Showing posts with label IPL 2020. Show all posts
Showing posts with label IPL 2020. Show all posts

Saturday, October 03, 2020

தொடர்ந்து இதே தவறுகளைத்தான் செய்துவருகிறோம் - தோல்விக்கு பிறகு தோனி பேட்டி!

 

நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, 13வது  ஐபிஎல் தொடரிடன் 14-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் இரண்டு தோல்விகளைக் கண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு அணியில் சில மாற்றங்களைச் செய்தது.

கடந்த போட்டியில் விளையாடிய முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோருக்கு பதிலாக அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்கூர், டிவெய்ன் பிராவோ ஆகியோர் களமிறங்கினர்.

ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். டாஸ் வென்றிருந்தால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்திருக்கும் என்று தோனியும் சொன்னார்.

ஹைதராபாத் அணியின்  தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்ட்டோவும் களமிறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார் பேர்ஸ்ட்டோ.

வார்னருடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் பவர் பிளேவில் நிதானமாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.  மணீஷ் பாண்டே 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சில் சாம் கர்ரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7.1 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். இவரையடுத்து வார்னருடன் கேன் வில்லியம்ஸன் ஜோடி சேர்ந்தார்.

பியூஷ் சாவ்லா வீசிய 10-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது ஹைதராபாத்.  சாவ்லா வீசிய 5-வது பந்தை லாங் ஆன் திசையில் வார்னர் தூக்கி அடிக்க, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அந்தரத்தில் பாய்ந்து பிடித்த பாப் டுபிளிஸிஸ், பந்தை மைதானத்திற்குள் தூக்கிப் போட்டுவிட்டு, எல்லைக்கோட்டிற்கு வெளியே குதித்தவர் மீண்டும் மைதானத்திற்குள் வந்து அந்த பந்தை பிடித்து ஆச்சர்யம் அளித்தார். அடுத்த பந்திலேயே, கேன் வில்லியம்ஸன் 9 ரன்கள் எடுத்திருந்தநிலையில், அம்பதி ராயுடுவின் அற்புதமான பீல்டிங்கால் ரன் அவுட் ஆனார்.

11 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது ஹைதராபாத். இவர்களையடுத்து ஹைதராபாத்தின் இளம் வீரர்களான பிரியம் கார்க், அபிஷேக் சர்மா ஆகியோர் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க ஆரம்பித்தனர்.

16வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 111 ரன்கள் எடுத்திருந்தது. ஆரம்பத்தில் நிதானம் காட்டிய பிரியம் கார்க் போகப்போகஅதிரடிக்கு மாறினார். சாம் கர்ரண் வீசிய  17-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என ரன் மழை பொழிந்தார் பிரியம் கார்க். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கிடைத்தது.

17-வது ஓவரை தீபக் சஹார் வீச, அந்த ஓவரில் அபிஷேக் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை ஜடேஜாவும், தாக்கூரும் தவறவிட்டு ஏமாற்றமளித்தனர். அதே ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக் சர்மா. அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

அதிரடியாக ஆடிய பிரியம் கார்க் 23 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதலாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. 

பிரியம் கார்க் 51 ரன்களுடனும் அப்துல் சமது 8 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. புவனேஷ்குமாரின் அற்புதமான வேகப்பந்துவீச்சில் ஷேன் வாட்ஸன் 1 ரன் எடுத்திருந்தபோது ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து பாப் டுபிளிஸிஸுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். ராயுடுவும் நிலைக்கவில்லை. 8 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜனின் பந்துவீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். இவரையடுத்து பாப் டுபிளிஸிஸுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். பாப் டுபிளிஸிஸ் 22 ரன்கள் எடுத்திருந்தபோது பிரியம் கார்க்கினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஜாதவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். மிகவும் மந்தமாக ஆடிய கேதர் ஜாதவ் 10 பந்துகளைச் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, அப்துல் சமது பந்துவீச்சில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது சென்னை அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

தோனியுடன் ரவீந்திர ஜடோஜா ஜோடி சேர்ந்தார். நடுப்பகுதி ஓவரை ரஷீத் கான் வீசினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, சென்னை அணியின் ரன்குவிப்பை மேலும் மட்டுப்படுத்தினார். இதன் விளைவாக சென்னை அணி 17-வது ஓவரில்தான் 100 ரன்களையே எட்ட முடிந்தது. அதன் பிறகு தோனியும் மறுபுறம் ஜடேஜாவும் எதிரணியின் பந்துவீச்சை அடித்து ஆட ஆரம்பித்தனர். 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசிய ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இவரது விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார். 

தோனியுடன் கை கோர்த்த டாம் கர்ரண், தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். 18 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. 12 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

19வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் பந்தினை வீசியபோது, தொடையில் தசைப்பிடிப்பு ஏற்படவே, மைதானத்தில் இருந்து வெளியேறினார். அந்த ஓவரை கலீல் அஹமது வீச, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை விளாசினார் தோனி.

கடைசி ஓவரில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலை. அப்துல் சமது வீசிய முதல் பந்து வைடாகப்போக, கீப்பர் பிடிக்கத் தவறியதால் 5 ரன்கள் சென்னை அணிக்கு கிடைத்தது.

6 பந்துகளில் 23 ரன்கள் தேவை. முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசிய தோனியால் அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்த இரு பந்துகளில் இரண்டு ரன்கள் கிடைக்க, கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டி ஆறுதல் அளித்தார் சாம் கர்ரண். கடைசி வரை போராடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து 7 ரன்களில் தோல்வியைத் தழுவியது. தோனி 36 பந்துகளில் 47 ரன்களுடனும், சாம் கர்ரண் 5 பந்துகளில் 15 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்த ப்ரியம் கார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி  "முதலில் பேட்டிங் செய்யத்தான் தீர்மானித்திருந்தோம். டாஸ் தோல்வியால் அது நடக்கவில்லை. பந்துவீச்சின்போது, நோல் பால் வீசியதும்,  பீல்டிங்கில் செய்த தவறுகளும், கேட்ச்களை தவறவிட்டதும் தோல்விக்கு முக்கிய காரணம். தொடர்ந்து இதே தவறுகளைத்தான் செய்துவருகிறோம். இதை சரிசெய்தாக வேண்டும். 15 ஓவர்கள் வரை கட்டுக்கோப்பாகத்தான் பந்து வீசினோம். இரண்டு ஓவர்கள் மட்டும் மோசமாக அமைந்துவிட்டது.  பேட்டிங்கில் தொடக்கவரிசை ஆட்டக்காரர்கள் சரியாக ஆடவில்லை. ஆட்டத்தின் நடுவரிசை ஓவர்களில் ரன்கள் குவிக்கத் தவறிவிட்டோம். தொடர்ச்சியாக நாங்கள் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது கிடையாது. தவறுகளை சரிசெய்து கொண்டு மீண்டு வருவோம். இன்னும் போட்டிகள் இருக்கின்றன" என்றார்.

ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் "விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பந்து வீசவில்லை. சரியான திசையில், சரியான வேகத்தில் வீசினால் போதும் என்று நினைத்து, செயல்படுத்தினேன். அதனால்தான் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க முடிந்தது. இது பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைத் தந்தது. மற்ற பந்துவீச்சளர்களிடம் அவர்கள் விக்கெட்டை பறிகொடுக்க நான் கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம்" என்றார்.

மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற ஹைதராபாத் அணியின் ப்ரியம் கார்க் "மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய களம். உலகத்தரம் வாய்ந்த மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. முதல் போட்டியில் நான் சரியாக ஆடவில்லை என்றாலும், அணி நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கையை இப்போது காப்பாற்றி இருக்கிறேன். எனது இயல்பான ஆட்டத்தைத்தான் விளையாடினேன். அபிஷேக்குடன் சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாடி வருவதால் அருடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் சிறப்பானதாக இருந்தது. இந்த வெற்றி என்னுள் மேலும் தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் இதை மேலும் வளர்த்துக்கொள்வேன்" என்றார்.

வெற்றிக்குப் பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் "புவனேஷ்குமார் தசைபிடிப்பால் களத்தில் இருந்து வெளியேறும்போது, அடுத்து  யாரிடம் பந்தைக் கொடுப்பது என்று யோசித்தேன். 5 பந்துகளில் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். அபிஷேக்கை விட, கலீல் அஹமது உயரமானவர், பந்துவீச்சும் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடமே கொடுத்தேன். அவரால் முடிந்த அளவு சிறப்பாக பந்துவீசினார். தொடக்கத்தில் இந்த பிட்ச் ஸ்விங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது. போகப்போக அதன் தன்மை மாறியது. கடினமான நேரங்களில் உங்கள் திறமையை வெளிக்காட்டினால்தான் வாய்ப்புகள்  அனைத்தும் வெற்றியாகும் என்று எனது அணியின் இளம் வீரர்களிடம் அடிக்கடி சொல்லுவேன். அதைத்தான் இப்போட்டியில் செய்து காட்டி இருக்கிறார்கள். யார்க்கர், ஸ்லோயர் பால் என பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி பெற்றிருக்கிறோம்" என்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் பெற்ற ஹைதராபாத் அணி, தரவரிசைப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர் தோல்விகளால் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தை தக்க வைத்துக்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இப்போட்டியில் மகேந்திர சிங் தோனி 4500 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சென்னை அணியின் தோல்வியால் இந்த சாதனை அமுங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.

இன்று முதல் சனி, ஞாயிறுகளில் இரண்டு தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இன்றைய ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியையும், டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்த்து ஆடுகின்றன.

#ஐபிஎல்2020 #IPL_2020 #dhoni_records

Friday, October 02, 2020

பஞ்சாப் அணியை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்! - ரோஹித், பொல்லார்டு, ஹர்திக் அதிரடி!


மோ.கணேசன்

நேற்று, அபுதாபியில் உள்ள ஷேக் சையது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 13-வது ஐபிஎல் தொடரின் 13-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

பஞ்சாப் அணி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. மும்பை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மட்டும் கடந்த போட்டியில் விளையாடிய அஸ்வின் நீக்கப்பட்டு, கிருஷ்ணப்பா கவுதம் அணியில் சேர்க்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய ஷெல்டன் கார்ட்டெலின் துல்லியமான வேகப்பந்து வீச்சில் டிகாக், ரன் ஏதும் எடுக்காமலேயே ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஓவர் மெய்டெனாக முடிந்தது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட்டுட்டுடன் முதல் மெய்டென் ஓவர் இதுவாகத்தான் இருக்கும்.

இவரையடுத்து ரோஹித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இரண்டாவது ஓவரை முகமது ஷமி வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்கவிட்ட ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடர்களில் 5000 ரன்களைக் கடந்தார். அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரியை விரட்டினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவிக்க, டிஆர் எஸ் ரிவியூ முறையில் தப்பித்தார்  ரோஹித் சர்மா.

கார்ட்டெல் வீசிய 2 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய சூர்யகுமார் யாதவ், ரவி பிஷ்னோய் வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் அற்புதமான பீல்டிங்கால் ரன் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஸான் ஜோடி சேர்ந்தார். 13 ஓவர் வரையிலும் கிஸான் மிக நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க, அணியின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது.

13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது. 14-வது ஓவரை கிருஷ்ணப்பா கௌதம் வீசினார். அவர் வீசிய முதல் பந்தினை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, கருண் நாயர் கையில் தஞ்சமடைந்தது. இஷான் கிஸான் கணக்கில் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் உள்பட 32 பந்துகளில் 28 ரன்கள் அடங்கும். 

அடுத்து பொல்லார்டு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். 14 ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது. 15 ஓவரில் இருந்து இருவரும் விஸ்வரூபம் எடுத்தனர் என்றே சொல்லவேண்டும். மைதானாத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்க விட, ஆமை வேகத்தில் இருந்த ரன் விகிதம், ராக்கெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது.

16-வது ஓவரை ஜிம்மி நீஷம் வீச, அந்த ஓவரில் முதல் பவுண்டரியை விரட்டிய ரோஹித் சர்மா அரை சதத்தை எட்டினார். அதனை அடுத்து தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி எதிரணியை கலங்கடித்தார்.

17-வது ஓவரை முகமது ஷமி வீச, அவர் வீசிய முதல் பந்தை ரோஹித் சர்மா லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். சிக்ஸருக்கு போன பந்தை ஓடி வந்த வேகத்தில் பாய்ந்து பிடித்த கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்லும் முன்னர் அருகில் இருந்த ஜிம்மி நீஷமிடம் தூக்கிப்போட, அவர் கச்சிதமாகப் பிடித்து, ரோஹித் சர்மாவை வெளியேற்றினார். மேக்ஸ்வெல்லின் அட்டகாசமான பீல்டிங்கை பாராட்டியே ஆகவேண்டும். ரோஹித் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 16.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களாக இருந்தது.

பொல்லார்டுடன் ஹர்திக் பாண்டியா இணைய, வாண வேடிக்கை இருவரிடமிருந்தும் கிளம்பியது. யார் போட்டாலும் வாணவேடிக்கைதான்.  முகமது ஷமி வீசிய 19வது ஓவரில் பாண்டியா ஒரு பவுண்டரியும், பொல்லார்டு 3 பவுண்டரிகளையும் அடித்தனர். 20-வது ஓவரை கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச, பொல்லார்டுக்கு வசதியாகப் போனது. அந்த ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸர்களைப் பறக்க விட்டு, அணியின் எண்ணிக்கையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.

15 ஓவர் வரை தடுமாறிக் கொண்டிருந்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து அசத்தியது. பொல்லார்டு 20 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 47 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவர் மட்டுமே 31 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்தனர்.

இதனையடுத்து 120 பந்துகளில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியினை, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பஞ்சாய்ப் பறக்க வைத்தனர்.

தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கிய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இவரை அடுத்து வந்த கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன்கள் எடுத்தார். கிருஷ்ணப்பா கவுதம் 22 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக மும்பை அணியின் கிரென் பொல்லார்டு தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் "இந்த தோல்வி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று சொல்லமாட்டேன். ஆனால் வருத்தமடைய வைத்திருக்கிறது. முதல் 15 ஓவர்கள் மிகச்சிறப்பாகவே பந்து வீசினோம். கடைசி 5 ஓவர்கள்தான் மோசமாகப் போய்விட்டது. கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் தேவை என்பதை உணர்கிறோம். தோல்வியிலிருந்து புதிய உத்வேகத்துடன் மீண்டு வருவோம். இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன" என்றார்.

வெற்றிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா "சிறப்பான வெற்றி. பஞ்சாப் அணியின் பலம் எங்களுக்குத் தெரியும். முதலில் விக்கெட் விழாமல் நிலைத்து நின்று ஆடினால் போதும். கடைசி 5 ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதை கனகச்சிதமாக பொல்லார்டும், பாண்டியாவும் செய்து முடித்தார்கள். பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை கனகச்சிதமாக செய்து முடித்தார்கள். இதுதான் கேப்டனுக்குத் தேவை. 5000 ரன்களைக் கடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை. அணியின் வெற்றியே முக்கியம்" என்றார்.

மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற கிரென் பொல்லார்ட் "மகிழ்ச்சியாக இருக்கிறது. 15 ஓவர்களுக்குப் பிறகு அடித்து ஆட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். காரணம் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்கள் மிச்சமிருந்தது. பயன்படுத்திக்கொண்டோம். பாண்டியாவின் அதிரடியும் அணிக்கு கை கொடுத்தது. சென்ற போட்டியில் தோல்வியடைந்திருந்தோம். அதில் இருந்த மீளவேண்டும் என்ற உத்வேகம், இந்த போட்டியில் வெற்றியைத் தந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் இது தொடரும்" என்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிடைத்த இரண்டு புள்ளிகளுடன் மொத்தம் நான்கு புள்ளிகளோடு தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது மும்பை அணி.பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியதால் 2 புள்ளிகளோடு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இன்று நடைபெறும் 14-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.

ipl2020 #MI_vs_KXIP #rohith_5000_runs, #ஐபிஎல்2020