Thursday, March 11, 2010

அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் சிறப்பு நாணயம்..!

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.

மத்திய அரசு வெளியிட்ட அண்ணா உருவம் பொறித்த சிறப்பு வெள்ளி நாணயம்

அன்று முதல் நேற்று வரை கிடைக்காமல் இருந்த அந்நாணயம், தற்போதுதான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

ஐந்து ரூபாய் நாணயத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அவருடைய கையெழுத்து அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

நானறிந்த வரை இந்திய ரூபாய் நோட்டுகளில் மட்டுமே தமிழ் எழுத்துக்களை கண்டிருக்கிறேன். சுதந்திர இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் இடம்பெற்றதில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாணயங்களில் தமிழ் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆதங்கப்பட்ட நான், இந்திய நாணயங்களில் தமிழ் இடம்பெறவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய நீண்ட நாளைய வருத்தத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் போக்கி விட்டார். அதுவும் நாணய வடிவில்..!

இந்த நாணயத்திற்கு தங்கக் கலரில் முலாம் பூசப்பட்டுள்ளது. ஒரு புறம் 5 ரூபாய் என்ற எண்ணும், அதன் மேற்புறம் இந்திய அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள அண்ணா நாணயம்

நாணயத்தின் மறுபுறம் அறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவ்வுருவத்தில் அண்ணா சிரித்தபடியே வலது புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உருவத்தின் கீழே அவரது கையெழுத்து தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகளில் ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த ஆண்டினையும், அவர் மறைந்த ஆண்டினையும் குறிப்பிடும் வகையில் 1909-1969 என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தில் ஒரு குறை இருப்பதாகக் கருதுகிறேன். நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும், அந்த நாணயத்தில் குறிப்பிடபட்டிருக்கும். இந்நாணயம் 2009ல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்நாணயத்தில் குறிப்பிடப் படவேயில்லை.

செப்டம்பர் 15-ம் தேதி இநாநணயம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் மறு நாள் எந்த ஒரு பத்திரிகையிலும் இந்நாணயம் பற்றிய செய்தியோ படங்களோ இடம்பெறவில்லை. அதைத் தேடித் தேடி ஏமாந்து போனத்தான் மிச்சம்.

சரி இந்நாணயத்தையேனும், என்னுடைய நாணய சேகரிப்பிற்காக வாங்கி வரலாம் என நினைத்தபடி, அதே மாதம் 22-ம் தேதி அன்று சென்னையிலுள்ள பாரத ரிசர்வ் வங்கியை அணுகினேன்.

அவர்கள் என்னிடம் ‘வெளியீட்டிற்காக வெள்ளியில் அச்சடிக்கப்பட்ட நாணயம் அது. சில நாணயங்கள் மட்டுமே அச்சடித்திருப்பார்கள், வெளிவர பல நாட்களாகும் என்றனர். அதற்கு இத்தனை மாதங்களாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.

இந்நாணயந்தை சில நாட்களுக்கு முன்பு, தாம்பரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மன்றாடிப் பெற்றேன். அங்கே இந்த நாணயம் இல்லை என்று விட்டனர். அங்கு பணியாளராக இருக்கும் அம்மையார் ஒருவர், அவருக்கு கொடுத்திருந்த இந்நாணயத்தை, (இது வெள்ளி நாணயமல்ல) எனக்கு கொடுத்தார். மிகவும் மகிழ்ந்து போனேன். பெயர் தெரியா அந்த அம்மையாருக்கு எனது நன்றிகள்.

காசாளரிடம் கேட்டதற்கு, இரண்டு நாணயங்கள், நான்கு நாணயங்கள் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மீதமுள்ள 496 நாணயங்களை எண்ண வேண்டுமே. ஆதலால் அப்படித் தரமாட்டோம், வேண்டுமெனில் மொத்தமாக (ரூ 5,000) வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அப்படியென்றால் மட்டுமே நாணயம் கிடைக்கும் என்றார். இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

என் போன்ற (வசதியற்ற) நாணயச் சேகரிப்பாளர்களுக்கு வங்கிகளே இப்படிச் செய்தால், நாணயங்களை சேகரிக்க முடியுமா..? பணம் படைத்தவர்கள் மட்டும்தான் இதுபோன்ற சேகரிப்பில் ஈடுபட வேண்டுமா..? வங்கிகள் மாற வேண்டும்..? மாறுமா..?

பேரறிஞர் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்டது போல், மகாகவி பாரதியாருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்பதும், அதன்பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நாணயம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.

 இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

8 comments:

Simulation said...

ஆகா! வலைப்பதிவரில் நீங்களும் ஒரு நியூமிஸ்மேடிஸ்ட்டா? எனது இந்தப் பதிவினையும் பாருங்கள்.

- சிமுலேஷன்

http://simulationpadaippugal.blogspot.com/2010/02/numismatics.html

மோகனன் said...

அன்புத் தோழருக்கு...

தங்களுடைய வருகைக்கும், பதிலுரைக்கும் பணிவான நன்றிகள்...

திவ்யாஹரி said...

பேரறிஞர் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்டது போல், மகாகவி பாரதியாருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்பதும், அதன்பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நாணயம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.

எங்கள் ஆசையும்.. நல்ல பதிவு நண்பா.. பகிர்வுக்கு நன்றி..

மோகனன் said...

அன்புத் தோழிக்கு...


நம்முடைய ஆசைகள் விரைவில் நிறைவேறும் என நம்புவோமாக..!


தங்களுடைய வருகைக்கும், வாசிப்பிற்க்கும், அழகான கருத்திற்கும் அடியவனின் நன்றிகள்..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

மோகனன் said...

நன்றி தோழரே...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

மோகனன் said...

நேரமின்மையால்தான் பதிவிட முடியவில்லை...


விரைவில் பதிவிலிடுகிறேன் தோழரே..!