Friday, August 08, 2008

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..!

புராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டாவது ஒலிம்பிக் போட்டி 1900-ல், பிரான்ஸில் நடைபெற்றது. அது முதல் இன்று வரை இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. இந்தியா கலந்து கொண்ட முதலாவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தடகளப்பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

இதன் பிறகு 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது. இதே போட்டியில் 1960 -ல் வெள்ளியும், 1968,1972 -களில் வெண்கலத்தையும் வென்றது.

1952-ல் மல்யுத்தப் பிரிவில் ஒரு வெண்கலம், 1996-ல் டென்னிஸ் பிரிவில் ஒரு வெண்கலம், 2000-ல் பளுதூக்குதலில் ஒரு வெண்கலம், 2004-ல் துப்பாக்கி சுடுதலில் ஒரு வெள்ளியையும் இந்தியா வென்றுள்ளது.

 28 முறை நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 27 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 8 தங்கம், 4 வெள்ளி, 5 மல்யுத்தம் என மொத்தம் 17 பதக்கங்கள்.

1900 துவக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி (ஆதாரம்: மகாகவி பாரதியின் கவிதை வரி ''முப்பது கோடி முகமுடையாள்...'') அப்போது இந்தியா 2 பதக்கங்களை வென்றது. இன்றோ நமது மக்கள் தொகையின் எண்ணிக்கை 113 கோடிக்கும் மேல்... (இதை நீங்கள் படிக்கும் இந்த வினாடியில் புதிதாக 15 குழந்தைகள் பிறந்திருக்கும்). பதக்கம் வெல்கிறார்களோ இல்லையோ... பிள்ளைகளை பெறுவதில் வெல்கிறார்கள்...

30 கோடிக்கே 2 பதக்கம் என்றால் 110 கோடிக்கு 7 பதக்கமாவது வெல்ல வேண்டாமா..? ம்ஹூம்... என்னதாம்பா பண்றீங்க..?

இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து 98 பேர் குழு செல்கிறது. அதில் 56 பேர் வீரர், வீராங்கனைகள். பயிற்சியாளர் உள்ளிட்ட மற்றையவர்கள் 42 பேர். அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில்மட்டும் 16 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

கடந்த முறை ஏதென்ஸில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியது.

மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் விவரம் (அடைப்புக்குறியில் அவர்கள் பங்கேற்கும் போட்டி)

வில்வித்தை: மங்கல் சிங் சாம்பியா (தனிநபர்). தோலா பானர்ஜி (தனிநபர்), பாம்பயாலா தேவி (தனிநபர்), பிரனிதா வார்தினேனி (தனிநபர்).

தடகளம்: விகாஸ் கௌட (வட்டு எறிதல்), ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறை தாண்டுதல்), அஞ்சு ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்), ஜெ.ஜெ. சோபா (ஹெப்டத்லான்), சுஸ்மிதா சிங்கா ராய் (ஹெப்டத்லான்), பிரமிளா அய்யப்பா (ஹெப்டத்லான்), பிரீஜா ஸ்ரீதரன் (10,000 மீட்டர் அட்டம்), சுரேந்திரா சிங் (10,000 மீட்டர் அட்டம்), ஹர்வந்த் கௌர் (வட்டு எறிதல்), கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல்), மஞ்சித் கவுர் (400 மீட்டர் அட்டம்), மந்தீப் கௌர் (400 மீட்டர் அட்டம்), சித்ரா கே.சோமன், ராஜா எம். பூவம்மா, மந்தீப் கௌர், சினி ஜோஸ், எஸ். கீதா (400 மீட்டர் தொடர் அட்டம்).

இறகுப்பந்து: அனுப் ஸ்ரீதர் (ஒற்றையர்), சாய்னா நெஹ்வால் (ஒற்றையர்).

துப்பாக்கி சுடுதல்: அபிநவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), ககன் நராங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சமரேஷ் ஜங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), 50 மீட்டர் பிஸ்டல்), மான்ஷெர் சிங் (டிராப்), மானவ்ஜித் சிங் சாந்து (டிராப்), ராஜ்யவர்தன் சிங் ரதோட் (டபுள் டிராப்), அஞ்சலி பாகவத் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), அவ்னீத் கௌர் சித்து (50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்).

குத்துச்சண்டை: ஜிதேந்தர் குமார் (பிளை வெயிட் பிரிவு), அகில் குமார் (பாந்தம் வெயிட்), அந்த்ரேஷ் லலித் லாக்ர (அபெதர் வெயிட்), விஜேந்தர் விஜேந்தர் (மிடில் வெயிட்), தினேஷ் குமார் (லைட் ஹெவி வெயிட்).

நீச்சல்: விர்தவால் காடே (50 மீட்டர் பிரீ ஸ்டைல், 100 மீட்டர் பிரீ ஸ்டைல், 200 மீட்டர் பிரீ ஸ்டைல்), சந்தீப் சேஜ்வால் (100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக், 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக்), அன்குர் பொசேரியா (100 மீட்டர் பட்டர்பிளை), ரேஹன் போன்சா (200 மீட்டர் பட்டர்பிளை).

துடுப்புப்படகு: பஜ்ரங்லால் தஹார் (ஒற்றையர் ஸ்கல் பிரிவு), தேவேந்தர் குமார் (லைட் வெயிட்), மஞ்ஜீத் சிங் (டபுள் ஸ்கல்ஸ்).

பாய்மரப்படகு: நாச்சாதர் சிங் ஜோஹல் (ஃபின்).

டென்னிஸ்: மகேஷ் பூபதி, -யாண்டர் பயஸ் (இரட்டையர் பிரிவு), சானியா மிர்சா (ஒற்றையர் பிரிவு), சுனிதா ராவ், சானியா மிர்சா (இரட்டையர் பிரிவு).

டேபிள் டென்னிஸ்: அச்சந்தா சரத் கமல் (ஒற்றையர் பிரிவு), நேஹா அகர்வால் (ஒற்றையர் பிரிவு).

மல்யுத்தம்: யோகேஷ்வர் தத் (60 கிலோ பிரீஸ்டைல்), குமார் சுஷில் (66 கிலோ பிரீஸ்டைல்), தோமர் ராஜீவ் (120 கிலோ பிரீ ஸ்டைல்).

ஜூடோ: தோம்பி தேவி (48 கிலோ பிரிவு), திவியா (78 கிலோ பிரிவு).

'வெற்றி நமதே..! வென்று வாருங்கள் தங்கங்களே..!'

நன்றி: தினமணி

No comments: