மோ.கணேசன்
நேற்று, அபுதாபியில் உள்ள ஷேக் சையது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 13-வது ஐபிஎல் தொடரின் 13-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
பஞ்சாப் அணி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. மும்பை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மட்டும் கடந்த போட்டியில் விளையாடிய அஸ்வின் நீக்கப்பட்டு, கிருஷ்ணப்பா கவுதம் அணியில் சேர்க்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய ஷெல்டன் கார்ட்டெலின் துல்லியமான வேகப்பந்து வீச்சில் டிகாக், ரன் ஏதும் எடுக்காமலேயே ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஓவர் மெய்டெனாக முடிந்தது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட்டுட்டுடன் முதல் மெய்டென் ஓவர் இதுவாகத்தான் இருக்கும்.
இவரையடுத்து ரோஹித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்கவிட்ட ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடர்களில் 5000 ரன்களைக் கடந்தார். அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரியை விரட்டினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவிக்க, டிஆர் எஸ் ரிவியூ முறையில் தப்பித்தார் ரோஹித் சர்மா.
கார்ட்டெல் வீசிய 2 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய சூர்யகுமார் யாதவ், ரவி பிஷ்னோய் வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் அற்புதமான பீல்டிங்கால் ரன் அவுட் ஆனார்.
ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஸான் ஜோடி சேர்ந்தார். 13 ஓவர் வரையிலும் கிஸான் மிக நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க, அணியின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது.
13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது. 14-வது ஓவரை கிருஷ்ணப்பா கௌதம் வீசினார். அவர் வீசிய முதல் பந்தினை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, கருண் நாயர் கையில் தஞ்சமடைந்தது. இஷான் கிஸான் கணக்கில் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் உள்பட 32 பந்துகளில் 28 ரன்கள் அடங்கும்.
அடுத்து பொல்லார்டு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். 14 ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 15 ஓவரில் இருந்து இருவரும் விஸ்வரூபம் எடுத்தனர் என்றே சொல்லவேண்டும். மைதானாத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்க விட, ஆமை வேகத்தில் இருந்த ரன் விகிதம், ராக்கெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது.
16-வது ஓவரை ஜிம்மி நீஷம் வீச, அந்த ஓவரில் முதல் பவுண்டரியை விரட்டிய ரோஹித் சர்மா அரை சதத்தை எட்டினார். அதனை அடுத்து தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி எதிரணியை கலங்கடித்தார்.
17-வது ஓவரை முகமது ஷமி வீச, அவர் வீசிய முதல் பந்தை ரோஹித் சர்மா லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். சிக்ஸருக்கு போன பந்தை ஓடி வந்த வேகத்தில் பாய்ந்து பிடித்த கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்லும் முன்னர் அருகில் இருந்த ஜிம்மி நீஷமிடம் தூக்கிப்போட, அவர் கச்சிதமாகப் பிடித்து, ரோஹித் சர்மாவை வெளியேற்றினார். மேக்ஸ்வெல்லின் அட்டகாசமான பீல்டிங்கை பாராட்டியே ஆகவேண்டும். ரோஹித் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 16.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களாக இருந்தது.
பொல்லார்டுடன் ஹர்திக் பாண்டியா இணைய, வாண வேடிக்கை இருவரிடமிருந்தும் கிளம்பியது. யார் போட்டாலும் வாணவேடிக்கைதான். முகமது ஷமி வீசிய 19வது ஓவரில் பாண்டியா ஒரு பவுண்டரியும், பொல்லார்டு 3 பவுண்டரிகளையும் அடித்தனர். 20-வது ஓவரை கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச, பொல்லார்டுக்கு வசதியாகப் போனது. அந்த ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸர்களைப் பறக்க விட்டு, அணியின் எண்ணிக்கையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.
15 ஓவர் வரை தடுமாறிக் கொண்டிருந்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து அசத்தியது. பொல்லார்டு 20 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 47 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவர் மட்டுமே 31 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்தனர்.
இதனையடுத்து 120 பந்துகளில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியினை, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பஞ்சாய்ப் பறக்க வைத்தனர்.
தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கிய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இவரை அடுத்து வந்த கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன்கள் எடுத்தார். கிருஷ்ணப்பா கவுதம் 22 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக மும்பை அணியின் கிரென் பொல்லார்டு தேர்வு செய்யப்பட்டார்.
தோல்விக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் "இந்த தோல்வி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று சொல்லமாட்டேன். ஆனால் வருத்தமடைய வைத்திருக்கிறது. முதல் 15 ஓவர்கள் மிகச்சிறப்பாகவே பந்து வீசினோம். கடைசி 5 ஓவர்கள்தான் மோசமாகப் போய்விட்டது. கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் தேவை என்பதை உணர்கிறோம். தோல்வியிலிருந்து புதிய உத்வேகத்துடன் மீண்டு வருவோம். இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன" என்றார்.
வெற்றிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா "சிறப்பான வெற்றி. பஞ்சாப் அணியின் பலம் எங்களுக்குத் தெரியும். முதலில் விக்கெட் விழாமல் நிலைத்து நின்று ஆடினால் போதும். கடைசி 5 ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதை கனகச்சிதமாக பொல்லார்டும், பாண்டியாவும் செய்து முடித்தார்கள். பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை கனகச்சிதமாக செய்து முடித்தார்கள். இதுதான் கேப்டனுக்குத் தேவை. 5000 ரன்களைக் கடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை. அணியின் வெற்றியே முக்கியம்" என்றார்.
மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற கிரென் பொல்லார்ட் "மகிழ்ச்சியாக இருக்கிறது. 15 ஓவர்களுக்குப் பிறகு அடித்து ஆட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். காரணம் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்கள் மிச்சமிருந்தது. பயன்படுத்திக்கொண்டோம். பாண்டியாவின் அதிரடியும் அணிக்கு கை கொடுத்தது. சென்ற போட்டியில் தோல்வியடைந்திருந்தோம். அதில் இருந்த மீளவேண்டும் என்ற உத்வேகம், இந்த போட்டியில் வெற்றியைத் தந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் இது தொடரும்" என்றார்.
இந்த வெற்றியின் மூலம் கிடைத்த இரண்டு புள்ளிகளுடன் மொத்தம் நான்கு புள்ளிகளோடு தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை அணி.பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியதால் 2 புள்ளிகளோடு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இன்று நடைபெறும் 14-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.
ipl2020 #MI_vs_KXIP #rohith_5000_runs, #ஐபிஎல்2020
No comments:
Post a Comment