Monday, August 20, 2012

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 10 (உண்மைச் சம்பவம்)

''அண்ணே… நம்ம சங்கர்… நம்ம சங்கர் செத்துப் போயிட்டாண்ணே… அவனை பேய் அடிச்சு கொன்னுடுச்சி… நம்ம பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்கண்ணே... சங்கர் செத்துப் போன தகவலை சொல்லிட்டு வர சொன்னாங்கஅதான் வேகமாக போயிட்டிருக்கேன்...'' என்று திக்கித் திணறி சொல்லி விட்டு, மூச்சிரைக்க நின்றான் பெரியசாமி.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நவநீதனுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு சில மணித்துளிகள் பிடித்தது.

பெரியசாமி சொன்னதைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்த கார்த்திக்கை நவநீதன் தட்டி எழுப்பினான். அவன் எழுந்திருக்காமல் போகவே... அருகிலிருந்த டீக்கடைக்கு அவனை இருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள்.

சோடா ஒன்றை வாங்கி அவனது முகத்தில் சோடா நீரைத் தெளித்து எழுப்பவும், கார்த்திக் மெல்ல எழுந்தான். எழுந்ததும் அவன் கண்கள் பீதியில் வெளிறிப்போக, ''அண்ணா... நான் அப்பவே சொன்னேன்ல... என்னை பேய் வந்து அமுக்குச்சின்னு... பாருங்க இப்போ சங்கரு அண்ணன் செத்துப் போயிட்டார். அவரை பேய் அடிச்சி கொன்னுடிச்சி... அடுத்து நானா..?'' என்று அழ ஆரம்பித்தான்.

''டேய்... லூசு மாதிரி உளறாத... அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காது. நீ பயந்து சாகாத... வாடா நேர்ல போய் பார்ப்போம்'' என்றான் நவநீதன்.

''நான் வரலண்ணே... அங்க வந்தா எனக்கும் பேய் புடிச்சிக்கும். இப்பதான் மாகாளி கோயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். கோயில் பூசாரி மந்திரிச்சி கொடுத்த தாயத்து இப்போ என்னிடம் இருக்கு... எனக்கு ஒண்ணும் ஆகாது... நான் எங்க வீட்டுக்கு போறேன்...'' என்று புலம்பியபடி கார்த்திக் அவனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றான் என்பதை விட ஓடிப்போனான் என்பதே உண்மை.

பெரியசாமியும் கிளம்பிப் போகவே, நவநீதன் நேரே சங்கரின் வீட்டிற்கு சென்றான். அங்கே சங்கர் சவமாயக் கிடந்தான். அவனை சேரில் உட்கார வைத்திருந்தார்கள். அவனது உடலுக்கு மாலைகள் சார்த்தப்பட்டிருந்தன. செத்துப்போயிருந்த சங்கரை உற்றுப்பார்த்தான் நவநீதன். சங்கரின் உடலை மாலைகள் மறைத்துக் கொண்டிருந்தன என்றாலும், உருக்குலைந்த எலும்புக்கூடு ஒன்று, தோலாடை போர்த்தியது போல் இருந்தது, அவனது உடம்பு. முகம் முழுதாய் ஒடுங்கிப் போய், கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் குழிவிழுந்தது போல் மூடிக்கிடந்தன. முகம் முழுதாய்க் கருத்துப்போய் இருந்தது. 

நவநீதனைப் பார்த்த வேதாசலம், வெடித்து விம்மி அழத் தொடங்கினார்... 

''அப்பா சங்கரு... உன் பிரெண்டு நவதீநன் வந்திருக்கான். பாருப்பா... அவன்கிட்ட பேசுப்பா... நாளைக்கு ஞாயித்துக்கிழமை... கிரிக்கெட் விளையாட போவணுமில்ல... எழுந்திரிப்பா...'' என சொல்லியபடி தலையலடித்துக் கொண்டு அழுதார்.





நவநீதன் அருகே வந்த வேதாசலம் ''நவநீ... நீயாச்சும் சொல்லுப்பா... அவனை பேசச் சொல்லுப்பா... சொல்லுப்பா... தவமிருந்து பெத்த புள்ளைப்பா...''

கமலம்மாள் பெருங்குரலெடுத்து கத்தத் தொடங்கினார். ''அடி மாரியாத்தா... உனக்கு கண்ணே இல்லையாடி... என் புள்ளையை காப்பத்த உன்னால முடியலையா... அடி தலைவாசல் மாகாளி... உன் கோயிலுக்கு மாசா மாசம் வந்து பூசை செஞ்சேனே... இப்படி பேயடிச்சு எம்புள்ளைய கொன்னுபோட வச்சிட்டீங்களே...'' என்றபடி மார்பிலடித்துக் கொண்டே அழுதவர், அப்படியே மயங்கிச் சரிந்தார்.

''ஐயோ சங்கரு... உங்கம்மா மயங்கிட்டாடா... இப்பயாச்சும் எழுந்து பாருடா... பாருடா... பாருடா...'' என்று சங்கரின் சித்தி அலமேலு கதறினார்.

மரணம் ஒரு குடும்பத்தை எப்படி கதறிச் சிதற வைக்கும் என்பதை அன்றுதான் நவநீதன் உணர்ந்து  கொண்டான். அவர்களின் அழுகுரல் அந்த வீதியெங்கும் ஒலித்தது. இடையிடையே சங்கு, செகண்டைச் சத்தமும் தன் பங்கிற்கு ஒப்பாரி வைத்தது.

சங்கரின் உறவினர்கள் வரவே, அவர்களுக்கு கை கொடுத்து, அழ ஆரம்பித்தார் வேதாசலம்.

ஒரு மூலையில் சங்கரின் தம்பி மோகன் அழுது கொண்டிருந்தான். அவனை சைகை காட்டி, ’இங்கு வா’ என கூப்பிட்டான் நவநீதன்.

அழுதபடியே வந்த மோகனிடம், ''என்னடா ஆச்சி... நேத்து நைட்டு பாய் வீட்டுக்கு போயிட்டு வந்தப்ப, அவனுக்கு சரியாயிடும் பயப்படாதீங்கன்னாங்க... நேத்து பார்த்ததை விட இன்று எலும்புக்கூடாய் போயிட்டானே... என்னடா ஆச்சி... எப்படிடா நடந்துச்சி..?'' 

''காலைல இருந்து அண்ணன் எதுமே சாப்பிடல... தண்ணியாச்சும் குடிப்பான்னு பார்த்தா, தண்ணிய கண்டாவே பயந்து நடுங்கினான். மதியம் 12.00 மணி இருக்கும்... ஊளைச்சத்தம் அவனிடமிருந்து பயங்கரமா வர ஆரம்பிச்சுது... எல்லோரும் பயந்து போய் அண்ணனை எழுப்பிப் பார்த்தோம்... ஊளைச் சத்தம் மெல்ல மெல்ல ஆரம்பித்து... அஞ்சு நிமிஷத்துல அதிகமா ஊளையிட ஆரம்பிச்சிட்டான். அவன் கண்ல இருந்து கண்ணீர் வந்துச்சு... எச்சில் ஒரு பக்கம் ஒழுதுகிட்டே இருந்திச்சி... உடம்பை எல்லாம் அவனாவே தன் நகங்களால கீறிக்கிட்டான்... அவன் கையெல்லாம் ஒரே ரத்தம்... ஊளை சத்தம் மெல்ல மெல்ல அடங்கிச்சு... அப்படியே... அண்ணனும்.... துடிதுடிச்சி.... அடங்.....'' அதற்கு மேல் மோகனால் சொல்ல  முடியவில்லை. அவனது அழுகையும் உச்சத்திற்குப் போனது.

எல்லாவற்றையும் கேட்ட நவநீதன், சங்கரின் அருகே சென்று பார்த்தான். அவன் முகம் வற்றிப்போய், கண்கள் எல்லாம் உள்ளே சென்று இருந்தது. அவன் மூக்கில் ரத்தம் வடிந்திருந்ததற்கான அறிகுறியும் தென்பட்டது.

அவனை தொட்டுக் கும்பிட்டு விட்டு, ஒரு நண்பனை, நல்ல கிரிக்கெட் வீரனை இழந்து விட்டோமோ என்ற கவலையோடு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.

சங்கரின் மரணத்திற்கு பேய் காரணமல்ல என்பதை அவன் முன்பே உணர்ந்திருந்தான். ஆனால் இந்த மரணத்திற்கு வேறு காரணம் இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், இதுகுறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

ன்று மாலை கிரிக்கெட் விளையாடும் அவனது டீம் ஆட்கள் அனைவரும் ஒன்று கூடினர். பெரியசாமி, கார்த்திக் உள்ளிட்ட அத்தனைபேரும் அங்கே ஆஜராகியிருந்தார்கள். ஒவ்வொருவரும் பயந்து போயிருந்தனர். கார்த்திக் மிகவும் பயந்து போயிருந்தான்.

''நவநீ அண்ணா... சங்கரோட மாமா பேயா வந்து அவரை கொன்னுட்டதா சொல்றாங்க... அப்போ அவரும் நம்ம ஊர்ல இருக்குற யாரையாவது பிடிச்சுக்குவாரா..? இனிமே நம்ம ஊர்ல யாரும் நடமாட முடியாதா?. சனிப்பொணம் தனியா போகாது... கூட ஒரு ஆளோடதான் போகும்னு சொல்றாங்க... சங்கர் நம்ம கூடதான் விளையாடுவார்... அப்போ அவரும் பேயா வந்து நம்மளை பிடிச்சிக்குவாரா.. சொல்லுண்ணா?'' என்றான் சதீஷ்

இவனையடுத்து கார்த்திக் வாயைத் திறந்தான். ''நேத்து நைட்டுதான் என்னை ஒரு பேய் அமுக்கி கொல்லப் பார்த்துச்சி... சங்கர் வேற பேயடிச்சி செத்துட்டாரு... நாம அவ்ளோதான்...'' என்று பயந்து நடுங்கினான்.

பிளஸ் டூ வகுப்பில் சயின்ஸ் குரூப் எடுத்துப் படித்தவன் நவநீதன். அதுமட்டுமின்றி பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். ஆதலால் எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணம் அவனிடம் இருந்தது. கிரிக்கெட் விளையாடும் பசங்களின் பயம் தேவையில்லாதது என அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது

அவர்களின் பயத்தை போக்க வேண்டியது தன் கடமை என்று உணர்ந்து கொண்டு, பேச ஆரம்பித்தான்.

''எல்லோரும் கேட்டுக்கோங்கடா... சங்கர் பேயடிச்சி ஒண்ணும் சாகல... அவன் செத்துப் போனதற்கு வேற ஏதோ காரணம் இருக்கு... அந்த காரணம் என்னான்னு சீக்கிரமா கண்டுபிடிச்சி சொல்றேன். பேய் பிசாசுன்னு பயப்படாதீங்க... அப்படி எல்லாம் ஏதும் இல்ல. உங்களை விட அவன்தான் எனக்கு ரொம்ப நெருக்கமான பிரெண்டு. அப்படி பிடிக்கறதா இருந்தா, அவன் என்னை முதல்ல பிடிக்கட்டும்நான் அவனைப் பாத்துக்கறேன்.'' என்று தனது பேச்சை இடையில் நிறுத்திவிட்டு, அவர்களைப் பார்த்தான் நவநீதன். 

எல்லோரும் நவநீதனின் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். மீண்டும் நவநீதன் பேச ஆரம்பித்தான். 

''பேய் பிசாசு என்ற மூடநம்பிக்கை எல்லாம் படிப்பறிவில்லா கிராம மக்களை ஏமாத்தும் வேலைடா. இதே படிச்ச மக்கள் இருக்குற சிட்டில பேயிருக்குன்னு பிசாசு இருக்குன்னு யாராச்சும் சொல்லி இருக்காங்களா..? உதாரணத்துக்கு சென்னையை எடுத்துக்கோங்க... அங்க தினமும் ஆக்சிடெண்ட்ல, ஹாஸ்பிடல்ல எத்தனை பேர் சாவறாங்க தெரியுமா? அவங்க எல்லாம் பேயாவா திரியிறாங்க..? அப்படி செத்தவங்க எல்லாம் பேயா திரியறாங்கன்னா, நாமல்லாம் உயிர் வாழவே முடியாது. இவன் செத்ததுக்கு வேற ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு நினைக்கிறேன். எல்லோரும் பயப்படாம இருங்க.. ஒரு வாரத்துல என்ன காரணம்னு கண்டுபிடிச்சி சொல்றேன்'' என்றான்.

ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அந்த பசங்களுக்கு தைரியம் வந்ததாய் தெரியவில்லை. இருப்பினும், நவநீதன் சொன்னதுக்காக, ''சரிண்ணே... நாங்க பயப்படல'' என்றனர்.

சங்கர் இறந்து போவதற்கு முன் அவனுடைய செய்கைகள், அவன் நடந்து கொண்ட விதம் போன்றவைதான் நவநீதனுக்கு,  அவன் இறப்பின் மீது சந்தேகம் முளைக்கக் காரணமாக இருந்தது. அத்துடன் அவர்களது சந்திப்பும் அங்கே முடிந்தது. அவரவர் வீட்டுக்குக் கிளம்பிப் போயினர்.

ரு வாரம் போன பிறகு, கல்லூரிக்குப் போய்விட்டு, வீட்டிற்கு வரும் வழியில், சங்கரின் தம்பி மோகனை சந்தித்து பேசினான் நவநீதன்.

''என்னடா மோகன் எப்படி இருக்கீங்க..?''

''வீடே சோகத்துல இருக்குண்ணே... அப்பா மனசு உடைஞ்சி போயிட்டார். அம்மா ஒரு வாரமா சாப்பிடாம இருக்காங்க... மாமான்னு நினைச்சோம்... அந்தாளு செத்து எங்க அண்ணனுக்கு எமனா ஆயிட்டான்...''

''கவலைப்படாதடா... பிறந்துட்டோம்னா.. என்னைக்காவது ஒரு நாள் செத்துப் போகத்தான் போறோம். ஆனா இந்த வயசிலேயே சங்கர் இறந்திருக்க கூடாது. இருந்தாலும் இயற்கையை நம்மால மீற முடியாதுடா... திடமா இருங்க... சங்கர் எங்கயும் போகல... நம்ம கூடவே இருக்கான்னு நினைச்சுக்கோங்க...”  என்று ஆறுதல் கூறிவிட்டு ''சரி
ஒரு விஷயம் கேக்கறேன். பதில் சொல்றியா?'' 

''கேளுங்கண்ணே...''

''சங்கர் பணம் வசூல் பண்றதுக்கு எப்பெல்லாம் போவான்?''

''எப்பவும் சாயந்திரமாத்தான் போவான்...''

''எப்ப வீட்டுக்கு வருவான்..?''

''சாயந்திரமா போனா, பணத்தை எல்லாம் வசூல் பண்ணிட்டு நைட்டு 9 மணிக்கு மேல வீட்டுக்கு வந்துடுவான்.''

''அப்படி போற இடத்துல, சங்கரை நாய், பூனை, எலி இப்படி ஏதாச்சும் கடிச்சிதாடா..?''

''இல்லண்ணே...''

''நல்லா யோசிச்சு சொல்லு... இப்ப இல்ல... மூணு நாலு மாசத்துக்கு முன்னாடியா கூட இருக்கலாம்.''




ஆழ்ந்து யோசித்த மோகன், ''ஆமாண்ணே... சுந்தராபுரத்தில் பண வசூலுக்குப் போனப்ப ரோட்டுல ஓடிக்கொண்டிருந்த நாய், அண்ணனை கடிச்சிருச்சி. ரெண்டு நாள் கழிச்சு கொத்தாம்பாடியில போய், நாய்கடிக்கு சுட்டுகிட்டு வந்துட்டான்.''

நவநீதனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. ''சரி மோகன்... உடம்ப பாத்துக்கோ... வீட்டுல இருக்கிற ஒரே ஆம்பள பையன் நீதான். பாத்து கவனமா நடந்துக்கோ...'' என்று சொல்லிவிட்டு நேரே வீட்டுக்கு வந்தான்.

தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு குன்றத்தூரிலேயே பெரிய டாக்டர் என பேரெடுத்திருக்கும் சாந்தாராம் வீட்டிற்கு சென்றான்.

நவநீதன் குடும்பத்திற்கே சாந்தாராம்தான் மருத்துவம் பார்ப்பார். மருத்துவம் சார்ந்த சந்தேகம் எதுவாகினும் நேரே அவரிடம் போய்விடுவான். அவரும் சளைக்காமல் அவனுக்கு விளக்கம் கொடுப்பார்

''வணக்கம் டாக்டர். நல்லா இருக்கீங்களா?''

''வாப்பா நவநீதா... நல்லா இருக்கேன்!''

''உங்களை பார்க்கலாமுன்னு வந்தேன்..?''

''ஏதேனும் பிரச்சினையா..? இல்ல வழக்கம் போல சந்தேகமா..?''

''சந்தேகம்தான் சார்...'' என்றவன், அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் தன்னை பொருத்திக்கொண்டு,  ஆரம்பம் முதல் முடிவு வரை, சங்கருக்கு நடந்ததைச் சொல்லி முடித்தான்.

''எனக்கு அவன் இறப்புல சந்தேகம் சார்... சங்கர் ரேபிஸ் நோயால செத்திருப்பான்னு நினைக்கறேன். பிளஸ் டூ  விலங்கியல் பாடத்து ரேபிஸ் பத்தி படிச்சிருக்கேன். அது போலத்தான் சங்கருக்கு நடந்திருக்கும். நான் நினைச்சது சரியா டாக்டர்?''

''நினைச்சது ஹன்ட்ரண்ட் பர்சன்ட் சரிதான். ரேபிஸ்ங்கறது வெறிநாய் கடிச்சதால வரக்கூடிய வைரஸ் உயிர்கொல்லி நோய். நாய் கடிச்சதுமே தடுப்பு ஊசி போட்டுக்கணும். இல்லன்னா அடுத்த மூணு மாசத்துல ஆளையே காலி பண்ணிடும். இந்த ரேபிஸ் வைரஸ் நாய்கிட்ட இருந்துதான் மனுசங்கக்கிட்ட பரவுது. ஆனா இந்த வைரஸ் நாய்கிட்ட இருந்து வரல. அதுக்கே வேற ஒரு இடத்துலருந்துதான் வைரஸ் பரவுது. அதுக்கு நாமளும் ஒரு காரணமாக இருக்கிறோம்.''

''என்ன டாக்டர் சொல்றீங்க?” என்றான் அதிர்ச்சியுடன்.

''சாதரண தெருநாய்கள் வெறிநாய்களாக மாறுவதற்குக் காரணம், அது மனிதனால் தெருக்களில், குப்பைகளில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகள்தான். அந்தக் கழிவுகளில்தான் லிஸ்ஸா வைரஸ் (Lyssavirus) எனப்படும் ரேபிஸ் வைரஸ் இருக்கிறது. இதை சாப்பிடும் நாயின் உடம்புக்குள் செல்லும் வைரஸ், பன் மடங்காகப் பெருகி, நாயின் உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. இதனால்தான், ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாயின் வாயில் எப்போதும் எச்சில் ஒழுகிக் கொண்டு இருக்கும்.
ரேபிஸ் தாக்கிய நாயின் ஆயுள்காலம் பத்து முதல் பதினைந்து நாட்கள்தான். முறைப்படி நாம் இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்தாமல் போவதன் விளைவுகளில் மோசமான விளைவு இது. ஆனால், நகராட்சியை குற்றம் சொல்வோம்” என்றார்.

"ரேபிஸ் நோய் தாக்கிய நாயை கண்டுபிடிக்க முடியுமா டாக்டர்? 

"கண்டுபிடிக்க முடியும். கடித்தது வெறிநாயா... சாதாரண நாயா என்பதை அதன் அன்றாடச் செயல்பாடுகளை வைச்சே தெரிஞ்சிக்கலாம். வெறிநாய் என்றால் அதிக கோபத்தன்மையுடன் இருக்கும். ஓர் இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் வரை ஓடும். அதன் நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளியிருக்கும். எச்சிலை முழுங்க முடியாமல் கோழையுடன் எச்சிலை வடித்தபடி இருக்கும். 

மூச்சு வேகமாக வரும். எச்சில் ஒழுகும். கல், மண், சகதி எல்லாம் சாப்பிடும். அதன் குரலில் ஒரு மாற்றம் இருக்கும். குரைப்பது ஊளையிடுவதுபோல இருக்கும். அருகில் போனாலே மிரண்டு கடிக்க வரும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக் கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன் மற்றும் விலங்குகளைப் பாரபட்சம் பார்க்காமல் கடிக்கும். இதனால் கடிபட்ட விலங்குகளுக்கும் இதே நிலைமைதான் வரும். வெறிபிடித்த நாய் இறந்து போவதற்குள் மனிதன் உள்பட 100 உயிர்களையாவது கடிச்சிடும். பத்தாவது நாளில் நோய் முற்றி செத்துப்போகும். அதனாலதான், நம்ம ஆளுங்க எல்லாம், பத்து நாளைக்கு அந்த நாயை பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொல்வாங்க.”

''இந்த நோயோட அறிகுறிகள் மனுஷங்கக்கிட்ட எப்படி இருக்கும் டாக்டர்..?''

''ரேபிஸ் நோய் தாக்கின நாய் மனிதர்களைக் கடிக்கும் போது, அதன் எச்சிலில் இருக்கும் வைரஸ்கள், மனிதனின் உடம்புக்குள் வருகின்றன. நமக்கு உடம்பில் காயம் இருக்கும் போது, ரேபிஸ் நோய் தாக்கின நாயின் எச்சில், அந்த காயத்தில் பட்டால் கூட நமக்கு ரேபிஸ் பரவிடும். 

ரேபிஸ் வைரஸானது வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும்.  இந்த வைரஸானது, காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கிப் பயணம் செய்யும்.  அதனால், முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். 

ரேபீஸ் வைரஸ் மூளைக்குள் பரவியதும், நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதனால் உடலில் உள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குரலானது நாய் குரைப்பதைப் போலவும், ஊளையிடுவதைப் போலவும் இருக்கும். மனிதனின் விழுங்கு தசைகள் இறுகுவதால், தண்ணீர் குடிக்க முடியாமல் போகும். உமிழ்நீர்கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.  இதனால் தண்ணிய கண்டா பயப்படுவாங்க. அதை ஹைட்ரோபோபியான்னு மருத்துவம் சொல்லுது.

மூளையைத் தாக்கும் வைரஸானது, அடுத்ததாக தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தி, முடிவில் 
ஆளையே எலும்புக்கூடாக்கி சாகடிச்சுடும்.”

அப்போ நாட்டு மருந்துல சுட்டுகிட்டது எல்லாம்..?

நாட்டு வைத்தியம்ங்கற பேர்ல படிகார உப்பை நாய்கடிச்ச இடத்துல விட்டு ஒரு அமிலத்தை ஊத்துவாங்க... அது பொங்கி வந்து அந்த கடிபட்ட இடத்தை சுத்தப்படுத்தற மாதிரி தெரியும். ஆனா, அது நாய் கடிச்ச இடத்தை மட்டும் சுத்தப்படுத்தும். ஆனால், ரத்தத்தில் கலந்த வைரஸை சுத்தப்படுத்தாது. அது சரியான வழிமுறையும் இல்லைஅதால்தான் நாட்டு வைத்தியம் எப்பவும் சரிவராதுன்னு நாங்க சொல்லுவோம்''

அப்போ அவங்க ராமனாதன் கிட்ட காட்டி ஊசி போட்டது..?

ராமநாதன் என்ன எம்பிபிஎஸ் படிச்ச டாக்டரா? கம்பவுன்டரா இருந்தவனெல்லாம் நோய்க்கு மருத்துவம் பாக்க முடியுமா? அவனை எல்லாம் எப்படித்தான் இந்த ஜனங்க நம்பறாங்கன்னுதான் தெரியல. வெறிநாய் கடிச்சா உடனே தடுப்பூசி போட்டுக்கனும். அப்படி தடுப்பூசி போடலன்னா, எம்பிபிஎஸ் இல்ல எம்.டி. படிச்ச டாக்டரே வந்தாலும் நோயாளியைக் காப்பாத்த முடியாது.”

''அந்த பாய் வீட்ல அவன் 2 நிமிஷம் நல்லா பேசினானே சார்... அது எப்படி சாத்தியம்?''

மருத்துவத்துல 'ஹிஸ்டீரியா ட்ரீட்மெண்டு'ன்னு சொல்லுவாங்க. அதாவது புத்தி பேதலித்து இருப்பவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரலாம். அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நீங்களோ, நானோ கூட செய்யலாம். அதை அந்த பாய் தன்னுடைய வருமானத்துக்காக பேய்னு சொல்லியிருக்கார். அதான் விஷயம்.''

"வெள்ளையா உருவம் போகுது... ஆவி என்னை கூப்பிடுது என்று அவன் பேசியது எல்லாம் எப்படி?" 

"ஹிப்னாடிஸம் எனும் மனோவசியக் கலை அந்த பஷீருக்கு தெரிந்திருக்கும். அதை வைத்து அவனை என்ன வேண்டுமானாலும் சொல்ல வைக்கமுடியும்” என்றார்.

''ஆட்டோவில வரும் போது வேதாசலம் ஏன் டாக்டர் பல்லை நறநறவென்று கடித்தபடி தன்னை சாமி என்று சொன்னாரே..? அது எப்படி சாத்தியம்?''

''தன்னை அவர் கடவுளாக நினைத்துக் கொண்டு, அவரைச் சார்ந்தவர்களை திருப்திப்படுத்த அவர் அப்படி செய்திருப்பார். சாமி ஊர்வலம் ஊர்வலம் வருகையில் சில பெண்கள் வேண்டுமென்றே சாமியாடுவதில்லையா அதுபோலத்தான் இதுவும்'' என்றார்.

சாந்தாராமின் தெளிவான பதில்கள், நவநீதனின் மனக்குழப்பங்களை போக்கியது.

''என் சந்தேகம் தீர்ந்ததுரொம்ப நன்றி டாக்டர்என்று இந்த மக்களிடம் இருந்து அறியாமை நீங்குதோ அன்றுதான் பேய் பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்” என்று அவன் சொல்லி முடிப்பதற்கும்,  நோயாளி ஒருவர் உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கவே, அவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.


சங்கரின் அறியாமையாலும், அவனது குடும்பத்தாரின் அறியாமையாலும், அவனது ஆயுளை இழந்து விட்டது நவநீதனுக்கு வருத்தத்தை தந்தது. இன்னும் இதுபோல் எத்தனை சங்கர்கள் இருப்பார்களோ? என எண்ணியவாறு தனது சைக்கிளை மிதிக்கத் துவங்கினான்.

சங்கர் வெறிநாய்கடியால்தான் இறந்து போனான் என்பதை, நம்ம பசங்ககிட்ட விரிவா எடுத்து சொல்லணும். அப்பதான் அவனுங்க புத்தி தெளியும்' என்று நினைத்தவாறு வீட்டிற்கு கிளம்பினான் நவநீதன்.

(முற்றும்)
++++++++++++++++++

கதையின் முந்தைய பாகங்கள் படிக்க...

முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்,

12 comments:

flover said...

Mooda nambigaikalukku 1 nalla utharanam . By Kaalidasan

மோகனன் said...

நன்றி தோழா...

vicky said...

nalla pathivu nandri

மோகனன் said...

நன்றி தோழா..

Unknown said...

aarambam mudhal kadaisi varai viru
viru vena kadhai pogiradhu. arai maniyl kadhai muzuvadhum padithu mudithu viten. pei iruku endru nambugiravargalum ikadhaiyai padithu navaneedhanai ninaithal pei enbhadhu illai endru oruvidha dhairiyathai varavazaithu kolvargal.
kadhai migavum arumai. idhupol veru thigil kadhaigal thangalidam ulladha?
matrum mudhalil sangar veetu nayin per gimmi enru kuripitu irundheergal piragu puppy endu kuripituirundhadhu. :)

மோகனன் said...

அன்பு ஹர்ஷினிக்கு...

தங்களின் ஆதரவிற்கும்,அன்பிற்கும் எனது நன்றிகள்...

பப்பியை திருத்தி விடுகிறேன்...

இது என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம்ஆகும்... கதை வேண்டுமானால் கற்பனையாய் யோசிக்கத்தான் வேண்டும்...

ஆனால் நேரமிருக்காது...

தொடரும் உங்கள் அன்பிற்கு எனது நன்றி...

கவிதை வடிவில் ஒரு காதல் தொடர் எழுதி வருகிறேன். முடிந்தால் அதை படிக்க வாருங்கள்... நன்றி

http://tamilkkavithai.blogspot.in/

http://tamilkkavithai.blogspot.in/2013/03/2.html

Anonymous said...

sankar rabiesnala eranthutaru. appo bridge keezha avar partha uruvam poiya unmaiyanu solli irukalam. matrapadi idhu oru nalla padhivu. I like it.

Anonymous said...

sankar rabiesnala eranthutaru. appo bridge keezha avar partha uruvam poiya unmaiyanu solli irukalam. matrapadi idhu oru nalla padhivu. I like it.

Anonymous said...

sankar rabiesnala eranthutaru. appo bridge keezha avar partha uruvam poiya unmaiyanu solli irukalam. matrapadi idhu oru nalla padhivu. I like it.

மோகனன் said...

அன்பு அனானிக்கு...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றுதான் சொல்ல வேண்டும்.

சங்கர், பாயிடம் தனக்கு எப்படி பேய் பிடித்தது என்பதை அவன் சொன்னான். அதைத்தான் நான் முதலில் பயன்படுத்தி இருக்கிறேன். அதை நான் பார்த்தது இல்லை.

சங்கரின் வாக்குமூலம்தான்... பாலத்தின் அருகே அவன் கண்ட ஆவியின் உருவம்...

தங்களின் அன்புக்கு நன்றி

Anonymous said...

Superb and extraordinary story
storyoda endla sonna information super and storya kondu poyirukka vitham romba alaga irunthathu ........
I like u r story

மோகனன் said...

நன்றி கோவ்ஸ்கி...