Monday, May 30, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 3 (உண்மைச் சம்பவம்)

ந்த இடத்துல...” என்று சொல்லத் துவங்கிய வேதாசலத்தின் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தன.

வேதாசலத்தின் மாமன் மகன் கண்ணன். அவனுக்கு முப்பதைத் தாண்டிய வயது. திடகாத்திரமான ஆள். வேதாசலத்தின் வலது கரம் என்று சொல்லாம்.

அன்று ஒருநாள், அவனது நண்பனின் பிள்ளைகளுக்கு காதணி விழா மங்களபுரத்தில் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அவனது மற்றொரு நண்பனுடன் அந்த ஊருக்கு சென்றான்.

நண்பன் வீட்டு விழா என்பதால், அங்கு வந்த அவனது நண்பர்களுடன் கண்ணனுக்கு தண்ணியடிக்க வசதியாகப் போய்விட்டது. நண்பனின் தயவால் குடித்தவன், போதை சற்று தலைக்கு ஏறவும் நிறுத்திக் கொண்டான்.

“ஏன்டா மாப்ள அதுக்குள்ள நிறுத்திட்ட..?” என்று கூட வந்த நண்பன் அக்கறையோடு கேட்க, “போதும்டா... இதுக்கு மேல தண்ணி அடிச்சா வூடு போய் சேழமாட்டேன்... சீக்கிரமா போகழன்னா... எம் பொண்டாட்டி திழ்ட்டுவா... நான் கிழம்பறேண்டா...” என்று உளறிக்கொண்டே எழுந்தான். விட்டால் அவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தை அளந்து விடுவது போல் தள்ளாடிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

அப்போதே, மணி இரவு பதினொன்றை தாண்டிவிட்டிருந்தது. கண்ணனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் போதையில் மயங்கி படுத்து விட்டனர். கண்ணனுடன் வந்த நண்பனும் மட்டையாகி விட்டிருந்தான்.

தள்ளாடியபடியே நடந்தவன், தட்டுத் தடுமாறியபடியே “போய்ழ்ட்டு வரேண்டா...” என திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு அவனுடைய யமஹா வண்டியை நெருங்கினான்.

வண்டியை நெருங்கியதும் சாவியை சட்டை பாக்கெட்டிலிருந்து துழாவி எடுத்து யமாஹாவிற்குள் பொருத்தினான். கிக்கரை மூன்று முறை காலால் தடவித் தடவிப் பார்த்தான். ஒரு வழியாக கிக்கரைக் கண்டுபிடித்தவன் ஓங்கி ஒரு உதை விட்டான்.

வாங்கிய உதையை தாளாத யமஹா ‘இதோ கிளம்பிட்டேன் எசமான்’ என்பது போல உறுமியது. வண்டியில் உட்கார்ந்தவன், அந்த போதையிலும் வண்டியை தெளிவாக சாலையில் விரட்டினான். அந்த கிராமத்து சாலையில் இருட்டை கிழித்தபடி அவனது யமஹா சென்றது.

மங்களபுரத்திலிருந்து குன்றத்தூருக்கு வர பதினைந்து கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். நேரம் இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த கிராமத்து சாலையில் வாகனங்கள் ஏதுமில்லை.

அந்த சாலையிலிருந்து பிரிந்து சேலம் டூ கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டி திரும்பியது. சாலையின் ஓரத்தில் இருந்த வழிகாட்டிப் பலகை குன்றத்தூருக்கு இன்னும் 14 கிலோ மீட்டர் என காட்டியது.

அந்த தேசிய நெடுஞ்சாலையிலும் அவ்வளவாக வாகனங்கள் வரவில்லை. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க்கொண்டிருந்தன.
கண்ணன் சற்றே போதையில் இருந்ததால் யமஹாவை தடுமாறியபடியே ஓட்டிக் கொண்டிருந்தான்.

அந்த போதையிலும் அவன் மனைவி காலையில் சொன்னது நினைவிற்கு வந்தது ‘காது குத்துக்கு நானும் வரமாட்டேன், எம்புள்ளைங்களையும் அனுப்ப மாட்டேன். என் தம்பி வீட்டு விஷேசத்துக்கு நீங்க வரமாட்டீங்க... ஆனா உங்க பிரெண்டு வீட்டு விஷேசத்துக்கு மட்டும் நாங்க வரணுமாக்கும். உங்களுக்கு வேணும்னா நீங்க மட்டும் போங்க... ஆனா ராத்திரி ஒழுங்கா வீடு வந்து சேரல..? அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!’

திடீரென்று வீசிய காற்றில், தன் தலையை சிலுப்பியபடி நினைவிலிருந்து மீண்டவன், ‘சீக்கிரம் வீட்டிற்கு போகணுமே’ என்று நினைத்தவாறு அந்த போதையிலும் யமாஹாவை வேகமாக விரட்டினான்.

‘சிங்கபுரம் ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று ஊர் எல்லையில் உள்ள மஞ்சள் வரவேற்பு பலகை அவனை வரவேற்றது. சிங்கபுரத்தை தாண்டியதும் பெரிய பாலம் கண்ணுக்கு தென்பட்டது.

பாலத்தை நெருங்கிய பின்னும் வேகத்தை குறைக்காமல் பாலத்தின் இடது வளைவில் சென்றான். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணனின் கண்ணை சில நொடிகள் ப்யூஸ் ஆக்கியது.

போதையோடு சேர்ந்து, லாரியின் வெளிச்சமும் கண்ணனை தடுமாற வைத்தது. அந்த தடுமாற்றத்தில் யமஹாவை இடது புறம் வளைத்து ரோட்டை விட்டு கீழே இறக்கினான்.

லாரி டிரைவரும் எதிர்பாராத திடீர் நிகழ்வால் லாரியை இடது பக்கம் திருப்ப, லாரியும் ரோட்டை விட்டு இடது புறமாக யமாஹாவை நோக்கி இறங்கியது.

எல்லாம் கண நேரத்தில் நிகழ்ந்து விட, டேங்கர் லாரியின் டயரில் தவளை சிக்கிக் கொண்டது போல யமஹா சிக்கிக் கொண்டது. அடியில் சிக்கிய யமஹாவை தேய்த்த படியே இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் அந்த டேங்கர் லாரி இறங்கியது.



லாரிக்கு அடியில் மாட்டிய கண்ணனின் உயிர், கண்மூடித் திறப்பதற்குள் காற்றில் கலந்து போனது. அவனது ப்ளூ கலர் யமஹா, அவனது ரத்தச் சிதறலால் சிவப்பு மயமாய் மாறிப்போனது.

எல்லாம் முடிந்து போகவே லாரியிலிருந்த கிளீனர் கீழே குதித்துப் பார்த்தான். பார்த்தவன் “அண்ணே... ஆள் பூட்டான்ணே... வண்டியை எடுங்கன்ணே கிளம்பிடலாம்” என்று அவன் சொன்னதுதான் தாமதம், உடனே டேங்கர் லாரியை ரிவர்ஸ் எடுத்து, ரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் லாரி டிரைவர்.

அதற்குள் லாரிக்குள் குரங்கைப் போல் தாவி ஏறிய கிளீனர் “ அண்ணே விடுன்னே போலாம்…” என பரபரத்தான். அடுத்த சில வினாடிகளில் அந்த டேங்கர் லாரி அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்து போனது.

கண்ணன் மட்டும் அந்த இடத்தில் உயிரற்றுக் கிடந்தான். ஆல்கஹால் கலந்த ரத்தம் அவன் மேலுள்ள விசுவாசத்தால் அவனை சுற்றி பாதுகாப்பது போல் குளமாகி நின்றது.

“மாமா.. மாமா...” என வேதாசலத்தை ராமு பிடித்து உலுக்கவும், அவர் சுயநினைவிற்கு வந்தார்.

“மாப்ள... அந்த இடத்துலதான், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் மச்சான் கண்ணன் ஆக்ஸிடெண்டாகி செத்துப் போயிட்டான். அவனுடைய ஆவிதான்....”

வேதாசலம் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த ராமு “அட ஏன் மாமா.. நாம ரெண்டாயிரத்தி ஒண்ணுல இருக்கோம். இன்னும் ஆவி, பேயி, பிசாசுன்னு பேசிகிட்டு... இவன் வேற எதையோ நினைச்சி பார்த்து பயந்திருக்கான். அந்த பயத்துலதான் இவனுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும் மாமா..” என்று ராமு பேசிக்கொண்டிருக்கும் போதே...

“அய்யோ… உங்க பேச்சை அப்புறமா வச்சிக்கங்க… என் புள்ளைய என்னால பாக்க முடியல... என்னங்க நம்ம ராமநாதனை வரச்சொல்லுங்க…” என்று அழுதபடியே கத்தினார் கமலம்மாள்.

அதுதான் சரியென்று நினைத்த வேதாசலம், ராமுவிடம் “மாப்ள... நம்ம சிகாமணி டாக்டரோட ஆஸ்பத்திரி தெரியும்ல…”

“தெரியும் மாமா...”

“அவர்கிட்ட கம்பௌண்டரா வேலை பார்த்திகிட்டிருக்க ராமநாதன், நம்ம பையன்தான். அவன் இப்போ சின்னதா ஒரு ஆஸ்பத்திரி வச்சிருக்கான். அவனை போய் கூட்டி வா...”

“சரி மாமா...” என்ற ராமு அடுத்த நிமிடம் டிவிஎஸ்ஸோடு கிளம்பிப் போனான்.

பெட்டில் படுத்துக் கிடந்த சங்கரைப் பார்த்தார் வேதாசலம். அவனது இடது கடவாயின் ஓரம் எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. அவனது கன்னத்தை தட்டி தட்டி கூப்பிட்டார்.

“சங்கர்... யப்பா சங்கர்... அப்பாவை பாருடா... என்னடா ஆச்சி உனக்கு...” என்றார்

அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

“அடியேய்... போய் தண்ணி கொண்டுட்டு வா...” என வேதாசலம் சொல்ல, கமலம்மாள் சமயலறைக்குள் ஓடிச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து வந்தார்.

அதற்குள் தனது மடியில் சங்கரை எடுத்து கிடத்திக் கொண்ட வேதாசலம், கமலம்மாளிடம் இருந்து டம்ளரை வாங்கினார்.

வாங்கிய தண்ணீரை சங்கரின் வாயில் புகட்ட, தண்ணீரை அவனது வாய் ஏற்றுக் கொள்ளாமல் அப்படியே வெளியில் துப்பியது. சில்லிட்டுக் கிடந்த உடல் இப்போது நெருப்பாய் கொதிக்க ஆரம்பித்தது.

அவனது முகத்தில் தண்ணீரை தெளித்துப் பார்த்தார். தண்ணீர் அவன் முகத்தில் பட்டதுதான் தாமதம்... அதை ஏற்றுக் கொள்ளாதவன் போல “ம்ஹீம்... ம்ஹீம்... ம்ஹீம்...” என அரற்றினான்.

அதைப் பார்த்த கமலம்மாள் மறுபடியும் அழ ஆரம்பித்தார் “ஐயோ எம்புள்ளைக்கு என்னாச்சின்னே தெரியலயே... மாரியாத்தா... காளியாத்தா...” என பெருங்குரலெடுத்து அழவும், அந்த அழுகுரல் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேதாசலத்தின் இரண்டாவது மகன் சந்திரனும், கடைசி மகளான செல்வியும் திடுக்கிட்டு எழுந்தனர்.

எழுந்தவர்கள் கமலம்மாளிடம் வந்து... கண்ணைக் கசக்கியபடியே “ஏம்மா அழுவுற...” என்று ஒரு சேரக் கேட்டார்கள்.

கேட்டபடியே தலையை திருப்பிய சந்திரன் வேதாசலத்தின் மடியில் இருந்த சங்கரைப் பார்த்தும் பயந்து போனான்.

“அப்பா... அண்ணனுக்கு என்னப்பா ஆச்சி... ஏன்பா அண்ணன் இப்படி இருக்கான்…” என சந்திரன் கேட்பதற்கும், கம்பௌண்டர் ராமநாதன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவன் பின்னாடியே ராமுவும் வந்தான்

“ராமனாதா என் பையனுக்கு...” என வேதாசலம் உடைந்து போன நிலையில் குரல் கொடுக்க...

“அட என்னண்ணே… குடும்பத்துக்கே பெரியாளு நீங்க... நீங்களே இப்படி மனசு தளரலாமா..? ராமு எல்லாத்தையும் வண்டியில வரும்போது சொல்லிட்டாப்ள... அதான் நான் வந்துட்டேன்ல. இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க தைரியமா இருங்க...” என்று பதில் சொன்னபடியே சங்கரை நெருங்கினான் ராமநாதன்.
 
சங்கரின் கண்ணை டார்ச் லைட் அடித்து பரிசோதித்தான். நாடி பிடித்துப் பார்த்தான். மேலும் சில வழக்கமான பரிசோதனைகளை செய்தவன் “ஒண்ணுமில்ல இது ஏதோ புதுக்காய்ச்சல் போல இருக்கு... இப்போதைக்கு ஊசி போடறேன். மருந்து எழுதி தரேன். ஒரு மாத்திரைய மட்டும் சாப்பாட்டுக்கு முந்தி கொடுங்க. நாளைக்கு நைட்டு வந்து பாக்கறேன்... பயப்படாதீங்க காய்ச்சல்தான்” என்ற ராமநாதன், தான் கொண்டு வந்திருந்த மருந்துகளில் காய்ச்சல் குறைவதற்கு ஒரு ஊசியும், தூங்குவதற்கு ஒரு ஊசியையும் போட்டுவிட்டு மருந்தை எழுதிக் கொடுத்தான்.

“சரி மாமா… நான் போய் இவரை விட்டுட்டு வாரேன் என்று ராமு…” கிளம்ப ஆயத்தமானான்.

“சரிப்பா…” என்ற வேதாசலம் நூறு ரூபாய் நோட்டை ராமநாதனிடம் கொடுக்க, அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ராமுவுடன் கிளம்பிப் போனான் ராமநாதன்.



அவன் கிளம்பிப் போன அடுத்த சில நிமிடங்களில் தெருவில் படுத்துக் கிடந்த ஒரு நாய் “ஊ......ஊ.....ஊ...” என பெரிதாக ஊளையிட ஆரம்பித்தது.

அந்த சத்தத்தைக் கேட்ட மறு வினாடியே..!

2 comments:

Natu said...

3 daysku once entha kathai podakudatha namba 1 week katherukanuma....?

By
Bhuvana

மோகனன் said...

வாங்க புவனா...

எழுதலாம்தான்.. வேலைப்பளு அதிகம், இன்னும் ஒரு 4 நாள்தானே காத்திருங்க...

தங்களின் ஆதரவிற்கு நன்றி...

அடிக்கடி படிக்க வாங்க..!