Tuesday, September 29, 2020

201 ரன்கள் குவித்த பெங்களூரு – விரட்டிப்பிடித்த மும்பை இந்தியன்ஸ் – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ்


மோ.கணேசன்


நேற்று, துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 1-0-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் இப்போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஓரு தோல்வி, ஒரு வெற்றியுடன் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது.

கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய சவுரப் திவாரிக்கு பதிலாக இஷான் கிஸான் களமிறங்கினார். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டிருந்தனர். கடந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த டேல் ஸ்டெயின், உமேஷ் யாதவ் மற்றும் ஜோஷ் பிலிப்பே ஆகியோருக்கு பதிலாக குர்கிரீத் சிங், இஷ்ரு உதானா, ஆடம் ஸாம்பா ஆகியோர் களமிறங்கினர்.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸில் தோற்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய ஆரோன் பிஞ்ச் மூன்றாவது ஓவரிலிருந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். 2.2 ஓவரில் ஆரோன் பிஞ்ச் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் ரோஹித் சர்மா. அப்போது ஆரோன் பிஞ்ச் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதற்கான விலையை மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்தது.

ஒரு புறம் படிக்கல் நிதானமாக ஆட, மறுபுறம் வாண வேடிக்கை காட்டிய ஆரோன் பிஞ்ச் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார். 52 ரன்கள் எடுத்திருந்த போது ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் கிரென் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

படிக்கல்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். வழக்கம்போல இம்முறையும் சொதப்பிய விராட் கோலி 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து, தீபக் சஹாரின் சுழலில் மிக எளிதாக ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரையடுத்து படிக்கல்லுடன், 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். அதுவரை நிதானமாக ஆடிய படிக்கல் அடித்து ஆட ஆரம்பிக்க, டிவில்லியர்ஸ் களமிறங்கியதிலிருந்தே அனைத்து பந்துகளையும் விரட்டி அடிக்க ஆரம்பித்தார்.

சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை 54 ரன்கள் எடுத்திருந்தபோது டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் பொல்லார்டின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இவரையடுத்து டிவில்லியர்ஸுடன் ஷிவம் துபே கைகோர்த்தார்.

டிவில்லியர்ஸ் நாலா புறம் சிக்ஸரும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டு, 23 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்டினார். ஷிவம் துபே தனது பங்கிற்கு சிக்ஸர்களாகப் பறக்கவிட, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைக் குவித்தது.

டிவில்லியர்ஸ் 55 ரன்களுடனும், ஷிவம் துபே 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்யத்தொடங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை சுழல்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரிடம் பந்தைக் கொடுத்தார் விராட் கோலி. கேப்டனின் நம்பிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது.

வாஷிங்டன் சுந்தரின் சுழலில் 8 ரன்களக் எடுத்திருந்தபோது மாற்று வீரரான பவன் நேகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், உதானா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரான டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். குவின்டன் டிகாக்கும் நிலைக்கவில்லை. 14 ரன்கள் எடுத்திருந்தபோது சஹாலின் சுழலில் மாற்று வீரரான பவன் நேகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

6.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஸானுடன் கைகோர்த்த ஹர்திக் பாண்டியாவும் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆடம் ஸாம்பாவின் சுழற்பந்துவீச்சில் மாற்று வீரரான பவன் நேகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 11.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. 52 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை.

தொடக்க வீரர்களின் சொதப்பல்களால் மும்பை அணியில் நடுவரிசை ஆட்டக்காரர்களின்மீது அழுத்தம் அதிகரித்தது. இஷான் கிஸானுடன் அதிரடி வீரரான பொல்லார்ட் களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இஷான் கிஸான் அடுத்தடுத்து வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தார். சிறப்பாக ஆடிய இஷான் கிஸான் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். 14.3 ஓவரில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது.

33 பந்துகளில் 102 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. மும்பை அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, இஷான் கிஸானும், பொல்லார்டும் சிக்ஸர்களாப் பறக்கவிட ஆரம்பித்தனர். பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்திருந்தபோது சஹாலின் சுழலில் படிக்கல்லிடம் கேட்ச் கொடுக்க அதை அவர் தவறவிட்டார். பொல்லார்ட் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஸாம்பாவின் சுழலில் மீண்டும் தூக்கி அடிக்க, எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்த பவன் நேகி கேட்ச் பிடிக்கத் தவறினார். இதற்கான விலையை பெங்களூரு அணி கொடுத்தது. அந்த ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்களைப் பறக்க விட்டார் பொல்லார்டு.

18 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலை இருந்தது. 17வது ஓவரை சஹால் வீச அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்ட பொல்லார்டு, 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட அதிவேக அரைசதத்தைக் கடந்தார்.

12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரை நவ்தீப் ஷைனி வீசினார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்கள் கிடைக்க, 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்த்து.

கடைசி ஓவரை இஷ்ரு உதானா வீசினார். முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்கள் எடுக்கப்பட, மூன்றாவது பந்தையும், நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு பரவசப்படுத்தினார் இஷான் கிஸான். அடுத்த பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க துரதிர்ஷ்டவசமாக தேவ்தத் படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 58 பந்துகளில் 9 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. உதானா வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க, பவுண்டரியாக மாறியது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது.

பெங்களூரு அணி சார்பில் 4 ஓவர் விசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். மற்ற பந்துவீச்சாளர்களான இஷ்ரு உதானா, நவ்தீப் சைனி, யஷ்வேந்திர சஹால், ஆடம் ஸாம்பா அனைவரும் ஒரு ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்தனர்.

சூப்பர் ஓவர் முறையில் இரண்டாவதாக பேட் செய்த அணி முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்பதால், பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர். நவ்தீப் சைனி வீசிய அந்த சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸும், விராட் கோலியும் களமிறங்கினர். பும்ரா வீசிய மூன்றாவது பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த்தாக நடுவர் அறிவித்தார். டிஆர்எஸ் முறையில் நடுவரின் முடிவு திரும்பப்பெறப்படவே, 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆட்டத்தின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டிவில்லியர்ஸ். அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடவே, மறுமுனைக்கு வந்த கோலி, கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா “மிகச்சிறப்பான ஆட்டம். தொடக்கத்தில் நாங்கள் நன்றாக அடித்துவிளையாடி இருக்க வேண்டும். தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாமல் போனது ஏமாற்றம். இஷான் கிஸானின் ஆட்டம் பிரம்மிக்கும்படி இருந்தது. அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சியே. பொல்லார்டும் பார்முக்கு வந்ததில் மகிழ்ச்சி. அவரின் அதிரடி அணிக்கு மிகப்பெரிய பலத்தைத் தந்தது. சூப்பர் ஓவரில் இஷான் கிஸானை இறக்கியிருக்காலம். ஆனால் அவர் சோர்ந்துபோய் இருந்தார். அதனால்தான் பொல்லார்டுடன் ஹர்திக்கை களமிறக்கினோம். சூப்பர் ஓவரில் 7 ரன்கள் போதாது என்றாலும், அதிர்ஷ்டமும் தேவை. அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்” என்றார்.

வெற்றிக்குப்பிறகு விராட் கோலி “இந்த போட்டியைக் குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை. எங்களது வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தனர். டிவில்லியர்ஸ் எங்களுக்க பலம். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக செயல்பட்டார். ஆடம் ஸாம்பா வீசிய கடைசி ஓவரைத் தவிர மிகச்சிறப்பாகவே பந்து வீசினார். பீல்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. சூப்பர் ஓவரை பும்ரா வீசுவார் என்று தெரியும். சிறந்த பந்துவீச்சாளர். அவரது பந்துவீச்சில் பவுண்டரி அடித்தாலே வெற்றி கிடைக்கும் என்று யோசித்தே டிவில்லியர்சும் நானும் களமிறங்கினோம். அற்புதமான ஆட்டம். வெற்றிபெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

ஆட்டநாயகன் விருதை டிவில்லியர்ஸும், அதிக சிக்ஸ் அடித்த வீர்ர் விருதை இஷான் கிஸானும் பெற்றனர்.

மூன்று போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டு தோல்வி, ஒரு வெற்றியோடு 2 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளது. 2 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று தரவரிசைப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது பெங்களூரு அணி.

இன்று நடைபெறும் 11-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

#IPL2020 #MIvsRCB #ஐபிஎல்2020 #மும்பை_இந்தியன்ஸ் #ராயல்சேலஞ்சர்ஸ்_பெங்களூரு #சூப்பர்_ஓவர்

No comments: