Tuesday, March 22, 2016

'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!


இரு தினங்களுக்கு முன்பு, அதாவது சென்ற ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘ஆசிரியர் வைபவம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க முழுக்க அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது திறனை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினனாக எனை அழைத்திருந்தனர். அக்கல்லூரியின் கரேஞா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கியது.

காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 5.40க்கு நிறைவடைந்தது. 20 அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமைகள் முதன்முறையாக அரங்கேற்றம் கண்டன. புகை நமைக்கு பகை என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் உரை நிகழ்த்தினார். அது உரை என்பதை விட ‘தனி நடிப்பு’ மூலம் செய்து அசத்தினார்.
                                                                      தனிநடிப்பு ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்து வந்த ஆசிரியை ‘ராதை மனதில்… ராதை மனதில் என்ன ரகசியமோ…’’ என்ற பாடலுக்கு மனதை ஈர்க்கும் வகையில் நடமாடி கைத்தட்டல்கள் பெற்றார். அடுத்து வந்த ஆசிரியை ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். ஒரு ஆசிரியை நளவெண்பா பாடலை தானே பாடி, இசையமைத்து குறுந்தகடாக அங்கு வெளியிட்டார்.


அரசுப்பள்ளி மாணவர்கள் குழு ஒன்று அனாசயமாக ஆங்கிலத்தில் நல்ல பழக்கவழக்கங்களை நாடகமாய் நடித்துக் காட்டி கைத்தட்டல்களை அள்ளியது. அசந்து போனேன். மற்றொரு அரசுப்பள்ளி மாணவிகள் குழு, தாய்லாந்து மங்கைகளைப் போல் ஆடை, அலங்காரம் செய்தபடி, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நடமாடி உள்ளத்தை கொள்ளை கொண்டனர்.

அவரை அடுத்து வந்த ஆசிரியர் மிமிக்ரி மூலம் தேசபக்தி கதையை செப்புவித்தார். அடுத்து அரங்கேறிய ஆசிரியை தமிழக நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கரகாட்டத்தை ஆடினார். அவர் ஆடியது மட்டுமின்றி அரங்கத்தில் உள்ளோரையும் ஆட்டம் போட வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

                                         மிமிக்ரி மூலம் தேசபக்தி கதை சொன்ன ஆசிரியருக்கு பாராட்டு

அடுத்த வந்த ஆசிரியர் தான் இயக்கிய திகில் குறும்படத்தை திரையிட்டார். ஒலிக்கலவையும், கேமராவும் மிக நேர்த்தியாக இருந்தது. பின்னணி இசை பயமுறுத்திற்று. அட்டகாசமான திகில் குறும்படம் அது.


52 வயது நிரம்பிய அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா…’ பாடலை தாள லயத்தோடு, ஸ்ருதி பிசகாமல் பாடினார். பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவரை… அவ்வளவு நேர்த்தி…

நான் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் திறனைக் காட்டியபோது, அவர்களை உற்சாகப்படுத்தி பேசியதைக் கேட்டு, அங்கு பார்வையாளராக வந்திருந்த ஆசிரியை, மேடையேறி மூன்று பாடல்களைப் பாடிக் காட்டி பரவசம் கொள்ளச் செய்தார்.

அடுத்து வந்த ஆசிரியர் பியானோ வாசித்தார். அப்துல் கலாம் குறித்து  எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு செய்த வீடியோவை திரையிடச் செய்தார். அடுத்த அந்த பாடலுக்கு மேடையில் நடனமாட, கீழிருந்த ஒரு மாணவி அவரோடு சேர்ந்து துள்ளாட்டம் போட்டது பார்வையாளர்களான எங்களை பரவசப்படுத்தியது. மாணவர்களே எழுதிய கதைப்புத்தகம் ஒன்று, அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் அங்கு வெளியிட்டப்பட்டது.

அரசுப்பள்ளி ஆசிரியைகள் குழு ஒன்று, வில்லுப்பாட்டினை அரங்கேற்றியது. அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை சினிமா பாடல்களின் மெட்டுகளில் வடிவமைத்து பாடி அசத்தினர்.

                                                             குறுந்தகடு வெளியீடு
எனது கையால் ‘பலூன்’ என்ற குறும்படம் வெளியிட வைத்தனர். ரைம்ஸ் பாடல் குறித்த சிடி ஒன்றையும் எனது கையால் வெளியிட வைத்தார்கள். மகிழ்வாக இருந்தது.

ஒரு ஆசிரியர் சோப்பு, சாக்பீஸ் ஆகியவற்றில் பல்வேறு சிற்பங்களும் முட்டை ஒடுகளால் ஓவியங்களும் வரைந்து காட்டி அசத்தினார். ஒரு ஆசிரியர் பறவைகளின் குரல்களை எழுப்பிக்காட்டினார்.
இன்னும் மறக்கவியலா நிகழ்வினை அந்த நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது. விழாவின் முடிவில் பங்குபெற்ற அத்தனை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவித்தேன். அவர்களது மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்!

                                                            நளவெண்பா பாடிய ஆசிரியைக்கு பாராட்டு

வில்லுப்பாட்டு பாடிய ஆசிரியை குழுவினர் என்னோடு குழுவாக படம் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, தங்களது பள்ளி மாணவர்களைப் பற்றி பேசினர், அவர்கள் பள்ளிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.


அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் இவ்வளவு திறமைகள் புதைந்து கிடக்கின்றனவா என்று உண்மையிலேயே அதிசயித்துப் போனேன். வாழ்த்துகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே... உங்கள் அபரிமிதமான திறன்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! இதை மாநில அளவில் ஏன் நாம் நடத்தக்கூடாது என்ற எண்ணத்தினை இந்த நிகழ்ச்சி என்னுள் ஏற்படுத்தியது. விழாவின் இறுதியில் குழுப்படம் எடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக திருப்பத்தூர் ஜேஸிஸ் சங்கம் நடத்தியது. அரசுப்பள்ளி ஆசிரியர்களான சுமித்ரா, பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக்காட்டினர். அவர்களுக்கு இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி கிரண், ஜோலார்பேட்டை ரயில்நிலைய மாஸ்டர் வெங்கடாசலம், இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த அன்புத் தோழர் சிகரம் சதீஷ் ஆகியோரை மறக்கவே இயலாது.

போய் வருகிறேன் திருப்பதூரே… என்றபடி அங்கிருந்து கிளம்ப மனமின்றி கிளம்பி வந்தேன். இனிமையான அனுபவம் அது..!

4 comments:

Natu said...

Congrats... Enjoy in your life. Ganesh neenga innun melum valara enoda valththkkal.enoda tholanodu thol koduththa thazhamaikalukkum vazhithukkal. All the best in ur team. By Bhuvana Natarajan.

sakthivel teacher said...

அசத்தும் பத்திரிக்கை ஆசிரியர்

மோகனன் said...

மகிழ்கிறேன் புவனா...

மோகனன் said...

மகிழ்ச்சி தோழரே...