பாவும்.
117. இந்த போராட்டத்தின் போதுதான் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற புகழ்பெற்ற வாசகத்தை முழக்கமாக்கினார் காந்தி.
118. இப்போராட்டத்திற்காக சிறையில் இருக்கும்போதே 1944 பிப்ரவரி 2 அன்று கஸ்தூர்பா காலமானார். காந்தி கலங்கிப்போனார்.
119. தனது மூத்த மகன் ஹரிலாலையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் காந்தி.
120. தான் இன்னாரின் மகன் என்று தெரியப்படுத்தாமல் தனியாக உழைத்து பிழைக்க வேண்டும் என்று ஹரிலாலை சென்னைக்கு அனுப்பி வைத்தவர் காந்தி.
121. தந்தையின் சொல்படி ஓராண்டுகாலம் சென்னையில் தங்கி பல்வேறு வேலைகள் செய்து பிழைத்திருக்கிறார் ஹரிலால் காந்தி.
122. தன் வாழ்நாளில் இந்திய சுதந்திரத்திற்காக 139 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் காந்தி. இதில் மூன்று முறை தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
123. ஆப்ரிக்க சிறையில் 249 நாட்களும், இந்திய சிறையில் 2089 நாட்களும் காந்தி இருந்திருக்கிறார்.
124. விடுதலை பேச்சு வரும்போது இந்தியா தனியே, பாகிஸ்தான் தனியே பிரிக்க வேண்டும் என்று ஜின்னா சொன்னபோது கடுமையாக எதிர்த்தவர் காந்தி. இந்துவும் முஸ்லிமும் உடன்பிறவா சகோதரர்கள் என்றார்.
125. மவுண்ட் பேட்டனிடம் இந்தியாவை பிரிக்கும் எண்ணத்திற்கு தடைபோட்ட காந்தி, மாற்றாக இந்திய தேசத்தின் தலைவராக முகமது அலி ஜின்னாவே இருக்கட்டும் என்றார்.
126. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்றார் காந்தி.
127. தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார்.
128. இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 அன்று காந்தி கொல்கத்தாவில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் கலவரத்தை அமைதிப்படுத்தும் பணியில் இருந்தார்.
129. ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!
130. தனக்கோ, தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ எந்த ஒரு பதவியும், அரசு சலுகையும் இருக்காக்கூடாது என்றார் காந்தி.
131. விடுதலைக்குப் பிறகு சபர்மதி ஆசிரமத்தில்தான் தங்கி இருந்தார். கடவுள் உண்மையானவர் என்று தனது பிரார்த்தனையில் சொல்வார். விடுதலைப் போர் உச்சத்தில் இருந்தபோது ‘உண்மையே கடவுள்’ என்று உணர்ந்து சொன்னார்.
132. ஜனவரி 20, 1948-ல் காந்து செல்லும் பாதையில் வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது காந்தி தப்பித்துக்கொண்டார். அடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சேவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதமே ஆகியிருந்தது.
133. தில்லியிலுள்ள பிர்லா மாளிகையில் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்குமுன்பு ஒரு மணி நேரம் வல்லபாய் படேலும், காந்தியும் நாட்டின் நிலை குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் கலந்துரையாடினர். காந்தியிடம் தங்களின் உயிருக்கு ஆபத்திருக்கிறது என்றும், ஆசிரமத்தை சுற்றி காவலும், உள்ளே வருபவர்களை சோதனை செய்யவும் அனுமதி கேட்டார் படேல். காந்தி அதற்கு இசையவில்லை.
134. காந்தியின் படுகொலைச் செய்தியைக் கேட்ட தந்தை பெரியார் மிகவும் உடைந்துபோனார். இந்துஸ்தானத்திற்கு பதிலாக காந்திஸ்தானம் என்றும் இந்து மதத்திற்கு பதிலாக காந்தி மதம் என்றும் பெயர் சூட்டச் சொன்னார் பெரியார்.
135. உத்தமரை இழந்தோம். உலகமெங்கும் அழுகுரல் என்று இரங்கல் தெரிவித்தார் பேரரறிஞர் அண்ணா.
136. இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா. 1961 ஜனவரி 26-ல்!
137. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளால் அதிகமாக ஒருவருக்கு தபால்தலை வெளியிடப்பட்டதென்றால் அது மகாத்மா காந்தியின் தபால்தலை மட்டுமே. பூடான் நாடு காந்திக்கு பிளாஸ்டிக்கில் தபால் தலை வெளியிட்டது.
138. கிட்டத்தட்ட அடிமை நாடாக வைத்திருந்தபோதும், 77 ஆண்டுகள் காந்தியை பத்திரமாக பார்த்துக்கொண்டோம். சுதந்திரம் கிடைத்த ஆறு மாதத்திற்குள் படுகொலை செய்துவிட்டனர் இந்தியர் என்று இங்கிலாந்து ஆங்கில நாளேடு ஒன்று சுட்டிக்காட்டியது.
139. சர்வ மத பிரார்த்தனைக்காக எழுந்து வந்த பாதையை, அவரது காலடித்தடத்தை செயற்கையாக உருவாக்கி, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் வரை அந்த காலடித் தடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சுட்டுக்கொள்ளப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
140. `கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இது.
141. காந்தியத்தைப் பின்பற்றிய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
142. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
143. மகாத்மா காந்தியின் 125 பிறந்தநாளை முன்னிட்டு, 1995-ஆம் ஆண்டு, இந்திய அரசானது ’சர்வதேச காந்தி அமைதிப் பரிசினை’ உருவாக்கியது.
144. குஜராத்தி மொழியில், 1919-லிருந்து காந்தி நடத்திய நவஜீவன் இதழில், 1925 முதல் 1929 வரை, தனது சுயசரிதையை ‘The Story of My Experiments with Truth’ என்ற பெயரில் எழுதினார்.
145. காந்தி நடத்திய ‘யங் இந்தியா’ இதழில், மகாதேவ் தேசாய் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதுதான் தமிழில் சத்தியசோதனை என்ற பெயரில் ரா.வேங்கடராசுலுவால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
146. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆங்கிலத்தில் ஹரிஜன் என்ற பெயரிலும், குஜராத்தியில் ‘ஹரிஜன் பந்து’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹரிஜன் சேவக்’ என்ற பெயரிலும் இந்த வார இதழை நடத்தினார்.
147. மகாத்மா காந்தி இறந்த அன்று வானொலி ஒலிபரப்பு சேவையை நிறுத்தி அஞ்சலி செலுத்திய ஒரே நாடு இலங்கை.
148. “பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச்சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்.” என்றார் காந்தி.
149. இந்தியாவில் பிறந்த காந்திக்கு தென்னாப்ரிக்கா, கியூபா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. உலக அளவில் இத்தகைய பெருமையைப் பெற்ற முதல் மனிதர் மகாத்மா காந்திதான்.
150. “என்னுடைய பிறந்த நாளை புனித நாளாகக் கருதி அரசு விடுமுறை அளித்திருப்பது சட்டப்படி குற்றம்" என்று தனது ஹரிஜன் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ஆனால் நாம்தான் கேட்பதாக இல்லை.
-மோ.கணேசன். பத்திரிகையாளர். 01.10.2019
(காந்திஜியின் 150-வது பிறந்தநாளுக்காக தொகுத்தது)
நன்றி:
சத்திய சோதனை, தமிழ் இந்து இணையதளம், விக்கிபீடியா, பல்வேறு புத்தகங்கள், இணையதளங்கள்.