Thursday, October 29, 2009

பூரி ஜெகன் நாதர் கோவிலில் 800 ஆண்டுகளாக இருந்த தேவதாசி முறை ஒழிந்தது

பூரி, அக். 29: ஒரிஸ்ஸாவிலுள்ள  பூரி ஜெகன் நாதர் கோவிலில் கடந்த 800 ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறை அடியோடு ஒழி்ந்தது.

தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வரை வழி வழியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது ‘அதிகார வர்க்கத்தினர்’களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இம்முறைக்கு 1920 முதற்க்கொண்டு இந்தியாவில் பெரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆயினும் பூரி ஜெகன் நாதர் கோவிலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடந்ந 1990 களின் தொடக்கத்தில் புதிய தேவதாசிகளைக் கொண்டு வந்து இக்கோவிலில் வைத்திருக்க முயற்சி செய்தனர். ஆனால் தேசிய அளவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,  அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு எந்த பெண்ணும் அக்கோவிலில் தேவதாசியாக இருக்க முன்வரவில்லை. ஆதலால் இந்த தேவதாசி முறை அடியோடு இங்கு ஒழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

கோவிலில் நடனமாடுவது, கோவிலை தூய்மைப் படுத்துவது உள்ளிட்ட 36 விதமான சேவைகளை இந்த தேவதாசிகள் அக்கோவிலில் செயவார்களாம். இம்முறை கடந்த 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் மட்டுமே இறைவனுக்கு பெண்கள் சேவை செய்வது அனுமதிக்கப்படுகிறது என ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 07, 2009

ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் படுகொலை: உடல் கண்டுபிடிப்பு

மெல்போர்ன், அக்.7: ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்திய தொழில் அதிபர் பிரதீப் குமார்  (வயது 33) கொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் அவரது உடல் புதன்கிழமை (இன்று) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதீப் குமார் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மில்துரா நகரத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசித்து வருகிறார். அங்கு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தொழில் நிமித்தம் காரணமாக சிலரை சந்திப்பதற்காக, மில்துராவிலுள்ள நூலகத்திற்கு செல்வதாக கிளம்பியுள்ளார். அதிலிருந்துதான் அவர் காணவில்லை என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய காரை, மில்துரா நகரத்திற்கு வெளியேயுள்ள ரயில் நிலையம் அருகே நிற்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ, கிரெடிட் கார்டுகளிலிருந்தோ எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கண்டு பிடித்துள்ளனர்
.
இந்த கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிறவெறி காரணமாக ஏற்ப்ட்ட அமளியின் காரணமாக மற்றொரு இந்தியர் கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்தியர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.