Friday, August 08, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா

புராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.

28-வது ஒலிம்பிக் போட்டி, முதல் ஒலிம்பிக் கோட்டி நடத்தப்பட்ட அதே ஏதென்ஸில் நடைபெற்றது. இதில் 201 நாடுகளைச் சேர்ந்த 10,625 வீரர்கள் கலந்து கொண்டனர். 301 போட்டிகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சீன அதிபர் ஹு ஜிந்தாவோ சீன நேரப்படி 8.08 (இந்திய நேரப்படி மாலை 5.30) மணிக்கு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.



நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 24-ம்தேதி வரை நடைபெறும் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 302 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

‘ஒரு உலகம்...ஒரு கனவு’ என்ற முழக்கத்துடன் ஒலிம்பிக் களத்தில் இறங்கியுள்ள சீனா, தனது பொருளாதார வளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மைதானங்கள், வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு, பெய்ஜிங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சீனர்களின் ராசியான எண் 8 என்பதால் நாள், மாதம், ஆண்டு மட்டுமல்லாது இரவு 8 மணி 8 நிமிடம் 8 விநாடியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஒலிம்பியாவில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம், பல்வேறு நாடுகளின் வழியாக 127 நாட்களில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து செவ்வாய் இரவு பெய்ஜிங் வந்து சேர்ந்தது. கடந்த 2 நாட்களாக சீனாவின் முக்கிய இடங்களின் வழியாக தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்ட ஜோதி, இன்று இரவு தொடக்கவிழாவின் போது சரியாக 8 மணிக்கு ‘பறவைக் கூடு’ தேசிய மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டு முறைப்படி ஏற்றப்படுகிறது. இதையடுத்து அரங்கில் நடைபெறும் வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற உள்ளது.

வெடிமருந்தைக் கண்டுபிடித்த சீனாவில், வண்ணமிகு, கண்கவர் வாணவேடிக்கைகளையும், டிராகன் நடனம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். தொடக்கம் மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கைகளுக்காக மட்டுமே சுமார் ரூ. 400 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர், சீன அதிபர் ஆகியோரின் வரவேற்புரையை தொடர்ந்து ஒலிம்பிக் கீதம் ஒலிக்க, கொடிகள் ஏற்றப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான புறாக்களை பறக்கவிடுகின்றனர். பின்னர், மைதானத்தில் தொடர் ஓட்டமாக எடுத்துவரப்படும் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 56 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி களமிறங்குகிறது. மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

1996-ல், அட்லாண்டாவில் நடைபெற்ற 26-வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (16 தங்கங்களுடன்) சீனா 4 வது இடத்தை பிடித்தது. 2000-ல், சிட்னியில் நடைபெற்ற 27வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (28 தங்கங்களுடன்) 3 வது இடத்தையும், 2004-ல், ஏதென்ஸில் நடைபெற்ற 28- வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (32 தங்கங்களுடன்) 2 வது இடத்தையும் பிடித்த சீனா, போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நான்கு ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்காவே பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. 2004 ஒலிம்பிக் போட்டியில் மூன்றாமிடம் பிடித்திருந்த ரஷ்யா, மீதம் இரண்டு போட்டிகளில் இரண்டாமிடத்தை பிடித்திருந்தது.

ஒளிரட்டும் ஒலிம்பிக் 2008... வெல்லட்டும் திறமை மிக்க வீரர்கள்... ஓங்கட்டும் உலக ஒற்றுமை..!

2 comments:

Anonymous said...

புராதன ஒலிம்பிக்ஸ் ஏன் தடை செய்யப்பட்டது தெரியுமா ?

அப்புறம்...

பீஜிங் நகர மக்களை அகதியாக்கிய ஒலிம்பிக்ஸ் பற்றி தமிழ் சசி எழுதி உள்ள கட்டுரையை படியுங்கள்....

மோகனன் said...

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி திரு செந்தழல் ரவி அவர்களே...