Monday, May 23, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 2 (உண்மைச் சம்பவம்)

குன்றத்தூரின் கடைசிப் பகுதியில் இருந்தது கணேஷ் நகர். இதன் கடைசித் தெருவில், கடைசி வீடாக இருக்கும் மாடி வீடுதான் வேதாசலத்தில் வீடு.

அந்த அர்த்த ராத்திரியிலும் உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க, பேச்சுக் குரல் கேட்டது.

"ஏங்க... உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். நேரங்கெட்ட நேரத்தில பையனை வசூலுக்கு அனுப்பாதீங்கன்னு... இப்ப பார்த்தீங்களா மணி 12.40 ஆகுது. என் பையன இன்னும் காணோம்" என்ற கமலம்மாளுக்கு வயது 42 இருக்கும். கனத்த உடம்பு. பார்ப்பதற்கு நடிகை காந்திமதியை போல இருப்பார். ஆனால் உயரம் குறைவு.

"ஏண்டி சும்மா கெடந்து புலம்பற... அவன் என்ன சின்ன பையனா... வழி தெரியாம போறதுக்கு... கூட நம்ப மாப்பிள்ளையும் போயிருக்காருல்ல... வந்துருவான்..." என்று கமலம்மாளை அதட்டிய வேதாசலத்திற்கு வயது 48 இருக்கும். காதருகே நரைத்த முடிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தன. கடா மீசை வைத்து, இறுகிய முகமாகத் தெரிந்தார்.

"உங்களுக்கென்ன வாயில வந்ததை சொல்லிட்டீங்க... பெத்தவளுக்குதானே தெரியும். இன்னிக்கு நிறைஞ்ச அமாவாசை வேற..."

"சரி... சரி... கிடந்து புலம்பாத, நான் ரோடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரேன்..." என்றபடி வீட்டை விட்டு கிளம்பினார் வேதாசலம்.

அந்த ஏரியாவே தூங்கிக் வழிந்து கொண்டிருக்க, வாயில் ஒரு சுருட்டைப் பற்ற வைத்தபடி அந்த நள்ளிரவில் ரோட்டை நோக்கி நடந்தார்.

அவர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டிருந்தது. 'சாயந்திரமே அவனுங்களை வசூலுக்கு அனுப்பிட்டேன். அப்படியே நேரமானாக் கூட பத்து மணிக்கெல்லாம் வந்திருக்கலாமே. ஏன் இன்னும் வரல..? ஏதாவது ஏடாகூடமா நடந்திருக்குமோ?' என்ற எண்ணம் வந்து வந்து மறைந்தது.

யோசித்துக் கொண்டே ரோட்டிற்கு வந்த வேதாசலம் எதிரே வந்த சைக்கிளுக்கு வழிவிட்டு விட்டு, சைக்கிள் வந்த திசையில் தன் பார்வையை ஓட விட்டார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சற்று நேரம் அந்த திசையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வேதாசலத்தின் புருவங்கள் திடீரென்று உயர்ந்தன. தூரத்தில் தெரிந்த ஒரு வெளிச்சப்புள்ளி மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த வெளிச்சப்புள்ளி ஒரு டிவிஎஸ்ஸில் இருந்து வந்து கொண்டிருந்தது.

'அப்பாடா... வர்றது நம்ம பசங்க மாதிரிதான் இருக்கு...' என்று தன் மனதுக்குள் நினைத்தவாறு, வாகனத்தை எதிர் நோக்கியிருந்தார். வேகமாக வந்த டிவிஎஸ் அவரைக் கடந்து போனது.

ஏமாற்றத்துடன் வாகனம் வந்த திசையைப் பார்த்தார் வேதாசலம். ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை. பதினைந்து நிமிடத்திற்கும் மேல் காத்திருந்துவிட்டு, பொறுமை இழந்தவராய் வீடு திரும்பினார்.

* * * * * * * *

தே நேரத்தில் டிவிஎஸ் குன்றத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. ராமுவின் தோள் மேல் இருந்த சங்கரின் கைகள், அந்த உருவம் அவன் மேல் இறங்க ஆரம்பித்த பயத்தில் தானாக ராமுவின் இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டது.

"என்னடா திடீர்னு இடுப்பைப் பிடிக்கிற..?" என ராமு கேட்க சங்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சங்கரின் உடம்பில் அளவுக்கு அதிகமாக வியர்வை பெருகியதால், அது அவனது சட்டையை நனைத்தது மட்டுமின்றி, ராமுவின் முதுகுப் பக்கத்தையும் நனைத்தது.

"டேய் சங்கர்... உச்சா போறியா என்ன? முதுகு இப்படி நனையுது" என கிண்டலாகக் கேட்டான் ராமு. அதற்கும் சங்கரிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக அவனது கை ராமுவின் இடுப்பை மேலும் இறுக்க ஆரம்பித்தது.

"டேய்.... டேய்... முதுகை நனைக்கற, வயித்த இறுக்கற... என்னடா ஆச்சி உனக்கு..?" என சற்று கோபமாகவே கேட்டான் ராமு. அப்போதும் சங்கரிடமிருந்து பதிலில்லை.

இதனிடையே வண்டி குன்றத்தூருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாய் சாலையின் இரு ஓரங்களிலும் நின்று கொண்டிருந்த சோடியம் விளக்குகள் முட்டைக் கண்ணை விழித்துக் காட்டுவதைப் போல் விழித்துக் கொண்டிருந்தன.

"என்னடா... நான் கேட்டுகிட்டே வர்றேன்... பதிலே பேசமாட்டேங்கற... தூங்கி தொலைச்சிட்டியா..?" என்றபடியே வண்டியை சாலையின் ஓரமாக கொண்டு போய் நிறுத்தினான்.

வண்டியை நிறுத்தி விட்டு, உட்கார்ந்திருந்த படியே மெல்ல சங்கரின் கையைத் தொட்டான். அவனது கை சில்லிட்டிருந்தது.

'கை சில்லுன்னு இருக்கே...' என்று யோசித்தபடி கையை மெதுவாக விலக்கி விட்டு, தன் தலையை திருப்பி அவனது முகத்தைப் பார்த்தான்.

சங்கரின் தலை தொங்கிப் போயிருந்தது. “டேய்... தூங்காதடா... இன்னும் அரை கிலோ மீட்டர் தாண்டினா வீடு வந்துடும்” என்றவாறே அவனது கன்னத்தை தட்டினான்.

அவன் கை ஈரமாகவே, சங்கரின் முகத்தை தன் கையால் நிமிர்த்திப் பார்த்தான். சோடியம் விளக்கு வெளிச்சத்திலும் அவனது முகம் இருண்டு போயிருந்தது. அதுமட்டுமின்றி அவனது கடவாயின் ஓரம் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.
அதுவரை இயல்பாகப் பேசிய ராமு, அவனுடைய இருண்ட முகத்தைப் பார்த்த பிறகு சற்றே படபடப்பிற்குள்ளானான்.

"டேய் சங்கர்... சங்கர்..." என்று அவனது கன்னத்தை தட்டி கூப்பிட்டான். பதிலில்லை.

சங்கரின் தாடையை சற்று நிமிர்த்தினான். அவன் வாயில் ஒழுகிய எச்சிலைத் துடைக்கப் போனான். அப்போது சங்கரிடமிருந்து, “நற.. நற..” வென்று அவனது பல்லை கடிக்கும் ஓசை மட்டும் கேட்டது.

சத்தத்தைக் கேட்ட ராமு ஆடிப்போய் விட்டான். "ஐயோ என்ன ஆச்சின்னே தெரியலயே..? மாமாவுக்கும் அக்காவுக்கும் நான் என்னான்னு பதில் சொல்லுவேன்..?" என்று பிதற்றியபடி, சங்கரை தன் தோள் மீது பழையபடி கிடத்திக் கொண்டு, டிவிஎஸ்ஸை அதிவேகமாக உதைத்துக் கிளப்பினான்.

ராமுவின் உதை தாங்கமுடியாமல்... இதோ கிளம்பிட்டேன் என்பது போல் உறுமிக்கொண்டு ஓட ஆரம்பித்தது அந்த டிவிஎஸ்.

டிவிஎஸ்ஸின் சத்தத்தை விட சங்கர் பல்லைக் கடிக்கும் சத்தம் சங்கருக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

சங்கர் முன்பு இருந்த எடையை விட, இப்போது அதிக எடை கூடியது போல் ராமுவுக்கு தோன்றியது.

அரைகிலோ மீட்டர் தூரத்தை அவஸ்தையுடன் கடந்து விட்டு, நேரே வேதாசலம் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

வண்டி வந்த சத்தம் கேட்டதும், வராண்டாவில் கட்டிப்போட்டிருந்த பொமரேனியன் நாய் "வள்... வள்..." என்று குறைக்க ஆரம்பித்தது.

"டேய் ஜிம்மி..." என்று ராமு குரல் கொடுக்க... பழக்கப்பட்ட குரலைக் கண்டதும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.

ஜிம்மியின் குரலையடுத்து, ராமுவின் குரல் கேட்கவே இவர்களுக்காக காத்திருந்த வேதாசலமும், கமலம்மாளும் கதவைத் திறந்தபடி வந்தனர்.

"ஏம்பா இவ்வளவு நேரம்..? மணி 12.30 மேலாயிடுச்சி..? இவ்ளோ நேரமாவா வசூல் பண்ணுணீங்க..?" என்றவாறே வெளி கேட்டை திறந்து விட்டார் வேதாசலம்.

"என்னப்பா சங்கர் வண்டியிலயே தூங்கிட்டானா..?" என்று வாசலில் நின்றிருந்த கமலம்மாள் கேட்டார்.

ஒன்றும் பேசாமல் இருந்த ராமு, வண்டியை விட்டு கீழிறங்கி சங்கரை கைத்தாங்கலாக, இறக்கி கூட்டிக்கொண்டு வரவும்... "எம்பையனுக்கு என்னாச்சி..?" என்று கத்தியபடியே கமலம்மாள் ஓடி வந்தார்.

"என்னாச்சின்னே தெரியல அத்தை... வர்ற வழியில ஒரு பாலம் இருக்குல்ல அங்க வந்திட்டிருக்கும் போது வண்டி திடீர்னு நின்னுடிச்சி..." என்று
சொல்லியபடியே சங்கரை அழத்துக் கொண்டு கேட்டை தாண்டி வராந்தாவிற்குள் வந்தான் ராமு.

ராமுவின் குரலைக் கேட்டு வாலாட்டிக கொண்டிருந்த ஜிம்மி, சங்கரைப் பார்த்ததும் "லொள்... லொள்.." என்று பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது.

"ஏய் ஜிம்மி... என்னாச்சி உனக்கு..? சும்மாயிருக்க மாட்ட..." வேதாசலம் ஜிம்மியை அதட்ட, அதட்டலை சட்டை செய்யாத ஜிம்மி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.

"அடச்சே... சும்மா கிட... உன்னை வளர்த்தவனையே அடையாளம் தெரியலயா..?" என்றபடி ஜிம்மியை அதட்டினார் கமலம்மாள்.

அதற்குள் சங்கரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான் ராமு. அதன்பிறகே ஜிம்மியின் குரல் அடங்கியது.

படுக்கை அறையில் சங்கரைப் படுக்க வைத்துவிட்டு, சற்று ஆசுவசுப்படுத்திக் கொண்டான் ராமு. சங்கரைப் பார்த்தான். அவன் முகம் களையிழந்து, இருண்டு போயிருந்தது. வாயின் ஓரம் எச்சில் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அதைப்பார்த்த கமலம்மாள் "ஐயோ... எம்புள்ளைக்கு என்ன ஆச்சின்னே தெரியலயே..?" என அழ ஆரம்பிக்க... "செத்த நேரம் சும்மாயிருடி... என்ன ஏதுன்னு தெரியாம அழுது புலம்பாத..." என்று அதட்டிய வேதாசலம் ராமுவின் பக்கம் திரும்பி "என்ன மாப்பிள ஆச்சி..? எந்த பாலத்துகிட்ட வண்டி நின்னுச்சின்னீங்க..?"

"சிங்கபுரம் தாண்டினதுமே ஒரு பாலம் வருதுல்ல அந்த பாலத்துக்கிட்டதான் மாமா. வண்டியை எவ்ளோ நேரமா ஸ்டார்ட் பண்ணி பார்த்தேன் வேலைக்காவுல... அப்ப சங்கர் பாலத்துக்கு இடது பக்கமா பாத்துகிட்டிருந்தான்.
திடீர்னு என்னைக் கூப்பிட்டவன், மாமா அந்த இடத்துல வெள்ளையா ஒண்ணு தெரியுது மாமா'' என்பதில் ஆரம்பித்து, வீடு வந்தவரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

"அந்த பெரிய பாலத்துகிட்டயா..?" என்று கேட்ட வேதாசலத்தின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

"ஆமாம் மாமா..." என்றான் ராமு

"அந்த இடத்துல... அந்த இடத்துல..." இந்த ரெண்டு வார்த்தை சொல்வதற்குள் வேதாசலம் முகம் குப்பென்று வியர்த்துப் போனது.

"அந்த இடத்துல... அந்த இடத்துல என்ன மாமா..?" குழப்பத்தோடு ராமு கேட்டான் .

வேதசலம் பயம் கலந்த குரலில் “அந்த இடத்துல...”

(அடுத்த வாரம் தொடரும்) 
++++++++++++++++++

கதையின் மற்ற பாகங்கள் படிக்க...

முதல் பாகம்இரண்டாம் பாகம்மூன்றாம் பாகம்,

6 comments:

viswam said...

ரொம்பவும் நன்றாக இருக்கிறது. திகில் கதை படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. அடுத்தாவாரம் வரை காத்திருக்கப் பொறுமையில்லை. தினசரி எழுதுங்கள்.

Natu said...

அந்த இடத்துல அப்படி இன்னாங்க சார் இருக்கு அயோ அதுக்கு அடுத்த வாரம் வரைக்கும் காத்திருகனுமா ..........x

இப்பவே பயமா இருக்கே நல்ல வேலை நான் வீட்டுக்கு போகும் போது படிகல .....

மோகனன் said...

தங்களின் வருகைக்கும், அழகான கருத்திற்கும் எனது நன்றிகள் விஸ்வம்...

தினமும் எழுத அலுவல் ஒத்துழைக்காது... ஆதலால்தான் வாரா வாராம்...

காத்திருங்கள் அடுத்த திங்கள் வரை...

அடிக்கடி படிக்க வாங்க..!

மோகனன் said...

அந்த இடத்துல என்னா இருந்துச்சின்னா...

என்னா இருந்துச்சின்னா...
என்னா இருந்துச்சின்னா...
என்னா இருந்துச்சின்னா...
என்னா இருந்துச்சின்னா...

அடுத்த வாரம் சொல்றேனே...!

அந்தளவுக்கா பயமா இருந்துச்சி... ம்ம்ம்... நம்பிட்டேனுங்க..!

அடிக்கடி படிக்க வாங்க..!

Tamil selvam said...

hi...

story second part padithern . super..

anta edaththula ena achenu... sekarama sollunga boss...

மோகனன் said...

அந்த இடத்துல என்னா இருந்துச்சின்னா நண்பா...

என்னா இருந்துச்சின்னா...
என்னா இருந்துச்சின்னா...
என்னா இருந்துச்சின்னா...
என்னா இருந்துச்சின்னா...

அடுத்த வாரம் கண்டீப்பா சொல்றேன் நண்பரே..!