அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
மேலும் அவரைப்பற்றி…
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.
பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…
சச்சினின் சாதனைகள்
சர்வதேச அளவில்…
கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.
டெஸ்ட் போட்டி சாதனைகள்
டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
ஒருதினப் போட்டி சாதனைகள்
அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியா ஆடிய இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…
ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.
1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.
1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.
இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின் தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.
இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.
இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்… இந்திய அணிக்கு திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை.
இவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார், வரும் 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.