Saturday, August 09, 2008

செம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்

தமிழ் மொழியின் செவ்வியல் (செம்மொழி) தகுதியை மத்திய அரசு அங்கீகரித்து 12-10-2004-இல் ஆணை பிறப்பித்த நாள் முதல் செவ்வியல் மொழியின் தகுதிகள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக அதன் பழமை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அண்மையில் தமிழகத்தின் சட்டமன்றத்தில்கூட இப்பிரச்னை இடம்பெற்றது. எனவே, இத்தலைப்புத் தொடர்பாகச் சில அடிப்படைக் கருத்துகளை முன் வைப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உருவாக்கிய முப்பது அம்சத் திட்டத்தில், தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையின் அங்கீகாரமும் ஒன்று, அதில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரச்னை பற்றி ஆய்ந்து அறிக்கை தர மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. சாகித்ய அகாதெமியின் தலைவரின் தலைமையில் அக்குழு 2-9-2004 அன்று கூடியது.

மத்திய அரசின் வல்லுநர் குழு முதலில் சந்தித்த கேள்வி, செவ்வியல் மொழிக்கான தகுதிகள் யாவை என்பதுதான். அக்குழு தனது விவாதத்தில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.

1. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவும் இல்லை.

2. செவ்வியல் மொழிக்கான தகுதிகள் எவை என்பதும் எங்கும் வரையறுக்கப்படவில்லை.

எனவே முதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்தச் சமயத்தில் தமிழகத்தில் பலர் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இருப்பதாகவும், அதில் 2000 ஆண்டு பழமை தேவை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உச்ச நிலை அங்கமான ஆட்சிக் குழுவின், தற்போதைய செயலராக இருப்பவரும் மோரிஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமனுக்கு, விளக்கம் வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் பின்வருமாறு.

1. UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவுமில்லை.

2. UNESCO நிறுவனம் செவ்வியல் மொழிக்கான தகுதிகள் என எதையும் நிர்ணயம் செய்யவில்லை.

3. அவர் அறிந்த அளவில் இந்தப் பிரச்னை UNESCO நிறுவனத்தின் அதிகாரத்திற்கும், கடமை வரம்புகளுக்கும் புறம்பானது. எனவே இந்தப் பிரச்னை தொடர்பாக UNESCO நிறுவனத்தை மேற்கோள் காட்டுவது முழுவதும் தவறான செயலாகும். திசைதிருப்பும் செயலுமாகும். மீண்டும் வல்லுநர் குழுவுக்கு வருவோம்.

வல்லுநர் குழுவினர் செவ்வியல் மொழியின் தகுதிகள் எவை என்பது இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்படாததால், கிரேக்கம், லத்தீன், வடமொழி போன்ற மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என அங்கீகரிப்பதில், உலக அளவில் அறிஞர் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு, கீழே காணப்படும் தகுதிகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம் என்று கூறி பின்வரும் தகுதிகளை அக்குழு பதிவு செய்திருக்கிறது.

1. மிகப் பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையான நூல்கள் / பதிவு பெற்ற வரலாறு.

2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கியம் / நூல்கள்.

3. அம்மொழிக்கே உரியதாகவும், மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான, இலக்கியப் பாரம்பரியம்.

4. செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஆதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.

இந்த நான்கு விதிகளும் செவ்வியல் மொழி எனும் தகுதிக்கான பொது விதிகள். எந்த மொழிக்காகவும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த விதிகளைத் தமிழ் நிறைவு செய்கிறதா என்பதைப் பொருத்துத்தான், தமிழின் தகுதி பற்றிய பரிந்துரை அமைய முடியும். தமிழ் இவற்றை நிறைவு செய்கிறது என முடிவு செய்த குழு கீழ்க்காணும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.

“மத்திய அரசு செவ்வியல் மொழிகள் பற்றி ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையில் ஒரு மொழி செவ்வியல் தகுதி பெற, இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக இந்திய மொழிகளில் இந்தத் தகுதிகளை நிறைவு செய்யும் மொழிகளான வடமொழியும், தமிழும் செவ்வியல் மொழிகள் என அறிவிக்கப்பட வேண்டும்.” எனவே, குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பொதுவாகச் செவ்வியல் மொழிகளுக்கான தகுதிகளேயன்றிக் குறிப்பிட்டு எந்த ஒரு மொழிக்காகவும் கூறப்பட்ட தகுதிகள் அல்ல.

செவ்வியல் மொழி என்பதற்கு அடிப்படை அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் தாம். அந்த இலக்கியங்கள் பழமையும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஒத்த லட்சியம், கண்ணியம், பொதுமை, பகுத்தறிவு, ஒழுங்கு போன்ற பண்புகளும் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் பழமை என்று வரும்பொழுது அதற்கான ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே பழமையான இலக்கியம் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

பழமையான மொழி என்பதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உலகின் பழமையான மொழிகள் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of World’s Ancient Languages) என்ற நூல் பழமையான மொழி என்பதற்கான அடிப்படைகள் பற்றி அறிஞர் கருத்துகளை ஆய்ந்து, கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகளைப் பழமையான மொழிகளாகக் கருதலாம் என்று வரையறுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் 45 மொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை வடமொழி, தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு மொழியின் பழமை மட்டும் போதாது. செவ்வியல் இலக்கியம் என்று கூறும் தகுதியுள்ள, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய இலக்கியமும் வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது பழமையான இந்திய மொழிகள் நான்கில் வடமொழியும், தமிழும் மட்டும் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன.

மேலே கூறிய விளக்கத்திலிருந்து 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமை என்பது பொதுவாகச் செவ்வியல் தன்மை எனும் தகுதிக்கு வகுக்கப்பட்ட தகுதியே தவிர, தமிழின் பழமை பற்றிய பிரச்னை அங்கு எழுவதில்லை.

செவ்வியல் தன்மைக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதியை விட, மிக அதிகமான பழமை உடையது தமிழ் என்பது தான் நிலை. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், 90 மதிப்பெண்கள் பெற்றுத் தேறும் மாணவன் போன்ற நிலையில் வடமொழியும் தமிழும் இருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

தமிழின் பழமையைக் குறைத்துவிட்டதாக எழுதுவதும், பேசுவதும், பிரச்னையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததும், தவறான கருத்துகளைப் பரப்புவோரின் எழுத்தையும், பேச்சையும் நம்புவதும் அல்லது தமிழுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுப் பெருமை மிக்க தகுதியைக் குறைத்து மதிப்பிட வேண்டுமென்ற குறுகிய மன நிலையும்தான் காரணமாக இருக்க முடியும்.

வல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசின் அமைச்சர்கள் கூட்டத்தின் (Cabinet Meeting்) ஒப்புதலுக்கு வைத்த பண்பாட்டு அமைச்சகம், 1500 - 2000 என்றிருந்த பரிந்துரையை 1000-க்கு மேலான பழமை என நாணயக் குறைவான முறையில், சில காரணங்களைக் கூறி மாற்றி இருந்தது. இந்த மாற்றத்தின் உள் நோக்கத்தை ஆழமாக ஆராயாது முதலில் மத்திய அரசின் அமைச்சர் குழு (Cabinet ) ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந்தக் காலநிர்ணயத்தைத் தமிழக முதல்வரும், மொழிகளின் செவ்வியல் தன்மையை நிர்ணயிப்பதற்காக மத்திய அரசு அமைத்திருந்த வல்லுநர் குழுவும் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக என்பது திருத்தப்பட்டு, மீண்டும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 1500 முதல் 2000 என மாற்றப்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, செவ்வியல் மொழிகளுக்கு, உலக அளவில் பொது விதிகளாக உருவாக்கியதில் இலக்கியங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்சப் பழமை, எந்த மொழியின் பழமையையும் குறைப்பதில்லை. பழமைக்கு கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகள் என வரையறுத்திருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் உள்ள 45 மொழிகளில் பல கி.மு. 2500-க்கு முற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

(நன்றி: வா.செ. குழந்தைசாமி, தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்)

6 comments:

Costal Demon said...

நல்ல தகவல்.

நன்றி..

இராம்

மோகனன் said...

தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே...

நன்றி..மீண்டும் வருக.... தங்களது மேலான கருத்துக்களை பொழிக...

Anonymous said...

nice article,

if u possible read yhis.

http://makkalai-thedi.blogspot.com/

முனைவர் இரா.குணசீலன் said...

வணக்கம் அன்பரே..... தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தமிழியற் செய்திகளை பதிவிடுங்கள்..... தங்கள் பதிவு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்........

மோகனன் said...

நன்றி திரு டொமினிக் அவர்களே..!

மோகனன் said...

என்னாலானவரை முயற்சிக்கிறேன்...

நன்றி குணசீலரே..!