Thursday, August 07, 2008

ஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய ரயிலுங்கோவ்...

சென்னை எழும்பூரில் இருந்து விருதாசலம், ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் புதிய ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆத்தூர்காரங்க எல்லாம் காலரை தூக்கி விட்டுக்கலாம்.

எங்க ஊரின் 30 வருடக் கனவு நிறைவேறப் போகிறது. எங்க ஊர் சேலம் மாவட்டத்திலிருக்கிற ஆத்தூர். சேலத்திலிருந்து 54 கி.மீ. தூரத்தில் கிழக்கு திசையில் உள்ளது எங்கள் ஆத்தூர். இது ஒரு நகராட்சி. அடியவன் இங்குதான் பிறந்தது, தவழ்ந்தது, நடந்தது, படித்தது என அனைத்தும். இன்று, நான் படித்த படிப்பின் காரணமாக சென்னையின் வந்தேறியாகி விட்டேன். பஞ்சம் பிழைக்க வந்துவிட்டேன்.

எங்கள் ஊருக்கு போக வேண்டுமெனில் பேருந்து வழியாகத்தான் செல்ல முடியும். சென்னையிலிருந்து புறப்படும் பேருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக சேலம் சென்றடையும். நடத்துனர்கள் சேலம் செல்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் பெரும்பாலும் எங்கள் ஊர் செல்வதற்கு பேருந்தில் பயணிப்பதானால், நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும். பயணம் செய்வதற்கு 7 மணி நேரம் ஆகும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் அல்லல்கள் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல...

ரயிலில் செல்லாமென்றால் அதற்கு வழியிருக்காது. சேலம் - விருதாச்சலம் வரைதான் ரயில் வந்து செல்லும். அப்படி அவசரமெனில் விருதாசலத்தில் இறங்கி 3 மணி நேரம் காத்திருப்பிற்குப் பின்னர், திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களில் தொற்றிக் கொள்ள வேண்டும். ஒரே ரயிலில் செல்வதென்றால் ஆத்தூரிலிருந்து சேலம் சென்றுவிட்டு, அங்கிருந்து தர்மபுரி, வாணியம்பாடி, அரக்கோணம் வழியாக சென்னைக்கு வரவேண்டும்.

இனிமேல் அதற்கு வேலையிருக்காது. எங்கள் ஊர் மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகிறது. நாளை முதல் எங்கள் ஊர் வழியாக சென்னை செல்லும் புதிய ரயில் விடப்படுகிறது. சிறப்பு என்னவென்றால். இது செல்லும் வழியனைத்தும் அகலரயில்பாதையாக மாற்றியமைக்கப்பட்டதாகும். இதனால் பயண நேரம் குறையும், ரயிலும் விரைவாகச் செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கும் (ரயில் வண்டி எண்: 2297), சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் (ரயில் வண்டி எண்: 2298) புதிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த புதிய ரயில் நாளை (8.8.08) மட்டும் மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் (2297) ரயில், அன்று நள்ளிரவு 11.15 மணிக்கு சேலம் சென்றடையும். 9ம் தேதி முதல் இரவு 11.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும். மறுமார்க்கமாக சேலத்தில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழும்பூர் வரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டினம், சேலம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.

இனிமேல் பொங்கல், தீபாவளி என அனைத்து நாட்களிலும் இனிமையான பயணத்தை தொடங்குவோம். அட இடைத்தரகர்களே... இந்த ரயிலையும் உங்க வசதிக்காக வளைச்சுடாதீங்க... ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்படுத்திக்கட்டும்...

இவ்வழியாக ரயிலை விடுவதற்கு முயற்சிகள் எடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் சார்பாகவும் எங்கள் பகுதி மக்கள் சார்பாகவும், இதனால் பயனுறுகிற அனைத்து பயணிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்..!

8 comments:

நல்லதந்தி said...

ஊருக்கு போய்ட்டு வாங்க! :)

கூடுதுறை said...

இந்த வண்டி மிகவும் உபயோகமாக இருக்கும். ஒரு வழித்தடம் மட்டும் போதாது. மேலும் ஒரு பகல் நேர வண்டி அதுவும் கோவையில் இருந்துவிட்டால் வட தமிழ்நாட்டின் அனைவரும் மிகவும் பயன் பெறலாம்.

வெண்பூ said...

சேலத்திற்கு செல்பவர்களுக்கும் இது பயனாக இருக்கும். இது சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்வதால். பயனுள்ள செய்தி.. நன்றி.

ராஜ நடராஜன் said...

ரயிலின் புதிய கால்பதிப்புக்கு வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

// ஒரு வழித்தடம் மட்டும் போதாது. மேலும் ஒரு பகல் நேர வண்டி அதுவும் கோவையில் இருந்துவிட்டால் வட தமிழ்நாட்டின் அனைவரும் மிகவும் பயன் பெறலாம்.//

கல்யாண வீட்டுக்குப் போய்விட்டு வாழ்த்திவிட்டு குட்டிச்சண்டையும் போடுறமாதிரி ஒரு ரயில் கால்தடம் பதிக்க முப்பது வருடமா!!! இனி கூடுதுறையாரின் கனவு எப்பொழுது பலிக்குமோ?

மோகனன் said...

தங்களது வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகள்...

இந்த ரயில் தற்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விருதாசலம் - சேலம் வழியான அகலரயில்பாதையில் பயணிகளின் வருகையைப் பொறுத்து எதிர்காலத்தில் மற்றுமொரு ரயில் விடப்படலாம்...

வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் எனது நன்றிகள்...

jayanthi said...

Moganan sir ,
venganoor virutha giriswarar kovil pattri thagaval thevai thara mudiyuma.?

Cheers
Jayanthi

மோகனன் said...

மன்னிக்கணும் ஜெயந்தி...