Friday, September 25, 2020

ராகுலின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸை ஊதித்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்


நேற்று துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 6-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் பெங்களூரு அணி களமிறங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக போராடி மேட்ச்சை டை செய்தாலும் சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி, கட்டாயம் வெற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸில் தோற்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.

பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலும், அவரது பால்ய கால நண்பரும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தநதனர். மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்திருந்த போது, யஷ்வேந்திர சஹாலின் சுழலில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 17 ரன்களிலும், கிளன் மேக்ஸ்வெல் 5 ரன்களிலும் ஷிவம் துபே பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கே.எல்.ராகுலின் விஸ்வரூபம்

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் என்ற முறையில் துவக்கத்தில் இருந்தே பொறுப்பாக ஆடத்தொடங்கிய ராகுல் 36 பந்துகளில் அரை சதத்தைத் தொட்டார். அதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

 

16-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழந்து 132 ரன்களே எடுத்திருந்தது. 20 ஓவரின் முடிவில் 170 ரன்கள் எடுத்தாலே அதிகம் என்ற நிலை இருந்தது.

17-வது ஓவரை வீச டேல் ஸ்டெயினை அழைத்தார் கோலி. அந்த ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸரைப் பறக்க விட்ட ராகுல், அடுத்த பந்தில் விராட் கோலி இருக்கும் திசையில் தூக்கி அடித்தார். கைக்கு வந்த பந்தை தவற விட்டு அதிர்ச்சி அளித்தார் கோலி. அப்போது ராகுல் 83 ரன்கள் எடுத்திருந்தார்.

18-வது ஓவரை இளம்புயல் நவ்தீப் சைனியிடம் கோலி கொடுக்க, அந்த ஓவரின் கடைசி பந்தில் மறுபடியும் ராகுல் கோலி இருக்கும் பக்கமாக தூக்கி அடிக்க, இரண்டாவது முறையாக கேட்சை தவற விட்டார் சிறந்த பீல்டர்களில் ஒருவரும் பெங்களூரு அணியின் கேப்டனுமான விராட் கோலி. அப்போது ராகுல் 89 ரன்கள் எடுத்திருந்தார்.

கேட்ச்சை தவற விட்டதற்கான பலனை அடுத்த இரண்டு ஓவர்களில் பெங்களூரு அணி பெற்றது. 18-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு ராகுலின் விஸ்வரூபம் பெரிதானது என்றே சொல்ல வேண்டும். 19-வது ஓவரை டேல் ஸ்டெயின் வீச, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ராகுல், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி, இந்த ஐபிஎல் சீஸனில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ராகுலுக்கு இது இரண்டாவது சதமாகும். 2019 சீஸனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன் எடுத்திருந்தார்.

ஸ்டெயினின் மூன்றாவது பந்தில் ரன் எடுக்காமல் விட்ட ராகுல் அடுத்த மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வாணவேடிக்கை காட்டினார்.

கடைசி ஓவரை வீசிய ஷிவம் துபே ஓவரில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் விளாசியது பஞ்சாப் அணி. கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணி 49 ரன்களைக் குவித்து அசத்தியது.

20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.  இதில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.

 

120 பந்துகளில் 52 பந்துகளை சக அணியின் நான்கு வீரர்கள் எதிர்கொண்டு 63 ரன்கள் எடுத்தனர். இதில் 7 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். மற்றதெல்லாம் ராகுல் எதிர்கொண்டவையே. அதில் 14 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள்.

ராகுலின் சாதனைகள்

ஐபிஎல் தொடரில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அதிக பட்ச ரன்னை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. ஐபிஎல் தொடரில் சச்சின் தெண்டுல்கருக்குப்பிறகு அதிவேகமாக 2000 ரன்களைத் தொட்ட இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ராகுல் இந்த போட்டியில் நிகழ்த்திக்காட்டினார்.

டேல் ஸ்டெயினின் வேதனை

வேகப்பந்து வேதாளம் என செல்லமாக அழைக்கப்படும் டேல்ஸ்டெயின் இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 57 ரன்களை வாரி வழங்கினார். சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர்களை வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அவரை விராட் கோலி பயன்படுத்தி இருக்கலாம்.

பெங்களூரு அணியின் மோசமான பேட்டிங்

120 பந்துகளில் 207 ரன்கள் என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியை பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சிதறடித்தனர்.

ஆரோன் பிஞ்ச் - 20, ஏபி டிவில்லியர்ஸ் - 28, வாஷிங்டன் சுந்தர் - 30, ஷிவம் துபே - 12 ஆகியோர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களில் சீட்டுக்கட்டுபோல சரிந்தனர். கேப்டன் கோலி 1ரன் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தார். ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், பகுதி நேர சுழற் பந்து வீச்சாளரான கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டினையும் தங்களது சுழலில் வீழ்த்தினர்.

 

17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து, 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.

அதிக சிக்ஸ் அடித்த வீரர், சிறந்த அதிரடி ஆட்டக்காரர், மேன் ஆப் தி மேட்ச் ஆகிய மூன்று விருதுகளையும் கே.எல்.ராகுல் பெற்றார்.

இரண்டு போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் ஒரு தோல்வி, ஒரு வெற்றியோடு அதிக ரன்ரேட்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன்

No comments: