"த்தட்... த்தட்.. த்தட்...” என்ற துப்பாக்கி குண்டுகளின் ஓசை கேட்டு அந்த அதிகாலை நேரத்தில் கார்கில் பகுதி அவசரமாக விழித்துக்கொண்டது.
துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டதும், அந்த கூடாரத்திலிருந்து மேஜர் மோகன் ராஜின் கை தன்னாலயே அருகிலிருந்த ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக்கொண்டது.
சட்டென்று கூடாரத்தை விட்டு வெளியே வந்தவரை, கார்க்கில் மலைப்பகுதியின் பனி, அவர் அணிந்திருந்த ஜெர்க்கினையும் மீறி அவரது எலும்புகளில் ஊடுருவியது.
அந்த குளிரெல்லாம் அவரின் 55 வயதுக்கு அசாதரணம் என்றாலும்... அவரது 32 ஆண்டுகால ராணுவ சர்வீஸால் உரமேறிக்கிடந்த உடம்பு விரைப்பாகவே இருந்தது.
வந்தவர் ஒரு கண்ணால் குண்டு செல்லும் திசையை கவனித்துக்கொண்டே, மறு கண்ணால் தனது வாட்சைப் பார்த்தார். அவருடைய ரேடியம் வாட்ச் அப்போது அதிகாலை மணி 3.55 என்று காட்டியது.
அந்த அதிகாலை நேரத்தில் இருள் கவ்வி இருந்தாலும், லடாக் பிரதேசம் முழுக்க வெண்பனி போர்த்தி இருந்ததால், பார்வைக்கு வெண்மேகங்கள் போல் தெரிந்தன.
கார்டு பணியில் இருந்த ராணுவ வீரனை அழைத்தார்... "நவநீதன்...”
மேஜரின் குரல் கேட்டதும், ஓடி வந்த நவநீதன்... விறைப்பாக ராணுவ சல்யூட் ஒன்றை வைத்தபடி... “நமஸ்தே ஸாப்” என்றான்.
என்ன நவநீதன்... திடீர்னு பயரிங்..?
"தீவிரவாதிங்க ஊடுருவியிருக்காங்களாம் ஸாப்... ” அந்த கடும் குளிரிலும் நவநீதனின் குரல் கணீரென்று ஒலித்தது.
அப்போது வெகு வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்த ஹவில்தாரான வினோத், விரைப்பான சல்யூட் ஒன்றை வைத்துவிட்டு "நமஸ்தே ஸாப்... நாம இருக்கிறது 10 பேர்தான்... அதுல 3 பேருக்கு இப்போ நடந்த சண்டையில குண்டடி பட்டுடிச்சி. தீவிரவாதிங்க 20 பேர் இருந்தாங்க. அவங்கள்ல 5 பேரை வீழ்த்தியாச்சு... மீதி பேர் பனி மலை பகுதிகளில் ஒளிஞ்சிகிட்டிருக்காங்க சார்... ” என்றான்.
"லெப்டினன்ட் மோகனன் எங்கே...” என்றார் மேஜர்.
"லெப்டினென்ட்தான் சார்... உங்ககிட்ட தகவல் தரச்சொன்னார். அவர் தீவிரவாதிகளோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் சார்” என்றவன், ஸாப்... நாம இப்போ 7 பேர்தான் இருக்கிறோம். தாழ்வான இடத்தில் இருக்கிறோம். நம்மாள அவங்களுக்கு தெரியாம மேலே ஏற முடியாது. மீறினா பிணமாகத்தான் விழுவோம். நாங்க எடுத்துகிட்டு போன புல்லட்களும் தீர்ந்துவிட்டது. உடனே உங்களிடம் தகவல் தரச்சொல்லி அனுப்பினார் ஸாப்” என்று கடகடவென்று 20 நொடிகளில் செய்தியைச் சொல்லிவிட்டான் வினோத்.
அடுத்து ஒரு வினாடி கூட தாமதிக்கவில்லை மேஜர். அவர் வாயிலிருந்து கடகடவென்று உத்தரவுகள் பறக்க ஆரம்பித்தன.
கிளம்புங்க போகலாம்... நவநீதன் டென்டுக்குள் இருக்கும் எஸ்.எல்.ஆர். கன் இரண்டையும், உன்னால எவ்வளவு மேகஸின்களை எடுத்துக்கொள்ள முடியுமோ எடுத்துகிட்டு கிளம்பு. வினோத்... நீயும் மேகஸின்களையும், ஸ்னைப்பர் கன்னையும் எடுத்துக்கொள்... அவரது வாய் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கும்போதே... அவரது கைகள் புல்லட் மேகஸின்களையும், ஸ்னைப்பர் கன்னையும் வாரி எடுத்துக் கொண்டன.
அடுத்த சில நொடிகளுக்குள் மூன்று பேரின் கைகளிலும் துப்பாக்கிகளும், மேகஸின்களும் தூக்கக்கூடிய அளவை விட அதிகமாக இருந்தாலும்... தூக்கிக்கொண்டு வீரர்கள் இருக்கும் திசையை நோக்கி ஓடினர்.
ஓடிக்கொண்டிருக்கும்போதே... நவநீதன் இருக்கிற மேகஸின்களை நமது வீரர்களிடம் கொண்டு சென்று சேர்த்துவிடு. வினோத் உனக்கும் அதே ஆர்டர்தான்... மேகஸின்களைக் கொடுத்ததும் ஸ்னைப்பர் கன்னை எடுத்துக்கொள்.
அதற்குள் இந்திய வீரர்கள் தாக்குதல் நடக்கும் பகுதி கண்ணுக்கு புலப்பட்டது.
லெப்டினென்ட் மோகனன் தலைமையில் ஏரோ வடிவ வியுகத்தில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்த உறை பனியிலும் வீரர்களின் உடல்கள் பனியோடு பனியாக படர்ந்திருந்தது. நான்கு பேர் அங்கே போராடிக்கொண்டிருந்தனர்.
இந்திய வீரர்கள் இருந்த இடத்தை அடைய இன்னும் 100 அடி தூரமிருக்கும்போதே.... அவர்களது கால்களுக்கு அருகே... தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து சென்றன.
சட்டென்று மூவரும் பனியோடு பனியாக உருண்டனர். உருண்டபடியே... நான்கு பேருக்கும் மேகஸின்களை தூக்கி போட்டனர்.
மைனஸ் 20 டிகிரி பனி, அந்த மூவரின் உடம்பையும் உரசியபடி ஊடுருவியது. அதை சட்டை செய்யாமல் முன்னேற ஆரம்பித்தனர்.
சைகையால் இருவரையும் பிரிந்து சென்று தாக்குதல் நடத்த கட்டளையிட்ட மேஜர், அங்கேயே தனது ஸ்னைப்பர் கன்னோடு பதுங்கினார்.
மலை முகட்டிலிருந்து வெளிச்சம் வரும் பகுதியில் துல்லியமாக கணித்தவர், ஸ்னைப்பர் கன்னால்... தீவிரவாதிகளை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்.
அவரின் இருபுறமும் பிரிந்து சென்ற நவநீதனும், வினோத்தும் தாக்குதல் தொடுக்க, ரவுண்டிற்கு இரண்டு பேர் வீதம் மலையிலிருந்து விழுந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரை கபர்ஸ்தானிற்கு அனுப்பினார்கள்.
மேகஸின்கள் கிடைத்ததாலும், பின்புறம் மேஜர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டதாலும் உற்சாகமான இந்திய வீரர்கள் மெல்ல முன்னேற ஆரம்பித்தார்கள்.
"டோண்ட் மூவ். இருக்கிற இடத்திலேயே இருங்க... மோகனன் நிலமை எப்படி இருக்கு...” பின்னாலிருந்து மேஜரின் குரல் கேட்டதும், மோகனன் குரல் பிசிறடித்தப்படி வந்தது.
எங்க நாலு பேருக்குமே குண்டடி பட்டுடிச்சி சார்... ஆனாலும் யாரையும் முன்னேற விடல. நீங்க வரதுக்குள்ளள 3 பேரை காலி பண்ணிட்டோம். நீங்க வந்ததும் 4 பேரை காலி பண்ணியாச்சு. இன்னும் 8 பேர்தான் சார். முடிச்சிடலாம் ஸார்” என்றான்.
மேலே போகாதீங்க யாரும். காயத்துல பனிக்கட்டியை அள்ளி வச்சுக்கங்க. தலையை தூக்காம அடிச்சு துவம்சம் பண்ணுங்க... என்றார் மேஜர். விடியல் வந்துடுச்சின்னா... நாம இருக்கிறது எதிரிகளுக்கு நம்ம உடல் கண்ணுக்கு தெளிவா தெரிஞ்சிடும். எந்த இருட்டை அவங்களுக்கு சாதகமா இருக்கும்னு நினைச்சி, நம்ம தேசத்துக்குள்ள உள்ளே வந்தானுங்களோ... அந்த இருட்டுலயே பரலோகத்திற்கு அனுப்பிடணும். கமான் க்விக்... என்றார் மோகன் ராஜ்.
மோகனன், மோகன் ராஜ், வினோத்திடம் இருந்த ஸ்னைப்பர் கன்கள் கை கொடுக்க, நவநீதனின் அதி வேக செயல்பாடுகள் கைகொடுக்க, அடுத்த அரை மணி நேரத்திற்குள் தீவிரவாதிகளை சாய்த்து முடித்திருந்தார்கள். நம்மில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்திருந்தனர்.
வெள்ளிப்பனியை விலக்கிக்கொண்டு சூரியன் செங்கலரில் சோம்பல் முறித்து விழித்துப்பார்க்க, நம் இந்திய வீரர்கள் குண்டடிபட்ட வலியிலும், அந்த மூவரையும் தூக்கிக்கொண்டு, திரும்பிக்கொண்டிருந்தனர். மூன்று பேரை இழந்த சோகம் அவர்கள் கண்களில் இழையோடியது.
மேஜர் மோகன் ராஜ், இந்திய ராணுவ தலைமையகத்துக்கு... வயர்லெஸில் தகவலை சொல்ல ஆரம்பித்தார். "தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடித்தோம். மூன்று மாவீரர்களை இழந்துவிட்டோம். மற்ற அனைவருக்கும் குண்டடி பட்டிருக்கிறது. அடுத்த குழுவை அனுப்பி வைக்கவும். ஓவர்...”
**********************
கார்கில் போரின் போது நான் எழுதிய கதை இது... இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. இப்படித்தான் நமது ராணுவம் அங்கே போராடிக்கொண்டிருக்கிறது. எல்லையைக்காக்கும் நமது மனித குல சாமிகளுக்கு வீர வணக்கம்
மோ.கணேசன். பத்திரிகையாளன்
No comments:
Post a Comment