Tuesday, August 16, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 8 (உண்மைச் சம்பவம்)

ஷீர் பாயின் குரலைக் கேட்டதும், சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரவர் முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி அப்பிக் கொண்டது.

சங்கரின் மேல் அந்த ஆவி மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டதும், அவனுடைய முகம் பழையபடி இறுக்கமாக மாறியது மட்டுமின்றி, முகமும் இருண்டு போனது.

ஆவியைப் பார்த்து பஷீர் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தார் “அரே சைத்தான்... நீயா... இல்ல இந்த பஷீரான்னு பார்த்துடலாம், யாருகிட்ட விளையாடுற என்றபடியே, தன்னிடமுள்ள தாயத்தை எடுத்து, வாயினருகே வைத்தபடி, ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்தார்.

பாயின் முகத்தை, அந்த ஆவி பயத்தோடு பார்த்தது.

மந்திரத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, சட்டென்று எழுந்து சங்கரின் உச்சிமுடியை எட்டிப் பிடித்தார் பஷீர். பிடித்ததுமே அவர் இன்னும் வேகமாக மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்.

சங்கரின் மேல் இருந்த ஆவி, ஐயோ... என்னை விடுங்க, வலிக்குது பாய்... என அலறியது.

வேதாசலத்தை சைகை மூலம் அருகில் அழைத்த பாய், சங்கரின் முடியை கண்ணால் காட்டி இந்த முடியில ஒரு முடி கூட பிரிஞ்சிடக் கூடாது. அப்படியே கெட்டியா பிடிச்சுக்குங்க என்றார்.

சங்கரின் அருகே வந்த வேதாசலம், பஷீர் சொன்னபடியே சங்கரின் உச்சி முடியை, பயம் கலந்த பார்வையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

விட்டுடுங்க பாய்.. நான் போயிடறேன்...வேணாம் பாய் என்னை விட்டுடுங்க.. நான் எங்கயாச்சும் ஓடிப் போயிடறேன். மாமா என்னை விட்டுடுங்கஎன்று ஆவி கத்திக்கொண்டே இருந்தது.

அதன் குரலை சிறிதும் சட்டை செய்யத பஷீர், அருகிலிருந்த தாயத்து டப்பாவிலிருந்து, கத்தரிக்கோலை கையிலெடுத்தார். வேதாசலம் பிடித்திருந்த உச்சி முடியை நறுக்கென்று கத்தரித்தார்.

சங்கரின் உச்சி முடி கத்தரிக்கப்பட்டதும் சங்கரின் மீதிருந்த ஆவியின் குரல் அடங்கிப் போய்விட்டது. சங்கர் மயக்கமானவன் போல் கீழே விழப்போனான்.

ஒரு கையில் சங்கரின் உச்சிமுடியைப் பிடித்துக் கொண்டிருந்த வேதாசலம், மறுகையால் அவனைத் தாங்கிப் பிடித்தார்.

அவரது கையிலிருந்த உச்சி முடியை மிகவும் பத்திரமாக வாங்கிய பஷீர், சில மந்திரங்களை முணுமுணுத்தபடி அதை தாயத்துப் பெட்டியில் வைத்து பத்திரமாக மூடினார்.

ஏற்கெனவே மந்திரித்து வைத்திருந்த தாயத்தை எடுத்து, சங்கரின் வலது கையில் கட்டி விட்டார். சங்கர் ஆழ்ந்த உறக்கத்திற்ப் போனவன் போல் தெரிந்தான்.

வேதாசலத்தைப் பார்த்து இனி பிரச்சினை இல்லை. பயப்படாம உங்க பையன நீங்க கூட்டிகிட்டு போகலாம். நான் மந்திரிச்சு கொடுக்கறதை வாங்கிக்கிட்டு, நான் சொல்றதை மட்டும் மறக்காம செஞ்சுடுங்க என்றார் பஷீர்.

அதற்குள் கமலம்மாளும், சங்கரின் சித்தி அலமேலுவும் வந்து, அவனை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டனர். சங்கரிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. 

வேதாசலத்தை தனியே அழைத்துச் சென்ற பஷீர் பாய், அவரிடம் எதையோ ரகசியமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.

கமலம்மாள் பஷீரைப் பார்த்து பாய்.. எம்பையன ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போகலாமா என்றார்.

ம்ம்... தாரளமா கூட்டிகிட்டு போங்க... பயப்பட வேண்டாம் என்றுவிட்டு, மீண்டும் வேதாசலத்திடம் ரகசியமாய் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.

அதுவரை ஓரமாக நின்று கொண்டிருந்த ராமுவையும், வெள்ளியங்கிரியையும் கூப்பிட்ட கமலம்மாள் சங்கரை ஆட்டோவுக்கு கூட்டிகிட்டு போங்கப்பா என்றார்.

தயக்கத்தோடு வந்த ராமுவும், வெள்ளியங்கிரியும் சங்கரை 

ஒரு வித பயத்தோடு கைத்தாங்கலாகபெ பிடித்துக் கொண்டனர்.

ராமுவை விட்டு சற்று தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த நவநீதனைப் பார்த்து நவநீ, நீயும் எங்கக்கூட வாயேன் என்றான் வெள்ளியங்கிரி.

‘இனிமேல் கிளம்ப வேண்டியதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, நவநீதனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

ஐந்து நிமிடம் கழித்து வேதாசலம் தனது கையில் மூன்று எலுமிச்சம்பழம், யந்திரத் தகடு என சில மந்திர சமாச்சாரங்களை எடுத்து வந்தார்.

வேதசலத்திற்காக காத்திருந்தவர்கள், அவர் வந்ததும், குன்றத்தூரில் இருந்து வரும்போது எப்படி ஆட்டோவில் உட்கார்ந்திருந்தார்களோ, அதே இடங்களில் இப்போதும் உட்கார்ந்து கொண்டனர்.

ராமுவும் வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
ஆட்டோ கிளம்பியது. கமலம்மாள் தனது மடியில் சங்கரை கிடத்திக் கொண்டார். சங்கரின் சித்தி மறுபுறம் அமர்ந்திருக்க, அவருக்கு பக்கத்தில் நவநீதன் உட்கார்ந்திருந்தான்.

வேதாசலம் பின்புறம் உட்கார முயல, ஆட்டோ டிரைவர் உதறலோடு கூப்பிட்டான்.

அண்ணே... முன்னாடி என்னோட வந்து உட்காருங்க... எனக்கு தனியா முன்னாடி உட்கார்ந்திருக்க பயமாயிருக்கு என்றான்.

அடச்சே.. நல்ல ஆம்பளடா நீ... என்று அவனை திட்டியவாறு, ஆட்டோ டிரைவரோடு முன்புறம் உட்கார்ந்து கொண்டார்.

"அட போண்ணே... நான் இந்த மாதிரி... என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. உங்க பையன் ஆவி பிடிச்ச மாதிரி இருந்தான். திடீர்னு நல்லாயிட்ட மாதிரி தெரிஞ்சான். மறுபடியும் ஆவி வந்து பிடிச்சுக்கிச்சு... இதெல்லாம் நான் பார்த்ததே இல்லண்ணே... அங்க என்னால நிக்கவும் முடியல... அங்கிருந்து நகரவும் முடியல... எனக்கு பேயின்னாலே பயம்ணே... ஆட்டோவுக்கு கூட காசு வேணாம்.. பத்திரமா என்னை குன்றத்தூர்ல போய் விட்டுட்டீங்கன்னா அதுவே போதும்ணே...” என்றான்.

”அடப்பாவி... எல்லாம் சரியாயிடுச்சிடா... நீதான்டா எங்களை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும். பயந்து தொலையம, ஒழுங்கா ரோட்டை பாத்து வண்டிய ஓட்டு” என்றார் வேதாசலம்

அதுக்குத்தாண்ணே உங்களை என் பக்கத்திலயே உட்காரச் சொன்னேன்… என்றபடி ஆட்டோவை குன்றத்தூரை நோக்கி விரட்டினான்.

வேதாசலமும், ஆட்டோ டிரைவரும் பேசிக்கொண்டு வந்ததை, கேட்டுக்கொண்டிருந்த நவநீதன் தனது கடிகாரத்தைப் பார்த்தான். அந்த அவனது ரேடியம் வாட்ச், மணி இப்போது 11.30 என்று தெளிவாய்க் காட்டியது.   

அந்த நள்ளிரவு வேளையில், தேசிய நெடுஞ்சாலையில் சுத்தமாய் ஜனநடமாட்டமில்லை. பெரிய பெரிய டேங்கர் லாரிகளும், அரசு விரைவுப் பேருந்துகளும், தனியார் டீலக்ஸ் பேருந்துகளும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆட்டோவை கடந்து சென்றன.

ஆட்டோவானது குன்றத்தூரிலுள்ள வேதாசலம் வீட்டிற்கு போய்ச்சேரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை.

வேதாசலம் வீட்டின் முன்பு ஆட்டோ வந்து நின்றது. பின்னாடியே ராமுவும், வெள்ளியங்கிரியும் டி.வி.எஸ்ஸில் வந்து சேர்ந்தனர்.


ஆட்டோவின் சத்தம் கேட்டதும், ஜிம்மி நாய் குலைக்க ஆரம்பித்தது. டேய் ஜிம்மி... என்று வேதசாலம் அதட்டவும், ஜிம்மி அமைதியானது.

சங்கரை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து வந்தனர். அதுவரை அவர்களுடன் இருந்த நவநீதன், நேரே வேதாசலத்திடம் சென்று நான் போயிட்டு வர்றேங்க என்றான்.

"நீ எங்க கூட வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா நவநீ... உங்களுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்திருந்தாலும் கூட, அத மனசில வச்சிக்காம, இந்த அர்த்த ராத்திரியில எங்க கூட வந்தியே... என்கூட கூட்டிக்கிட்டு வந்தவனுங்க தொடைநடுங்கிகளா போயிட்டானுங்க. நீயும் வரலன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும். உனக்கு ரொம்ப நல்ல மனசுப்பா... போய்ட்டு வாப்பா’’ என்றார்

"அட ஏங்க, பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க, அவன் என்னோட பிரண்டு... சரி நான் வர்றேங்க..?" என்று விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டை நோக்கிப் போனான் நவநீதன்.

ஒரு நிமிட நடையில் வீட்டை அடைந்தான் நவநீதன். வீட்டிற்கு வெளியே நவநீதனின் அம்மாவும், அப்பாவும் தூங்கிக் கொண்டிருக்க, சத்தம் காட்டாமல் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

உள்ளே வந்த்தும் டியூப் லைட்டை எரிய விட்டான். மணி 12 என்பதற்கு அடையாளமாக சுவர் கடிகாரம் மெல்லிசை ஒன்றை இசைக்க விட்டு, சில மணித்துளிகளில் அமைதியானது.

சில நிமிடங்களில் லுங்கிக்கு மாறியவன், பாயை விரித்து படுத்துக் கொண்டான். அவன் மனதில், இன்று மாலை முதல் இரவு வரை நடைபெற்ற சம்பவங்கள் வந்து போயின.

அடுக்கடுக்காய் கேள்விகளும், குழப்பங்களும் அலைகழித்தன.
இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டே இருந்தவன், எப்படியோ தூங்கிப் போனான்.

18 comments:

யூர்கன் க்ருகியர் said...

ரைட்டு !!

மோகனன் said...

வாங்க யூர்கன்...

ஆமாம் இந்த ரைட்டுக்கு என்ன அர்த்தம்?

”தளிர் சுரேஷ்” said...

த்ரில்லா இருக்கு! பாராட்டுக்கள்!

மோகனன் said...

நன்றி தோழரே...

Anonymous said...

when will you finish this, going loooong

மோகனன் said...

இன்னும் இரண்டே பாகங்களில் முற்று பெற்றுவிடும் அனானி தோழரே...

வருகைக்கு நன்றி..!

புதிய பொடியன் said...

wow super sir full story ya yenaku mail panna mudium ah?

சிவகுமாரன் said...

படங்கள் பயமுறுத்துகின்றன.

மோகனன் said...

அன்பு HBK

மின்னஞ்சல் செய்ய இயலாது... நீங்களே காப்பி செய்து கொள்ளவும்... நன்றி..!

மோகனன் said...

நன்றிங்க சிவகுமாரன்...

chandar said...

thodar kadhai migavum arumai yaga ulladhu... suspense, thriller ellam nice... dialogues, ezhuthu nadai ellam eliya murai il ulladhu...

august ku piragu padhivu seiya villaiye? please , thodaravum...

மோகனன் said...

வணக்கம் சந்தர்...

நீண்ட வேலைப்பளு... ஆதலால்தான் இந்த தாமதம்

விரைவில் இக்கதையின் மீத அத்தியாயங்களையும் எழுதி விடுகிறேன்...

அதுவரை காத்திருக்கவும்... நன்றி..!

srinivasan said...

Dear Sir,
please put the next episode, now we got the doubt oru velai neenga than antha sankaro

srinivasan said...

திரு மோகனன் அவர்களே,
மீத கதையை சீக்கிரம் முடிக்கவும் இல்லையேல் நாங்களும் பஷிர் பாய் போல உங்களின் மேல் கோவம் கொள்ள நேரிடும்
நன்றியுடன்
ஸ்ரீனிவாசன்

Anonymous said...

what happened? When will you continue?
Kalai

மோகனன் said...

திரு சீனிவாசன்... மற்றும் கலை அவர்களுக்கு...

விரைவில் இதை எழுதி முடிக்கிறேன்... இன்னும் இரு தினங்களில்...

Unknown said...

Mohanan romba thrillinga irukku and atha neenga soldra vitham atha vida supera irukku
neenga vera pei kathaigal ethum ezuthirukkingala iruntha link comment pannuga please pei kathaigal mattum and all the best mohanan

மோகனன் said...

நன்றி ஹ்ருத்திக்...

இது என் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவம்...

அதைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன்... வேறு கதை ஏதும் எழுதவில்லை... அப்படி எழுதினால் இந்த பக்கத்தில்தான் எழுதுவேன்...