மோ.கணேசன்
நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, ஐபிஎல் தொடரின் 12-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இரண்டு வெற்றியைப் பெற்ற தெம்புடன் ராஜஸ்தான் அணியும், முதல் போட்டியில் தோல்வியைக்கண்டாலும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற நம்பிக்கையில் கொல்கத்தாவும் களமிறங்கின.
கொல்கத்தா அணியிலும், ராஜஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இந்த போட்டியிலும் இடம் பெற்றனர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் நேர்த்தியாக வீச அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை ஜெயதேவ் உனத்கட் வீச, அந்த ஓவரில் சுனில் நரைன் கொடுத்த எளிதான கேட்ச்சைக் கோட்டைவிட்டார் ராபின் உத்தப்பா. அதன் பலனாக ஐந்தாவது ஓவரை உனத்கட் வீசும்போது, டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரும், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியும் விளாசினார் சுனில் நரைன். அடுத்த பந்திலேயே ஸ்டம்புகளை தெறிக்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டார் உனத்கட்.
இவரையடுத்து சுப்மன் கில்லுடன் நிதீஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். அவ்வப்போது அடித்து விளையாடிய நிதீஷ் ராணா 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 22 ரன்கள் எடுத்திருந்தபோது திவேட்டியா பந்துவீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சுப்மன் கில்லுடன் ஆந்த்ரே ரஸ்ஸல் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அதுவும் நிலைக்கவில்லை. 12 ஓவரின் தொடக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச்கொடுத்து வெளியேறினார் சுப்மன் கில். 34 பந்துகளில் 1 சிக்ஸ் 5 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் அவரது கணக்கில் அடங்கும்.
அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் நிலைக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சரின் அற்புதமான பந்துவீச்சில் 1 ரன் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆந்த்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்திருந்தபோது அங்கிட் ராஜ்புத் பந்துவீச்சில் உனத்கட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, இயான் மோர்கன் தன் பங்கிற்கு 34 ரன்கள் விளாச, கமலேஷ் நாகர்கோட்டி 8 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. சீரான இடைவெளியில் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை இழந்தாலும், தினேஷ் கார்த்திக்கைத் தவிர மற்ற அனைவரும் தங்களது பங்கை சிறப்பாகச் செய்ததால் 20 ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட்செய்யத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட் கம்மின்ஸின் அற்புதமான வேகப்பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து சஞ்சு சாம்சன் ஜாஸ் பட்லருடன் கைகோர்த்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்கள் எடுத்திருந்தபோதும், பட்லர் 21 ரன்கள் எடுத்திருந்தபோதும் ஷிவம் மாவியின் வேகப்பந்துவீச்சுக்கு பலியானார்கள். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா 2 ரன்கள் எடுத்திருந்தபோதும், ரியான் பராக் 1 ரன் எடுத்திருந்தபோதும் நாகர்கோட்டியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
கடந்த போட்டியில் ஆட்டத்தையே மாற்றிக்காட்டிய ராகுல் திவேட்டியா இப்போட்டியில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 10.5 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய டாம் கரண் ஒரு புறம் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினாலும், மறுபுறம் வந்த வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் சீட்டுக்கட்டுகளைப் போல் சரிந்தனர்.
20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்ததால், கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் டாம் கரண் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும், வருண், நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தோல்விக்குப்பிறகு பேட்டியளித்த ஸ்டீவ் ஸ்மித் “திட்டமிட்டபடி எங்களால் செயல்பட முடியவில்லை. தொடக்கத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். எதிரணியினர் மிகச்சிறப்பாக விளையாடினர். களத்திற்கு ஏற்றபடி எங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இனிவரும் போட்டிகளில் சரி செய்து கொள்வோம்.” என்றார்.
வெற்றிக்குப்பிறகு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக் “இது சிறந்தபோட்டி என்று சொல்ல மாட்டேன். பல விஷயங்களில் இன்னும் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுப்மன் கில், ரஸ்ஸல், இயான் மோர்கன் ஆகியோரின் பங்களிப்பு பிரமாதமாக இருந்தது. ஆர்ச்சர் அற்புதமாக பந்துவீசினார். டாஸ் நாங்கள் வென்றிருந்தால் முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்திருப்போம். அதிக ரன்களைக் குவித்து, பின் எதிரணியை கட்டுப்படுத்துவதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இளம் வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது” என்றார்.
மேன் ஆப் தி மேட்ச் விருது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளரான ஷிவம் மாவிக்கு வழங்கப்பட்டது.
சிறப்பாக ஆடி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வியைக் கண்டதால் 4 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாமிடத்திற்கு சரிந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 13-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
#IPL2020 #KKRvsRR #ஐபிஎல்2020
No comments:
Post a Comment