Thursday, December 31, 2009

இனிக்க இனிக்க இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து...போதுமடா
நண்பா...
போதுமடா...
2009-ல் பட்டதெல்லாம்
போதுமடா..!

வேலையில்லாத் திண்டாட்டம்...
உணவு விலை ராக்கெட் ஓட்டம்...
தங்க விலை தகிடுதத்தம்...
வீணர்களின் விரச ஆட்டம்...
ஏழைகளின் போராட்டம்...

பட்டதெல்லாம்
போதுமடா..
அனைத்தும்
பட்டென்று போகுமடா...
இழி நிறைந்த துன்பங்களெல்லாம்
இன்றோடு போகுமடா...
இதுவும் கடந்து போகுமடா..!

ஆங்கிலப் புத்தாண்டு
பிறக்குதடா..!
ஆனந்தம் பொங்குதடா..!
அனைவருக்கும்
ஏற்றம் தரும் வித்தடா..! ...
வாழ்வில் பெரும் மாற்றம் தரும்
இண்டாயிரத்தி பத்தடா..!
இது இவ்வருடத்தின் சொத்தடா..!

நல்லதை நினைப்போமடா...
நல்லதை செய்குவோமடா...
நானிலத்தை காப்போமடா...
நாடு சிறக்க வாழ்வோமடா...

வருக வருக புத்தாண்டே...
வளம் பெருக வருக...
நலம் பெருக வருக...
எழிலாய் நீ வருக..!
முத்தே நீ வருக... - இரண்டாயிரத்தி
பத்தே நீ வருக.. வருக..!

எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்

மோகனன். 

Friday, November 20, 2009

சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 30,000 ரன்களைக் கடந்தார்..!சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இன்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் புதியதொரு சாதனையைப் படைத்தார். டெஸ்ட், ஒருதின மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டி என மூன்று போட்டிகளிலும்  சேர்த்து 30,000 ரன்களைக் கடந்தார்.

அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் அவரைப்பற்றி…

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.

பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.

1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…

சச்சினின் சாதனைகள்

சர்வதேச அளவில்…

கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.

டெஸ்ட் போட்டி சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஒருதினப் போட்டி  சாதனைகள்

அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  இந்தியா ஆடிய  இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…

ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர்  (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.

1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த  முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.

1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின்  தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.

இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.

இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்…  இந்திய அணிக்கு  திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை.

இவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார், வரும் 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

Thursday, November 19, 2009

உலகில் லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84வது இடம்..!

உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் சோமாலியா முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இப்பட்டியல் 10 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த அளவு புள்ளிகளைப் பெறும். அதிக புள்ளிகளைப் பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக
லஞ்சம் தாண்டவமாடும் நாடாக சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான், 5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.

அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8 புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.

நன்றி: Times of India and Dinakaran

Monday, November 16, 2009

ஹேமந்த் கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை..? இந்தியர்களால் கொல்லப்பட்டார்..?! - திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!

ஹேமந்த் கார்க்கரே… பெயரைப் படித்தவுடன் ஞாபகம் வருகிறதா..? இந்தியாவின் மானம் காக்க, வீர மரணம் எய்திய மாவீரர். இவர் யார் என்று இன்னும் தெரியவில்லையெனில் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது, அவர்களை கொன்று குவித்து விட்டு, அங்குள்ளோரை காப்பாற்றும் போது தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் இந்த  ஹேமந்த் கார்க்கரே. அதுமட்டுமின்றி பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவரராக இருந்து அந்த தாக்குதலை முறியடிக்க முன்னின்று நடத்திய வீரர்.

புல்லட் புரூப் எனப்படுகின்ற குண்டு துளைக்காத சட்டை அணிந்திருந்த கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இல்லை, அவர் உண்மையில் இந்தியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் – சிறு பிளாஷ் பேக்


தேதி : 26 செப்டம்பர் 2008. இடம் : மும்பை, தாஜ் (ஐந்து நட்சத்திர) ஹோட்டல்

பாகிஸ்தானிலிருந்து இரவோடு இரவாக வந்த தீவிரவாதிகள் வழியெங்கும் துப்பாக்கி சூடு நடத்தியபடியே, தாஜ் ஹோட்டலுக்குள் சென்று விட்டனர். அங்குள்ளோரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். இத்தா‌க்குத‌லையடு‌த்து அ‌‌ங்கு பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அ‌திர‌ப்ப‌டை தாஜ் ஹோட்டலுக்கு ‌விரை‌ந்தது. அங்கு பய‌ங்கரவா‌திக‌ள் ‌பிடி‌த்து வை‌த்‌திரு‌ந்த 7 அய‌ல்நாட்டினர் உள்பட 15 பேரை ‌மீ‌ட்க அ‌திர‌டி‌ப்படை முற்பட்டது.

அப்போது பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம், அ‌திரடி‌ப்படை‌யினரு‌க்கு‌ம் இடையே ந‌ட‌ந்த து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை‌யி‌ல் பய‌ங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். கார்க்கரே புல்லட் புரூப் சட்டை அணிந்‌திருந்தும், அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.

இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பய‌ங்கரவா‌திகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அ‌ப்போது நட‌ந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவ‌ல்துறை அதிகாரியும் பய‌ங்கரவா‌திக‌ளுட‌ன் நடந்த சண்டையில் பலியானார்.

இதேபோல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அ‌திரடி‌ப்படை‌யின‌ர் நட‌‌த்‌திய ப‌தி‌ல் தா‌க்குத‌லி‌ல் 5 பய‌ங்கரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.
அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி உயிரோடு பிடிக்கப்பட்டான்.

இதுதான் அன்று நடைபெற்ற சம்பவங்கள்…

தற்போது விடயத்திற்கு வருகிறேன்...

மாவீரன் ஹேமந்த் கார்க்கரே பயன்படுத்திய புல்லட் ப்ரூப் ஜாக்கெட் பயன்படுத்தத் தகுதியற்றது என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதன் தரம் பற்றி தெரிந்திருந்தும்… அது பயன் படுத்தத் தகுதியற்றது எனத் தெரிந்திருந்தும் நமது ஈனமிகு அதிகாரிகள் அதை அரசின் செலவில் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் ஊழல் செய்ததின் விளைவு… பல மாவீரர்களின் உயிர்களை அது குடித்து விட்டது.

இது குறித்து, பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சந்தோஷ் டாண்ட்கர் (Santhosh Dountkar) மேற்சொன்ன திடுக்கிடும் தகவலகளை வெளியிட்டுள்ளார்.

இவரும், இவரது வழக்கறிஞரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒய்.பி.சிங் ஆகிய மூவரும் சேர்ந்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் என்பது குண்டு, கத்தி போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கினாலும், அது நம் உடலைத் தாக்காது. அந்த ஆடை உலோக இழைகளைக் கொண்டும், பைபர் இழைகக் கொண்டும் தயாரிக்கப்படுவது ஆகும். (படம் பார்க்க)இதை அணிந்து கொண்டால் குண்டு நம் உடலைத் தாக்காதாவறு தற்காத்துக் கொள்ளலாம். வெடிகுண்டு நிபுணர்களும் இதைப் பயன்படுத்துவர். இது கழுத்திலிருந்து அடி வயிறுவரை பாதுகாக்கும் கவசம் போன்று இருக்கும். (இதிகாசத்தில் வரும் கர்ணனின் கவச குண்டலம் போன்று…)

அப்படிப்பட்ட கவசத்தை அணிந்திருந்தும், குண்டு துளைத்து கார்க்கரே இறந்தது ஏன்?. இதுபற்றி அறிந்து கொள்ள, தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘தாக்குதலின் போது அணியப்பட்ட புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் எங்கு வாங்கப்பட்டவை, யாரிடம்,  எப்போது, எவ்வளவு கொடுத்து வாங்கப்பட்டது, என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டது என்று நம்மவர்கள், நியாயமான கேள்விகள் கேட்டு அனுப்பி உள்ளனர்.

இது, கடந்த 2008 டிசம்பர் மாதத்தில் தகவலறியும் உரிமைச் சட்த்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்க்கான பதில் இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் கிடைத்தது. அதுவும் எப்படி..? ‘அதற்க்கான கோப்புகள் காணவில்லை என்பதால்… நீங்கள் கேட்ட தகவல்களை எங்களால் தர இயலவில்லை’ என்று..!?

அதாவது காவல் துறையின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அலுவலகத்திலேயே கோப்புகளைக் காணோமாம்… (நாம் ஏதேனும் காணவில்லை எனில் காவல் துறையை நாடுவோம்... அங்கேயே கோப்புகளைக் காணோமாம்... அடங்கப்பா... தலை சுத்துடாங்கப்பா...) இருந்தாலும் விடாது போராடிய நம்மவர்கள்.. பரவாயில்ல.. இருக்கும் வரையிலான தகவல்களைக் கொடுங்கள் என மீண்டும் முறையிட.. ‘ அதன் பிறகு, அவர்கள் பட்டும் படாத தகவல்களைக் கொண்ட கோப்புகளை அளித்தனர்.

அதனை ஆய்வு செய்த போதே…இதில் பலவிதமான ஊழல்கள் நிறைந்துள்ளன என்பதை நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

அவர்கள் அளித்த விவரத்தின்படி நம்மவர்கள்  கண்டுபிடித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: (இத்தகவல்களை எல்லாம் நம்மவர்கள் தொடுத்துள்ள பொது நல வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை ஆகும்)

1)    ஐம்பத்தி ஐந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டுமென்று மும்பை காவல் துறை ஆணையர் அலுவலகம், 2001 டிசம்பர் 6 அன்று டெண்டர் கோருகிறது.

2)    பூனேவிலிருக்கும் என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் என்ற நிறுவனம், இந்த  புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை தயாரிப்பதில் எந்த ஒரு அனுபவமே இல்லாத நிறுவனமாக இருந்தும், தனது விலை விவர விண்ணப்பத்தை (கொட்டேஷனை) 2002, ஜனவரி 3-ம் தேதி சமர்ப்பிக்கிறது.

3)    2002, மார்ச் 30-ம் தேதி இந்த விலை விவர விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக மும்பை காவல்துறை ஆணையரக அலுவகம் கடிதம் வாயிலாக தெரிவிக்கிறது.

4)    இதே தேதியில், என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் நிறுவனம் இந்த புல்லட் ப்ரூப் ஆடைகளை, காவல் துறை ஆணையரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக கடிதம் அனுப்பி இருக்கிறது.

5)   ஆனால், தணிக்கைத் துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ஜூன் 4, 2002 அன்றுதான் இந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதையடுத்த ஒரு மாதத்திலேயே 55 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளுக்குப் பதிலாக 110 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

6)    இதனுடைய மொத்த கொள்முதல் விலை ரூபாய் 24.71 லட்சம் ஆகும். ஆனால் 2004-ல்தான் இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வந்து சேர்ந்துள்ளன. இதன் பிறகே காசோலை மூலம் அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

7)    வந்து சேர்ந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை சோதனையிட்டதில், அவைகள் தரமற்றவை என்றும், அவைகளைப் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாகும் என்றும் தெரிய வந்தது. ஆதலால் அந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளனைத்தும் அதே நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டன. பணமும் திரும்பப் பெறப்பட்டது. இது நடந்தது 2004. செப்டம்பர் 2.

8)    தரமற்ற பொருட்களை கொடுத்தற்காகவும், காலம் தாழ்த்தி கொடுத்ததற்காகவும் அந்த நிறுவனத்தின் மேல் அபாராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையை அந்த காவல் துறை ஆணையரக அலுவலகம் எடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ஏனோ அது எடுக்கப்படவில்லை.

9)    2004, டிசம்பரில் அதே நிறிவனம் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளில் இருந்த குறைகளை சரிசெய்து விட்டதாகக் கூறி, அதே தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை ஒப்படைத்துள்ளது.

10)    அது முறையாக சரிசெய்யப்பட்டிருக்கிறதா..? பயன்படுத்த முடியுமா..? தரமானதாக இருக்கிறதா..? என்று யாரும் அதை சோதனை செய்யவில்லை. (சோதனை செய்ததற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை…) அப்படியே வாங்கி வைத்துக் கொண்டனர். அந்நிறுவனமோ கொடுத்த பணத்தை 2005, ஜூலை 14 அன்று வாங்கிக் கொண்டது.

இந்த தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளைத்தான் அன்று பல உயிர்களைக் காப்பற்றுவதற்க்காக ஹேமந்த் கார்க்ரே உள்ளிட்ட பல மாவீரர்கள் அணிந்து கொண்டு போரிட்டனர். அந்த வீரப்போராட்டத்தில் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகி அவர்கள் வீரமரணம் எய்தினர்.(தாக்குதலுக்கு முன்பாக கார்க்கரே புல்லட் ப்ரூப் உடையை அணிந்து கொண்டிந்த காட்சி...)

இந்திய ராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை தயாரிக்கும் அமைப்பான டி.ஆர்.டி.ஓ ( Defence Research & Development Organisation: DRDO)) வின் தர அளவீட்டின்படி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் என்பது கழுத்திலிருந்து, அடிவயிறு வரை கவசமாக இருக்கும். ஆனால் இவர்கள் வாங்கிய புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளோ பனியன் போன்ற அமைப்பில் இருந்தது.. (பார்க்க படம்…)

இந்த ஜாக்கெட்டுகள் தரமானவைகளாக இருந்திருந்தால்... அன்று அத்துனை மாவீரர்களின் உயிர்களும் பறிபோயிருக்குமா..? அவர்களுடைய திறமைகள் மண்ணோடு மண்ணாகியிருக்குமா..?

இப்போது சொல்லுங்கள்..? ஹேமந்த் கார்க்கரே போன்ற மாவீரர்களை தீவிரவாதிகள் கொன்றார்களா..? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த இந்தியர்கள் கொன்றார்களா..? வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும்.. இந்த ஈனப்பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்…

இந்த வழக்கின் மூலம் நம்மவர்கள் … இது குறித்து தனியாக விசாரணைக் கமிஷன் அமைத்து… உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என மனு செய்திருக்கிறார்கள்.

ஏனோ… தானோ என்று கிடைத்த கோப்பிலேயே இவ்வளவு தகவல்கள்  என்றால், சரியான கோப்புகள் கிடைத்தால்..? இந்த நாய்களின்.. இல்லை… இல்லை… நாய்கள் நன்றி உள்ளவை… இந்த ஈனப் பன்றிகளின் ஈனச்செயல்கள் வெளிக்கொண்டு வந்துவிடமுடியாதா என்ன..?

இது தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்… இதற்குண்டானவர்களை கண்டு பிடித்து இதே புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை அணியவைத்து அவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்…

இது போன்ற ஈனப் பன்றிகள் இருக்கும் வரை எம் தேசம் நிம்மதியாக வாழுமா..? வாழ்க எம் தேசம்..! வளர்க தேசத் துரோகிகள்..!

(இந்தச் செய்தியை எனக்குத் தெரிந்த வரையில், எந்த ஒரு தமிழ் நாளிதழ்களும் வெளியிடவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (13.11.2009) வெளியிட்டுள்ளது. இதன் முழுமையான ஆங்கில மூலத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்…)

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2009/11/13&PageLabel=10&EntityId=Ar01001&ViewMode=HTML&GZ=T

(எனக்கு அவ்வளவாக ஆங்கிலப் புலமையில்லை, ஆன வரை முயற்சித்திருக்கிறேன்… தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்…)

செய்தி மற்றும் புகைப்பட உதவி: http://timesofindia.indiatimes.com/

Thursday, November 05, 2009

17,000 ரன்களைக் கடந்தார் சச்சின் தெண்டுல்கர்...ஹைதராபாத், நவ. 5: உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.. சச்சின் தெண்டுல்கர்...

ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் இவர் பலவிதமான உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அச்சாதனைகளில் இன்று இன்னுமொரு மணிமகுடம் இது என்றே சொல்லாலாம்.

ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில், ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு தினப் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 7 ரன்களைக் கடந்த போது, 17,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இச்சாதனையை அவர் 435 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார். இதுவரை இவர் 91 அரை சதங்களும், 45 சதங்களும் குவித்துள்ளார்.

ஒருதினப்போட்டிகளில், இவர்தான் முதன்முறையாக 12000 ரன்கள், 13000 ரன்கள், 14000 ரன்கள், 15000 ரன்கள், 16000 ரன்கள், 17000 ரன்கள் என வரிசையாக குவித்து சாதனை படைத்தவர் ஆவர்.. அதில் முதன் முறையாக இச்சாதனைகளைப் படைத்ததும், அதை மீண்டும் மீண்டும் முறியடித்ததும் இவரேதான்...

Monday, November 02, 2009

வலை முகவரிகள் அனைத்தும் இனி அவரவர் தாய்மொழியிலேயே கிடைக்கும்..!

நாம் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்திற்கு செல்ல வேண்டுமென்றால், இணையத்தில்  (உதாரணத்திற்கு) www.moganan.org என்று முழுவதுமாக ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. இதை மாற்றி இனி அவரவர்களின் தாய்மொழியிலேயே வலைத்தளம் மட்டுமன்றி அவர்களின் வலை முகவரியையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நமது தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வலை முகவரிகள் விரைவில் கிடைக்கவிருக்கின்றன. உதாரணத்திற்கு உஉஉ.மோகனன்.தொகு என நாம் தமிழிலேயே வலை முகவரியைப் பெற்றுக் கொள்ளலாம். ( இங்கு www-க்கும் org -க்கும் எனக்குத் தெரிந்த உதரணத்தில் எழுதியிருக்கிறேன்... www, com. org, in, net...போன்றவற்றிற்கு தமிழாய்ந்தவர்கள் இனி சுந்தரத் தமிழில், சுதந்திரமாகப் பெயரிடுவார்கள் என நம்புவோமாக... )இந்த அறிவிப்பை உலகளவில் இணையத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையமான ஐ.சி.ஏ.என்.என் ( ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) அறிவித்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவிலுள்ள சியோல் நகரில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான ராடு பெகுஸ்ட்ரோம் கூறுகையில் '' இந்த முறை நம்பமுடியாததாக  இருந்தாலும், உலகை இணைக்கும் இணையங்களை உலகம் முழுவதும் இணைக்கும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க, முதல் முயற்சியாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இப்படி, உலக மொழிகளில் இணைய முகவரிகளை உருவாக்கிக் கொள்ள வருகிற நவம்பர் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தினத்தந்தி மற்றும் http://www.icann.org/

இச்செய்தியின் முழுமையான ஆங்கில மூலத்தைப் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... http://www.icann.org/en/announcements/announcement-30oct09-en.htm

Thursday, October 29, 2009

பூரி ஜெகன் நாதர் கோவிலில் 800 ஆண்டுகளாக இருந்த தேவதாசி முறை ஒழிந்தது

பூரி, அக். 29: ஒரிஸ்ஸாவிலுள்ள  பூரி ஜெகன் நாதர் கோவிலில் கடந்த 800 ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறை அடியோடு ஒழி்ந்தது.

தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வரை வழி வழியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது ‘அதிகார வர்க்கத்தினர்’களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இம்முறைக்கு 1920 முதற்க்கொண்டு இந்தியாவில் பெரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆயினும் பூரி ஜெகன் நாதர் கோவிலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடந்ந 1990 களின் தொடக்கத்தில் புதிய தேவதாசிகளைக் கொண்டு வந்து இக்கோவிலில் வைத்திருக்க முயற்சி செய்தனர். ஆனால் தேசிய அளவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,  அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு எந்த பெண்ணும் அக்கோவிலில் தேவதாசியாக இருக்க முன்வரவில்லை. ஆதலால் இந்த தேவதாசி முறை அடியோடு இங்கு ஒழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

கோவிலில் நடனமாடுவது, கோவிலை தூய்மைப் படுத்துவது உள்ளிட்ட 36 விதமான சேவைகளை இந்த தேவதாசிகள் அக்கோவிலில் செயவார்களாம். இம்முறை கடந்த 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் மட்டுமே இறைவனுக்கு பெண்கள் சேவை செய்வது அனுமதிக்கப்படுகிறது என ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 07, 2009

ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் படுகொலை: உடல் கண்டுபிடிப்பு

மெல்போர்ன், அக்.7: ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்திய தொழில் அதிபர் பிரதீப் குமார்  (வயது 33) கொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் அவரது உடல் புதன்கிழமை (இன்று) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதீப் குமார் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மில்துரா நகரத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசித்து வருகிறார். அங்கு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தொழில் நிமித்தம் காரணமாக சிலரை சந்திப்பதற்காக, மில்துராவிலுள்ள நூலகத்திற்கு செல்வதாக கிளம்பியுள்ளார். அதிலிருந்துதான் அவர் காணவில்லை என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய காரை, மில்துரா நகரத்திற்கு வெளியேயுள்ள ரயில் நிலையம் அருகே நிற்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ, கிரெடிட் கார்டுகளிலிருந்தோ எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கண்டு பிடித்துள்ளனர்
.
இந்த கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிறவெறி காரணமாக ஏற்ப்ட்ட அமளியின் காரணமாக மற்றொரு இந்தியர் கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்தியர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, September 30, 2009

நியூசிலாந்து அருகே சுனாமி தாக்குதல்... 100 பேர் பலி.... பலர் மாயம்


சமோயா தீவுக்கரையினை சிதறடித்த சுனாமி

பசுபிக் பெருங்கடல் தீவான சமோயாவை சுனாமி அலை  தாக்கியது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சமோயா தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாயா சென்றடைந்துள்ளன.

21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாவது சுனாமி தாக்குதல் இதுவாகும்... 


நன்றி: http://www.guardian.co.uk/