'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் யார் இதை சொன்னாங்க... இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்... எல்லோரும் சொல்றாங்க அதான் சொன்னேன் என்பார்கள்... இதனை கூறியது யார்..? எங்கே..? எப்போது..? ஏன்..? என்ற கேள்விக்கு தினமணியில் வெளிவந்த தமிழ்மணி சிறுகோடிட்டு காட்ட.., அதை நான் ஆய்ந்து அகழ்ந்தெடுத்ததில் (இப்படியெல்லாம் சொல்லனுமா...?) கண்டுபிடித்'தேன்'. படித்'தேன்'. உண்மையில் அது 'தேன்' தான்..!
இந்த வார்த்தையை நமக்களித்தவர், நம் தமிழ்க் குலத் தோன்றல், தமிழாய்ந்த மூதாட்டி ஔவைதான். அவர் மானுடருக்கென்று 'நல்வழி' என்னும் தலைப்பில் 40 செய்யுளை நமக்கு (சு)வாசிக்கத் தந்திருக்கிறார்.
அதில் 26 வதாக வரும் செய்யுள்.. இதோ...
'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்'
- நல்வழி, 26வது செய்யுள்
இதன் பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.
ஒரு செய்யுளில் உலகிற்கே உணர்த்தும் கருத்து இதுவெனில், இப்பெருமை நம் ஔவைக்கு மட்டுமன்று, நம் தமிழ்க் குலத்திற்கும்தான். வாழ்க எந்தமிழ்.
No comments:
Post a Comment