Thursday, September 07, 2017

நீட் தேர்வு – நம்பிக்கை துரோகிகள் யார்?


நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்த அனிதாவின் மரணத்திற்குப் பிறகு, இதுகுறித்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.
என் சிந்தனையில் உதித்த கேள்விகளையும், விமர்சனத்தையும் இங்கே முன்வைக்கிறேன்… பதில்கள் அரசிடமிருந்து கிடைக்காது… மக்களிடமிருந்து கிடைக்கவேண்டும். இதற்கு சில பிளாஷ்பேக்குகள் அவசியமாக இருக்கின்றன.
ஜெயலலிதாவின் ஆளுமையும் வீழ்ச்சியும்
ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றவாளி என்பதை மறுப்பதற்கில்லை. அவர் குற்றவாளிதான். ஆனால் அவர் ஆட்சியில் இருந்தவரை, நீட் தேர்வையும் சரி, மீத்தேன் திட்டம் என எதையும் இங்கே அனுமதிக்கவில்லை. காரணம் நாடாளுமன்றத்தில் இவருடைய கட்சிக்கு இருந்த வாக்குத்தலைகளின் எண்ணிக்கை. (அமைச்சர்கள் என்றெல்லாம் சொல்லி அந்த வார்த்தையை அசிங்கப்படுத்த முடியவில்லை) அவரின் ஆளுமையின் காரணமாகவே அனைத்தையும் தடுத்துவந்தார்.
வளரும் நாடுகளில் தனது அதிகாரத்தை ஏற்காத தலைவர் யாரேனும் இருந்தால், அமெரிக்காவின் சிஏ அமைப்பின் மூலம் படுகொலைகளை நிகழ்த்தும் அல்லது கலகத்தை ஏற்படுத்தி பொம்மை ஆட்சியை நிறுவும்.
அதுபோல, மத்திய அரசின் திட்டங்களை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த ஜெயலலிதாவினை சாய்க்க, அவரின் உடல்நலக்குறைவை பயன்படுத்தி, இங்குள்ளோரின் பதவி ஆசைகளை தூண்டிவிட்டு, ஜெ.யினை மண்ணுக்கு அனுப்பினர் என்று எண்ணத்தோன்றுகிறது. யார் நம்பிக்கையாக இருப்பார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ, அவரே அவரது ஜீவனை அழிப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது ஆன்மா இவற்றை எல்லாம் பார்த்து கண்ணீர் உகுத்திருக்கும்.
பின்னணியில் யார்..?
பா.ஜ.க. இதன் பின்னணியில் இருந்தது என்று நான் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஜெ.வின் இறுதிச் சடங்கின்போது, காலை முதல் இறுதிவரை பா.ஜ.க.வின் வெங்கையா நாயுடு கூடவே இருந்தார். அப்படி இருந்ததற்கான காரணத்தை பாமரன் யோசித்தாலும் புரிந்துவிடும்.
ஜெ.வின் மரணம் குறித்து, சிபிஐ விசாரணை வைத்தாலும் கூட, மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அது சொல்படி ஆடும் பம்பரங்களாகத்தான் சிபிஐ இருக்கும் என்றும் கடந்தகால வரலாறுகள் சொல்லும் பாடம். அதனால், இவற்றால் எல்லாம் உண்மைகள் வெளிவராது.
ஆட்சியில் இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நாற்காலி ஆட்டம் காணுகிற நிலை வந்ததும், ஜெ.வின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடியார் அறிவித்திருப்பது, அவரின் பதவிமீதுள்ள ஆசையைத்தான் காட்டுகிறது. இதுவும் வெறும் கண் துடைப்புதான்.
சசிகலாவின் ஆசையும் நிராசையும்
ஜெயலலிதா இருந்தவரை, அம்மாவின் உண்மையான விசுவாசி என்று நெஞ்சைக் கிழித்துக்கொள்ளாத குறையாக இருந்த அத்தனை துதிபாடிகளும், அவர் மறைவிற்குப் பின், சசிகலாவிற்கு துதிபாடியதை யாரும் மறந்திருக்க முடியாது. பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் செய்த சாகஸங்களை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இடைக்கால முதல்வராக ஓபிஎஸ் வந்தார். அவர் தங்களின் அதிகாரத்திற்கு கட்டுப்படவில்லை என்பதால், அவரை தூக்கினார்கள். சசிகலா தரப்பினர் கூவத்தூரில் எம்எல்ஏக்களை கூண்டோடு அழைத்துச்சென்று, புட்டி, பெட்டி என்று சகலவசதிகளுடன் குஷிப்படுத்தினார்கள். தொகுதிக்கு நல்லது செய்வார் என்று எம்எல்ஏக்களை தேர்வு செய்தால், எம்எல்ஏக்களோ… சசிகலாவின் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய அங்கே கூடியிருந்தார்கள். கேட்டால், ஆட்சியைக் காப்பாற்றவே கூடினோம் என்று பசப்பினார்கள்.
ஜெ.வின் ஆட்சி காலத்தில் பின்வரிசையில் இருந்து எடப்பாடியார் முதல்வராக்கப்பட்டார். சசிகலா சொத்துசேர்த்த வழக்கில், நீதிபதிகளுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றது, இரட்டை இலையை கைப்பற்ற லஞ்சம் கொடுக்க முயன்றது என பல்வேறு தகிடுதத்தங்கள் நடைபெற முயன்றன.
அதிகார மையமாக மாறிடலாம் என ஆசைப்பட்ட சசிகலா, சிறைக்கம்பிக்குள் சென்றார். ஆனால் சசிகலாவின் ஆசை நிராசையாகிப்போனது. அங்கும் அவரின் ஆட்டம் அடங்கவில்லை. சிறைக்குள் இருந்தபடி, இங்கே பலரை ஆட்டிவைக்க முயற்சித்தார். சிறையிலும் பல ஆட்டம் ஆடினார் என்பதை சிறைத்துறை டிஐஜி ரூபா நிரூபித்தார். இவை எல்லாம் நமக்கு தெரிந்திருந்தும் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், நீதித்துறை நாயகமாய் இருக்கிறதே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. இதனிடையே ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் இடையூறு வேறு தமிழக மக்களை குழப்பியது.
மத்திய அரசின் பொம்மலாட்டம்
எடப்பாடியார் ஒருபுறம், ஓபிஎஸ் ஒருபுறம் என அதிமுக பிளவுபட, தினகரன் கோஷ்டி ஒரு புறம் இழுத்துக்கொண்டு ஓட, எம்ஜிஆர் எனும் சக்தி உருவாக்கிய இரட்டை இலையான அதிமுக, இலைகள் இரண்டு, காம்போடு மூன்று என்பதுபோல், மூன்றாய் சிதறியது. நிலையற்ற ஆட்சியை மிரட்டி, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டது.
நீட் பிரச்சினை தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடிக்கத் துவங்க, கண்துடைப்பிற்காக அவசரச்சட்டத்தை இயற்றியது தமிழக அரசு. மத்திய அரசும் பரிசீலிக்கிறோம் என்று பம்மாத்துகாட்டியது.
நளினி சிதம்பரம் எனும் சீமாட்டி
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருந்த நளினி சிதம்பரம், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக வாதிட்டார் இந்த சீமாட்டி.
தமிழகத்தின் நலனே எனது குறிக்கோள் என்று கூறிவந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி இவர். சிபிஎஸ்இ மாணவர்கள் இந்திய அளவில் உள்ள இடங்களில் போட்டியிடலாம் என்று தெரிந்தும் ஊமையாகவே இருந்தார் ப.சிதம்பரம். இவரும் தமிழர்தான்.
இந்திய அளவில் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்திருந்தார்கள் எனில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்த்திருக்க மாட்டார்கள். தாய்மொழிக் கல்வியில் பயின்ற மாணவர்களை, இந்திய அளவிலான போட்டிக்கு அழைத்து வீழ்த்தும் கோழைத்தனமான செயலில் மத்திய அரசு இறங்கியது. உச்சநீதிமன்றத்தில் தமிழக மாணவர்களுக்கு எதிராக கையை விரித்தது. தீர்ப்பால் ஏழை தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவில் இடி விழுந்தது.
மத்திய அமைச்சராக இருந்த காரணத்தால் சிதம்பரத்தின் மகன்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்திருப்பார்கள். பணக்காரர்களின் பிள்ளைகள் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்து சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். ஏழை மக்களால் இது முடியுமா? அவர்களுக்கு அடைக்கலம் தருவதே அரசுப்பள்ளிகள்தான்.
நூதனத் தீண்டாமை
ஆக, அதிக பணம் வைத்திருப்பவன் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும். மற்றவர் அனைவரும் அதன் கீழுள்ளவற்றை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நூதனத் தீண்டாமை முறைக்கு, மத்திய அரசு நம்மை ஆளாக்கியது. இதன் விளைவு, அனிதா எனும் மலர் தூக்கிட்டுக்கொண்டது.
அவாளும் இவாளும்
இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் மலைவாசி மக்கள்தான். நீட்டிற்கு ஆதரவு தருகிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணியத்தை உயர்த்திப் பிடிக்கும் எஸ்.வி.சேகர் போன்றோர் பிராமணர்கள் அனைவரும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்பதை மறந்துவிடுகின்றனர். நீட் தேர்வு எழுத விருப்பமெனில் அகில இந்திய அளவில் போய் எழுதுங்களேன். யார் வேண்டாமென்றது. தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைக்க என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது.
ஏன் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மருத்துவர்கள் ஆனதே இல்லையா. அந்த ஒதுக்கீட்டுக்கான இடங்களை வேறு யார் ஆக்ரமிக்கிறார்கள். ஆக, உங்கள் இனம் மட்டும் மருத்துவர் ஆக வேண்டும். தமிழினம் வீழ்ந்து மாயவேண்டும்.
இதை சாதியம் கொண்டு பார்க்கவேண்டாம் அவாள்களே… இவாள்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். தமிழ்நாட்டில் பிறந்து, தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழனையே ஏசும் உங்களையும் இங்கே வைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் தெரியுமா? வந்தாரை வாழ வைத்துத்தான் தமிழகத்திற்கு வழக்கம்.
யாருக்கு ஆதாயம்?
நீட் முறையால் தமிழ்நாட்டில் வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் இடம்பிடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக மருத்துவம் படித்துவிட்டு, படிப்புக்காலம் முடிந்ததும் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் மருத்துவர்களாக அன்றி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
நீட் வேண்டாம் நமக்கு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியிலுக்கு மாற்றுங்கள். இதன்மூலம் அவரவர் மாநிலத்திற்கு தேவையான படிப்பாளிகளை அவர்களது தாய்மொழியிலேயே உருவாக்கிக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள இடங்களை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள்தான் படிக்க வேண்டும். அப்படி ஒரு தேர்வை வைக்க விரும்பினால், இங்குள்ள பாடத்திட்டத்தின்படி, என் தாய்மொழியில் தேர்வை நடத்துங்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என்று அனைத்து படிப்பிலும் 50 இடங்களை ஒதுக்கீடு செய்யுங்கள். அப்போதுதான் நாமக்கல் பிராய்லர் தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும், சிபிஎஸ்இ பள்ளிகளின் ஆதிக்கமும் மறையும்.
தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களை உங்கள் இஷ்டம் போல் தேர்வு வைத்துக்கொண்டு, யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுக்கல்லூரிகளை, நயவஞ்சகமாய் அபகரிக்க வேண்டாம்.
நம்பிக்கை துரோகிகள் யார்?
நமக்கு நல்லது செய்வார்கள் என்று நாம் தேர்வு செய்த எம்.எல்.ஏ., எம்பிக்கள் நம்பிக்கை துரோகிகள். பதவிக்கும், பணத்திற்கும் ஆமாம் சாமி போடும் அரசு அதிகாரிகள் நம்பிக்கை துரோகிகள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராகவே காய் நகர்த்தும் அத்துனை அரசியல் நாய்களும் நம்பிக்கை துரோகிகள். காசுக்கு ஓட்டு போட்டு, அத்தனை நம்பிக்கை துரோகிகளையும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்த நாமும், நமது வருங்கால சந்ததிக்கு நம்பிக்கை துரோகிகள்தான்.
எனது வாதம்… பிடிவாதம்
@ போதும்… கட்சிகளுக்கு வாக்களித்தது…
@ நாமே இனி களத்தில் இறங்குவோம். அரசியலில் இறங்குவோம். தலைமை கொள்வோம்.
@ வாக்களித்து தேர்வு செய்தவர்களை, ஆட்சிமுறையில் திருப்தி இல்லையெனில் எம்எல்ஏக்களை திரும்பப்பெறும் முறையை சட்டமாக்குவோம்.
@ நேர்மையாளர் சகாயத்தை தலைமை முதன்மை செயலராக நியமனம் செய்வோம்.
@ உதயச்சந்திரன் போன்ற நல்லோரை, தேர்வு செய்து எல்லா துறையிலும் நியமிப்போம்.
@ தமிழக நதிகளை மக்களின் உழைப்பு கொண்டு இணைப்போம். விவசாயம் பெருக்குவோம்.
@ தமிழகத்திற்கு தேவையான பொருட்களை தமிழர்களைக் கொண்டே உற்பத்தி செய்து, விநியோகிப்போம்.
@ தமிழர்களை தலைநிமிர வைப்போம்.
-மோ.கணேசன். இதழியலாளன், தமிழ்நாட்டின் வாக்காளன், வரி செலுத்தும் இந்தியன்.

2 comments:

Unknown said...

நல்ல அலசல் ஆய்வு!

மோகனன் said...

மிக்க நன்றி ஐயா...