பணம் காசு அவளிடம் இல்லை... மாட மாளிகையும் அவர்களுக்கு இல்லை... இருப்பது குடிசையானாலும்... அதுவே அவர்களுக்கு மாளிகையாய்... இதே ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு...
''ஆராரோ...ஆரிராரோ...
ஆரிராரோ... ஆராரோ..!
சாமி பவனி வரும் நேரத்தில
என் சாமி நீ பிறந்த..!
என் சாமி நீ பொறந்த நேரம்
சாமி கொணம் உனக்கு...!
இங்கே தேருல சாமி வரும்
தெருவெல்லாம் ஊர்கோலம்..!
என் சாமி நீ சுத்திவர
தேக்குத் தேரு உனக்கில்ல..!
மண்ணுல நீ நடந்தா
மனசெல்லாம் வலிக்குதடா..!
மாளிகையில் நீ நடக்க
மனம் போல செல்வம் இல்லை..!
தங்கமே நீ குடிக்க
தங்கப் பாலாடை உனக்கில்லை..!
மாமன் வாங்கி வந்தான்
சங்குப் பாலாடை..!
சர்க்கரையாய் இனிக்குமடா
நான் ஊட்டும் பால் உனக்கு..!
சந்திரனே நீ குடித்து விட்டு
சமத்தாய் நீ உறங்கு..!
பட்டுக்குஞ்சரமே நீ தூங்க
பஞ்சுமெத்தை இங்கில்ல..!
மெத்தையாட்டம் நீ உறங்க
பெத்தவ மடி இருக்கு..!
பணம் காசு இல்லன்னாலும்
பொன்மணியே... பொன்நிலவே...
குறையாத பாசம் மட்டும் நமக்கிருக்கு...!
ஆராரோ..ஆரிராரோ..!''
- ரஜினா. அகரம் கிராமம்.
(ஏழ்மையில் இருந்தாலும், அத்தாயின் மனம் என்றுமே பாசத்தால் உயர்ந்த நிலையில் இருக்கிறது... காசு பணம் இல்லன்னாலும்... பாசம் இருக்குதடா என்கிறாள்... தன்மகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று, ஏக்கப்பட்டாலும்... உள்ளதை வைத்து திருப்தியுடன் வாழும் வாழ்க்கை இவர்களிடம் மட்டுமே காணக் கிடைக்கும்... இதற்கு நிகரான பாடல் உண்டா...)
No comments:
Post a Comment