Saturday, May 26, 2018

செம - திரைப்பட விமர்சனம்


இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில் நேற்றைய தினம், உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘செம’.
திருச்சியில் வசிக்கும் ஆரவள்ளியின் (சுஜாதா சிவக்குமாரின்) ஒரே மகன் குழந்தைவேலு (ஜி.வி.பிரகாஷ்). குழந்தைவேலின் நண்பனாக கோதண்டம் (யோகிபாபு).
தெருத்தெருவாக குட்டியானையில் சென்று காய்கறி, பழம், மீன், கருவாடு என்று சீஸனுக்கு ஏற்றாற் போல் வியாபாரம் செய்துவரும் குழந்தைவேலுக்கு, மூன்று மாதத்திற்குள் கல்யாணம் செய்யணும். இல்லையெனில் 6 ஆண்டுகளுக்கு கல்யாணமே நடக்காது என்று ஜோஸியர் சொல்ல, ஆரவள்ளி உள்ளூரில் பெண் தேடுகிறார். மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் குழந்தைவேலை அசிங்கப்படுத்த, பெண் பார்க்க செல்லும் இடங்களிலும் நிறைய பெண்கள் குழந்தைவேலை வேண்டாமென்று சொல்ல, விரக்திக்கு செல்லும் ஆரவள்ளி தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்.
உள்ளூரில்தான் பொண்ணு கிடைக்கவில்லையே என்று, அருகிலிருக்கும் தஞ்சாவூருக்கு சென்று பெண் தேட, சமையல் காண்ட்ராக்ட் வேலைசெய்யும் அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்), மந்தாரை (கோவை சரளா) தம்பதியினரின் மகளான மகிழினியை (அர்த்தனா பானு) பெண்பார்க்கிறார்கள். இரு குடும்பத்தாருக்கும் பிடித்துப்போக நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கிறார்கள்.
அட்டாக் பாலு ஊரைச்சுற்றி கடன் வாங்கி வைத்திருக்கும் ஊதாரி அப்பன். பெரிய சமையல் ஆர்டராக பிடித்து கடன் அடைக்கலாம் எனும் கனவில் இருப்பவரை, கடன்காரர்கள் தொல்லை செய்ய, மகிழினியை ஒருதலையாக விரும்பும் எம்எல்ஏ மகன் ஜனா (புதுமுகவில்லன்), கடனை அடைக்க உதவுவதாச் சொல்லி பாலுவின் மனதை மாற்றுகிறார். நிச்சயதார்தத்திற்கு வரும் குழந்தைவேலு குடும்பத்தை பாதி வழியிலேயே திரும்பிப் போகச் சொல்ல, விரக்தியின் விளிம்பிற்கு செல்லும் ஆரவள்ளி, கிணற்றில் குதித்துவிடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அட்டாக் பாலுவிற்கு குழந்தைவேலு, உன் பொண்ணையே கல்யாணம் செய்து, உன்னையே அதை பாராட்ட வைக்கிறேன் என்பது போல் சவால் விடுகிறார். அங்கு வருகிறது இடைவேளை.
எம்எல்ஏ மகனின் ஆசை வென்றதா? அட்டாக் பாலு சவாலில் ஜெயித்தாரா? குழந்தை வேலு சவாலில் ஜெயித்தாரா? என்றெல்லாம் சொல்ல விரும்பல. குழந்தைவேலுதான் சவாலில் வெல்கிறார். ஆனால் அது எப்படி என்பதை, தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் கலகலப்பாக கொண்டு சென்று, எதிர்பாராத குட்டி குட்டி சுவாரஸ்ய முடிச்சுகளைப் போட்டு சுபத்தில் முடித்திருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.
குடும்பத்தோடு சென்று படம் பார்த்து எத்தன வருஷமாச்சு என்று ஏங்குவோருக்கு நிச்சயம் இந்த படம் ஒரு கலர்புல், காமெடி கலந்த பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் ட்ரீட் என்றே சொல்லலாம்.
இதுவரை சிட்டி பாய் கேரக்டராக இருந்த ஜி.வி.பிரகாஷ், இந்தப்படத்தில் கிராமத்து பையனாக, சிறுநகரத்துப் பையனாக நடித்திருக்கிறார். அவரின் குழந்தை முகத்திற்கு, குழந்தை வேல் கேரக்டர் மிகவும் பொருந்திப்போயிருக்கிறது. அம்மா… அடிக்கடி இந்த மாதிரி தூக்கு போட்டுக்க போகாதம்மா… இதோட 93-ஆவது தடவை என்று சொல்லும்போது, தியேட்டரில் சிரிப்பு சத்தத்தில் காது கலகலக்கிறது. மன்சூர் அலிகானிடம் சவால் விடும்போதும், அவரிடம் போனில் பேச நடுங்கும் போதும் மனிதர் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கோதண்டமாக வரும் யோகி பாபு, படத்தின் காமெடி ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். டேய் பன்னி மூஞ்சி வாயா… என்று ஜி.வி.பிரகாஷ் வேறொருவரைச் சொல்ல, யப்பா… என்னை வச்சிகிட்டு இப்படி எல்லாம் சொல்லாதப்பா… என்று அப்பாவியாய் கேட்கையில், தியேட்டரில் சிரிப்பு வெடி.
ஆரவள்ளியாக வரும் சுஜாதா, அம்மாவின் கேரக்டரில் பொருந்திப்போகிறார். மகனுக்கு இப்படி ஆகிருச்சே… ஊர் முகத்துல எப்படி முழிப்பேன் எனும்போதும், உங்க ரெண்டு பேருக்கும் பிரைவஸி வேணுமில்ல… அதாம்மா சண்டை போடறமாதிரி போட்டு, ஊருக்கு போயிட்டேன் அம்மா இடத்தில் ஸ்கோர் பண்ணுகிறார்.
மகிழினியாக வரும் அர்த்தனா பானு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அழகுப் பதுமை. குறும்புப் பார்வை, குழந்தை முகம் என பாத்திரத்திற்கு ஏற்ற பதமான தேர்வு. வில்லனிடம் சீறும்போதும், அப்பாவிற்காக ஏங்குகிற போதும், கணவனிடம் கொஞ்சுகிற போதும்… அட நம்மவீட்டு பொண்ணு போலவே இருக்கிறாளேப்பா… என்று சொல்ல வைக்கிறார்.
அட்டாக் பாலுவாக வரும் மன்சூர் அலிகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடன்காரன்களைக் கண்டால் பம்முவதும், போனைக் கண்டால் ஒளிவதும், மனைவியிடம் மாட்டிக்கொண்டு திணறுவதும், மகளை தவறாகப் பேசியவனின் கையை வெட்டுவதும் என அசல் சமையல்கார்ராக மனிதர் அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை நம்பும் வெகுளித்தனமான தந்தையின் முகபாவத்தை மனிதர் கொண்டுவந்து நிறுத்தியதற்காக நிச்சயம் அவருக்கு சபாஷ் போடலாம்.
மந்தாரையாக வரும் கோவை சரளா. நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் மனுஷி வெளுத்துக் கட்டி இருக்கிறார். கணவருக்கு பயப்படுவதும், பெண்ணுக்காக மனுஷி பாடாய்ப்படுவதும்… சென்னையை மன்சூரலிகானுக்கு நாள் முழுக்க ஆட்டோவை சுற்றிக்காட்டுவதாகட்டும்… கலகல ரகம்.
புதுமுக வில்லன் ஜனா எம்எல்ஏ மகனாக பைக்கில் பந்தாவாக வருகிறார். இரண்டு மூன்று காட்சிகளில் வசனம் பேசகிறார். இறுதியில் மிரட்ட வருகிறார்.
சண்டாளி பாடல் இதுவரை யூ டியூபில் 8 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். யுகபாரதியின் வரிகளால், ஜி.வி.பிரகாஷின் மெல்லிசையும் சேர்ந்துகொள்ள, பாடல் மெலடியில் மெட்டு கட்டி, செவிகளை வருடிவிட்டு, மனதிற்குள் தங்கிவிடுகிறது. இப்பாடலில் ஒளிப்பதிவு மிக அற்புதம். நீர்த்துளிகளை வைரத்துளிகளாய் பிரித்துக் கோர்த்திருக்கிறது. இரவு நேரத்து கோரைப்புற்கள் முன்பு இருந்த காட்சிகள்... விவேக் ஆனந்தின் ஒளி ஓவியத்தில் கண்களுக்கு விருந்து படைக்கிறது. உருட்டு கண்ணால பாடல் துள்ளலிசை ரகம். குத்தாட்டமும் போட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
வசனம் தனது குருநாதர் பாண்டிராஜை எழுத வைத்திருக்கிறார் வள்ளி காந்த்.
’உங்கை பையனுக்கு கிருஷ்ணர் ஜாதகம்… பொண்ணுங்க இருக்கிற இடத்துலதான் அவன் இருப்பான்…’
‘அட போங்க சாமி… அவன் இருக்கிற இடத்துலதான் பொண்ணுங்க இருக்குது.’
’ட்வென்டி ட்வென்டி மீட்டிங் வச்சுக்கலாம். உனக்காக நான் 20 கி.மீ. வரேன். எனக்காக நீ 20 கி.மீ. வா… ’
’ஓரமா நிக்கறவங்க… ஒளிஞ்சிகிட்டிருக்கவங்க… வேடிக்கை பாக்கறவங்க எல்லாம் சீக்கிரம் வந்து அட்சதையப் போடுங்கோ…’
இப்படி படம் முழுக்க… காட்சிக்கோர்ப்பிற்கு வசனங்கள் கரம் கோர்த்து கலகலக்க வைக்கின்றன.
பாண்டிராஜின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் வள்ளிகாந்த், இந்த படத்தில் தனது தனித்தன்மையை காட்டி இருக்கிறார்.
பாண்டிராஜின் தாக்கம் இல்லை. பிரச்சினையை முன்னே சொல்லி, தீர்வை பின்னே சொல்லும் பாணி செம. தனக்கு ஒரு தேவதை மனைவியாக வரப்போகிறாள். அதற்காக தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்களின் வீட்டிற்கு சென்று நன்றி சொல்லும் வித்தியாச ரகம் செம.
திருமணத்திற்கு ஆட்களை வரச்சொல்லி, போகிற போக்கில் கூட்டத்தைக் கூட்டுவது செம செம.
படம் 2 மணி நேரத்தில் முடிந்துவிட்டதே என்ற சிறுகுறையைத் தவிர, ஆபாச காட்கள் இன்றி, அடிதடி சண்டைகள் இன்றி, குடும்பத்தோடு அமர்ந்து படத்தைப் பார்க்க வைத்தது மட்டுமின்றி, வாய்விட்டு சிரிக்க வைத்த இயக்குநர் வள்ளிகாந்திற்கு செம செம செமையான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
2018-ஆம் ஆண்டின் சிறந்த குடும்பத்திரைப்படம் என்ற விருது நிச்சயம் இந்தப்படத்திற்கு உண்டு.

Thursday, May 24, 2018

விடமாட்டேன் உன்னை தொடர்கதை இப்போது புத்தகமாக வெளிவருகிறது!

அன்பு வலைப்பூ நண்பர்களே...

இந்த வலைப்பூவில்... விடமாட்டேன் உன்னை என்ற தொடர்கதையைப் படித்திருப்பீர்கள். அதற்கு நீங்கள் தந்த ஆதரவைக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க... இதை புத்தகமாக வெளியிடுகிறேன். இந்த புத்தகத்திற்கு, கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் அணிந்துரை எழுதித் தந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுகிறது. 96 பக்கங்கள். விலை 80 ரூபாய்.

புத்தக வடிவிலான படைப்பிற்கும் உங்களின் ஆதரவு தேவை...


என்றென்றும் அன்புடன்

மோ.கணேசன்