இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணிக்கு இந்த ஆண்டு வெற்றி ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அத்தனை உலக நாடுகளும் தோல்விகளைத் தழுவியிருக்கின்றன. ஆனால், இந்த ஆண்டில் தொடர்ந்து வெற்றிகளையே பதிவு செய்து வந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
மொத்தம் 12 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 9 போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்திருக்கிறது. ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை இந்திய அணி. இதே போன்ற சாதனைகளை இந்திய அணி இதற்கு முன் 1955, 1961, 1971, 1986, 1993, 2009 ஆகிய ஆண்டுகளில் படைத்திருக்கிறது.
2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு தோனி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவரையடுத்து, விராட் கோஹ்லி டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி கூல் கேப்டன் என்றால் கோஹ்லி ஆக்ரோஷமான கேப்டன் என பெயர் எடுத்தவர்.
அவரது தலைமையில் 2015-இல் சில போட்டிகளில் தவறினாலும், தவறுகளை சரிசெய்துகொண்டு, 2016-இல் விஸ்வரூபம் எடுத்தது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கு அணியின் பயிற்சியாளராக 2016-ஜூனில் அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய காரணம். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி விளையாடிய மூன்று டெஸ்ட் தொடரையும் வென்று காட்டியிருக்கிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிராக 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து அணிக்கெதிராக 3-0 என்ற கணகிலும் வெற்றியை பதிவு செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
இதனையடுத்து, அலைஸ்டர் குக் தலமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை 4-0 என்ற கணக்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ‘ஒயிட் வாஷ்’ செய்து சாதனை படைத்ததுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்த கிரிக்கெட் தொடரில் பல்வேறு சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியாக பார்த்ததற்கு காரணம் இருக்கிறது.
சின்ன பிளாஷ் பேக் போவோமோ…
கடந்த 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்ற தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 0-4 என்ற கணக்கில் தோற்றுப்போய் இந்தியா திரும்பியது. இந்த அணியில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் திராவிட், வீரேந்தர் ஷேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்களும் விளையாடி இருந்தனர். அப்படி இருந்தும் இந்தியாவால் சோபிக்க முடியவில்லை. ஒரு போட்டியைக் கூட டிரா செய்யமுடியவில்லை. படுதோல்வி அடைந்து இந்தியா அணி தாயகம் திரும்பியது.
அப்போது பெற்ற தோல்விக்கு, தற்போது விராட் கோஹ்லியின் தலைமையிலான இளம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பதிலடி கொடுத்து, பழி தீர்த்துக் கொண்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணியும் 488 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 260 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய 176 ரன்களுடன் களத்தில் நின்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தெம்புடன் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி டாஸிலேயே தோற்றுப்போனது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, சித்தேஸ்வர் புஜாரா, கோஹ்லியின் சதங்களால் 455 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியை சுழலில் ரவி அஸ்வின் சாய்க்க, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் இன்னிங்ஸிலும் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 204 ரன்கள் எடுத்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 405 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் கடின இலக்கை விரட்ட நினைக்காமல் டிரா செய்ய நினைத்த இங்கிலாந்து அணியின் கனவை ரவி அஸ்வின், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரின் சுழல் கூட்டணி தகர்த்தது. 158 ரன்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியது.
சண்டீகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்கமுடியாத இங்கிலாந்து 283 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது டெஸ்டில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் விரித்திமன் சஹாவிற்கு பதிலாக மூன்றாவது போட்டியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இம்முறை அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட டெயிலெண்டர்களின் (கடைசி வரிசை ஆட்டக்காரர்கள்) அட்டகாசமான ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் குவித்தது. இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து இந்தியாவின் சுழலில் 236 ரன்களுக்குள் சுருண்டது. 104 ரன்களை எளிதில் விரட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அறிமுகப்போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்தினார். 400 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்தது இங்கிலாந்து அணி. இந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை ரவி அஸ்வினும், 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜாவும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 136 ரன்களும், கேப்டன் விராட் கோஹ்லி இரட்டைச் சதத்துடன் 235 ரன்களும், ஒன்பதாவது விக்கெட்டாக களமிறங்கிய ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் அடித்து சாதனை படைத்தனர். 631 ரன்கள் குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை விட தனது முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கிக்கொண்டது. 6 விக்கெட்டுகளை அஸ்வினும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்த இங்கிலாந்து 195 ரன்களுக்குள் ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கோஹ்லியை விமர்சித்திருந்தார். அதற்கு இந்தப்போட்டியில் இரட்டைச் சதம் மூலம் பதிலைத் தந்திருந்தார் விராட் கோஹ்லி.
இந்த தொடரின் கடைசி போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற இருப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் வார்தா புயல் சென்னையை வாரிச் சுருட்டி வீசி இருந்தது. அடை மழையில் சேப்பாக்கம் மைதானம் ஈரமுகத்தோடு அழுது கொண்டிருக்க, கேலரியில் உள்ள சேர்கள் எல்லாம் சிதைந்து கிடக்க, திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் இருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சமும் சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே இருந்தது.
வார்தா புயலுக்குப்பின் அமைதி ஏற்படவே, திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அனைத்து வீரர்களும் கறுப்பு ரிப்பனோடு களத்தில் இறங்கினர்.
ஆறுதல் வெற்றியேனும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. மொயீன் அலி 146 ரன்கள் குவிக்க, டெயிலெண்டர்களான டாவ்ஸனும் ரஷீத்தும் அரை சதம் அடிக்க 477 ரன்கள் என்ற வலுவான நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கௌஷல் ராகுல் 199 ரன்கள் குவித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பார்த்தீவ் படேல் 77 ரன்கள் குவித்தார். தனது மூன்றாவது போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் கருண் நாயர், இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்து 303 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். இவரது சிறந்த ஆட்டத்தால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த அணிகளின் பட்டியலில் 7-ஆம் இடத்தைப் பிடித்தது சாதனை படைத்தது.
கடைசி நாள் ஆட்டம் மீதம் இருக்க இங்கிலாந்து அணி வசம் பத்து விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் தடுப்பாட்டத்தைக் கடைபிடித்தால் போட்டி டிராவில் முடிந்துவிடும் என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் கூட விழவில்லை. சென்னை மைதானம் என்பதாலும், ரவி அஸ்வினின் சுழல் தாக்குதல் இருக்கும் என்பதாலும் அஸ்வினின் சுழல் வீச்சிற்கு தயாரானது போல் விக்கெட் கொடுக்காமல் ஆடினர். இதனால், இந்த போட்டி டிராவில்தான் முடியப்போகிறது என ரசிகர்களும் நினைக்க ஆரம்பித்த வேளையில் ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலம் அங்கிருப்பவர்களை அசர அடித்தது. 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சடசடவென்று சரித்துக்காட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது. 207 ரன்களுக்குள் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது.
முச்சதத்தைக் குவித்து ஆட்டநாயகன் விருதுபெற்ற கருண் நாயர் ‘’முச்சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஆடியது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
கருண் நாயரின் முச்சதத்தைப் பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முச்சதம் அடித்த இந்திய வீரர்கள் கிளப்பிற்கு வரவேற்கிறேன். இந்த கிளப்பில் 12 ஆண்டுகள் 8 மாதங்களாக தனிமையில் தனிமையில் இருந்துவிட்டேன். வருக கருண் நாயர்’ என்று பதிவிட்டிருந்தார். இரண்டு முறை முச்சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக். மற்றொரு டிவிட்டர் செய்தியில் ‘கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்தை, இந்திய அணி வென்றிருக்கிறது. வாழ்த்துகள்’’ என்றும் ஷேவாக் குறிப்பிட்டது வைரலானது.
இந்திய அணியின் வெற்றிக்குப்பிறகு, இங்கிலாந்து அணியை சுழலில் வாரிச்சுருட்டிய ஜடேஜாவைப் பாராட்டும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யெஸ்..யெஸ்… யெஸ்… ஜட்டு… பார்சல் சம் லட்டு டூ இங்கிலாந்து’ என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களை வீழ்த்தியிருக்கிறீர்கள். இதே ஆட்டம் இங்கிலாந்திலும் தொடரட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தோல்விக்குப்பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் “இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது. நாங்கள் ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். கிடைத்த கேட்சுகளை கோட்டை விட்டதால், அதற்கான பலனை அனுபவித்தோம். விராட் கோஹ்லி தலைமையிலான அணி சிறப்பாக ஆடியது.” என்றார்.
தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோஹ்லி “இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனமாக இருந்தோம். ஒவ்வொரு வீரரும் தனக்காக ஆடாமல், அணிக்காக ஆடினர். வெற்றியைப் பரிசாக பெற்றிருக்கிறோம்” என்றார்.
அனில் கும்ப்ளேவின் வழிகாட்டுதலில் 2016-ஆம் ஆண்டை சிறப்பாக முடித்திருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, மூன்று முக்கிய இளம் வீரர்களை அடையாளம் கண்டிருக்கிறது. கௌஷல் ராகுல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர் ஆகிய இந்த மும்மூர்த்திகளும் இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்த பலம் என்றே சொல்ல வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத் “இந்த மூன்று பேரும் இந்திய ஏ அணியின் தரமான தயாரிப்புகள். அப்போதிலிருந்தே இவர்களை அடையாளம் கண்டு, அணிக்குள் சேர்த்தோம்’’ என்றார்.
ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தரவரிசையில் இந்திய அணி முதலிடம். 2016- ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இரட்டை விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் தமிழக வீரர் ரவி அஸ்வினும் இருக்கிறார்.
தனி மனிதர் ஒருவரால் வெற்றி காணப்படுவதல்ல கிரிக்கெட். சரியான வீரர்களை தேர்வு செய்யும் நேர்மையான தேர்வாளர், வீரர்களின் குறைகளைக் கண்டறிந்து அதை நிறையாக மாற்றச்செய்யும் பயிற்சியாளர், களத்தில் அணி வீரர்களின் தோளோடு தோள் இணைந்து, அரவணைத்து வழிநடத்திச் செல்லும் கேப்டன் என இந்த மூன்றும் வெகுநாட்களுக்குப்பிறகு இந்திய அணிக்கு வாய்த்திருக்கிறது.
இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர வேண்டும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அசைக்க முடியாத அணியாக வலம் வர வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.
இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வென்றபோது, வீரேந்திர ஷேவாக் ‘உலகிற்கே கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியவர்களை, வீழ்த்தியிருக்கிறது நமது இந்திய அணி. பெருமையாக இருக்கிறது’ என்று ட்விட்டியிருந்தார். இதுபோன்ற உத்வேகங்களும், ஊக்குவிப்புகளும் அணிக்கு நிலையானதாக இருக்கட்டும்.
வரும் புத்தாண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.