சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவன் நான். தேசிய நெடுஞ்சாலை 47 ஒட்டித்தான் எங்களது வீடு இருந்தது. சிறு வயதில் எங்களது வீட்டிற்கு அருகே அனைத்தும் கிடக்கும்..! அது சுகானுபவமான கிராமத்து வாழ்வு..!
அப்போது எனக்கு வயது ஏழு இருக்கும். என் வீட்டிற்கு முன்னே தேசிய நெடுஞ்சாலை 47 இருக்கிறது. 1987. டிசம்பர் 24 அன்று காலை. அனைத்து லாரிகளும், பேருந்துகளும் நின்று, தயங்கிச் தயங்கிச் சென்றன. எல்லா தனியார் வாகனங்களிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்து விட்டார், தமிழகமே திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் ஊரில் அவரது அபிமானிகள் எல்லாம், வாகனங்களை நிறுத்த சொல்லி சண்டை போட்டிக் கொண்டிருந்தனர். என் சட்டையில் நானும் ஒரு கறுப்பு ரிப்பன் கொடி குத்திக் கொண்டு, கையில் உருட்டுக் கட்டையோடடு…’ஏய் வண்டிய நிறுத்துங்கடா..’ என்றபடி ஒரு லாரியின் வெளிச்சம் தரும் கண்ணாடியை உடைக்கப் போனேன். கூட இருந்த பெரியவர் தடுத்து விட்டார். அது எல்லாம் தப்புப்பா..! அப்போ உர்ட்டுக் கட்டைய விட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் எடுக்கல.
*****
ஏரி, கிணறுகள், வயல்வெளிகள், ஆறு என நீராதாரங்கள் நிறைந்த இடம் அது. மழைக்காலம் வந்து விட்டால் போதும்… ஏரி, கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பி வழியும்..!
எங்கள் ஊரில் வஷிஷ்ட நதி ஓடுகிறது. அதை ஒட்டி எங்கள் ஊர் அமைந்ததால் அதற்கு ஆத்தூர் (ஆற்றூர் என்பது இப்படி மருவியிருக்கலாம்) என்று பெயர்.
பள்ளி செல்வதென்றால் தினமும் 2 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். அதுவும் அந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலமெனில் அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதில் இறங்கி சென்றால் ஆளையே இழுத்துச் சென்று விடும்.
அப்படி ஒரு முறை எனது (ட்ரவுசரை) கால்சட்டையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு, புத்தகப் பையை மறு கையால் தூக்கிக் கொண்டு ஆற்றின் நீரோட்டத்தில் இறங்கி நடந்தேன்… எப்படியாகிலும், மறுகரையைச் சேர வேண்டும், பள்ளிக்கு நேரமாயிற்று. நனையாமல் செல்ல வேண்டும், நீச்சலும் அறியாத வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது.
முக்கால் வாசி தூரம் கடந்து விட்டேன், நீரோட்டம் அதிகமாக, கால் வைத்த இடத்தில் இருந்த கல் உருண்டு விட நீரில் விழுந்தே விட்டேன்… எப்படியோ தத்துப் பித்தென்று தடுமாறி எழுவதற்குள் முழுதும் நனைந்தே போய்விட்டேன். ஆனால் என் புத்தகப் பையை மட்டும் நனைய விடவில்லை. பள்ளி சென்ற பிறகு.. ஈரத்தோடு அமர்ந்திருந்தேன்… காரணமறிந்த என் வகுப்பாசிரியை என் காதைத் திருகி திட்டினார். இனி ஆற்றுப் பக்கம் வராதே என்று..!
அன்று மதிய உணவு இடைவேளையின் போது எனது வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து, அதே ஆற்றில் குதித்து, குதித்து, குளித்து மகிழ்ந்தேன், நீர் செங்கலரில் இருக்கும்..! அதற்கெல்லாம் அசர மாட்டோம்… ஆற்றில் நீர் வற்றும் வரை தினமும் குளியல்தான். இப்போது அந்த ஆற்றில் கழிவு நீர்தான் வருகிறது. ம்ஹீம்..!
*****
காலரா தடுப்பூசி, மலேரியா தடுப்பூசி என பள்ளிக் கூடத்திற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். எல்லோரும் ஊசி என்றால் பயந்து ஓடுவார்கள். நானும் எனது நண்பனொருவனும் ஊசி போடுவதென்றால் முதல் ஆளாய் சென்று கம்பிரமாய் கையைக் காட்டுவோம்..! மற்றவர்கள் எல்லாரும் வாயைப் பிளந்தபடி எங்களைப் பார்ப்பார்கள்..! அவர்கள் அப்படி பார்ப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கும்.
ஊசியை கையில் ஏற்றியவுடன் பலமாக தேய்த்து விட வேண்டும். இல்லையெனில் ஊசி போட்ட இடத்தில் மறுநாள் இட்லி போல் வீங்கி விடும். அதற்கு நாங்கள் ஒரு ராஜ தந்திரம் செய்வோம், கையை கொண்டு போய் பலமாக சுவற்றில் பலமாய் மோதுவோம்.. (கொஞ்சம் வலிக்காமத்தான்) மருந்து கரையனும்ல..!
ஊசியை கையில் ஏற்றியவுடன் பலமாக தேய்த்து விட வேண்டும். இல்லையெனில் ஊசி போட்ட இடத்தில் மறுநாள் இட்லி போல் வீங்கி விடும். அதற்கு நாங்கள் ஒரு ராஜ தந்திரம் செய்வோம், கையை கொண்டு போய் பலமாக சுவற்றில் பலமாய் மோதுவோம்.. (கொஞ்சம் வலிக்காமத்தான்) மருந்து கரையனும்ல..!
மறுநாள் பள்ளிக்கு வருகையில், ஊசி போட்ட மற்ற மாணவர்கள் எல்லாம் ஒரு கை வீங்கியபடி, யானை தும்பிக்கையை போல் தூக்கி வருவார்கள். நாங்களோ இயல்பாய் வருவோம். அது ஒரு தனி பெருமிதம் எனக்கு..!
*****
மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, அதனூடே வளர்ந்தவன் நான். நான் ஆறாம் வகுப்பு (1991) படிக்கும் போது, இலவச பஸ் பாஸ் தருவதற்காக, பள்ளியில் போட்டோ கேட்டார்கள். அப்போதுதான் என் அம்மா என்னை ஒரு ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு பிடித்தது போல் தலையை சீவி விட்டு, பவுடர் பூசி விட்டு, போட்டோ எடுக்க வைத்தார். அப்போது என் மூக்குக்கு கீழே ஒரு காயம் ஆறாமல் இருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. அதை எல்லாம் மறைப்பதற்கு என் அம்மா பலமாக முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றார்.
*****
மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, அதனூடே வளர்ந்தவன் நான். நான் ஆறாம் வகுப்பு (1991) படிக்கும் போது, இலவச பஸ் பாஸ் தருவதற்காக, பள்ளியில் போட்டோ கேட்டார்கள். அப்போதுதான் என் அம்மா என்னை ஒரு ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு பிடித்தது போல் தலையை சீவி விட்டு, பவுடர் பூசி விட்டு, போட்டோ எடுக்க வைத்தார். அப்போது என் மூக்குக்கு கீழே ஒரு காயம் ஆறாமல் இருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. அதை எல்லாம் மறைப்பதற்கு என் அம்மா பலமாக முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றார்.
அந்த புகைப்படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம். என் வாழ்க்கையில் முதன் முதலாக (எனக்கு விவரம் அறிந்து) எடுக்கப்பட்ட படம். அது எனக்கு மிகவும் பிடிக்கும், என்னவளுக்கும் அந்த படமென்றால் மிகவும் பிடிக்கும்.
*****
ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளிக்கு தமிழாசிரியரா திரு மணி முத்து என்பவரும், அறிவில் ஆசிரியையாக வித்யா என்பவரும், சமூகவியல் ஆசிரியையாக புனிதா என்பவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த பிறகுநான் எனது படிப்பின் தரம் உயர்ந்தது.
மணிமுத்து அவர்கள் பாடம் எடுக்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். அப்படியே மனதில் பதியும். திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி. புறநானூறு, பாரதியின் பாஞ்சாலி சபதம் என எதுவாகிலும் அழகு தமிழை எளிமையாக புகுத்தி விடுவார். அவரது வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு ஆசைப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். அதன்படி வந்தும் காட்டினேன். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், என் தமிழ்ப்பற்றுக்கு வித்திட்ட இடம் இங்குதான், இவர்தான் என்பதே..!
*****
நான் எட்டாம் வகுப்பு சென்ற போது, எங்கள் வகுப்பிற்கு புதிதாய் ஒரு மாணவி வந்து சேர்ந்தாள். ஏழைகள் படிக்கும் பள்ளியில் பணக்காரப் பெண் ஒருவள் படிக்க வந்தால் எப்படி இருக்கும். அவளோ மெட்ரிகுலேஷனில் படித்து விட்டு, இங்கு வந்திருக்கிறாள்.
*****
நான் எட்டாம் வகுப்பு சென்ற போது, எங்கள் வகுப்பிற்கு புதிதாய் ஒரு மாணவி வந்து சேர்ந்தாள். ஏழைகள் படிக்கும் பள்ளியில் பணக்காரப் பெண் ஒருவள் படிக்க வந்தால் எப்படி இருக்கும். அவளோ மெட்ரிகுலேஷனில் படித்து விட்டு, இங்கு வந்திருக்கிறாள்.
ஆங்கிலம் அவளுக்கு அத்துபடி, அவளின் கையெழுத்து, மணி, மணியாய் அழகாக இருக்கும். அவளது எழுத்தின் மேல் எனக்கு தீராக் காதல் ஏற்பட்டது. அப்படியே அவளின் மேலும்.
எண்ணெய்த் தலையும், சற்று கிழிந்த உடைகளுமாய் வரும் என் வகுப்புத் தோழிகளிடையே, நவீன ஆடை, நேர்த்தியான தலை சீவல், அழகு முகம் என தேவதை போல் வருவாள். சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவாள், இல்லையென்றாள் அவளன்னையுடன் டிவிஎஸ் 50-யில் வருவாள். அப்போதெல்லாம் சைக்கிள் என்றாலே பெரிய விஷயம், டிவிஎஸ் 50 என்றால் கேட்கவா வேண்டும்.
அவளது நட்பு கிடைக்க அனைவரும் ஏங்க, நான் மட்டும் அவளை விட்டு ஒதுங்கியே இருந்தேன். வகுப்பில் கணிதம், ஆங்கிலத்தில் அவள் முதலிடம் எனில், தமிழ், அறிவியல், சமூக அறிவியலில் நான்தான் முதலிடத்தில் இருப்பேன்.
இப்படி படிப்பில் திறமையை வளர்த்துக் கொண்டேன். அதற்கு அவளும் ஒரு காரணம். ஆனால் அவளுடன் பேச வேண்டுமென்று மனசு துடிக்கும். ஆனால் பேச மாட்டேன். அவளே வந்து பேசட்டும் என இருந்து விடுவேன். ஆங்கிலம்தான் சுட்டுப் போட்டாலும் வரவில்லையே, கணிதப் பாடத்திலேனும் முதலில் வரவேண்டும் என்றபடி நந்தகுமார் ஆசிரியரின் வீட்டிற்கே டியூசன் சென்றேன்…
கொஞ்ச நாள் கழித்து, அவளும் அங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஒரு நாள் அவளே வந்து பேசினாள், ‘ஏன் என்னிடம் பேச மாட்டேன்கிற..? என்னிடம் பேச பிடிக்கலயா?’ என்றாள். ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல’ என்று நழுவி விட்டேன். ஆனால் அவளாக வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஒரு நாள் என் கையை வேண்டுமென்றே மிதித்து விட்டாள். வலியில் நான் ‘ஏய்… பாத்து போகமாட்டியா’ என்றேன்… ‘அட என்னடா ஆச்சு இப்ப… அப்படித்தாண்டா செய்வேன்’ என்றாள்… கையை மிதித்தது மட்டுமின்றி மரியாதை இன்றி பேசியது எனக்கு கோபத்தை வரவழைத்து விட்டது. அவளிடம் நேரே சென்று, ‘டா போட்டு பேசறியா… அப்புறம் நான் டீ போட்டு பேசவேண்டியிருக்கும் ஒழுங்கா பேசு’ என்றேன்… ‘உனக்கு அப்படி கூப்பிட தைரியம் இல்லன்னு சொல்லு…’ என்றபடியே ஓடி விட்டாள்.
‘என்ன… என்ன சொன்ன நீ.. மறுபடி சொல்லு’ என்றேன். இப்போது நிறுத்தி, நிதானமாகச் சொன்னாள் ‘உனக்கு என்னை அப்படிக் கூப்பிட தைரியம் இல்லன்னேன்..’ அதற்குள் ஆசிரியர் வந்து விட்டார். மனதிற்குள் அளவற்ற மகிழ்ச்சி…
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்… சும்மா இருக்கும் போது, வேண்டும்ன்றே கூட என்னைப் பார்த்து சத்தமில்லாமல் போடா என்பாள்… உடனே நானும் பதிலுக்கு.. போடி… என்பேன். அந்த தருணம் என் மனதில் ஆயிரம் சந்தோஷப் பூக்கள் பூக்கும். அப்படியாக என் பள்ளிக் காலம் இனிமையாக இருந்தது. 1992-93 கல்வியாண்டு என் வாழ்வில் மறக்க முடியாதது ஆகும். என் முதல் காதல் பூத்தது அங்குதான். அது அறியாத வயது என்றாலும்… அது மிக இனிமையானதாக இருந்தது. இன்று நான் சென்னையில்… அவள் எங்கேயோ..?
*****
கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டது, மரமேறி திருட்டுத்தனமாய் மாங்காய் பறித்தது, கோவில் திருவிழாவின் போது, தப்பாட்டத்திற்கு ஏற்றாற் போல் நடனமாடியது, கில்லி தாண்டில் விளையாடியது என எவ்வளவோ இருக்கு..!
*****
(என் பதின்ம கால நினைவுகளை அசை போட வைத்து, அதை எழுதுமாறும் அழைப்பு விடுத்த அன்புத் தோழி திவ்யா ஹரிக்கு என் நன்றிகள் பற்பல)
2 comments:
//என் முதல் காதல் பூத்தது அங்குதான்.//
இப்போ எழுதுற கவிதைகளுக்கு அந்த பெண் சொந்தம் இல்லையா?
நல்ல பகிர்வு நண்பா..
வாங்க திவ்யா..!
இல்லை... இல்லவே இல்லை... அது ஒரு எதிர் பாலினக்கவர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்... பள்ளிகூடத்தில் அது எனக்கு முதல் காதலாக தோன்றியது..! அவ்வளவே..!
இப்போ எழுதும் கவிதைகளுக்கு சொந்தக்காரி.. என் உயிரில் கலந்தவள்.. என் உணர்வில் நிறைந்தவள்... என்னுள் உறைபவள்..! இதுதான் உண்மைக் காதல்..!
என் நினைவுகளை மீட்டெடுக்க வைத்ததற்கும்... அதனை பொறுமையாக படித்த பின், மனமுவந்து பாராட்டியமைக்கும் மிக்க நன்றி திவ்யா..!
Post a Comment