Monday, June 13, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 5 (உண்மைச் சம்பவம்)

ப்போது.... வேகமாய் போய்க்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு ஊமையானது.

விகாரமாய் சிரிக்கத் தொடங்கிய வேதாசலம், திடீரென்று கர்ண கடுரமாய் கத்த ஆரம்பித்தார்.

“டேய்... எம்புள்ளைய காப்பாத்த கருப்பசாமி இருக்கான்டா... எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்...” என்றபடியே பல்லை நற நறவென்று கடித்தார்.

ஆட்டோ திடீரென்று நின்றதால் கூட அரண்டு போகாத ஆட்டோ டிரைவர், வேதாசலத்தின் திடீர் குரலால் சற்று அரண்டு போனான். ஆட்டோவின் இயக்கம் நின்றுபோனதால் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

‘போன சவாரிக்கு முன்புதானே டீசல் டேங்க் புல் பண்ணினேன்? புது ஆட்டோ இது... ஏன் நின்னு போச்சு?’ என மனதிற்குள் தீவிரமாய் யோசித்தபடியே ஆட்டோவின் கிக்கரை, தடக் தடக்கென்று கையால் தூக்கி அடித்தான். ஆட்டோவிற்கு உயிர் வருவதாய்த் தெரியவில்லை.

இதனிடையே குரூரமாக சிரித்துக் கொண்டிருந்த வேதாசலம் திடீரென அழ ஆரம்பித்தார். “ஏய்... எம் பையன விட்டுடு... எதுக்கு எங்க பின்னாடியே வர... வெள்ளை உருவமா வந்து தொலையறியே...” என ஆட்டோவின் பின்புறமாய் பார்த்து கத்தியவர், “எப்பா ஆட்டோ டிரைவர் அது ஆட்டோ பின்னாடியே வருதுப்பா... சீக்கிரம் எடு, இல்லன்னா அது ஆட்டோவை பிடிச்சிடும் போல இருக்கு... சீக்கிரம்… சீக்கிரமா ஆட்டோவை எடு...” என்று அவசரப்படுத்தினார்.
இவரது திடீர் எச்சரிக்கையால் ஆட்டோவில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆட்டோ டிரைவரின் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது போல் இருந்தது.

‘என்னடா இது? போயும் போயும் பேய் சவாரிகிட்ட போய் மாட்டிகிட்டோமே... புது ஆட்டோ திடீர்னு நின்னதுக்கு இதுதான் காரணமா இருக்குமா..?’ என்ற உதறல் அவனுக்குள் எழும்ப, வண்டியின் கிக்கரை வேகமாக இழுத்து அடித்தான். அடித்த அடி தாங்காமல் “வ்ர்ர்ரூம்...” என்ற படியே ஸ்டார்ட் ஆனது.

ஸ்டார்ட் ஆனதுதான் தாமதம், ஆட்டோவை புயல் வேகத்தில் கிளப்பினான். அந்த தேசிய நெடுஞ்சாலையில் பலமுறை சவாரி செய்திருந்தாலும், இந்த வேகத்தில் இதுவரை போயிருக்கமாட்டோம் என்று அவனுக்கே தோன்றும் அளவுக்கு ஆட்டோவை விரட்டினான்.

நவநீதன் ஆட்டோவின் பின்புறம் திரும்பித் திரும்பி பார்த்தான். வேதாசலம் சொன்னது போல ஒரு உருவமும் தென்படவில்லை. எங்கும் இருளாகத்தான் இருந்தது. நவநீதனிற்கு ஒரே குழப்ப மயம். ‘இந்த சாமி, கீமி..., பேய், பிசாசு எதுவுமே இல்லன்னு சொல்ற ஆள் நான். நம்ம கண் முன்னாடியே இவர் வெள்ளையா உருவம் வருதுங்கறாரே’ என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த சிந்தனையை கலைப்பது போல் மீண்டும் வேதாசலம் தன் பற்களை கடிக்க ஆரம்பித்தார். “ஏய்... வண்டி பின்னாடியே வரியா... நான் கூட இருக்கிறேங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லையா உனக்கு... வாடா... வா... கருப்பசாமியா... நீயான்னு ஒரு கை பாத்துடறேன்...” என்று இருட்டைப் பார்த்து கத்தினார்.

இதைக் கேட்ட கமலம்மாள் டிரைவரைப் பார்த்து, பதற்றமான குரலில் “இந்தாப்பா... ஆட்டோ டிரைவர், என்ன நடந்தாலும் சரி. ஆட்டோவை மட்டும் எங்கயும் நிறுத்தாத. பாய் வீட்டுக்கு முன்னாடிதான் வண்டிய போய் நிறுத்தணும்” என்றார். அவர் குரலில் நடுக்கம் இருந்தது.

இவர்களிருவரும் பேசுவதைக் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. அவன் தன் மனதிற்குள் அவன் இஷ்ட தேவதைகளை வேண்டிக் கொண்டான் போல, அவன் முணுமுணுத்தது, நவநீதன் காதில் துல்லியமாய் கேட்டது. ‘இன்னும் நாலே கிலோ மீட்டர்தான். தேவியாக்குறிச்சிக்கு போயிடலாம்’ என்று எண்ணியபடியே, அந்த பயத்திலும் ஆட்டோவை வேகமாக விரட்டினான்.

வேதாசலம் மீண்டும் ஒரு முறை திடீரென்று அழ ஆரம்பித்தவர். “டேய் சங்கரு... நம்ம குலதெய்வம் கருப்பசாமி உன்னை காப்பாத்துவான்டா... வெள்ளை உருவம் உன் பின்னாடியே வருதுன்னு கவலப்படாத... கருப்பசாமி இருக்கான்டா” என்றார். சங்கர் எந்த சலனமுமில்லாமில் தூங்கிக் கொண்டிருந்தான்.

நவநீதன் முகத்தில் குழப்பரேகைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆட்டோவின் பின்புறம் பலமுறை திரும்பிப் பார்த்தான். உருவம் ஏதும் தென்படவில்லை. அதற்கு மாறாக ஆட்டோவின் பின்புறம், சுமார் 10 மீட்டர் இடைவெளியில் ராமுவும் அவனது நண்பன் வெள்ளியங்கிரியும் டிவிஎஸ்ஸில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்ததுதான் தெரிந்தது.

வெள்ளியங்கிரி பார்வைக்கு திடகாத்திரமாகத் தெரிந்தான். வயது 28 இருக்கலாம். 90 கிலோ எடை உள்ள உருட்டுக்கட்டை உடம்பு. அவனை வைத்துக் கொண்டு டிவிஎஸ்ஸை ஓட்டி வருவதற்கு ராமு சிரமப்பட வேண்டியிருந்ததை நவநீதன் கவனிக்கத் தவறவில்லை.

திடீரென்று வேதாசலத்திடமிருந்து எழுந்த கைத்தட்டல் சத்தம், நவநீதனின் பார்வையை ஆட்டோவிற்குள் மீண்டும் திரும்ப வைத்தது. “வா... வா... ஆட்டோ பின்னாலயே வரியா..? வா உன்னை நான் பாத்துக்கறேன்” என்றபடியே ஆட்டோவிற்குள் திமிறிக் கொண்டிருந்தவேதாசலத்தின் நெற்றியில், கமலம்மாள் தான் கையோடு கொண்டு வந்திருந்த திருநீறை அள்ளி பூசினார். அதன் பிறகுதான் வேதாசலம் தன் இயல்பு நிலைக்கு வந்தார். மீதமிருந்த திருநீறை அள்ளி சங்கரின் நெற்றியில் பல்வேறு கடவுள்களின் பெயரைச் சொல்லி பட்டையாக இழுத்துவிட்டார்.

தன் கண் முன்னே நடந்தவற்றையெல்லாம் பார்த்த பிறகும் இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் நவநீதன். தேவியாக்குறிச்சியில் பாய் வீட்டிற்கு முன்பு, ஆட்டோ வந்து நிற்கும் வரை அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆனாலும் அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆட்டோ வந்து நின்ற இரண்டு நிமிடங்களில் ராமுவும், வெள்ளியங்கிரியும் வந்து சேர்ந்தார்கள். அதற்குள் நவநீதன் உள்பட ஆட்டோவிலிருந்த அனைவரும் இறங்கியிருந்தார்கள். சங்கரை கைத்தாங்கலாக கீழே இறக்கினார்கள்.

பெரிய கான்கிரீட் வீடு கண்ணுக் தெரிந்தது. அதன் மேற்புறத்தில் ‘பஷீர் மன்ஜில்’ என்று எழுதியிருந்தது. அந்த வீட்டின் வலதுபுறத்தை ஒட்டி, ஒரே ஒரு ஆள் மட்டும் உள்ளே போய் வரும்படியான அளவிற்கு குட்டிச் சந்து ஒன்று இருந்தது. அந்த குட்டிச்சந்தை ஒட்டியபடி ஒரு பெட்டிக் கடை இருக்கவே, அந்த கடைக்காரரைப் பார்த்து வேதாசலம் கேட்டார் “ஏம்பா... பஷீர் பாய் இருக்கிறாரா..?”

“ம்ம்... வீட்டிலதான் இருக்கிறாரு... இந்தா... இந்த சந்து வழியா உள்ளே போய், சோத்தாங்கை பக்கமா திரும்புங்க, பஷீர் பாய் வீட்டின் பின்புறம் வரும். அங்க போய் பாருங்க இருப்பாரு...” என்று வழியையும் காட்டிவிட்டார்

அந்த சந்திற்குள் முதல் ஆளாய் வேதாசலம் நுழைந்தார். அவர் பின்னாடியே நடையைக் கட்டிய ஆட்டோ டிரைவர் “ச்சே... இந்த இருட்டுல எப்படி போறது, ஒரு லைட்டை கூட போடமுடியாதா..?” என்று முணுமுணுத்தபடியே சென்றான்.

அவன் பின்னாடி கமலம்மாளும், அவனது சித்தி சிவகாமியும் சங்கரை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அடுத்து, நவநீதன், ராமு, வெள்ளியங்கரி என வரிசையாக வந்தனர்.

முப்பதடி தூரம் சென்றதும், பெட்டி கடைக்காரர் சொன்னது போல் வலது புறம் திரும்பி, பாய் வீட்டின் பின்புறத்தை அடைந்தனர். அங்கே ஒரு வயதான அம்மா தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் “ஏம்மா... பாய் இருக்கிறாரா..?” என்று வேதாசலம் கேட்டார்.

“இருக்கிறார்... உட்காருங்க கூப்பிடறேன்…” என்றபடியே அந்த அம்மா, வீட்டின் பின்புற வாசல் வழியே உள்ளே போனார்.

நவநீதன் அந்த இடத்தை ஆராய்ந்தான். அந்த வீட்டின் பின்புறம் வெட்டவெளியாக இருந்தது. இங்கிருந்து பார்த்தால் தேசிய நெடுஞ்சாலையும், அதன் இருபுறமும் காவலுக்கு நின்றிருப்பது போல் இருக்கும் புளியமரங்களும் கண்ணுக்கு தெரிந்தன.

வீட்டின் பின்புற வாசலில், 20 அடிக்கு 20 அடி திறந்தவெளி இடம் இருந்த்து. அதன் மத்தியில் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது.

சற்று நேரத்தில் முண்டா பனியன், லுங்கி சகிதம் ஒருவர் வந்து கட்டிலில் அமர்ந்தார். தலையில் குல்லாவும், தாடையில் வைத்திருந்த நீள தாடியுமே சொல்லியது அவர்தான் வேதாசலம் தேடிவந்த பாய் என்று.

அதை அவரே ஒத்துக் கொள்வது போல் பேச ஆரம்பித்தார். “நான்தான் நீங்க தேடி வந்த பஷீர் பாய்.. என்ன விஷயம் சொல்லுங்க..?” என்றார்.

நடந்த விஷயத்தை விலாவரியாக சொல்லி முடித்தார் வேதாசலம். அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்த பஷீர் பாய், "சரி பையனை என் முன்னாடி உட்கார வையுங்க" என்றார்.

அதன்படி பாயின் முன்புறமாக, அவரைப் பார்த்தபடி சங்கரை உட்கார வைத்தனர். அவன் தலை தொங்கிப்போயிருந்த்தது. வாயில் எச்சில் ஒழுகியபடி, தூக்கத்தில் இருந்தான். சங்கர் உட்கார வைக்கப்பட்டதும், தனது வீட்டுப்பக்கம் திரும்பிய பஷீர் “ஒரு சொம்பு தண்ணியும், ஊதுபத்தியையும் எடுத்துட்டு வாம்மா…” என்று குரல் கொடுத்தார்.

“இதோ...எடுத்துட்டு வரேங்க…” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

சங்கரைப் பார்த்தார் பஷீர். அவன் முகம் சுருங்கிப் போய், இருளடைந்து போயிருந்தது. வாயில் இருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருந்தது. முதுகெலும்பு இல்லாதவன் போல முன்புறம் வளைந்து கிடந்தான். கண்கள் உள்ளே சொருகியிருந்தன.

பஷீர் அவனை விடுத்து மற்றவர்களை பார்த்தார். கழுகு சிறகை விரித்திருப்பது போல் அவரை சுற்றி அனைவரும்  அரை வட்ட வடிவில் நின்றிருந்தனர்.

சில நிமிடங்களில் அவர் கேட்ட பொருள்களை முக்காடு போட்டிருந்த அம்மா, எடுத்து வந்து அவரிடம் கொடுத்து விட்டுப் போனார்.

சங்கர் எவ்வித அசைவுமின்றி உட்கார்ந்திருந்தான். அவன் நினைவு இல்லாதவன் போல் காணப்பட்டான்.

“பையோனாட பேரு என்ன?” என்று வேதாசலத்திடம் கேட்டார்

“சங்கருங்க... என் வீட்டுக்கு மூத்த பையன்ங்க... நீங்கதான் எப்படியாச்சும் காப்பாத்தணும்..” என்று உடைந்த குரலில் சொன்னார் வேதாசலம்.

“சரி பண்ணிடுவோம்... எல்லாம் அல்லா விட்ட வழி” என்று வானத்தைப் பார்த்தபடி சொன்னார்.

சங்கரின் முன்பு ஒரு சொம்பு தண்ணீரை வைத்தார். பத்திகுச்சி பாக்கெட்டை பிரித்தவர் அதில் ஒரு கத்தையை உருவி எடுத்தார். “அல்லாஹ்...” என்று சொன்னது மட்டும் காதில் கேட்டது. மற்றவை எல்லாம் அவர் உதிர்த்த வார்த்தைகள் அனைத்து உருதில் இருந்தபடியால் யாருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.

ஊதுபத்தி கற்றையாக எடுத்துக் கொளுத்தினார். எரிந்து முடித்த ஊதுபத்திகள் அனைத்தும் தங்கள் சிவப்புகண்ணை காட்டினது மட்டுமின்றி, கண்களின் வழியே புகையை வானத்தை நோக்கி கசிய விட்டன.

சங்கரின் முகத்திற்கு நேரே அந்த புகையை காட்டியபடி, பஷீர் உருதில் மந்திரங்களை உதிர்க்க ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்கள் கழிந்தும் சங்கரிடமிருந்து எந்த அசைவுமில்லை. சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரின் கண்களும் சங்கரையே மொய்த்திருந்தன.

அவர் கொளுத்திய ஊதுவத்திகள் அனைத்தும் சாம்பலாகி உதிர்ந்தது. மிச்சமிருந்த சாம்பலனைத்தையும் சொம்பிற்குள் தட்டியவர், இன்னொரு ஊதுவத்தி கற்றையை எடுத்து பற்ற வைத்தார்.

ஊதுவத்தி புகையை சங்கரின் முகத்தில் பரவ விட்டபடி உருதில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

அதுவரை வேறு உலகத்தில் இருப்பது போல் அசைவற்று இருந்த சங்கர் மெல்ல தன் உடலை அசைக்க ஆரம்பித்தான்.

திடீரென்று “பச்… ப்ச்… ப்ச்…” என்று ஏதே சலிப்பு வந்தவன் சத்தமிடுவது போல் சத்தமிட்டான்.

பாய் சற்று தெம்பானவர் போல் தனது மந்திரங்களை வேகமாக முணுமுணுக்க ஆரம்பித்தார்.

புகையை நன்கு அவனது முகத்தில் காட்டியபடி சங்கரை எழுப்ப முயன்றார்... "தம்பி... தம்பி.. சங்கர் ... எழுந்திரு... சங்கர்...”சங்கர்... "ஹூம்... ஹீம்..." என வித்தியாசமாக குரல் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் வித்தியாசமாய் குரல் கொடுத்த்தும், அதுவரை புகையை கசிய விட்டுக் கொண்டிருந்த ஊதுபத்திக் கத்தை, திடீரென்று முழுதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

தீயைக் கண்ட பாய் சட்டென்று சொம்பிற்குள் நனைத்தவர்... “டேய்.. இந்த பஷீர்கிட்டயே விளையாடறியா...?” என்று ஒங்கிய குரலில் கத்தவே... அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் திடுக்கிட்டு, திகிலில் உறைந்தார்கள்.

6 comments:

Natu said...

Kathai inum konjam perusa podalamee


By
Bhuvana

மோகனன் said...

நடந்ததைதான ஃசொல்ல முடியும்.. பெரிசா எழுதணும்னா கற்பனை சேர்க்கணும்...

அது உண்மைத் தன்மையை பாதிக்கும்...

கருத்திற்கு நன்றி..!

Divya said...

rompa nall iruku padika very interesting

மோகனன் said...

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி திவ்யா...

தொடர்ந்து படிக்க வாங்க..!

Tamizharasi said...

hi

This is tamizh am continually reading the veeda mattean unnai. i read 5th part for that. but till now am not receiving 6th. am eagerly waiting to read it.

That story is very nice and interesting.

by

Tamizh

மோகனன் said...

தங்களின் ஆதரவிற்கு எனது நன்றி..

தொடர்ந்து படித்து வாருங்கள்..!