Wednesday, March 31, 2010

சென்னை மாநகர பேருந்துச் சீட்டில் செம்மொழித் தமிழ் மாநாடு விளம்பரம்..!


இன்று மதியம் எனது அலுவலகத்திறகு வருவதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினேன். பேருந்துச் சீட்டு வாங்கினேன்... அச்சீட்டில் எப்போதும் போல் இல்லமால் இன்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவே, உற்றுப் பார்க்கவே, அய்யன் திருவள்ளுவர் உருவம் காணப்பட்டது.

அட என ஆச்சர்யப்பட்டு உற்றுப் பார்த்தேன்... கோவையில், வரும் ஜூன் மாதம் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விளம்பரம் என கண்டு கொண்டேன்...

மிகவும் அகமகிழ்ந்து போனேன்... இது ஒரு நல்ல யுக்தி. செம்மொழித் தமிழ் மாநாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இது உதவும்,  ரயில் பயணச்சீட்டில் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு, வருவாய் ஈட்டுவதைப் போல்... பிற்காலத்தில் பேருந்துச் சீட்டுகளிலும் கொண்டு வர இது அடித்தளமாகவும் உதவும்...

அது மட்டுமின்றி, போலியோ தினம், விழிப்புணர்வு தினம் போன்றவற்றை பேருந்துச் சீட்டில் வெளியிடலாம்... பேருந்துச் சீட்டில் அய்யன் வள்ளுவனைக் காணும் அழகே அழகு...

Wednesday, March 17, 2010

நர்த்தன கணேஷ்...கோட்டோவியம்..!



கடந்த 13.07.1999 அன்று, எனது பிரான்ஸ் நண்பர் சைமன் டால்மேவிற்காக நான் வரைந்து கொடுத்த படம்தான் நர்த்தன கணேஷ்... இதனுடைய உண்மையான கோட்டோவியம் பிரான்சில் இருக்கிறது..!

எனக்கு (கி.பி 2000- லிருந்து) கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் 1999-ல் இருந்திருக்கிறது... சைமனுடன் ஒரு மாதம் பழகி இருந்தேன். ஒரு மாதம் முடிந்ததும் பிரான்ஸிற்கு செல்லப் போகிறேன் என்றான்..!

என் நினைவாக அவனுக்கு ஏதாவது ஒன்று பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்... ஏழை என்பதால் பொருளில்லை... பணிமில்லை... ஆனால் என் கை எனக்கு உதவியது... காகித பென்சில் உதவியது... எனக பெயரும் உதவியது... (கணேஷ் என்பதால்...)

கணேஷையே வரைந்து கொடுத்தேன்... நன்றாயிருக்கிறது என்றபடி பெற்றுக் கொண்டான்... பரணிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்கும்போது... இப்படம், பாதி செல்லரித்த நிலையில் கிடத்தது. போட்டோ ஷாப்பில் புள்ளிகளை, செல்லரிப்புகளை நீக்கி கொடுத்திருக்கிறேன்..!

பிடிச்சிருந்தா பாருங்க... இல்லன்னா விட்டுடுங்க..!

Thursday, March 11, 2010

அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் சிறப்பு நாணயம்..!

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.

மத்திய அரசு வெளியிட்ட அண்ணா உருவம் பொறித்த சிறப்பு வெள்ளி நாணயம்

அன்று முதல் நேற்று வரை கிடைக்காமல் இருந்த அந்நாணயம், தற்போதுதான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

ஐந்து ரூபாய் நாணயத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அவருடைய கையெழுத்து அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

நானறிந்த வரை இந்திய ரூபாய் நோட்டுகளில் மட்டுமே தமிழ் எழுத்துக்களை கண்டிருக்கிறேன். சுதந்திர இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் இடம்பெற்றதில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாணயங்களில் தமிழ் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆதங்கப்பட்ட நான், இந்திய நாணயங்களில் தமிழ் இடம்பெறவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய நீண்ட நாளைய வருத்தத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் போக்கி விட்டார். அதுவும் நாணய வடிவில்..!

இந்த நாணயத்திற்கு தங்கக் கலரில் முலாம் பூசப்பட்டுள்ளது. ஒரு புறம் 5 ரூபாய் என்ற எண்ணும், அதன் மேற்புறம் இந்திய அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள அண்ணா நாணயம்

நாணயத்தின் மறுபுறம் அறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவ்வுருவத்தில் அண்ணா சிரித்தபடியே வலது புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உருவத்தின் கீழே அவரது கையெழுத்து தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகளில் ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த ஆண்டினையும், அவர் மறைந்த ஆண்டினையும் குறிப்பிடும் வகையில் 1909-1969 என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தில் ஒரு குறை இருப்பதாகக் கருதுகிறேன். நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும், அந்த நாணயத்தில் குறிப்பிடபட்டிருக்கும். இந்நாணயம் 2009ல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்நாணயத்தில் குறிப்பிடப் படவேயில்லை.

செப்டம்பர் 15-ம் தேதி இநாநணயம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் மறு நாள் எந்த ஒரு பத்திரிகையிலும் இந்நாணயம் பற்றிய செய்தியோ படங்களோ இடம்பெறவில்லை. அதைத் தேடித் தேடி ஏமாந்து போனத்தான் மிச்சம்.

சரி இந்நாணயத்தையேனும், என்னுடைய நாணய சேகரிப்பிற்காக வாங்கி வரலாம் என நினைத்தபடி, அதே மாதம் 22-ம் தேதி அன்று சென்னையிலுள்ள பாரத ரிசர்வ் வங்கியை அணுகினேன்.

அவர்கள் என்னிடம் ‘வெளியீட்டிற்காக வெள்ளியில் அச்சடிக்கப்பட்ட நாணயம் அது. சில நாணயங்கள் மட்டுமே அச்சடித்திருப்பார்கள், வெளிவர பல நாட்களாகும் என்றனர். அதற்கு இத்தனை மாதங்களாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.

இந்நாணயந்தை சில நாட்களுக்கு முன்பு, தாம்பரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மன்றாடிப் பெற்றேன். அங்கே இந்த நாணயம் இல்லை என்று விட்டனர். அங்கு பணியாளராக இருக்கும் அம்மையார் ஒருவர், அவருக்கு கொடுத்திருந்த இந்நாணயத்தை, (இது வெள்ளி நாணயமல்ல) எனக்கு கொடுத்தார். மிகவும் மகிழ்ந்து போனேன். பெயர் தெரியா அந்த அம்மையாருக்கு எனது நன்றிகள்.

காசாளரிடம் கேட்டதற்கு, இரண்டு நாணயங்கள், நான்கு நாணயங்கள் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மீதமுள்ள 496 நாணயங்களை எண்ண வேண்டுமே. ஆதலால் அப்படித் தரமாட்டோம், வேண்டுமெனில் மொத்தமாக (ரூ 5,000) வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அப்படியென்றால் மட்டுமே நாணயம் கிடைக்கும் என்றார். இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

என் போன்ற (வசதியற்ற) நாணயச் சேகரிப்பாளர்களுக்கு வங்கிகளே இப்படிச் செய்தால், நாணயங்களை சேகரிக்க முடியுமா..? பணம் படைத்தவர்கள் மட்டும்தான் இதுபோன்ற சேகரிப்பில் ஈடுபட வேண்டுமா..? வங்கிகள் மாற வேண்டும்..? மாறுமா..?

பேரறிஞர் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்டது போல், மகாகவி பாரதியாருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்பதும், அதன்பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நாணயம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.

 இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Monday, March 08, 2010

ஜேம்ஸ் கேமரூனின் மனைவி இயக்கிய 'ஹர்ட் லாக்கர்' படத்திற்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்..!

உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படங்களான டைட்டானிக், அவதார் உள்ளிட்ட படங்கள் உலக திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை..! அவரது சமீபத்திய திரைப்படமான அவதார் பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு, சிறப்பான முறையில் திரை உலகினை வலம் வந்தது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சென்ற ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதிக அளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என பலராலும் எதிர்பார்ரக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்'(Avatar) படத்தை பின்னுக்குத் தள்ளியது 'ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) திரைப்படம்.

இத்திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தை இயக்கியது ஒரு பெண் ஆவார். அவரது பெயர் கேத்தரின் பிக்லோவ் (Kathryn Bigelow). இவர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி ஆவார். இத்திரைப்படம் மிகக் (அவதாரை விட) குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படமாகும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சந்திக்கும் நிகழ்வுகளை மையாமகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

ஹர்ட் லாக்கர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், உண்மைச் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்ட சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒலித் தொகுப்பு (Best Film, Best Director, Best Original Screenplay, Editing, Sound Mixing and Sound Editing) என ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் கேத்தரின் பிக்லோவ்

ஆஸ்கர் வரலாற்றில் முதன் முதலாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் பெண்மணி கேத்தரின் பிக்லோவ் ஆவார். அதை இந்த மகளிர் தினத்தில் அவருக்கு கிடைத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை அவருக்கு மட்டுமின்றி, இத்துறையில் இருக்கும் மகளிருக்கும், இத்துறையை நேசிக்கும் மகளிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

(அவதார் படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன: சிறந்த காட்சிப் படிம உருவாக்கம் (Visual Effects), கலை (Art Direction), ஒளிப்பதிவு(Cinematography) ஆகிய துறைகளில் விருது வென்றது இத்திரைப்படம்.)

Tuesday, March 02, 2010

என் பதின்ம கால நினைவுகள்..!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவன் நான். தேசிய நெடுஞ்சாலை 47 ஒட்டித்தான் எங்களது வீடு இருந்தது. சிறு வயதில் எங்களது வீட்டிற்கு அருகே அனைத்தும் கிடக்கும்..! அது சுகானுபவமான கிராமத்து வாழ்வு..!

அப்போது எனக்கு வயது ஏழு இருக்கும். என் வீட்டிற்கு முன்னே தேசிய நெடுஞ்சாலை 47 இருக்கிறது. 1987. டிசம்பர் 24 அன்று காலை. அனைத்து லாரிகளும், பேருந்துகளும் நின்று, தயங்கிச் தயங்கிச் சென்றன. எல்லா தனியார் வாகனங்களிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.

அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்து விட்டார், தமிழகமே திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் ஊரில் அவரது அபிமானிகள் எல்லாம், வாகனங்களை நிறுத்த சொல்லி சண்டை போட்டிக் கொண்டிருந்தனர். என் சட்டையில் நானும் ஒரு கறுப்பு ரிப்பன் கொடி குத்திக் கொண்டு, கையில் உருட்டுக் கட்டையோடடு…’ஏய் வண்டிய நிறுத்துங்கடா..’ என்றபடி ஒரு லாரியின் வெளிச்சம் தரும் கண்ணாடியை உடைக்கப் போனேன். கூட இருந்த பெரியவர் தடுத்து விட்டார். அது எல்லாம் தப்புப்பா..! அப்போ உர்ட்டுக் கட்டைய விட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் எடுக்கல.

*****
ஏரி, கிணறுகள், வயல்வெளிகள், ஆறு என நீராதாரங்கள் நிறைந்த இடம் அது. மழைக்காலம் வந்து விட்டால் போதும்… ஏரி, கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பி வழியும்..!

எங்கள் ஊரில் வஷிஷ்ட நதி ஓடுகிறது. அதை ஒட்டி எங்கள் ஊர் அமைந்ததால் அதற்கு ஆத்தூர் (ஆற்றூர் என்பது இப்படி மருவியிருக்கலாம்) என்று பெயர்.

பள்ளி செல்வதென்றால் தினமும் 2 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். அதுவும் அந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலமெனில் அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதில் இறங்கி சென்றால் ஆளையே இழுத்துச் சென்று விடும்.

அப்படி ஒரு முறை எனது (ட்ரவுசரை) கால்சட்டையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு, புத்தகப் பையை மறு கையால் தூக்கிக் கொண்டு ஆற்றின் நீரோட்டத்தில் இறங்கி நடந்தேன்… எப்படியாகிலும், மறுகரையைச் சேர வேண்டும், பள்ளிக்கு நேரமாயிற்று. நனையாமல் செல்ல வேண்டும், நீச்சலும் அறியாத வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது.

முக்கால் வாசி தூரம் கடந்து விட்டேன், நீரோட்டம் அதிகமாக, கால் வைத்த இடத்தில் இருந்த கல் உருண்டு விட நீரில் விழுந்தே விட்டேன்… எப்படியோ தத்துப் பித்தென்று தடுமாறி எழுவதற்குள் முழுதும் நனைந்தே போய்விட்டேன். ஆனால் என் புத்தகப் பையை மட்டும் நனைய விடவில்லை. பள்ளி சென்ற பிறகு.. ஈரத்தோடு அமர்ந்திருந்தேன்… காரணமறிந்த என் வகுப்பாசிரியை என் காதைத் திருகி திட்டினார்.  இனி ஆற்றுப் பக்கம் வராதே என்று..!

அன்று மதிய உணவு இடைவேளையின் போது எனது வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து,  அதே ஆற்றில் குதித்து, குதித்து, குளித்து மகிழ்ந்தேன், நீர் செங்கலரில் இருக்கும்..! அதற்கெல்லாம் அசர மாட்டோம்… ஆற்றில் நீர் வற்றும் வரை தினமும் குளியல்தான். இப்போது அந்த ஆற்றில் கழிவு நீர்தான் வருகிறது. ம்ஹீம்..!

*****

காலரா தடுப்பூசி, மலேரியா தடுப்பூசி என பள்ளிக் கூடத்திற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். எல்லோரும் ஊசி என்றால் பயந்து ஓடுவார்கள். நானும் எனது நண்பனொருவனும் ஊசி போடுவதென்றால் முதல் ஆளாய் சென்று கம்பிரமாய் கையைக் காட்டுவோம்..! மற்றவர்கள் எல்லாரும் வாயைப் பிளந்தபடி எங்களைப் பார்ப்பார்கள்..! அவர்கள் அப்படி பார்ப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கும்.

ஊசியை கையில் ஏற்றியவுடன் பலமாக தேய்த்து விட வேண்டும். இல்லையெனில் ஊசி போட்ட இடத்தில் மறுநாள் இட்லி  போல் வீங்கி விடும். அதற்கு நாங்கள் ஒரு ராஜ தந்திரம் செய்வோம், கையை கொண்டு போய் பலமாக சுவற்றில் பலமாய் மோதுவோம்.. (கொஞ்சம் வலிக்காமத்தான்) மருந்து கரையனும்ல..!

மறுநாள் பள்ளிக்கு வருகையில், ஊசி போட்ட மற்ற மாணவர்கள் எல்லாம் ஒரு கை வீங்கியபடி, யானை தும்பிக்கையை போல் தூக்கி வருவார்கள். நாங்களோ இயல்பாய் வருவோம். அது ஒரு தனி பெருமிதம் எனக்கு..!

 *****

மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, அதனூடே வளர்ந்தவன் நான். நான் ஆறாம் வகுப்பு (1991) படிக்கும் போது, இலவச பஸ் பாஸ் தருவதற்காக, பள்ளியில் போட்டோ கேட்டார்கள். அப்போதுதான் என் அம்மா என்னை ஒரு ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு பிடித்தது போல் தலையை சீவி விட்டு, பவுடர் பூசி விட்டு, போட்டோ எடுக்க வைத்தார். அப்போது என் மூக்குக்கு கீழே ஒரு காயம் ஆறாமல் இருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. அதை எல்லாம் மறைப்பதற்கு என் அம்மா பலமாக முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றார்.

அந்த புகைப்படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம். என் வாழ்க்கையில் முதன் முதலாக (எனக்கு விவரம் அறிந்து) எடுக்கப்பட்ட படம். அது எனக்கு மிகவும் பிடிக்கும், என்னவளுக்கும் அந்த படமென்றால் மிகவும் பிடிக்கும்.

*****
ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளிக்கு தமிழாசிரியரா திரு மணி முத்து என்பவரும், அறிவில் ஆசிரியையாக வித்யா என்பவரும், சமூகவியல் ஆசிரியையாக புனிதா என்பவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த பிறகுநான் எனது படிப்பின் தரம் உயர்ந்தது.

மணிமுத்து அவர்கள் பாடம் எடுக்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். அப்படியே மனதில் பதியும். திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி. புறநானூறு, பாரதியின் பாஞ்சாலி சபதம் என எதுவாகிலும் அழகு தமிழை எளிமையாக புகுத்தி விடுவார். அவரது வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு ஆசைப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். அதன்படி வந்தும் காட்டினேன். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், என் தமிழ்ப்பற்றுக்கு வித்திட்ட இடம் இங்குதான், இவர்தான் என்பதே..!

*****

 நான் எட்டாம் வகுப்பு சென்ற போது, எங்கள் வகுப்பிற்கு புதிதாய் ஒரு மாணவி வந்து சேர்ந்தாள். ஏழைகள் படிக்கும் பள்ளியில் பணக்காரப் பெண் ஒருவள் படிக்க வந்தால் எப்படி இருக்கும். அவளோ மெட்ரிகுலேஷனில் படித்து விட்டு, இங்கு வந்திருக்கிறாள்.

ஆங்கிலம் அவளுக்கு அத்துபடி, அவளின் கையெழுத்து, மணி, மணியாய் அழகாக இருக்கும். அவளது எழுத்தின் மேல் எனக்கு தீராக் காதல் ஏற்பட்டது. அப்படியே அவளின் மேலும்.

எண்ணெய்த் தலையும், சற்று கிழிந்த  உடைகளுமாய் வரும் என் வகுப்புத் தோழிகளிடையே, நவீன ஆடை, நேர்த்தியான தலை சீவல், அழகு முகம் என தேவதை போல் வருவாள். சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவாள், இல்லையென்றாள் அவளன்னையுடன் டிவிஎஸ் 50-யில் வருவாள். அப்போதெல்லாம் சைக்கிள் என்றாலே பெரிய விஷயம்,  டிவிஎஸ் 50 என்றால் கேட்கவா வேண்டும்.

அவளது நட்பு கிடைக்க அனைவரும் ஏங்க, நான் மட்டும் அவளை விட்டு ஒதுங்கியே இருந்தேன். வகுப்பில் கணிதம், ஆங்கிலத்தில் அவள் முதலிடம் எனில், தமிழ், அறிவியல், சமூக அறிவியலில் நான்தான் முதலிடத்தில் இருப்பேன்.

இப்படி படிப்பில் திறமையை வளர்த்துக் கொண்டேன். அதற்கு அவளும் ஒரு காரணம். ஆனால் அவளுடன் பேச வேண்டுமென்று மனசு துடிக்கும். ஆனால் பேச மாட்டேன். அவளே வந்து பேசட்டும் என இருந்து விடுவேன். ஆங்கிலம்தான் சுட்டுப் போட்டாலும் வரவில்லையே, கணிதப் பாடத்திலேனும் முதலில் வரவேண்டும் என்றபடி நந்தகுமார் ஆசிரியரின் வீட்டிற்கே டியூசன் சென்றேன்…

கொஞ்ச நாள் கழித்து, அவளும் அங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஒரு நாள் அவளே வந்து பேசினாள், ‘ஏன் என்னிடம் பேச மாட்டேன்கிற..? என்னிடம் பேச பிடிக்கலயா?’ என்றாள். ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல’ என்று நழுவி விட்டேன். ஆனால் அவளாக வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

ஒரு நாள் என் கையை வேண்டுமென்றே மிதித்து விட்டாள். வலியில் நான் ‘ஏய்… பாத்து போகமாட்டியா’ என்றேன்… ‘அட என்னடா ஆச்சு இப்ப… அப்படித்தாண்டா செய்வேன்’ என்றாள்… கையை மிதித்தது மட்டுமின்றி மரியாதை இன்றி பேசியது எனக்கு கோபத்தை வரவழைத்து விட்டது. அவளிடம் நேரே சென்று, ‘டா போட்டு பேசறியா… அப்புறம் நான் டீ போட்டு பேசவேண்டியிருக்கும் ஒழுங்கா பேசு’ என்றேன்… ‘உனக்கு அப்படி கூப்பிட தைரியம் இல்லன்னு சொல்லு…’ என்றபடியே ஓடி விட்டாள்.

‘என்ன… என்ன சொன்ன நீ.. மறுபடி சொல்லு’ என்றேன். இப்போது நிறுத்தி, நிதானமாகச் சொன்னாள் ‘உனக்கு என்னை அப்படிக் கூப்பிட தைரியம் இல்லன்னேன்..’ அதற்குள் ஆசிரியர் வந்து விட்டார். மனதிற்குள் அளவற்ற மகிழ்ச்சி…

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்… சும்மா இருக்கும் போது, வேண்டும்ன்றே  கூட என்னைப் பார்த்து சத்தமில்லாமல் போடா என்பாள்… உடனே நானும் பதிலுக்கு.. போடி… என்பேன். அந்த தருணம் என் மனதில் ஆயிரம் சந்தோஷப் பூக்கள் பூக்கும். அப்படியாக என் பள்ளிக் காலம் இனிமையாக இருந்தது. 1992-93 கல்வியாண்டு என் வாழ்வில் மறக்க முடியாதது ஆகும். என் முதல் காதல் பூத்தது அங்குதான். அது அறியாத வயது என்றாலும்… அது மிக இனிமையானதாக இருந்தது. இன்று நான் சென்னையில்… அவள் எங்கேயோ..?

*****

கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டது, மரமேறி திருட்டுத்தனமாய் மாங்காய் பறித்தது, கோவில் திருவிழாவின் போது, தப்பாட்டத்திற்கு ஏற்றாற் போல் நடனமாடியது, கில்லி தாண்டில் விளையாடியது என எவ்வளவோ இருக்கு..!

*****

(என் பதின்ம கால நினைவுகளை அசை போட வைத்து, அதை எழுதுமாறும் அழைப்பு விடுத்த அன்புத் தோழி திவ்யா ஹரிக்கு என் நன்றிகள் பற்பல)