Wednesday, December 05, 2018

குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?

முக்கியமாக இது பெண்களுக்கானது... இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை. இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல். என்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. தனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது. இதனை எப்படி கண்டு பிடிப்பது? இதற்கென்று ஆப்ஸ்கள் உள்ளன. அதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. கூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.
இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.

1.Detect by Radiotion Meter 2.Detect Infrared Camera 3.How to Use 4.Manual Camera Detection
இதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...
37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.

தனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள, முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 80 மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)

Detect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்
அதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும். மூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.

அதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு. மேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்ஸை பெற: http://bit.ly/2BSyM8L -மோ.கணேசன், பத்திரிகையாளர்.

Wednesday, October 31, 2018

மோ.கணேசனின் நேர்க்காணல்

நான் பலரை நேர்க்காணல் செய்திருக்கிறேன். அறம் செய்ய விரும்புவோம் நாடக நூலை எழுதிய பிறகு, எழுத்தாளன் என்ற முறையில் என்னை காவேரி தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்தார் அருள் வளன் அரசு...
அதனை அவர் எழுதிய ‘என் பெயர் கதைசொல்லி’ - பாகம் 2 புத்தகத்திலும் அப்படியே வெளியிட்டிருந்தார்.
அதை அப்படியே இங்கே தருகிறேன்
பின்குறிப்பு: 

இந்த புத்தகத்தில் எஸ்.ரா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஜாம்பவான்களின் நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த புத்தகம் வேண்டுவோர்
வசந்தா பதிப்பகம்
26. குறுக்குத் தெரு, ஜோசப் காலனி,
ஆதம்பாக்கம், சென்னை - 88
044 - 22530954, 22533667
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். 80 பக்கம். விலை 120 ரூபாய் என நிர்ணயித்திருக்கிறார்கள்





Saturday, May 26, 2018

செம - திரைப்பட விமர்சனம்


இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில் நேற்றைய தினம், உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘செம’.
திருச்சியில் வசிக்கும் ஆரவள்ளியின் (சுஜாதா சிவக்குமாரின்) ஒரே மகன் குழந்தைவேலு (ஜி.வி.பிரகாஷ்). குழந்தைவேலின் நண்பனாக கோதண்டம் (யோகிபாபு).
தெருத்தெருவாக குட்டியானையில் சென்று காய்கறி, பழம், மீன், கருவாடு என்று சீஸனுக்கு ஏற்றாற் போல் வியாபாரம் செய்துவரும் குழந்தைவேலுக்கு, மூன்று மாதத்திற்குள் கல்யாணம் செய்யணும். இல்லையெனில் 6 ஆண்டுகளுக்கு கல்யாணமே நடக்காது என்று ஜோஸியர் சொல்ல, ஆரவள்ளி உள்ளூரில் பெண் தேடுகிறார். மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் குழந்தைவேலை அசிங்கப்படுத்த, பெண் பார்க்க செல்லும் இடங்களிலும் நிறைய பெண்கள் குழந்தைவேலை வேண்டாமென்று சொல்ல, விரக்திக்கு செல்லும் ஆரவள்ளி தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்.
உள்ளூரில்தான் பொண்ணு கிடைக்கவில்லையே என்று, அருகிலிருக்கும் தஞ்சாவூருக்கு சென்று பெண் தேட, சமையல் காண்ட்ராக்ட் வேலைசெய்யும் அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்), மந்தாரை (கோவை சரளா) தம்பதியினரின் மகளான மகிழினியை (அர்த்தனா பானு) பெண்பார்க்கிறார்கள். இரு குடும்பத்தாருக்கும் பிடித்துப்போக நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கிறார்கள்.
அட்டாக் பாலு ஊரைச்சுற்றி கடன் வாங்கி வைத்திருக்கும் ஊதாரி அப்பன். பெரிய சமையல் ஆர்டராக பிடித்து கடன் அடைக்கலாம் எனும் கனவில் இருப்பவரை, கடன்காரர்கள் தொல்லை செய்ய, மகிழினியை ஒருதலையாக விரும்பும் எம்எல்ஏ மகன் ஜனா (புதுமுகவில்லன்), கடனை அடைக்க உதவுவதாச் சொல்லி பாலுவின் மனதை மாற்றுகிறார். நிச்சயதார்தத்திற்கு வரும் குழந்தைவேலு குடும்பத்தை பாதி வழியிலேயே திரும்பிப் போகச் சொல்ல, விரக்தியின் விளிம்பிற்கு செல்லும் ஆரவள்ளி, கிணற்றில் குதித்துவிடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அட்டாக் பாலுவிற்கு குழந்தைவேலு, உன் பொண்ணையே கல்யாணம் செய்து, உன்னையே அதை பாராட்ட வைக்கிறேன் என்பது போல் சவால் விடுகிறார். அங்கு வருகிறது இடைவேளை.
எம்எல்ஏ மகனின் ஆசை வென்றதா? அட்டாக் பாலு சவாலில் ஜெயித்தாரா? குழந்தை வேலு சவாலில் ஜெயித்தாரா? என்றெல்லாம் சொல்ல விரும்பல. குழந்தைவேலுதான் சவாலில் வெல்கிறார். ஆனால் அது எப்படி என்பதை, தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் கலகலப்பாக கொண்டு சென்று, எதிர்பாராத குட்டி குட்டி சுவாரஸ்ய முடிச்சுகளைப் போட்டு சுபத்தில் முடித்திருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.
குடும்பத்தோடு சென்று படம் பார்த்து எத்தன வருஷமாச்சு என்று ஏங்குவோருக்கு நிச்சயம் இந்த படம் ஒரு கலர்புல், காமெடி கலந்த பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் ட்ரீட் என்றே சொல்லலாம்.
இதுவரை சிட்டி பாய் கேரக்டராக இருந்த ஜி.வி.பிரகாஷ், இந்தப்படத்தில் கிராமத்து பையனாக, சிறுநகரத்துப் பையனாக நடித்திருக்கிறார். அவரின் குழந்தை முகத்திற்கு, குழந்தை வேல் கேரக்டர் மிகவும் பொருந்திப்போயிருக்கிறது. அம்மா… அடிக்கடி இந்த மாதிரி தூக்கு போட்டுக்க போகாதம்மா… இதோட 93-ஆவது தடவை என்று சொல்லும்போது, தியேட்டரில் சிரிப்பு சத்தத்தில் காது கலகலக்கிறது. மன்சூர் அலிகானிடம் சவால் விடும்போதும், அவரிடம் போனில் பேச நடுங்கும் போதும் மனிதர் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கோதண்டமாக வரும் யோகி பாபு, படத்தின் காமெடி ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். டேய் பன்னி மூஞ்சி வாயா… என்று ஜி.வி.பிரகாஷ் வேறொருவரைச் சொல்ல, யப்பா… என்னை வச்சிகிட்டு இப்படி எல்லாம் சொல்லாதப்பா… என்று அப்பாவியாய் கேட்கையில், தியேட்டரில் சிரிப்பு வெடி.
ஆரவள்ளியாக வரும் சுஜாதா, அம்மாவின் கேரக்டரில் பொருந்திப்போகிறார். மகனுக்கு இப்படி ஆகிருச்சே… ஊர் முகத்துல எப்படி முழிப்பேன் எனும்போதும், உங்க ரெண்டு பேருக்கும் பிரைவஸி வேணுமில்ல… அதாம்மா சண்டை போடறமாதிரி போட்டு, ஊருக்கு போயிட்டேன் அம்மா இடத்தில் ஸ்கோர் பண்ணுகிறார்.
மகிழினியாக வரும் அர்த்தனா பானு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அழகுப் பதுமை. குறும்புப் பார்வை, குழந்தை முகம் என பாத்திரத்திற்கு ஏற்ற பதமான தேர்வு. வில்லனிடம் சீறும்போதும், அப்பாவிற்காக ஏங்குகிற போதும், கணவனிடம் கொஞ்சுகிற போதும்… அட நம்மவீட்டு பொண்ணு போலவே இருக்கிறாளேப்பா… என்று சொல்ல வைக்கிறார்.
அட்டாக் பாலுவாக வரும் மன்சூர் அலிகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடன்காரன்களைக் கண்டால் பம்முவதும், போனைக் கண்டால் ஒளிவதும், மனைவியிடம் மாட்டிக்கொண்டு திணறுவதும், மகளை தவறாகப் பேசியவனின் கையை வெட்டுவதும் என அசல் சமையல்கார்ராக மனிதர் அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை நம்பும் வெகுளித்தனமான தந்தையின் முகபாவத்தை மனிதர் கொண்டுவந்து நிறுத்தியதற்காக நிச்சயம் அவருக்கு சபாஷ் போடலாம்.
மந்தாரையாக வரும் கோவை சரளா. நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் மனுஷி வெளுத்துக் கட்டி இருக்கிறார். கணவருக்கு பயப்படுவதும், பெண்ணுக்காக மனுஷி பாடாய்ப்படுவதும்… சென்னையை மன்சூரலிகானுக்கு நாள் முழுக்க ஆட்டோவை சுற்றிக்காட்டுவதாகட்டும்… கலகல ரகம்.
புதுமுக வில்லன் ஜனா எம்எல்ஏ மகனாக பைக்கில் பந்தாவாக வருகிறார். இரண்டு மூன்று காட்சிகளில் வசனம் பேசகிறார். இறுதியில் மிரட்ட வருகிறார்.
சண்டாளி பாடல் இதுவரை யூ டியூபில் 8 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். யுகபாரதியின் வரிகளால், ஜி.வி.பிரகாஷின் மெல்லிசையும் சேர்ந்துகொள்ள, பாடல் மெலடியில் மெட்டு கட்டி, செவிகளை வருடிவிட்டு, மனதிற்குள் தங்கிவிடுகிறது. இப்பாடலில் ஒளிப்பதிவு மிக அற்புதம். நீர்த்துளிகளை வைரத்துளிகளாய் பிரித்துக் கோர்த்திருக்கிறது. இரவு நேரத்து கோரைப்புற்கள் முன்பு இருந்த காட்சிகள்... விவேக் ஆனந்தின் ஒளி ஓவியத்தில் கண்களுக்கு விருந்து படைக்கிறது. உருட்டு கண்ணால பாடல் துள்ளலிசை ரகம். குத்தாட்டமும் போட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
வசனம் தனது குருநாதர் பாண்டிராஜை எழுத வைத்திருக்கிறார் வள்ளி காந்த்.
’உங்கை பையனுக்கு கிருஷ்ணர் ஜாதகம்… பொண்ணுங்க இருக்கிற இடத்துலதான் அவன் இருப்பான்…’
‘அட போங்க சாமி… அவன் இருக்கிற இடத்துலதான் பொண்ணுங்க இருக்குது.’
’ட்வென்டி ட்வென்டி மீட்டிங் வச்சுக்கலாம். உனக்காக நான் 20 கி.மீ. வரேன். எனக்காக நீ 20 கி.மீ. வா… ’
’ஓரமா நிக்கறவங்க… ஒளிஞ்சிகிட்டிருக்கவங்க… வேடிக்கை பாக்கறவங்க எல்லாம் சீக்கிரம் வந்து அட்சதையப் போடுங்கோ…’
இப்படி படம் முழுக்க… காட்சிக்கோர்ப்பிற்கு வசனங்கள் கரம் கோர்த்து கலகலக்க வைக்கின்றன.
பாண்டிராஜின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் வள்ளிகாந்த், இந்த படத்தில் தனது தனித்தன்மையை காட்டி இருக்கிறார்.
பாண்டிராஜின் தாக்கம் இல்லை. பிரச்சினையை முன்னே சொல்லி, தீர்வை பின்னே சொல்லும் பாணி செம. தனக்கு ஒரு தேவதை மனைவியாக வரப்போகிறாள். அதற்காக தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்களின் வீட்டிற்கு சென்று நன்றி சொல்லும் வித்தியாச ரகம் செம.
திருமணத்திற்கு ஆட்களை வரச்சொல்லி, போகிற போக்கில் கூட்டத்தைக் கூட்டுவது செம செம.
படம் 2 மணி நேரத்தில் முடிந்துவிட்டதே என்ற சிறுகுறையைத் தவிர, ஆபாச காட்கள் இன்றி, அடிதடி சண்டைகள் இன்றி, குடும்பத்தோடு அமர்ந்து படத்தைப் பார்க்க வைத்தது மட்டுமின்றி, வாய்விட்டு சிரிக்க வைத்த இயக்குநர் வள்ளிகாந்திற்கு செம செம செமையான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
2018-ஆம் ஆண்டின் சிறந்த குடும்பத்திரைப்படம் என்ற விருது நிச்சயம் இந்தப்படத்திற்கு உண்டு.

Thursday, May 24, 2018

விடமாட்டேன் உன்னை தொடர்கதை இப்போது புத்தகமாக வெளிவருகிறது!

அன்பு வலைப்பூ நண்பர்களே...

இந்த வலைப்பூவில்... விடமாட்டேன் உன்னை என்ற தொடர்கதையைப் படித்திருப்பீர்கள். அதற்கு நீங்கள் தந்த ஆதரவைக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க... இதை புத்தகமாக வெளியிடுகிறேன். இந்த புத்தகத்திற்கு, கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் அணிந்துரை எழுதித் தந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுகிறது. 96 பக்கங்கள். விலை 80 ரூபாய்.

புத்தக வடிவிலான படைப்பிற்கும் உங்களின் ஆதரவு தேவை...


என்றென்றும் அன்புடன்

மோ.கணேசன்