Tuesday, July 29, 2008

தமிழுக்கும் பதினாறு பேறு..!

உலகில் 'கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி... நம் தமிழ்க்குடி' என்றார்கள் நம் தமிழாய்ந்த ஆன்றோர்கள். உலகின் பழமையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அச்சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உலகறிந்த உண்மை. அது என்றுமே செம்மொழிதான் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி'. ஆயினும் நமது நடுவண் அரசு. அதிகாரபூர்வமாக 12-10-2004-இல் தான் தமிழ் மொழி செம்மொழி என அறிவித்தது. அதன் சிறப்புகள் அரசியல் பின்புலம் காரணமாகவே வெளியே வந்தது போல் ஒரு மாயையும் ஏற்பட்டிருக்கிறது..(அதாங்க... எங்களுக்கு ஆதரவு தந்தா... உங்களுக்கு வேண்டியதை செய்வோம்னு ஆளும் மத்திய அரசு சொல்லிச்சே...)

'ஞாயிறைக் கையால் மறைப்பார் இல்' என்பது நம் முன்னோர் வாக்கு. அதுபோல தமிழ்த்தாயின் சிறப்பை இவர்கள் மறைத்தாலும். காலந்தாழ்த்தி அனுமதி வழங்கினாலும், அவளுக்குரிய சிறப்பை அவள் இழக்கமாட்டாள்.

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் (மட்டும்தான்) மொழிகிறார்கள். ஆனால் தமிழ் மரபில் பிறந்தவன் மொழிய மறுக்கிறான்...? (அவனுக்கு அது தெரிந்தால்நானே என்று கேள்வி கேட்பது புரிகிறது). ஆனால் பிற நாட்டினர் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியக்கிறார்கள், போற்றுகிறார்கள்.

தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம். இவற்றைக் களைய 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு


(முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபட வேண்டாம். அவளை சிதைக்காமல், நவீன முறையில் வாழவிட்டால் போதும். நன்றி)

No comments: