Monday, July 28, 2008

'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' சரி..! அந்த பதினாறு..?

திருமணத்திற்கு செல்கிறோம். திருமணம் முடிகிறது. புதுமணத் தம்பதிகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுகிறார்கள். அப்போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என பெரியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது திருமண வீடே சிரிப்பினால் அதிரும்.

இதற்கு "பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இதற்கு அது சரியான பொருள் இல்லை. பெரியவர்கள் கூறும் பதினாறு பேறுகளில் ஒரு பேறு குழந்தை ஆகும். மற்றவை எவை..? எங்கிருந்து வந்தது இந்த வாக்கியம்..? யார் சொன்னது..?

நமது தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர்தான் இதன் ஆசிரியர். அவர்தான், அவருக்கு பிடித்த அபிராமியிடம், மக்களுக்கு பதினாறு பேறுகளை வழங்கு என வேண்டினார்...

அச்செய்யுள்...

''சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில்
நோயின்மை கல்வி தனதானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!''


--அபிராமி பட்டர்

பதினாறு
பேறுகள் (பதினாறு செல்வங்கள்)

(1) நோயற்ற வாழ்வு
(2) கல்வியறிவு
(3) உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள்
(4) தனம் (பொன், பொருள், பிற செல்வங்கள்)
(5) அழகான வதனம், உடல்
(6) நீங்காப் புகழ்
(7) ஆணவமில்லாத நற்பெருமை
(8) நீடித்த இளமை (மனதிற்கும், உடலிற்கும்)
(9) நற்செயல்கள்
(10) நன்மக்களைப் பெறுதல் (இதுதான் குழந்தைப் பேறு)
(11) உடல் மற்றும் உள்ளத்து வலிமை
(12) துணிவு
(13) நீண்ட ஆயுள்
(14) எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி
(15) நல்லெண்ணம் (நல்வினை)
(16) (மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் ஒரு சேர அனுபவிக்கும்) நுகர்ச்சி.

(இது குறித்து மேலும் அறிந்த தமிழ் கூறும் நல்லுலகவாதிகள், இதில் பிழையிருப்பின் தகுந்த சான்றுகளுடன் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.)

2 comments:

தமிழர் நேசன் said...

மிக்க நன்று நண்பரே! தாங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி... இன்று பதினாறு பேரு எவை என்றும் ஆசிரியர் யாரென்றும் தெளிந்தேன்.

மோகனன் said...

தமிழ் நேசருக்கு...

நன்றி கலந்த வணக்கங்க்ள... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...