ஹேமந்த் கார்க்கரே… பெயரைப் படித்தவுடன் ஞாபகம் வருகிறதா..? இந்தியாவின் மானம் காக்க, வீர மரணம் எய்திய மாவீரர். இவர் யார் என்று இன்னும் தெரியவில்லையெனில் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது, அவர்களை கொன்று குவித்து விட்டு, அங்குள்ளோரை காப்பாற்றும் போது தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் இந்த ஹேமந்த் கார்க்கரே. அதுமட்டுமின்றி பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவரராக இருந்து அந்த தாக்குதலை முறியடிக்க முன்னின்று நடத்திய வீரர்.
புல்லட் புரூப் எனப்படுகின்ற குண்டு துளைக்காத சட்டை அணிந்திருந்த கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இல்லை, அவர் உண்மையில் இந்தியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை தாக்குதல் சம்பவம் – சிறு பிளாஷ் பேக்
தேதி : 26 செப்டம்பர் 2008. இடம் : மும்பை, தாஜ் (ஐந்து நட்சத்திர) ஹோட்டல்
பாகிஸ்தானிலிருந்து இரவோடு இரவாக வந்த தீவிரவாதிகள் வழியெங்கும் துப்பாக்கி சூடு நடத்தியபடியே, தாஜ் ஹோட்டலுக்குள் சென்று விட்டனர். அங்குள்ளோரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். இத்தாக்குதலையடுத்து அங்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அதிரப்படை தாஜ் ஹோட்டலுக்கு விரைந்தது. அங்கு பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 7 அயல்நாட்டினர் உள்பட 15 பேரை மீட்க அதிரடிப்படை முற்பட்டது.
அப்போது பயங்கரவாதிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சுட்டுக் கொல்லப்பட்டார். கார்க்கரே புல்லட் புரூப் சட்டை அணிந்திருந்தும், அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.
இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அப்போது நடந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவல்துறை அதிகாரியும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலியானார்.
இதேபோல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி உயிரோடு பிடிக்கப்பட்டான்.
இதுதான் அன்று நடைபெற்ற சம்பவங்கள்…
தற்போது விடயத்திற்கு வருகிறேன்...
மாவீரன் ஹேமந்த் கார்க்கரே பயன்படுத்திய புல்லட் ப்ரூப் ஜாக்கெட் பயன்படுத்தத் தகுதியற்றது என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதன் தரம் பற்றி தெரிந்திருந்தும்… அது பயன் படுத்தத் தகுதியற்றது எனத் தெரிந்திருந்தும் நமது ஈனமிகு அதிகாரிகள் அதை அரசின் செலவில் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் ஊழல் செய்ததின் விளைவு… பல மாவீரர்களின் உயிர்களை அது குடித்து விட்டது.
இது குறித்து, பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சந்தோஷ் டாண்ட்கர் (Santhosh Dountkar) மேற்சொன்ன திடுக்கிடும் தகவலகளை வெளியிட்டுள்ளார்.
இவரும், இவரது வழக்கறிஞரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒய்.பி.சிங் ஆகிய மூவரும் சேர்ந்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
புல்லட் ப்ரூப் ஜாக்கெட் என்பது குண்டு, கத்தி போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கினாலும், அது நம் உடலைத் தாக்காது. அந்த ஆடை உலோக இழைகளைக் கொண்டும், பைபர் இழைகக் கொண்டும் தயாரிக்கப்படுவது ஆகும். (படம் பார்க்க)
இதை அணிந்து கொண்டால் குண்டு நம் உடலைத் தாக்காதாவறு தற்காத்துக் கொள்ளலாம். வெடிகுண்டு நிபுணர்களும் இதைப் பயன்படுத்துவர். இது கழுத்திலிருந்து அடி வயிறுவரை பாதுகாக்கும் கவசம் போன்று இருக்கும். (இதிகாசத்தில் வரும் கர்ணனின் கவச குண்டலம் போன்று…)
அப்படிப்பட்ட கவசத்தை அணிந்திருந்தும், குண்டு துளைத்து கார்க்கரே இறந்தது ஏன்?. இதுபற்றி அறிந்து கொள்ள, தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘தாக்குதலின் போது அணியப்பட்ட புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் எங்கு வாங்கப்பட்டவை, யாரிடம், எப்போது, எவ்வளவு கொடுத்து வாங்கப்பட்டது, என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டது என்று நம்மவர்கள், நியாயமான கேள்விகள் கேட்டு அனுப்பி உள்ளனர்.
இது, கடந்த 2008 டிசம்பர் மாதத்தில் தகவலறியும் உரிமைச் சட்த்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்க்கான பதில் இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் கிடைத்தது. அதுவும் எப்படி..? ‘அதற்க்கான கோப்புகள் காணவில்லை என்பதால்… நீங்கள் கேட்ட தகவல்களை எங்களால் தர இயலவில்லை’ என்று..!?
அதாவது காவல் துறையின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அலுவலகத்திலேயே கோப்புகளைக் காணோமாம்… (நாம் ஏதேனும் காணவில்லை எனில் காவல் துறையை நாடுவோம்... அங்கேயே கோப்புகளைக் காணோமாம்... அடங்கப்பா... தலை சுத்துடாங்கப்பா...) இருந்தாலும் விடாது போராடிய நம்மவர்கள்.. பரவாயில்ல.. இருக்கும் வரையிலான தகவல்களைக் கொடுங்கள் என மீண்டும் முறையிட.. ‘ அதன் பிறகு, அவர்கள் பட்டும் படாத தகவல்களைக் கொண்ட கோப்புகளை அளித்தனர்.
அதனை ஆய்வு செய்த போதே…இதில் பலவிதமான ஊழல்கள் நிறைந்துள்ளன என்பதை நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டனர்.
அவர்கள் அளித்த விவரத்தின்படி நம்மவர்கள் கண்டுபிடித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: (இத்தகவல்களை எல்லாம் நம்மவர்கள் தொடுத்துள்ள பொது நல வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை ஆகும்)
1) ஐம்பத்தி ஐந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டுமென்று மும்பை காவல் துறை ஆணையர் அலுவலகம், 2001 டிசம்பர் 6 அன்று டெண்டர் கோருகிறது.
2) பூனேவிலிருக்கும் என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் என்ற நிறுவனம், இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை தயாரிப்பதில் எந்த ஒரு அனுபவமே இல்லாத நிறுவனமாக இருந்தும், தனது விலை விவர விண்ணப்பத்தை (கொட்டேஷனை) 2002, ஜனவரி 3-ம் தேதி சமர்ப்பிக்கிறது.
3) 2002, மார்ச் 30-ம் தேதி இந்த விலை விவர விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக மும்பை காவல்துறை ஆணையரக அலுவகம் கடிதம் வாயிலாக தெரிவிக்கிறது.
4) இதே தேதியில், என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் நிறுவனம் இந்த புல்லட் ப்ரூப் ஆடைகளை, காவல் துறை ஆணையரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக கடிதம் அனுப்பி இருக்கிறது.
5) ஆனால், தணிக்கைத் துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ஜூன் 4, 2002 அன்றுதான் இந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதையடுத்த ஒரு மாதத்திலேயே 55 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளுக்குப் பதிலாக 110 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
6) இதனுடைய மொத்த கொள்முதல் விலை ரூபாய் 24.71 லட்சம் ஆகும். ஆனால் 2004-ல்தான் இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வந்து சேர்ந்துள்ளன. இதன் பிறகே காசோலை மூலம் அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
7) வந்து சேர்ந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை சோதனையிட்டதில், அவைகள் தரமற்றவை என்றும், அவைகளைப் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாகும் என்றும் தெரிய வந்தது. ஆதலால் அந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளனைத்தும் அதே நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டன. பணமும் திரும்பப் பெறப்பட்டது. இது நடந்தது 2004. செப்டம்பர் 2.
8) தரமற்ற பொருட்களை கொடுத்தற்காகவும், காலம் தாழ்த்தி கொடுத்ததற்காகவும் அந்த நிறுவனத்தின் மேல் அபாராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையை அந்த காவல் துறை ஆணையரக அலுவலகம் எடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ஏனோ அது எடுக்கப்படவில்லை.
9) 2004, டிசம்பரில் அதே நிறிவனம் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளில் இருந்த குறைகளை சரிசெய்து விட்டதாகக் கூறி, அதே தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை ஒப்படைத்துள்ளது.
10) அது முறையாக சரிசெய்யப்பட்டிருக்கிறதா..? பயன்படுத்த முடியுமா..? தரமானதாக இருக்கிறதா..? என்று யாரும் அதை சோதனை செய்யவில்லை. (சோதனை செய்ததற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை…) அப்படியே வாங்கி வைத்துக் கொண்டனர். அந்நிறுவனமோ கொடுத்த பணத்தை 2005, ஜூலை 14 அன்று வாங்கிக் கொண்டது.
இந்த தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளைத்தான் அன்று பல உயிர்களைக் காப்பற்றுவதற்க்காக ஹேமந்த் கார்க்ரே உள்ளிட்ட பல மாவீரர்கள் அணிந்து கொண்டு போரிட்டனர். அந்த வீரப்போராட்டத்தில் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகி அவர்கள் வீரமரணம் எய்தினர்.
(தாக்குதலுக்கு முன்பாக கார்க்கரே புல்லட் ப்ரூப் உடையை அணிந்து கொண்டிந்த காட்சி...)
இந்திய ராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை தயாரிக்கும் அமைப்பான டி.ஆர்.டி.ஓ ( Defence Research & Development Organisation: DRDO)) வின் தர அளவீட்டின்படி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் என்பது கழுத்திலிருந்து, அடிவயிறு வரை கவசமாக இருக்கும். ஆனால் இவர்கள் வாங்கிய புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளோ பனியன் போன்ற அமைப்பில் இருந்தது.. (பார்க்க படம்…)
இந்த ஜாக்கெட்டுகள் தரமானவைகளாக இருந்திருந்தால்... அன்று அத்துனை மாவீரர்களின் உயிர்களும் பறிபோயிருக்குமா..? அவர்களுடைய திறமைகள் மண்ணோடு மண்ணாகியிருக்குமா..?
இப்போது சொல்லுங்கள்..? ஹேமந்த் கார்க்கரே போன்ற மாவீரர்களை தீவிரவாதிகள் கொன்றார்களா..? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த இந்தியர்கள் கொன்றார்களா..? வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும்.. இந்த ஈனப்பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்…
இந்த வழக்கின் மூலம் நம்மவர்கள் … இது குறித்து தனியாக விசாரணைக் கமிஷன் அமைத்து… உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என மனு செய்திருக்கிறார்கள்.
ஏனோ… தானோ என்று கிடைத்த கோப்பிலேயே இவ்வளவு தகவல்கள் என்றால், சரியான கோப்புகள் கிடைத்தால்..? இந்த நாய்களின்.. இல்லை… இல்லை… நாய்கள் நன்றி உள்ளவை… இந்த ஈனப் பன்றிகளின் ஈனச்செயல்கள் வெளிக்கொண்டு வந்துவிடமுடியாதா என்ன..?
இது தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்… இதற்குண்டானவர்களை கண்டு பிடித்து இதே புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை அணியவைத்து அவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்…
இது போன்ற ஈனப் பன்றிகள் இருக்கும் வரை எம் தேசம் நிம்மதியாக வாழுமா..? வாழ்க எம் தேசம்..! வளர்க தேசத் துரோகிகள்..!
(இந்தச் செய்தியை எனக்குத் தெரிந்த வரையில், எந்த ஒரு தமிழ் நாளிதழ்களும் வெளியிடவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (13.11.2009) வெளியிட்டுள்ளது. இதன் முழுமையான ஆங்கில மூலத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்…)
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2009/11/13&PageLabel=10&EntityId=Ar01001&ViewMode=HTML&GZ=T
(எனக்கு அவ்வளவாக ஆங்கிலப் புலமையில்லை, ஆன வரை முயற்சித்திருக்கிறேன்… தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்…)
செய்தி மற்றும் புகைப்பட உதவி: http://timesofindia.indiatimes.com/
9 comments:
நல்ல பதிவு, எந்த பத்திரிக்கையிலும் வர வில்லை என்று எழுதியிருக்கிறீர்கள், ஆணால் இந்தியா டுடே மற்றும் ndtv -ல எல்லாம் உடனே அப்பவே வந்திடுச்சே! ஆணால் வழக்கம்போல இந்தியாவுல என்ன நடக்குமோ, நடக்கணுமோ அது நடந்தது!
இதே அமெரிக்காவா இருந்தா, ஒபாமாவே பொதுவில் மண்ணிப்பு கேட்டிருப்பார், குற்றவாளிகள் தண்டிக்கபட்டிருப்பார்கள்! சோனியாவுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது! என்ன செய்ய?!
அன்பு நண்பருக்கு...
தங்களின் வருகைக்கும், சிறப்பான கருத்திற்கும் எனது ந்ன்றிகள்...
க்ஷ, இந்தியா டுடே பார்க்க, படிக்க புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழக கிராமங்கள், அங்குள்ளோர்கள் இன்னும் வளரவில்லை... என்பது என் எண்ணம்...
நான் நாளிதழ்கள் ஏதும் வெளியிடவில்லை என்றுதான் எழுதியிருக்கிறேன்.. இந்தியா டுடே வார இதழ்...
வாதத்திற்காக சொல்லவில்லை.. யதார்தத்திற்காக சொல்கிறேன்...
இதே ஒரு தினமலர், தினமணியில் வந்திருந்தால் தமிழகத்தின் கடைக் கோடிக்கும் சென்றிருக்கும் என்பதால் அப்படிக் கூறினேன்...
தெரிந்து மட்டும் என்ன ஆகப் போகிறது என கேட்காதீர்கள்...
சாது மிரண்டால் காடு கொள்ளாது... ஆனால் என்று சாது மிரளும் என்பதுதான் தம் போன்றோரின் கவலை...
தாங்கள் கூறுவது சரிதான், இதற்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது! இந்த விடயத்தில் மட்டுமில்லை, காங்கிரசு அரசு அப்போதிலிருந்தே மெத்தன போக்குடன்தான் நடந்து கொண்டிருக்கிறது!
(தீவிரவாதிகள் விசயத்தில்!)
(pls remove word verification, so that more people can approch u nicely!, thanks!)
நன்றி..தோழரே...
காங்கிரசு அரசு, இந்த தீவிரவாத விட(ய)த்தில்... 'தடியும் நோகாமல், பாம்பிற்கும் வலிக்காமல் அடிக்க வேண்டும்' என்பதில் அப்போதிருந்தே முனைப்பாயிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...
இல்லையெனில் இன்னும் அந்த அப்சல் குரு தூக்கிற்கு செல்லாமல் நிம்மதியாய் பிரியாணி தின்று கொண்டு இருப்பானா (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி...)
'தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா... இப் (சுதந்திரப்) பயிரை கண்ணீராற்க் காத்தோம்' என்றார் பாரதி...
இன்று நம்மவர்கள் செந்நீரால் காக்கின்றனர்... ஆனால் ஆட்சியாளர்கள் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்...
பாவம் இந்திய மக்கள்...
அன்புத் தோழருக்கு...
தாங்கள் சுட்டிக் காட்டிய word verification - ஐ நீக்கி விட்டேன்...
தகவலுக்கு மிக்க நன்றி.. நான் கொடுத்த சிரமத்திற்கும் மன்னிக்கவும்.
முழுமையான தகவலுக்கு நன்றி.
அன்பு நண்பருக்கு...
தங்களின் வருகைக்கும், சிறப்பான கருத்திற்கும் எனது நன்றிகள்...
நன்றிங்கோவ்
நீங்கள் அறியாத பல உண்மைகள் இதில் இருக்கிறது நான் உங்களுக்கு ஒரு புத்தகம் ஒன்றை ரேக்கமன்ட் செய்ய ஆசை படுகிறேன் ஹேமந்த் கார்க்கரேயின் உயிர் நண்பரால் எழுதப்பட்டது இந்த லிங்கை கிலிக் செய்க
https://www.commonfolks.in/books/d/karkareyai-kondrathu-yaar
Post a Comment