நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 11-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, 100-வது போட்டியில் களமிறங்கினார் டேவிட் வார்னர். தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்க, தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி உற்சாகத்தோடு களமிறங்கியது.
ஹைதரபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த போட்டியில் விளையாடிய விரித்திமான் சாஹா, முகம்மது நபி ஆகியோருக்கு பதிலாக கேன் வில்லியம்ஸன், அப்துல் சமது ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றனர். அப்துல் சமது முதன் முதலில் இப்போட்டியில்தான் அறிமுக வீரராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆவேஷ் கானிற்கு பதிலாக காயத்திலிருந்து மீண்ட இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், இரவில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால், முதலில் ஹைதராபாத் அணியை பேட் செய்ய அழைத்தார்.
ஹைதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.
இருவரும் முதல் ஐந்து ஓவர்களில் நிதானமாகவே ஆடினர். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில், காலில் வாங்கிய பேர்ஸ்டோ அதிர்ஷ்டவசமாக எல்.பி.டபிள்யூவிலிருந்து தப்பினார். அப்போது ஹைதராபாத் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.
ஆறாவது ஓவரை ஆன்ரிச் நோர்ட்ஜே வீச அந்த ஓவரில் டேவிட் வார்னர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார். பேட்டிங் பவர் பிளேவில், 6 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்திருந்தது.
ஒன்பதாவது ஓவரை அமித் மிஸ்ரா வீச, வீசிய முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய, பேட்டில் பந்து பட்டு, தேர்ட் மேன் திசையில் பவுண்டரியாக மாறியது. அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய பேட்டின் விளிம்பில் பட்டபந்து நேரே விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டிடம் தஞ்சமடைந்தது. அவுட் என்று ரிஷப் பண்டும், அமித் மிஸ்ராவும் நடுவரிடம் முறையிட்டனர். அவர் அவுட் கொடுக்க மறுக்கவே, டிஆர்எஸ் முறையில் ரிவியூ கேட்டனர். மூன்றாம் நடுவர் அதை அவுட் என்றார். டேவிட் வார்னர் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 45 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அடுத்து வந்த மணீஷ் பாண்டே அமித் மிஸ்ராவின் வீசிய பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, அந்த பந்து காகிசோ ரபடாவின் கையில் தஞ்சமடைய, அவர் 3 ரன்களில் நடையைக் கட்டினார்.
ஜானி பேர்ஸ்டோவுடன் கேன் வில்லியம்ஸன் ஜோடி சேர்ந்தார். 15 ஓவர் வரை இருவரும் நிதானமாகவே ஆடினர். 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 112 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 40 ரன்களும், வில்லியம்ஸன் 18 ரன்களும் எடுத்திருந்தனர்.
பேர்ஸ்டோ பந்துக்கு பந்து ரன் என்ற கணக்கில் நிதானமாக ஆடிக்கொண்டே வர, கேன் வில்லியம்ஸன் அதிரடியில் இறங்கினார். 16வது ஓவரிலும், 17வது ஓவரிலும் தலா இரண்டு பவுண்டரிகளை விளாசினார் வில்லியம்ஸன்.
ஜானி பேர்ஸ்டோ, காகிசோ ரபடா வீசிய 17.1 ஓவரில் தனது அரை சதத்தை எட்டினார். விரைவான அரை சதம் இல்லையென்றாலும், அணியின் எண்ணிக்கையை உயர்த்த இவரது அரை சதம் உதவியது. இதில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும். ரபடா வீசிய அதே ஓவரின் ஐந்தாவது பந்தினை மிட் ஆப் திசையில் பேர்ஸ்டோ தூக்கி அடிக்க, நோர்ட்ஜே அழகாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.
அடுத்த ஓவரை நோர்ட்ஜே வீச, இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அப்துல் சமது ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசி அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரை ரபடா வீச, அவரது வேகப்பந்துவீச்சில், கேன் வில்லியம்ஸன் அக்ஷர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்திருந்தார்.
20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல் சமது 12 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரையடுத்து ஷிகர் தவாணுடன் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கைகோர்த்தார்.
ஷிகர் தவாண் அடித்து ஆட ஸ்ரேயாஸ் அவ்வப்போது ரன்களை எடுத்த வண்ணம் இருந்தார். பேட்டிங் பவர்பிளேவில், 6 ஓவர் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்தது.
7வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிடம் கொடுத்தார் டேவிட் வார்னர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரையடுத்து ஷிகர் தவாணுடன் ரிஷப் பண்ட் கைகோர்த்தார். டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், அற்புதமான பீல்டிங்கும் டெல்லி அணியை திணற வைத்தன.
தவாண் 34 ரன்கள் எடுத்திருந்தபோதும், ரிஷப் பண்ட் 28 ரன்கள் எடுத்திருந்த போதும், ரஷீத் கான் சுழலில் வீழ்ந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
4 ஓவர்கள் வீசி, 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹைதராபாத் அணியின் ரஷீத் கானிற்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.
தோல்விக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் "பனிப்பொழிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எங்களின் கணிப்பு பொய்யாகிவிட்டது. டெல்லி அணி சிறப்பாக ஆடினார்கள். நாங்கள் இன்னும் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். 162 ரன்கள் என்பது எட்டிப்பிடித்திருக்க வேண்டிய இலக்குதான். அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்" என்றார்.
வெற்றிக்குப்பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் "இந்த தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறோம். அதிக பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றாலும் ஓடி ஓடி ரன்களை எடுத்தோம். அந்த கடின உழைப்பிற்கு பலன் கிடைத்திருக்கிறது. எங்களது அணியின் வேகப்பந்து விச்சாளர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பது கவலை அளித்தது என்றாலும், அந்த இடத்தை இளம் பந்துவீச்சாளரான அபிஷேக் சர்மா நிரப்பிவிட்டார். ரஷீத்தின் சுழல் வீச்சு அணிக்கு பக்கபலமாக இருந்தது. எங்கள் அணிக்கு இப்போது நம்பிக்கை பிறந்துவிட்டது” என்றார்.
மோ.கணேசன்
#IPL2020 #DCvsSRH #ஐபிஎல்2020 #டெல்லி_கேபிடல்ஸ் #சன்ரைஸர்ஸ்_ஹைதராபாத்
No comments:
Post a Comment