Wednesday, August 06, 2008

பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதமா..? நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்..!

என்னடா இது புதுசா இருக்குன்னு பாக்கறீங்களா... விடயம் இருக்கு தலைவா (அல்லது) தலைவி...

பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப தாமதமானதால் கோவையைச் சேர்ந்தவருக்கு துபாய் வேலை பறிபோனது. அவருக்கு இழப்பீடாக ரூ.80 ஆயிரத்தை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதை படித்த பிறகு, உங்களிடம் சொல்வதற்கு வந்து விட்டேன்.

கோவையைச் சேர்ந்த தாமஸ் வில்சன் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் துபாயில் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தார். 2006 நவம்பர் 6ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் குடியுரிமை ஆவணங்கள் சரிபார்ப்பு (இமிகிரேஷன்) பிரிவு ஆய்வாளர் ஒருவர், இவரது ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அதனை சரிபார்க்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

9 மாதங்கள் கழித்து,(அவரது பாஸ்போர்டில் குறைபாடில்லை என்று கூறி) 2007 ஆகஸ்ட் 9ம் தேதி தான் அவருக்கு மீண்டும் பாஸ்போர்ட் கிடைத்தது. அதற்குள், அவரை வேலையில் இருந்து துபாய் நிறுவனம் நீக்கியது.

வேலை பறிபோனதற்கு இழப்பீடு வழங்க கோரி பாஸ்போர்ட் அலுவலகம் மீது தாமஸ் வில்சன், கோவை நுகர்வோர் குறை தீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ''மண்டல பாஸ்போர்ட் அலுவலக தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே தவறு நடந்திருப்பதை உறுதி செய்து, தாமஸ் வில்சனுக்கு இழப்பீடாக ரூ.80ஆயிரம் வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

மக்களுக்கு பணியாற்றவே அரசியந்திரங்கள்... அவைகளே, மக்களை தற்போது அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மட்டுமே அரசிடமிருந்தும் சரி, தனியாரிடமிருந்தும் சரி... பொதுசனத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருகிறது.

அரசு அலுவலகங்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுகின்றன என்பதும், அதிலும் குறிப்பாக மிக முக்கிய துறையான பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளன என்பதை கோடிட்டுக்காட்ட மேற்சொன்ன சம்பவம் ஒரு சிறு உதாரணம்.
நீதிமன்றம்தான் இவைகளுக்கு எதிராக நீதி எனும் சாட்டையை சுழற்றுகின்றன. ஆனாலும் அவ்வலுவலகங்கள் திருந்துவதாக இல்லை.

நான் கடந்த மார்ச் 17-ம் தேதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்... இன்னும் கிடைத்தபாடில்லை. கேட்டால் இன்னும் காவல் துறை அறிக்கை வரவில்லை என்கிறார்கள்...

நானும் நுகர்வோர் நீதிமன்றம் ஏறவேண்டும் போலிருக்கிறது... வாழ்க அந்த அலுவலகம்... வளரட்டும் அதன் புகழ்...

2 comments:

சுதாகர் said...

Sorry for typing in English.

How many days we have to wait to get the judgement from Consumer court? Since Tatkal facility has to deliver within 7 days, shall we go to Consumer court from 8th day onwards (I am just giving example). Because, I've faced the same problem while getting my passport during 2000. I've got my passport after 8 months and it resulted me to leave the job which I've got from UK.

It is better to get the judgement from Consumer court within couple of days. Otherwise, I assume that consumer court will take its own days (may be like passport office) to take their own action.

Sudhakar.

மோகனன் said...

தங்கள் வருகைக்கு எனது முதல் வணக்கம் சுதாகர் அவர்களே... தங்கள் கருத்திற்கு நன்றி...

எழுத்து மூலமாக (எந்த ஒரு நிறுவனமானாலும் சரி, தனி நபரானாலும் சரி)தரப்பட்டபடி சேவையை வழங்கவில்லை எனில் அது நுகர்வோர் குறைபாடுதான்.

அதன்மறுநாளே நாம் நுகருவோர் நீதிமன்றத்தை நாடலாம். (நமது சார்பில் எந்த ஒரு தவறுதலும் இருக்கக் கூடாது)தகவல்கள் நம் சார்பில் சரியாக (எழுத்து மூலமாக) இருத்தல் நலம்.


நுகர்வோர் நீதிமன்றத்தில் நாமே வாதாடலாம். வழக்குகள் நிறைய தேங்கி இருப்பதால் சில காலம் ஆனாலும், சரியான தீர்வு கிடைக்கும் என்பது உறுதி சுதாகர் அவர்களே...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...