Friday, August 01, 2008

தாயின் தாலாட்டு

பெண் குழந்தை என்றால் கிராமங்களில் வெறுத்து விடுவார்கள். அப்பிள்ளைகளை படிக்க அனுப்பாமல்... வீட்டுற்குள் அடக்கி விடுவார்கள்... மதுரைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் விட்டு கொலை செய்யும் பாதகம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றுகு மாறாக தனது பெண்குழந்தையை ஒரு கிராமத்திலிருக்கும் தாய் தாலாட்டும் அழகை கேளுங்கள்...

''அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ...
ஆராரோ... ஆரிராரோ..!
நீ பாவாடை சரசரக்க
பள்ளிக்கூடம் போயிவாயேன்..!
நீ பள்ளிக்கூடம் போயிவந்தா
அம்மா பலகாரம் செய்து வைப்பேன்..!
நீ படிச்சாக்கா எம்மா குலப்பெருமை
நம்ம சனம் அங்கே கையெடுக்கும்..!
எம்மா... பணம் காசு நமக்கிருந்தா
பலபேரு கையெடுப்பான்...
குடிப்பெருமை நமக்கிருக்கு
நம்ம குலப்பெருமை தலையெடுக்க
நீ படிச்சி ஆகவேணும்..!
களத்து மேடு நெல்லுகுத்தி
கண்மணியே உன்னை படிக்க வைப்பேன்..!
குடும்பத்துக்கே நெல்லுகுத்தி
குலவிளக்கே உன்னை படிக்க வைப்பேன்..!
பட்டணத்துக்கே நெல்லுகுத்தி
பாலகியே உன்னை படிக்க வைப்பேன்..!
பாலூறும் மனசினிலே எம்மா
பக்குவாமாய் படிக்க வேணும்..!
ஆராரோ... ஆரிராரோ...

அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ..!''

- பூங்கொடி, பென்னகர் கிராமம்.

(கல்வியின் அவசியத்தை, கிராமத்திலிருக்கும் ஒருதாய், தன் குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்... சமூகத்தால் ஓதுக்கப்பட்ட பிரிவில் அவர்கள் இருக்கிறார்கள். அதை அழித்தெடுக்க கல்விதான் ஆயுதம் என்கிறாள்... இதற்கு இணையான ஒரு படைப்பை நகரத்தில் கிடைத்துவிடுமா..?)

No comments: